காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2020

உனக்காக - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்;        அன்னபூரணி தண்டபாணி

இது குடும்பக் கதையா இல்லை காதல் கதையா? இரண்டும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பெரிய நாவல், வாசித்து முடிக்கப் பல நாளாயிற்று. பழைய மாலைமதியில் வரும் ரமணிசந்திரன் நாவல் படிப்பது போன்றதொரு பிரமை ஏற்பட்டது உண்மைதான்.

கதை எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுவென்று நகர்கிறது. நவநாகரிக மங்கையாகத் திருமணத்தை வெறுப்பவளாக வரும் காவ்யாவுக்குக் கல்யாணம் பண்ணி, காதலிக்க வைத்து சராசரி பெண்ணாக  மாற்றிக் குடும்பக் குத்துவிளக்காக்கி கதையை முடித்திருக்கிறார்.

சாஃட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் சில ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைப்போலக் கதிரும் காவியாவும் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்காக சில நிபந்தனைகளோடு திருமணம் செய்துகொண்டு வாழ முற்படுகிறார்கள். இந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளினால் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு கடைசியில் ஒன்று சேர்கிறார்கள் இது தான் கதை.

கதை சொல்லிய விதம், பாத்திரப் படைப்புகள் எல்லாம் அருமை. குமரன்-மீனாட்சி திருமணத்திலேயே கதையோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார். எல்லோருக்கும் பிடித்தவளாக மீனாட்சி. ஒரு சின்ன விஷயத்துக்காகத் தம்பியுடன் பேசாமலிருக்கும் அண்ணன், கட்டாய திருமணம் செய்துவைக்கும் அப்பா என ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும் அழகாகக் காட்டி விடுகிறார். இந்தக்காலத்தில் கல்யாணம் வேண்டாத ஆண்களா? அதுதான் நெருடுகிறது. அதுவும் வெறுமனே சாப்பாட்டுக்காகத்தான் கல்யாணம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆணோ பெண்ணோ ஒரு காலகட்டம் வரைதான் கல்யாணம் வேண்டாம் என்கிற பிடிவாதம் இருக்கும். போகப்போக வெறுமை சூழ்ந்து கொள்ள, உடல் ஒத்துழையாமை செய்ய, மனம் அலை பாய எப்போது கல்யாணம் செய்து வைப்பார்கள் என்ற ஏக்கம் ஆரம்பித்து விடும். அதற்கு முன்னரே இவர்களுக்குப் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவிடுவதால் அந்த வேதனையை இந்த இருவருமே அனுபவிக்க வில்லை. முதிர் கன்னிகளாய் இருப்பவர்களும், சரியான வேலை கிடைக்காததால் திருமணம் தள்ளிப் போகிறவர்களும்தான் இங்கு அதிகம்.

இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. சென்னையின் வெள்ளப் பாதிப்பினை கண்முன்பே கொண்டு வந்த காட்சி, பிரிவில் தோன்றும் பரிவு, அதனால் ஏற்படும் நெருக்கம் எனக் காதல் காட்சிகளையும் அபாரமாக விவரித்திருக்கிறார். இருவருக்கும் மாற்றி மாற்றி உடல்நலப் பிரச்சினை ஏற்பட, அப்போது ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை காதலாக மாறுவதும் அருமை.

புரட்சிப் பெண்ணாய் அறிமுகப்படுத்தப்பட்ட காவ்யா கடைசியில் ஸ்லோகம் படித்து கடவுளை வேண்டி, புடவைக்கு மாறி, கிராமத்துக்குப் போய் அன்பு பாசம் என்ற கூட்டுக்குள் அடங்கி, ஆணாதிக்கம் விரும்பும் அடிமையாய் மாறி தன் சுயம் இழந்து போகிறாள். பெரும்பான்மையானவர்கள் இதை ஆதரிக்கக்கூடும். ஏன் இதற்குப் பெண்களின் ஆதரவும் அதிகமிருக்கும். படித்து முடித்ததும் ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை, இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டில’ என்ற பாடல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதனால் கதை நாடகத்தனமாகி விடுகிறது. அதே மாதிரி கதிரும் வேலையை உதறி, அமெரிக்க வாய்ப்பையும் உதறி கிராமத்துக்குப் போய் அண்ணனோடு விவசாயம் பார்ப்பதும் சினிமாத்தனமே!

காரணம் உறவுகள் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. அப்பா-மகன், சகோதரர்களுக்குள் என எந்த நேரத்திலும் மனக்கசப்புகள் வரலாம். பொருளாதாரம்தான் இப்போது அத்தனையையும் தீர்மானிக்கிறது. மனிதம் மெல்ல மெல்ல மரணித்து வருகிறது. உறவுகளுக்குள் கொலை சாதாரணமாகியிருக்கிறது. சுயநலம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனித மனங்களைக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த மாதிரிக் ‘கதைகள்’ படிப்பதை எப்போதோ நிறுத்திவிட்டிருந்தேன். குழு நண்பர்களுக்காகவே வாசிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் பெரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடவே நினைப்பேன். நாம் அவசரகால யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரபரப்பான வாழ்க்கை முறையில் சட்டென்று முடிக்கும் வகையிலிருந்தால் இன்னும் நிறைய பேரைச் சென்றடையும். ஒருவேளை வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகளைக் குறி வைத்து எழுதியிருந்தால் நீங்கள் அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கொரோனா காலம் என்பதாலேயே இத்தனை வாசிப்பு சாத்தியமாகியிருக்கிறது. மடிக்கணினியில் வாசிக்க முடியாதது பெரும் குறையாக இருக்கிறது. கைப்பேசியில் படித்தால் கண்வலி வந்துவிடுகிறது. எல்லா வகை கருவிகளிலும் படிக்கிற மாதிரியான பாஃர்மேட்டில் மாற்றுங்கள். அதுதான் என்னைப் போன்றவர்களுக்கு வசதி. மற்றபடிக் குறை சொல்ல எதுவும் இல்லாத படைப்பு. வாழ்த்துகள்.

நட்புடன்,

எம். ஞானசேகரன்.

சனி, 14 பிப்ரவரி, 2015

காதலிக்கும் எனது அன்பான இளம் சிநேகிதர்களே…


(சென்ற பதிவின் தொடர்ச்சி...)
பெரும்பாலான காதல், இருட்டைத் தேடுகிறது. தனிமையில், கடற்கரைத் தோணி மறைவில் வளர்கிறது. அல்லது சினிமாக் கொட்டகை இருட்டில் கைகோர்க்கிறது. உடல் ஸ்பரிசம் சந்தோஷம்தான் என்றாலும், காதல் மேல் படரும் நூலாம்படையை அது சுத்தம் செய்துவிடுமா, என்ன? 

காதலர்கள் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட தனிமையில் நிறைய பேச வேண்டும். இதயம் வெளியே வந்து விழும் வரைக்கும் பேசவேண்டும். மேலை நாடுகளில் காதலர்கள் பேசவும் பழகவும் வாய்ப்பு அதிகம். அந்தத் தொடக்கத்தை அந்தச் சமூகம் அங்கீகரிகிறது.

உண்மையில் இந்தியாவில் காதலிக்க, காதலருக்கு இடமில்லை. இது ஒரு பிரச்னை. வீட்டுக்குள் அவர்கள் சந்தித்து உறவாடக்கூடாது. வீடுகளில் பூகம்பம் உருவாக இது போதும். ஆகவே, கள்ளம் தோன்ற காதலர்கள் மறைவிடம் நாடுகிறார்கள்.

காதலர்கள் பாவனை செய்வார்கள்தான். தன் இனிய பகுதியை மட்டுமே அடுத்தவருக்குக் காட்டுவார்கள். அழகிய வரவேற்பரை மட்டுமே வீடு ஆகாதே… குளியல் அறை, சமையல் அறை, பின்கட்டு… இந்த லட்சணங்களை மற்றவர் பார்க்க நாம் அனுமதிப்போமா, சட்டென்று? இந்த ஜாக்கிரதை உணர்வு காதலர்க்கு ஜாஸ்தியாகவே இருக்கும். தலை கலையாத முகம். இஸ்திரி கலையாத சட்டை. துடைத்துப் பவுடர் போட்டுப் பதப்படுத்திய முகம். அவர்கள் சொந்த முகத்தை முதுகில் வைத்திருப்பார்கள்.

தொடர்ந்த பேச்சு, தொடர்ந்த பழக்கம் அசல் முகத்தை வெளிக்கொண்டு வந்துவிடும். கல்யாணம் ஆகாத ஆணையும் பெண்ணையும் பழகவிடுவதாவது? ஏதாவது தப்புத்தாண்டா நடந்துவிட்டால்? எங்களைப் போன்ற மூத்த தலைமுறையின் தலையில் உள்ள கசடுகள் இவை. அழுக்கு மனம்தான், தன் பிள்ளைகளைப் பற்றி அழுக்காக நினைக்கும்.
சரி. . . எல்லாம் மீறி ஏதாவது நடந்துவிட்டால்?

நடந்துவிட்டால் இமயமலை இடம் மாறிவிடாது. இந்து மகாசமுத்ரம் வற்றிப் போகாது. பெண்கள் சம்பாதிக்க வெளியே போவதாவது என்று சொன்னவர்கள் போன இடம் எங்கே? பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். என்ன கெட்டுப் போயிற்று?

காதலை மனதளவில் வளர்க்க முடியாமைக்கு, முதல் குற்றவாளி சமூகம்தான். உலகமெங்கும் குழந்தைகள் குழந்தைகளாத்தான் பிறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என்று தனித்தனியாகப் பிறக்கிறார்கள். வகுப்புகளில், பேருந்தில், கோயில்களில். ஆண்கள் இடம் வேறு. பெண்கள் இடம் வேறு. பத்து பன்னிரண்டு வயசுக்கு மேல் ஆண்-பெண் குழந்தைகள் சேர்ந்து விளையாடக்கூடாது.

பெண்ணையும் ஆணையும் பிரித்தே வளர்க்கிறோம். பெண் வயதுக்கு வந்ததுமே, நம் தாய்மார்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள். அவள் மேல் அந்நிய ஆடவரின் மூச்சுக்காற்றும் பட்டுவிடாமல் பாதுக்காக்கிறார்கள்.

பையன்களுக்கு பெண்கள் கனவுகள். பெண்களுக்கு பையன்கள் விபரீதங்கள். இயன்றவரை பையன்களும் பெண்களும் பிரிக்கப்பட்டே வளர்க்கப்படுவதால், ஒரு தீராத கவர்ச்சி இருபாலாருக்கும் கெட்டி தட்டிப் போகிறது. 

ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் இங்கு அரிதாக சுலபத்தில் விழாத ‘லாட்டரி டிக்கெட்டு’காளாக இருக்கிறார்கள். அதனாலேயே பரஸ்பரம் அவர்கள் ஆச்சர்யங்களின் பொட்டலமாக இருக்கிறார்கள். பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? இந்தப் பிரித்துப் பார்த்தலே, இங்கு பெரும்பாலும் காதலாகிறது. திருமணத்துக்கு முன்பாகவே, இந்த நிகழ்ச்சி நடக்கும் சூழ்நிலை இங்கு நிலவுமாகில், பெரும்பாலான காதலர்கள் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார்கள் என்பது கசப்பான உண்மை.

எனக்குத் தரிந்த ஒரு பையன், பெண் கதையை நான் உங்களுக்குண் சொல்லியாக வேண்டும். சிறுவன் பாலு. பெண் காயத்ரி. ஒன்பது பத்து வகுப்பிலேயே அவர்கள் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் ஒன் வகுப்புக்கு வருகிற போது காதல் உச்சம். எப்படி இவர்கள் காதல் ஜனித்தது? அவள் இவனைப் பார்த்து, ‘கெமிஸ்ட்ரி நோட்ஸ் இருக்கா’ என்றாளாம். இவன் கிளுகிளுத்துப் போனான். அவன் அவளைப் பார்த்து ‘டைம் என்ன’ என்றானாம். அவள் ஆடிப்போனாள். கெமிஸ்ட்ரி நோட்ஸையும், டைமையும் காதல் தூது என்று புரிந்து கொண்டார்கள் இருவரும். 

எதிர்பாலோடு பேசமாட்டோமா என்று அடக்கிவைக்கப்பட்ட ஆசை… அணையைப் பெயர்த்துக் கொண்டது. தெரு முனையில், கடைகளின் வாசல் நிழல்களில் வகுப்பறையின் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். காதல் கண்ணாலா கெட்டிப்படும்? இவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். இதயம் வரைந்து, அதன் குறுக்காக அம்பு பாய்ச்சி, காதல் கடிதம் எழுதிக்கொண்டார்கள். ஒரு நாள் இந்த வீட்டுச் சிறையில் இருந்து தப்பிக்க எண்ணி ஒரு மூன்றாந்தர லாட்ஜில் அடைக்கலம் தேடினார்கள். போலிஸ், ரெய்டில் அவர்களை வளைத்தது.

அதிகம் சொல்வானேன்… அந்தப் பெண்குழந்தை கடித்துக் குதறப்பட்டது பலரால். கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து அந்தப் பெண் மீட்டெடுக்கப்பட்டாள்.

அந்தப் பெண்ணின் பையனின் தவறு என்ன? இது சமூகம் செய்த தவறு. நம் மகனையோ மகளையோ தேடி வரும் நண்பர்களை வரவேற்பு அறையில் அமர்த்தி பேசச்சொல்வோம். அவர்களுக்கு டீ தந்து உபசரிப்போம். பெரும்பாலோன தப்புகள் தவிர்க்கப்டும்தானே? 

இளைஞர்களும் யுவதிகளும் சந்தித்துப் பேசப்பேசத்தான் அவர்கள் மனிதர்கள் ஆகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சரிதானே? பேசப் பேச மனசுக்குள் நட்பு வளரும், கவர்ச்சி போகும், மரியாதை கூடும். அப்புறம் இவர்கள் ஓடுவார்களா என்ன?

அப்புறமும் ஓடுபவர்களை எவர்தான் தடுத்து நிறுத்த முடியும்? சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?

அன்புக் கண்மணிகளே!

மனம் நிறைய மண்டிய அழுக்கு கொண்ட ஒரு சமுதாயம், அழுக்கற்ற சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய முடியும்? வளர்ந்தவர்கள் அழுக்காக இருக்கிற சமுதாயத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? விடலைத்தனத்தை, பால் கவர்ச்சியைக் காதல் என்று நம்புகிற அசட்டுத்தனம், தனியாக நேர்ந்துள்ள துரதிஷ்டம் அல்ல! ஒட்டு மொத்த சமுதாயக் குறைகளில் ஒன்றாகத்தான் இதையும் நாம் காண வேண்டும்.

நமது தநிழ் சினிமாவில் பத்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைகள் காதலிப்பதாகக் காட்டுவது எதை உணர்த்துகிறது? விபச்சாரம் செய்ய நேர்ந்து பிடிப்பட்ட பெண்களை நம் பத்திரிகைகள் ‘அழகி’ என்று சொல்வதன் தத்துவார்த்தம் என்ன? கழிப்பறையில் கரிக்கட்டி கொண்டு எழுதப்படும் ‘வக்கிர’ வடிவங்களைத் தூண்டும் அரக்கன் யார்?

கல்லூரி அல்லது அலுவலகப் பெண்களை கேலி செய்கிற அசிங்கம் எங்கே பிறந்தது? இப்படி எத்தனையோ கேடுகளில் ஒன்றாகத்தான் அ-காதலைக் காதல் என்று புரிந்துகொள்ளும் போக்கும். பெண்-ஆண் உறவை ஆரோக்கியமாகப் பார்க்காத சமுகத்தில் காதல் மட்டும் கறை படியாது எங்ஙனம் இருக்கும்?

ஆகவே கணவன் மனைவியாக ஆன பிறகும் கூட நீங்கள் காதலர்களாகவே இருக்க வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில் இங்கே தாலியோடு காதல் வைதவ்யம் பெற்று விடுகிறது என்பது சோகம். சிறையப் பேசிப் பேசி, அப்புறம் மோனமாகவும் நீங்கள் உரையாடிக்கொள்ள வேண்டும். பெண்ணை மரியாதை செய்க. வாழ்ந்து காதலை வாழவையுங்கள். காதல் வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.

வாழ்த்துக்கள். – பிரபஞ்சன். 01.08.1999 - ஆனந்த விகடனில்