வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஒரே நாளில் மூன்று, நான்கு பதிவுகளைப் போடுவது எப்படி?


 இது ஒரு எச்சரிக்கைப் பதிவு

1). சொந்தமாக கணணி இருக்கவேண்டும்.
2). அதிவேக இணைய இணைப்பு இருக்கவேண்டும் அல்லது
3). அலுவலகத்தில் ஓசி இணைய இணைப்பு இருந்தாலும் சரி
4). தமிழில் தட்டச்சு செய்ய ஒரு மென்பொருள் நிறுவ வேண்டும்
5). தமிழில் வேகமாக தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்
6). அடுத்தடுத்து பதிவுகளைப் போட நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டும்
7). எந்தத் தலைப்பில் போட்டால் வாசகர்கள் வருவார்கள் என்று மெனக்கெட வேண்டும்.
8). அப்போதுதான் வெளியான சினிமாவைப் பற்றி எழுதவேண்டும்
9). கவர்ச்சிகரமான பாலியல் ரீதியான தலைப்புகளைப் போடவேண்டும்
10). முக்கியமாக வேலை வெட்டி இல்லாமல் இருக்க வேண்டும்
11). வீட்டிலும், அலுவலகத்திலும் பதிவு பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
12). பரந்து பட்ட வாசிப்புத்தன்மையும், சமூகப் பிரக்ஞையும் இருக்க வேண்டும்.


இப்படித்தானே நினைக்கிறீர்கள் நீங்கள்! அதுதான் இல்லை. இது மிகவும் சுலபமான வேலை. உங்களிடம் கணிணியும், அதிவேக இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதும். ஒரே நாளில் இரண்டு மூன்றென்ன பத்து பதிவுகள் கூட போடலாம். மிகவும் சுலபமான வழி இருக்கிறது.

தமிழ் சுமாராகத் தெரிந்திருந்தாலே போதும். தமிழ் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மைதான் நண்பர்களே! நான் ஆரம்பித்த அதே தினத்தில் என்னுடைய நண்பர் ஒருவருக்கு பதிவுலகத்தைப் பற்றி எடுத்துக்கூறி, நானே எல்லா வழிமுறைகளையும் கூறி பதிவை ஆரம்பிக்கச் சொன்னேன். அவரும் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் யாருக்கு எவ்வளவு பக்கப் பார்வைகள் என்கிற போட்டி கூட இருந்தது. நான் ஒரு நாளைக்கு ஒரு பதிவிட கடுமையாக மெனக்கெடுகிறேன்.

அது எப்படிப்பட்ட செய்தியோ தட்டச்சு செய்வதுதான் முக்கியமான வேலையாக இருக்கும். அப்புறம்தான் இணைய இணைப்பு பற்றிய கவலை. ஆனால் இவரோ ஒரு நாளைக்கு குறைந்தது 4 பதிவுகளைப் போடுகிறார். எப்படி என்று ஆராய்ந்த போதுதான் சூட்சுமம் புரிந்தது. அது வேறொன்றுமில்லை, பதிவுத் திருட்டுதான். எல்லா வலைப்பதிவர்களும் பதிவுத்திருட்டு பற்றி குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டிருக்க இவர் சத்தம் போடாமல் பிரபல பதிவர்களின் வலைத்தளங்களிலிருந்து மிகச்சுலபமாக காப்பி பேஸ்ட் செய்து மிகவும் வெற்றிகரமாக பதிவிட்டு வருகிறார். எல்லா திரட்டிகளிலும் ஓட்டுக்கள் வேறு. பக்கப்பார்வைகள் இப்போது என்னுடைய தளத்தைவிட கிட்டத்தட்ட 2000 ம் அதிகம்.

இது பொறாமையால் எழுதப்பட்ட பதிவு இல்லை என்று கஷ்டப்பட்டு பதிவு எழுதும் அன்பர்களுக்குப் புரியும். அனைத்து வாசகர்களுக்கும் செய்திகள் போய்ச்சேர வேண்டும் என்று காப்பி செய்து போட்டிருந்தாலும், குறைந்த பட்சம் எங்கிருந்து அந்தப் பதிவைச் சுட்டார் என்று கூட போடுவதில்லை. பதிவுலகின் விதிமுறைகளையும், தார்மீக நெறிமுறைகளைப் பற்றியும் எடுத்துக்கூறியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வாசகர்கள் அதிகமாக வர வர இது ஒரு போதையாக மாறிப் போகிறது என நினைக்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்வதே தெரியாது என்பதால் அது வீண் வேலை என்கிறார். நல்ல நண்பராக அறிமுமான இவரை நேரிடையாக காட்டிக் கொடுக்கவும் முடியவில்லை. எப்படியிருக்கிறது பாருங்கள் பதிவுலகம்? இது போல் எத்தனை பேரோ?!  இதில் உச்சகட்டமாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கு எனது பதிவுகளை அனுப்ப பதிவு செய்து கொடுக்க, அது என்னுடைய பதிவுதான் என்பதே தெரியாமல் அதை உடனே காப்பி, பேஸ்ட் செய்து பதிவாகப் போட நான் ஆட்சேபிக்க, அப்புறம் அந்தப்பதிவை நீக்கினார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இப்படிப்பட்ட பதிவுத் திருடர்கள் எந்தப்பதிவுகளையும் முழுமையாகப் படிப்பதுகூட இல்லை. கொஞ்சம் பரபரப்பான அல்லது வாசகர்கள் மத்தியில் எடுபடும் விஷயங்களை அதன் தலைப்பை மட்டுமே பார்த்துவிட்டு, அதைக் கொஞ்சம் மாற்றி காப்பி செய்து போடுவதுதான்.

பதிவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

ஒரு காதல் கடிதம் கவிதையாக உங்களுக்காக OPEN HEART என்ற இந்த தளத்தில்....

4 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது… [Reply]

அதிக பதிவு இடுவதால், எந்த இலாபமும் இல்லை. சொந்த பதிவாக எழுதுவதன் ஒரு மனத்திப்தி கிடைக்கிறதே!!! பின்னொரு காலத்தில் பார்க்கும் போது கூட “அட,.. இது நா எழுதினதுள்ள”னு சந்தோசப்பட வைக்குமே!! இது இன்னொருத்தருடைய பதிவை காபி + பேஸ்ட் பன்ரவங்களுக்கு கிடைப்பதில்லை

சம்பத்குமார் சொன்னது… [Reply]

தாங்கள் கூறியதனைத்தும் உண்மைதான் நண்பரே..

எதிர்காலத்தில் நம் தலைமுறை எடுத்துப்பார்த்தாலும் கூட சந்தோஷப்படும் தருணம் ஒன்றே அதனை வென்றுவிடும்

பகிர்ந்த விதம் அருமை

கலங்க வேண்டாம் நண்பரே.நம் பணியை செவ்வனே செய்து கொண்டிருப்போம்.வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கைகளை விதைத்துச் செல்வோம்

நட்புடன்
சம்பத்குமார்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அருமையான கருத்துக்கள் MOHAMEDFAAIQUE. வருகைக்கு நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி சம்பத்குமார் அவர்களே! தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!