சனி, 22 அக்டோபர், 2011

அன்புள்ள ஐயா.......


மறக்க முடியாத பழைய நினைவுகளில் மிக முக்கியமானது பள்ளிக்கூட வாழ்க்கை. எதுவும் தெரியாத விடலைப் பருவம். எல்லாமே விளையாட்டு. படிப்பில் விளையாட்டில் ஆரோக்கியமான போட்டி. நண்பர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை. வகுப்புத் தோழிகளிடத்து சுதந்திரமாய்ப் பேசமுடியத வெட்கம், பிடித்த ஆசிரியர்கள் என்று எத்தனையோ பட்டியலிடலாம்.

என் கிராமத்தில் ஆரம்ப பாடசாலை மட்டுமே இருந்தது. உயர்நிலை பாடசாலைக்கு கிட்டத்தட்ட மூன்று கி.மீ. நடந்து போகவேண்டும். பெரும்பாலும் என்னோடு படித்த எல்லா மாணவர்களுமே நடந்துதான் போவோம். கிராமத்தில் அமைந்த பள்ளிக்கூடம் என்றாலும் மிகப்பரந்த பரப்பளவைக் கொண்டது அது. நன்கு வளர்ந்த புங்க மரங்களும், அது தரும் நிழலும் பள்ளி வளாகத்தையே குளுகுளு என்று வைத்திருக்கும்.

ஆறாம் வகுப்பில் புதிதாய்ச் சேர்ந்தவுடன் எங்களைப்பற்றி ஆசிரியர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லாத காரணத்தால் இன்னும் சரியாக அறிமுமாகாமலேயே இருந்தோம். சுற்றுபுற எல்லா ஊர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து சேர்வதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமிருக்கும். அதனால் ஏ, பி, சி. டி. என பிரிவுகள் இருக்கும். எங்கள் ஊர் மாணவர்கள் எல்லோருமே ஒரே பிரிவில் (அதவது ‘ஏ’) இருந்தோம். முதல் மாதாந்திரத் தேர்வு வந்தது. நானும் என் (எங்களூர்) நண்பர்கள் மூன்று பேரும் முதல் நான்கு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டோம்.

இப்போது ‘ஏபிரிவு தவிர்த்த மற்ற வகுப்பாசிரியர்கள் தங்கள் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் இல்லை என்று வாதாடி ‘ஏ பிரிவில் இருந்த எங்களைப் பிரித்து ஆளுக்கொருவராக தங்கள் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டனர். நான் ‘சிபிரிவிற்கு மாற்றப்பட்டேன். அவர்களின் வாதம் சரியென்பதை அடுத்த காலாண்டுத்தேர்வு நிரூபித்தது. நானும் என் ஊர் நண்பர்களும் அவரவர்கள் வகுப்பில் முதல் ரேங்க்கை யாருக்குமே விட்டுக்கொடுக்கவில்லை.

இப்படித்தான் வகுப்பாசிரியர்களுக்கும் எங்களுக்கும் நெருக்கம் அதிகமானது. நான்றாகப் படிக்கும் பிள்ளைகள் என்றாலே ஆசிரியர்களுக்கும் பிடிக்கும் தானே! ஆறாம் வகுப்பில் எனது வகுப்பாசிரியர் எனது தமிழாசிரியை திருமதி. மனோன்மணி டீச்சர். ஏழாம் வகுப்பிலும் அவரே தமிழாசிரியை. எட்டு, ஒன்பதாம் வகுப்புகளில் இந்த தமிழாசிரியரின் கணவர்தான் எங்களுக்கு தமிழாசிரியர். இப்படி இவர்களின் அன்புக்கு பாத்திரமான நான் பிற்காலத்தில் அவர்களின் குடும்ப நண்பராகவும் ஆனேன்.

அந்தக்காலகட்டத்தில் அவர் என்க்கு எழுதிய கடிதம் இது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்பற்றுப் போயிருந்த நான் கடந்த மாதம் ஒரு திருமணத்திற்காக சொந்த ஊர் போனபோது அவரைச் சந்திக்கப் போனேன். அவர் மரணமடைந்து ஓராண்டாகி விட்டது என்ற துக்கச் செய்திதான் எனக்குக் கிடைத்தது. ஏதோ வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த எனது ஆசிரியையையும் பார்க்க முடியவில்லை. எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த அவர்களின் மகளையும் பார்க்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்தபின் தொலைபேசியின் வாயிலாக உரையாடியபோது என்னை மீறிய துக்கத்தால் அழுதேவிட்டேன். பழைய நினைவுகளைக் கிளறியபோது அவர் எனக்கு 1995 ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. இதை அவரின் நினைவாக உங்களுடன் பகிர்ந்து என் நினைவுகளை மீட்டெடுக்கிறேன்.  

அன்புள்ள கவிப்ரியனுக்கு,

உன் கடிதம் கிடைத்தது. செய்திகள் அறிந்தோம். எல்லோரும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். வேலையின்றி வேதனையுற்ற உனக்கு விடியல் உண்டாகாதா என்று வருந்திய எங்களுக்கு உன் கடிதம் பாலை வார்த்து சந்தோஷத்தை அளித்தது. இப் பணியினை தட்டாமல் தொடர்ந்து செய்வதற்கு இறையருளை வேண்டுவதோடு, எங்கள் மனமார்ந்த ஆசியினையும் உன் மேல் பொழிகின்றோம். என்றும் மகிழ்ச்சி வளர, வாழ்வு வளம் பெற வாழ்த்துகின்றோம்.

இனியாவது வேறு வேலையில் நாட்டம் கொள்ளாமல் செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து தொழில் செய்து வாழ்வில் முன்னேற முயற்சி செய். மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிறுவனம் எனில் பிற்காலத்தில் நல்ல பல பலன், பயன்கள் உண்டாகும். ஆதலால் கவனமாக இருக்கவும். பணியில் தன்னிலை ஏற்பட்டபின் குடும்பத்தை அமைத்தல் நல்லது. அதுவரை சிரமத்தைப் பொறுத்தல் சாலச்சிறந்தது.
உன் தம்பி வந்திருந்தான். அவன் மூலமும் உன் நிலையை அறிந்தேன். அவனும் நாங்கள் விசாரித்ததைச் சொல்லியிருப்பான் என்று எண்ணுகிறோம்.

மற்றபடி இங்கு வீட்டில் அனைவரும் நலம். அதியனின் நண்பர்களும் சுகமே. லட்சுமி 12.04.1995 ம் நாளன்று தென்னார்க்காடு மாவட்டம் சங்கராபுரத்தில் வேலையில் சேர்ந்துள்ளான். அரசுப் பணிதான். சந்துருவுக்கு இன்னும் EB ல் வேலை கிடைக்கவில்லை. அன்றியும் 05.05.1995 வெள்ளிக்கிழமையன்று வேலூர் வாசவி கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. காஞ்சனாவின் அண்ணன்களும் பத்திரிகை கொடுத்தனர். உனக்கும் கொடுத்திருப்பார்கள் என நம்புகிறேன். நேரம் காலை 9 -10 மணி.

மேலும் உன் ஆசிரியை அவர்கள் S.S.L.C. விடைத்தாள் திருத்த திருவண்ணாமலை சென்றுள்ளார். தொரப்பாடியில் சுந்தர், தேன், சந்தான கிருஷ்ணன் அவர்கள் வீட்டில் அனைவரும் நலம். மற்றபடி விசேடம் இருப்பின் அறிவிக்கவும்.
பிறபின்,

இன்னணம்
உனது ஆசிரியர்.

உங்களுக்காக ஒரு வித்தியாசமான வலைப்பூ சின்னு ரேஸ்ரி  போய்த்தான் பாருங்களேன்!


4 கருத்துகள்:

மாதேவி சொன்னது… [Reply]

நீங்கள் ஆசிரியர்மேல் கொண்ட பற்றும், ஆசிரியரின் கடிதமும் நெகிழவைக்கிறது.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகை தந்து தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி மாதேவி அவர்களே!

Unknown சொன்னது… [Reply]

நல்ல ஆசிரியர்களால்தான் நமது வாழ்க்கைப் பாதையும் செம்மையாக அமைகிறது. அந்த ஆசிரியருக்கும், கவிப்ரியனுக்கும் வாழ்த்துக்கள்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வந்து வாழ்த்தியதற்கு நன்றி ஞானசேகரன் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!