Saturday, December 17, 2011

இலங்கையிலிருந்து ‘நந்தினி’ ....

ஒருமுறை  நமது சொந்தங்கள் வாழும் பக்கத்து நாடான இலங்கையிலிருந்து நட்புநாடி ஒரு கடிதம் வந்து வியப்பேற்படுத்தியது. ‘குமுதம்வார இதழ் நடத்திய ஏதோ ஒரு போட்டியில் வென்றமைக்காக எனக்கு பட்டுப்புடவை பரிசு கிடைத்த சமயம் அது. பரிசு கிடைத்தவர்கள் விபரம், முகவரி எல்லாமே குமுதத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்த முவரியை குறித்து வைத்துக் கொண்டு சில மாதங்கள் கழித்து எனக்கு இலங்கையிலிருந்து ‘நந்தினி என்ற பெண் ஒரு கடித்த்தை எழுதியிருந்தார். அதைக்கண்டதும் நான் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன். 


வெளிநாட்டிலிருந்து அதுவும் ஒரு தமிழ்ப் பெண்ணிடமிருந்து! ஏற்கனவே எனக்கு அமெரிக்காவிலிருந்து சுப்ரமணியம் என்பவரும், சிங்கப்பூரிலிருந்து ஜெஸி என்பவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். அவர்கள் தமிழகம் வந்தபோது சந்தித்து உரையாடி இருக்கிறேன். ஆனால் இவர் மட்டுமே வெளிநாட்டு வாழ் தமிழர்.

சந்தோஷத்திற்கு இன்னொமொரு காரணம் இருந்தது. அப்போது எத்தனைதான் பத்திரிகைகளில் படித்தாலும் இலங்கைப் பிரச்னையின் உண்மை நிலை என்பது தெரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. வெவ்வேறு தரப்பினரின் பேச்சைக் கேட்டாலும் சரியானதாகவே படும். (இதைப் பற்றி விரிவாக வேறு ஒரு பதிவை எழுதுகிறேன்). 


அந்த மண்ணிலிருந்து விருப்பு வெறுப்பற்ற ஒரு நபர் அதுவும் நமது நண்பர் அங்குள்ள நிலவரம் பற்றி எழுதினால் நிறைய தெரிந்து கொள்ளலாமே என்ற ஆர்வம் இருந்தது. ராஜிவ்காந்தியின் படுகொலைக்குப் பிறகு இலங்கே நிலவரங்களை சற்று அக்கறையுடனே கவனிக்க ஆரம்பித்திருந்தேன்.

அப்போதுதான் இந்த நந்தினியின் கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்றது. இதோ அவரின் கடிதம்..................

மதிப்பிற்குரிய நண்பருக்கு,

வணக்கங்கள் பல. நான் உங்களுக்கு புதியதொரு அறிமுகம. நான் தங்களின் பேனா நட்பினை விரும்பும் நண்பி. எனக்கு எனது நாடான ஈழத்தில் பல பேனா நண்பிகள் உண்டு. ஆனாலும் இந்தியாவில் எனக்கு இதுவரை பேனா நண்பர்கள் எவருமே இல்லை. எனக்கு எங்கள் சகோதர நாடான தமிழகத்தில் பேனா நண்பரை உருவாக்கிக் கொள்ள மிகப்பெரும் ஆவலாய் இருக்கின்றது. அவ்வேளையில்தான் குமுதம் சுதந்திர தினச் சிறப்பிதழில் உங்கள் முகவரியைக் கண்டேன். நண்பரே நீங்கள் எனது பேனா நட்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இனி என்னைப் பற்றி சில வார்த்தைகள் கூறலாம் என்றே நான் நினைக்கிறேன். எனது பெயர் நந்தினி. நான் யாழ்ப்பான மாவட்டத்திலுள்ள கரவெட்டி என்னும் ஊரில் வசிக்கின்றேன். நான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எனது தந்தையார் ‘பேங்க் ஆஃப் சிலோனில் பணி பரிந்தவர். தற்போது இறந்துவிட்டார். தாயார் ஆசிரியையாக பணிபுரிகிறார். எனக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு.


இப்போதைக்கு என்னைப்பற்றிய இவ்வளவு தகவல்கள் போதுமென்றே நினைக்கிறேன். என் பேனா நட்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மிகுதி விபரங்களை உங்கள் பதில் கண்டு எழுதுகின்றேன். உங்களைப் பற்றிய செய்திகளையும் எனக்கு எழுதுங்கள். அவற்றை நான் அன்போடும், ஆவலோடும் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். என் எதிர்பார்ப்பை நீங்கள் வீண்டிக்க மாட்டீர்கள் என்றே நான் நினைக்கிறேன்.

எங்கள் பேனா நட்பு என்றிடும் இந்த அரிய உறவு என்றுமே தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இம்மடலை நிறைவு செய்கிறேன். உங்களை அடுத்த மடலில் சந்திக்கும் வரை,

என்றும் நட்புடன்,
Miss. Nanthini Veeravagu.
Shrilanka


மறக்கமுடியாத நினைவுகளோடு,


8 comments:

தனிமரம் said... [Reply]

நீங்கள் நட்பை ஏற்றுக் கொண்டீர்களா? இப்போது பேனா நட்பு தொலைந்து பேஸ்புக் நட்பு வளர்ந்துவிட்ட சூழலில் கடிதம் காணாமல் போய் விட்டது.

கவிப்ரியன் said... [Reply]

நட்பை ஏற்றுக்கொண்டு பதில் எழுதியிருந்தேன். ஆனால் நீண்டநாள் அது நீடிக்கவில்லை. மற்ற விபரங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

வே.சுப்ரமணியன். said... [Reply]

தங்களின் வாழ்க்கை அனுபவங்களையும், சம்பவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் தங்கள் உள்ளத்திற்கு ஒரு சிறப்பு வணக்கம்! அருமை. தொடருங்கள்! நல்லதொரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

எம்.ஞானசேகரன் said... [Reply]

எல்லாமே மறக்கமுடியாத அற்புதமான கடிதங்கள்!

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வே. சுப்ரமணியன் அவர்களே!

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி ஞானசேகரன்! தொடர்ந்து வாருங்கள்.

Anonymous said... [Reply]

hai kavi priyan i have found this unexpectedly. i am nanthini veeravagu. now i am nanthini gnanapragash. i am so happy now. please contact me on face ook.

கவிப்ரியன் said... [Reply]

என்னால் ஆச்சர்யத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை தோழி!. இது நிஜம்தானா!? 15 வருடங்களுக்குப் பின் இணையம் என்ற மகா அதிசயத்தின் மூலம் இழந்த நண்பர்களை மீண்டும் பெற முடியுமா? இந்த சந்தோஷத்தை ஒரு பதிவாக்க வேண்டுமே! உங்கள் அனுமதி கிடைக்குமா? எனக்கும் கூட அளவு கடந்த மகிழ்ச்சி தோழி. தொடர்பு கொண்டதற்கும் நன்றி!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!