ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது’?

('நம்பிக்கையோடு காத்திரு' கடிதத்தின் தொடர்ச்சி)
சகோதரனே! 

நீ படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. நீ எனக்களித்த ‘சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது என்ற சிவசங்கரியின் புத்தகத்தை நீ படித்த பிறகே கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். இதைப் படித்திருந்தும் இப்படி நீ பிரச்னைகளில் மூழ்கி இன்னும் தெளிவடையாமல் இருப்பது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது.


படிப்பது எதற்கு? நாம் கதை, கவிதை, கட்டுரை எழுதுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவா? நம் வாழ்க்கையில் தோன்றும் பிரச்னைகளிலிருந்து மீளவும்தான் அந்த நல்ல கருத்துக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிவசங்கரியின் சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

‘நம்மை தலை தூக்கவிடாமல் அழுத்தப் பார்க்கும் பிரச்னைகளைத் தவிர்ப்பதும், மீறி முளைத்துவிட்டதை கிள்ளி எறிவதும் நம் கையில்தான் இருக்கிறது.

‘நம்மைப் பற்றிய விழிப்புணர்ச்சி நமக்கு எது தேவை, எது தேவையில்லை, எது சாத்தியம், எது சாத்தியப்படாது, எது ஒத்துக்கொள்ளும், எது ஒத்துக்கொள்ளாது போன்ற சுய அலசலுடன் கொஞ்சம் விவேகம், நிதானம் , தெளிவு இவைகளையும் கூட்டிக் கொண்டுவிட்டால் எந்தப் பிரச்னையையும் ஊதித் தள்ளிவிடலாம்.

‘எந்த ஒரு பிரச்னையும் பிரசவிக்கும் போதே விழிப்புணர்வுடன் புரிந்து கொண்டு செயல்பட்டால் மீளுவது சுலபம்.

நீ இன்னும் பல முறை படித்து தெளிய வேண்டிய நல்ல புத்தகம் (எனக்கும் கூட) அது.

உன் கவிதையையே உனக்காக கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன். ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம்.

‘கிட்டாதாயின் வெட்டென மறந்தால்
பட்டென ஆசைகள்
பறந்து போகும்
ஆசைகள் மனதில் அழிந்து போனால்
நம்மை அலைக்கழித்துக் கொல்லும்.
துன்பம் போனால்
வாழ்க்கையில் இன்பம் மலரும்.

ஆசையும் கனவும் நம்
நெஞ்சின் கற்பனைதான்
ஆக்கி வைப்பதோ அந்த
ஆண்டவன் கருணைதான் – ஆக
நினைத்ததை அடைய
ஆக்கமும் ஊக்கமும்
அவசியம் தேவை.
ஆண்டவன் நம்பிக்கையும்
அதோடு தேவை.

ஆசையும் கனவும்
தொல்லைகள் ஆகும்
அழித்திட இன்பத்தின்
எல்லைகள் காண்போம்.
நம்பிக்கை உரமது
நம்மிடம் இருந்தால்
வாழ்க்கைப் பயிரது
செழிப்போடு வளரும்.

தோல்வி அடைவதோ
வெற்றியின் முதல் படி
விரக்தி அடைதலோ
வாழ்வை வழுக்கிட
வைக்கும் முதல் அடி!

எதிர்ப்புகள் இன்றி வாழ்க்கையே
இல்லை.
எதிர்ப்பினை எதிர்ப்போம் நம்
எண்ணத்தில் நம்பிக்கை வளர்ப்போம்.
நாம் நினைத்ததை முடிப்போம்
நிறைவோடு வாழ்வோம்.

பயன்படுமாயின் என் கருத்துக்களை ஏற்கவும்.

சோர்வு கொள்ளாதே மனமே உனது
ஆர்வமெல்லாம் ஒருநாள் பூரணமாகும்
காரிருள் மூடிய நீளிரவின் பின்னர்
காலை மலர்தலும் கண்டனை அன்றோ
தாரணி சிலிர்க்கும் தாமரை சிரிக்கும்
அலிக்குளம் களிக்கும் அருணனும் உதிப்பான்.

இந்தக் கவிதை பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியது.
நேரமின்மையால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

அன்புடன் சகோதரி
கவிதா.
(உன் விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன். கதையை மறவாமல் எழுதி அனுப்பு.)

மகாகவி பாரதி 100 ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி செல்லம்மாவுக்கு
எழுதிய கடிதங்களைப் படித்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக... எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப்பக்கத்தில்... 'மகாகவி பாரதியின் கடிதங்கள்' என்ற இந்தப் பதிவைப் பாருங்கள்.


10 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

உங்கள் சகோதரியின் கடிதம் எல்லோருக்கும், எந்தக்காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. பிர்விற்கு நன்றி!

Unknown சொன்னது… [Reply]

பகிர்வுக்கு நன்றி நண்பா

கோகுல் சொன்னது… [Reply]

நிரூபனின் நாற்று தளத்தின் மூலம் இன்று உங்கள் தளத்தை வந்தடைந்தேன்!
சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது.வாழ்த்துக்கள்
தொடர்கிறேன்! நன்றி!

மகேந்திரன் சொன்னது… [Reply]

தமிழ்நாற்றால் அடையாளம் காட்டப்பட்டீர்கள்,
தொடர்கிறேன் இன்று முதல்....

http://ilavenirkaalam.blogspot.com/

Mathuran சொன்னது… [Reply]

அசத்தலான கடிதப்பதிவு

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஞானசேகரன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி! வைரை சதிஷ்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி கோகுல் அவர்களே! தங்களை அறிமுகப்படுத்திய 'நாற்று'க்கும் நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி மகேந்திரன்.தமிழ்நாற்றுக்கும் நன்றி! நானும் உங்களைப் பின்தொடர்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வந்து கருத்திட்டமைக்கு நன்றி மதுரன். இதுவரை உங்கள் கருத்து ஸபேம்-ல் இருந்திருக்கிறது, கவனிக்கவில்லை.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!