ஞாயிறு, 1 ஜனவரி, 2012

எத்தனைஅழகான வாழ்த்து மடல்!

பதிவுலக தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்கள்!


என்னுடைய சகோதரிமுறை உறவினர் (மாமாவின் மனைவி) ஒருவர் சிறந்த ஓவியங்களை வரையக்கூடிய திறமை மிக்கவர். தற்செயலாகத்தான் அவரின் திறமை எனக்குத் தெரியவந்தது. வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தை நிர்வகித்து வருபவர். நிறைய உறவினர்கள் இருந்தும் எங்கள் குடும்பத்தோடும், என்னோடும் நெருக்கமாக பழகுபவர். வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எந்தவித அலட்டலோ, படோபடமோ இல்லாதவர். 


ஓவியத்திறமை இருப்பதாலோ என்னவோ நிதானமாக பேசுவார். எதையும் மிகவும் யோசித்தே முடிவெடுப்பார். ஆனால் தொழில் நிமித்தமாய் நான் இடம்பெயர்ந்து போனபோது அவரது தொடர்பும் தொடர்பற்றுப்போனது.
எப்போதாவது சோந்த ஊருக்குச் செல்லும்மோது அவசியம் அவரையும் பார்த்துவிட்டுத்தான் வருவேன். 


அவரது குடும்பம் பிள்ளயின் படிப்பு கருதி கிராமத்தைவிட்டு நகர்ப்புறத்துக்குப்போக எண்ணி இடம் வாங்க நல்ல இடமாக தேடியபோது நான்தான் ஒரு புரோக்கர் மூலம் முடித்துக்கொடுத்தேன். வீட்டின் கட்டுமானப்பணிகளில் அவரது ஓவியமும், அதை என் மூலமாக கிரில் ஜன்னல், கதவுகளில் கொண்டுவர அவர் காட்டிய முயற்சியும், ஆர்வமும் அளவிடற்கரியது.


ஒருமுறை நான் அவர் இல்லம் சென்றபோது ஒரு பழையதாளில் பாதி வரையப்பட்ட ஓவியம் ஒன்று கசக்கி எறியப்பட்டும், மற்றொரு புதிய ஓவியத்தை வரையும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். எனக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க எண்ணி உள்ளே போனபோது, கசக்கி எறியப்பட்ட அந்த ஓவியத்தை நான் பிரித்துப் பார்த்தேன். எனக்கென்னவோ அதில் எந்தக்குறையும் தென்படவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று மீண்டும் அதைக் குப்பைக்கூடையில் போடாமல் மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன்.


ஆறுமாதமோ அல்லது ஒருவருடமோ கழித்து எங்கோ புத்தகத்தின் நடுவில் வைத்திருந்த அந்த ஓவியத்தைப் பார்க்கநேர்ந்தவுடன் எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. உடனே அதை செயல்படுத்தினேன். அதை எடுத்து கொஞ்சம் வண்ணம் தீட்டி மெருகேற்றி, சூடான அயர்ன் பாக்ஸால் தேய்த்து கசங்கலை சரிசெய்து, புகைப்படக்கலை நிபுணரான என் நண்பரிடம் கொடுத்து அதை புகைப்படமாக்கி பல நகல்களை எடுத்து, அடுத்து வந்த புத்தாண்டிற்கு என் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தாக அனுப்பி வைத்தேன். 

இதை வரைந்த என் சகோதரிக்கும் (ஆனந்த அதிர்ச்சி கொடுக்க) அனுப்பிவைத்தேன்.

அவர் எனக்கு அப்போது எழுதிய கடிதம் இது!

அன்புள்ள சகோதரருக்கு,


ஜெயந்தி எழுதும் கடிதம். இங்கு நான், மாமா மற்றம் கிரண் அனைவரும் பூரண நலம். அதுபோல் உங்கள் இருவர் மற்றும் குழந்தைகள் இருவரின் நலன்பற்றி அறிய ஆவல்.


மற்றபடி நீங்கள் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து மடல் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. 'எனக்கு வந்த வாழ்த்து மடல்களிலிலேயே உங்கள் வாழ்த்து மடல்தான் மிகவும் மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. நான் ஒருபொருட்டில்லாமல் கீழே போட்டிருந்த ஓவியத்தை நீங்கள் எத்தனை அழகான வாழ்த்து மடலாக மாற்றி அனுப்பியிருக்கிறீர்கள்' என்று வியந்தேன். 


அழகான ஓவியங்களைப் படைத்துவிட்டு சரியான முறையில் பராமரிக்காமல் விட்டுவிடும் எனக்கு இது ஒரு பாடமாகக் கூட இருக்கிறது. உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கிறேன்.


உங்கள் இருவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் மனைவி எப்படி இருக்கிறார், நான் கேட்டதாகக் கூறவும். குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? மாமாவும் உங்களுக்கு கடிதம் எழுதச்சொன்னார். கிரணும் நன்றாகப் படிக்கிறான். 

தவிர நீங்கள் பொங்கலுக்கு ஊருக்கு வருவீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது விரிவாகப் பேசிக்கொள்ளலாம். ஏதுமின்றி முடிக்கிறேன். (எனது தந்தை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார்)


இப்படிக்கு,

ஜெயந்தி.
01.01.2000


முத்து போன்ற எழுத்துக்கள் கோர்த்து அதோடு புத்தாண்டு வாழ்த்தையும் சேர்த்து அனுப்பிய சகோதரருக்கு நன்றி!


(இந்த புத்தாண்டு முதல் நாளில் எனது இந்த 69 வது பதிவோடு பத்தாயிரம் (10,000) பக்கப்பார்வைகளைக் கடந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் நான் பதிவிடத் துவங்கினேன். இத்தனை குறுகிய காலத்திற்குள் நான் இந்த நிலையை எட்டியிருப்பது என்னளவில் பெரிய சாதனையே! ஆதரவு தந்த அனைத்து வலையுலக வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)


மறக்கமுடியாத நினைவுகளுடன்,

5 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது… [Reply]

என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

புத்தாண்டில் எனது முதல் இடுகைக்கு முதல் நபராக வந்து வாழ்த்திய நண்பர் மகேந்திரனுக்கு மனமார்ந்த நன்றி!

சசிகலா சொன்னது… [Reply]

மிகவும் அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Unknown சொன்னது… [Reply]

எல்லாக் கடிதங்களையும் நீங்கள் பாதுகாத்து வைத்திருப்பது ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது! வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சசிகாலா! தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!