ஜெயந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஜூலை, 2012

பாராட்டு மழை!



எனது சில பழைய கவிதைகள் சிலவற்றைப் பதிவிட்டிருந்தேன். அது குறித்து எனது நண்பர்கள் இருவர் எழுதிய பாராட்டுக் கடிதங்கள் இரண்டு கண்ணில் பட்டது. மறக்க முடியாத நண்பர்களின் கடிதம் அல்லவா? அதையும்தான் பதிவில் கொண்டுவரலாமே!


எனது சகோதரி ஜெயந்தியைப் பற்றி இந்த இடுகையைப் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். எனது கவிதைகளைப் படித்துவிட்டு அவர் எழுதிய சிறு விமர்சனத்தையும், என் பால்யகால நண்பன் ஈஸ்வரன் எழுதிய சிறு கடிதத்தையும் இங்கு பதிவிடுகிறேன்.

 
கல்லிலே உளி கொண்டு சிலை வடிக்கும் அற்புதக் கலைஞன் போல் சொல்லிலே ஒளி கொண்டு கவி படைக்கும் கவிஞன் இவரைப் பாராட்டுகின்றேன். பல விதமான துறைகளில் முன்னேறியிருக்கும் நமது நாட்டில் ஆண்-பெண் நட்பு என்றாலே அது ஒரு கிசு கிசு. அன்பிற்காக ஏங்கும் இதயத்திற்கு நல்லதொரு நம்பிக்கை வேண்டும். மனதிற்கு தெளிவான அறிவுறை கூறும் நட்பு யாருடையதாக இருந்தால் என்ன?

நல்ல கருத்துப் பரிமாறல்கள் தோழக்கு தோழன், தோழிக்கு தோழி என்றில்லாமல் தோழனுக்கு தோழியுமாக கலந்து பேசலாம். பேசுவதெல்லாம் காதலாகிவிடாது. ‘இளமைக்குச் சாபமோஎன்று கவிதை அமைத்திருக்கும் இவருக்கு நல்லதொரு நட்பை ஆண்-பெண் பேதமில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறி முடிக்கிறேன்.
இங்ஙனம்,
ஆர்.ஜெயந்தி.


அன்புள்ள நண்பனுக்கு, உன்னுடைய இரண்டு கடிதமும் அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றேன். பதில் எழுதாமல் விட்டதற்கு மன்னிக்கவும். கவிதை எழுதுவதில் உனக்குள்ள ஆர்வம் எனக்கு பொறாமையாகவும், பெருமையாகவும் இருக்கிறது. உனக்கு வீட்டிலும் சரி, அக்கம் பக்கத்திலும் சரி எந்தவொரு ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் இல்லாமல், தன்னைத்தானே ஊக்குவித்துக்கொண்டு தான் சிறந்த கவியாக வேண்டும், எழுத்தாளனாக வேண்டும் என்ற முயற்சி உன்னைத்தவிர நம்மவர்களில் யாருக்குமே கிடையாது. I felt extremely happy, when I received your Invitation.

அம்மா உங்க வீட்டிற்கு வராத காரணம் நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாயோ அது சரியாகிவிட்டது. உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். யார் என்ன சொன்னாலும் சரி, என்ன பேசினாலும் சரி எக்காரணம் கொண்டும் நம்முடைய நட்பு பிரியக் கூடாது. அது தொடர வேண்டும். Under any circumstances, whatever the cause be, I need your friendship, I want your friendship because I like your friendship.

இப்படிக்கு,
ஈஸ்வரன்.

தொடர்புடைய கவிதைகளின் இடுகைகள் -
சொல் நிலவே!

நட்புடன்,

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

உங்களுக்குள்ளும் எவ்வளவு திறமை முடங்கிக் கிடக்கிறது?


அன்புள்ள சகோதரருக்கு,
உங்கள் அன்பு மறவா சகோதரி ஜெயந்தி எழுதுவது. இங்கு மாமா, கிரண் மற்றும் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பூரண நலம். அதுபோல் உங்கள் இருவர் நலன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி அறிய ஆவல்.
உங்களுடைய கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் 26.04.2000 அன்று கிடைத்தது. கடிதத்தைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அச்சில் வார்த்தது போல் அழகிய கையெழுத்து, அழகிய வார்த்தை நடையில் எழுதியிருந்தீர்கள். உங்களுக்குள்ளும் எவ்வளவு திறமை முடங்கிக் கிடக்கிறது. அதை சரியான முறையில் வெளிக்கொணராமல், வழி தெரியாமல் போராடுகிறீர்கள். நீங்கள் முயற்சி செய்தால் நல்ல ஒரு பத்தரிகை நிருபராகக் கூட வரலாம்.
நீங்கள் கூறியிருந்தபடி எனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் வரையவேண்டும் என்று ஆசைதான். ஆனல் பெயின்டிங் பிரஷ் தொடக்கூட நேரமில்லை. இரண்டு குடும்பங்களையும் கவனிக்க வேண்டும். கட்டட வேலை, டெய்லரிங், கம்ப்யூட்டர் கிளாஸ் என்று ஓய்வில்லாமல் ஏதோ செய்து கொண்டிருப்பதால் என்னால் முழு மூச்சாக ஓவியத்தில் ஈடுபட முடியவில்லை.
உங்கள் கடிதத்தில் இருக்கும் ஊக்கம்தான் என்னை முழுமையாக ஓவியத்தில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாமாவிற்கு துணைத்தாசில்தார் பதவி கிடைத்திருக்கிறது. ஆனல் சீனியாரிட்டிக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர் கலெக்டர் ஆஃபிசில்தான் வேலை செய்கிறார். கிஷோர் நன்றாக படிக்கிறான். கூடவே இந்தியும் படிக்கிறான்.



18.04.2000 அன்று நீங்கள் வந்து போனதாக மாடி வீட்டில் இருப்பவர்கள் கூறினார்கள். நீங்கள் வந்த நேரத்தில் நான் இல்லாததது குறித்து வருத்தம் அடைந்தேன்.
நான் வரைந்த ஓவியத்தை ஃபோட்டோ காப்பியாக மாற்றி அனுப்பியிருந்தீர்கள் அல்லவா? அதை எப்படி ஃபோட்டோ காப்பியாக மாற்றுவது என்ற விபரத்தை எழுதி அனுப்பவும். நீங்கள் வாழ்த்தாக மாற்றிய ஓவியம் இருந்தால் இரண்டு நகல் அனுப்பி வைக்கவும்.
நானும் இங்கே சில படங்களை வரைந்து வைத்திருக்கிறேன். அதை எப்படி இவ்வாறு மாற்றுவது என்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் விவரம் கேட்டு எழுதியிருக்கிறேன்.நீங்கள் ஊருக்கு வந்தால் அவசியம் வந்து போகவும்.
இவருடைய அக்கா மகன் இப்போது அமெரிக்காவிலுள்ள BOSTON-ல் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கிறான்.
உங்கள் கம்பெனி நிலவரம் பற்றி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? அதனால்தான் சொல்கிறேன் உங்களுக்குள்ளே இருக்கும் திறமையை நம்பி முழுமையாகப் போராடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் கம்பெனி வேலையை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்காமல் கூடவே கட்டுரை, கவிதை என எழுத்து வேலையையும் தொடர்ந்து செய்யுங்கள். அதில் நிச்சயம் முன்னேற்றம் காண்பீர்கள்.
இதுதான் சங்கதி. மற்ற விஷயங்கள் ஏதுமின்றி முடிக்கிறேன்.
இங்ஙனம்,
ஜெயந்தி.
தொடர்புடைய இடுகை;
எத்தனை அழகான வாழ்த்து மடல்.