சனி, 1 அக்டோபர், 2011

நம்பிக்கையோடு காத்திரு...

அன்புள்ள சகோதரனுக்கு,                   Madras                 03.08.1993

உன் அன்பை என்றும் மறவாத சகோதரி எழுதும் கடிதம். என்னவென்றால் இங்கு நாங்கள் நலம். அங்கு உன் நலனுடன் மற்றுமுள்ள அனைவரின் நலனும் அறிய ஆவல்.

உன் கடிதம் கிடைதது. உன் தாமதக் கடிதத்தின் மூலம் உன் வேதனைகளை அறிந்து நானும் வேதனையுற்றேன். எங்கள் திருமண வாழ்த்துக் கவிதையை மறவாமல் எழுதி அனுப்பியதற்கு மிகவும் நன்றி! உன் சமீபத்திய கவிதையும் மிக நன்றாக இருந்தது.

ஏதோ நடந்திருக்கு என்பதை உன் வேதனை மிகுந்த கடிதம் மூலம் உணர முடிந்தது. மறுபடியும் மறுபடியும் ஒன்றை உனக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். உன் முன்கோபத்தைக் கொஞ்சம் முயற்சி செய்து குறைத்துக்கொள் (என் அனுபவத்தினாலும் கூறுகிறேன்). கோபம் இருப்பவரிடம் குணம் இருந்து பிரயோஜனம் இல்லை (என்னையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்). உன் குணம் எனக்குப் புரிகிறது. எல்லோர்க்கும் புரியவேண்டும் என்று நீ நினைத்தால் அது மிகவும் தவறு. புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும். புரியாதவர்களுக்கு நல்ல முறையில் உன்னையும், உன் குணத்தையும், உன் கருத்துக்களையும் நிதானமாக தெளிவாக புரியவை.

காரியம் ஆகவேண்டும் என்றால் காலைப் பிடிக்க வேண்டுமே ஒழிய, காலால் உதைகக் கூடாது அப்பனே! ஆத்திரப்பட்டு காரியத்தைக் கெடுப்பது அசட்டுத்தனம் என்று தெரியவில்லையா? எல்லாம் முடிந்த பிறகு அழுது, புலம்பி, மனம் குழம்பி என்ன பயன்? ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டுமே! அந்த ஆயிரம் பேர் இல்லை என்றாலும் நூறு பேராவது வாயில் விரல் வைத்துப் பாராட்டும்படி நீ ஏன் வாழ்ந்து காட்டக் கூடாது. அதை விடுத்து எனக்கும் கல்யாணம் நடக்குமா? என்ற சந்தேகத்தோடு நம்பிக்கை இழக்கலாமா?

உனக்கு அறிவுறை வழங்கும் தகுதி இல்லையென்றாலும், சகோதரி என்ற உரிமை இருப்பதால் தொடர்ந்து மேலும் எழுதுகிறேன்...
‘கோடி கொடுத்தாலாவது கூடி வாழ் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்வி. உனக்கு தெரியாததில்லை. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதும் தெரிந்ததே! அனுசரித்துப் போவதே அணுகூலம் என்று படுகிறது. (இதெல்லாம் எனக்குத் தெரிகிறது. அவர்களுக்குப் புரியவில்லையே என்று நீ ஆதங்கப்பட்டு புலம்புவது எனக்குக் கேட்கிறது).

நாம் படித்தவர்கள். நாம்தான் அவர்களை அணுசரித்து நடந்துகொள்ள வேண்டும். படிக்காதவர்கள் அல்லது படித்தும் நம்மைப் போன்று கருத்துக்களில் உயர்வடையாதவர்கள் அவர்கள். அவர்களுக்குப் புரியவில்லையே என்று அவர்கள் மேல் ஆத்திரப்படுவது நமக்குத்தான் இழிவைத் தேடித்தரும்.

நின்றுபோன திருமண விஷயத்திற்காகவும், மற்றும் உன் மனதில் புதையுண்டிருக்கும் எக்ஸ்ட்ரா விஷயங்களுக்காகவும் இப்படி செயலிழந்து, மனம் தளர்ந்து போகலாமா? நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்குப் போவதைப் பற்றி சிந்தனை செய். உனக்கேற்ற துணையை கடவுள் படைக்காமலா போயிருப்பார். படைத்திருப்பார்.

என்ன, அது என்னுடைய தாமதக் கடிதம் போல் கொஞ்சம் காலதாமதமாகக் கிடைக்கலாம் இல்லையா?! இன்னும் தாமதமா என்று கேட்காதே?! பொறுமை அவசியம். இதற்கு மேலும் பொறுமையா என்றும் திட்டாதே! காலமும் நேரமும் சேர்ந்து வந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும். எதற்கு வீணாக கவலைப்பட்டு உன் மனதையும் வேதனைப் படுத்திக்கொண்டு, மற்றவர்களிடத்திலும் அவப்பெயர் வாங்க வேண்டும்.

கவலையை விடு. இனிமேலாவது நிதானமாக செயல்படு. நல்ல முடிவை எடு. உன் மனதை, உள் மனதின் விருப்பு, வெறுப்புகளை பெரியவர்களுக்கு நல்ல முறையில் எடுத்துச் சொல்லி விளக்கு. கடவுள் விருப்பப்படி நடக்கட்டும் என்று நம்பிக்கையோடு காத்திரு. உனக்கும் நீ விரும்பியது போல் கட்டாயம் திருமணம் நடக்கும். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
அன்புடன்,

உன் சகோதரி.


கடிதம் குறித்தான கவிதை ஒன்று ரிஷபன் வலைப்பக்கத்தில் காண நேர்ந்தது. சென்று படியுங்களேன்.

9 கருத்துகள்:

இரா. வசந்த குமார். சொன்னது… [Reply]

அன்பு கவிப்ரியன்...

சொல்லி விட்டீர்கள் அல்லவா..தவறில்லை. ஆனால், எங்கே இணைத்திருக்கிறீர்கள் என்று இணைப்பையும் கொடுத்திருந்தால் பார்த்து மகிழ்வேன்.

http://kaalapayani.blogspot.com/2009/04/blog-post_13.html

Mathuran சொன்னது… [Reply]

நல்ல எழுத்து நடை

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி வசந்த குமார் அவர்களே! நீங்கள் பதிவுகளை முழுவதும் படிக்கவில்லை என நினைக்கிறேன்.

'கேப்டன் மடிப்பிச்சை கேட்கிறார்! மயங்காதீர்கள்' என்ற பதிவின் கடைசியில் பாருங்கள்.அங்குதான் உங்கள் வலைப்பக்கத்திற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி மதுரன்! கருத்துக்கும் நன்றி!

Unknown சொன்னது… [Reply]

ஒவ்வொரு கடிதத்திலும் ஒவொரு எழுத்து நடை. பகிர்விற்கு நன்றி! கவிப்ரியன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஞானசேகரன்!

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்,நீங்களும் தமிழ் பதிவுலகுக்கு ஒரு குறும்பு பதிவர். என் புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/10/hd-optimized-office-software.html

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி! கணினி மஞ்சம்! உங்கள் பதிவிற்கும் வருகிறேன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிக்க நன்றி தோழி! இன்றுதான் தற்செயலாக வலைச்சரத்திற்குப் போனேன். இந்த வார ஆசிரியர் நீங்கள் என்றும் பார்த்தேன். ஹூம் நம்மை யாரு அறிமுகப்படுத்தப் போறாங்க என்று ஏக்கத்தோடு வெளிவந்தேன். இன்று மாலையே எனக்கு உங்கள் மூலம் சந்தோஷ அதிர்ச்சி! மீண்டும் நன்றி தோழி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!