வெள்ளி, 28 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா



பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை. 

பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

நான் வணக்கம் தெரிவித்தேன். 

பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.



‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன். 

சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன். 

‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
               நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)


புதன், 26 ஜூன், 2013

பைத்தியம் - எனக்குப் பிடித்த கவிதை

                       காதலர்களுக்குத்தான்
                       காதலிப்பவர் மீது
                       பைத்தியம்
                       கணித அறிஞனுக்கு
                       எண்கள் மீது
                       பைத்தியம்

                       கவிஞனுக்குச்
                       சொற்கள் மீது
                       பைத்தியம்

                       ஓவியனுக்கு
                       வண்ணங்கள் மீது
                       பைத்தியம்

                       பாடகனுக்கு
                       இசை மீது
                       பைத்தியம்

                       குழந்தைகளுக்கு
                       பொம்மைகள் மீது
                       பைத்தியம்

                       ஒவ்வொருவருக்கும்
                       ஒவ்வொன்றின் மீது
                       பைத்தியம்

                       நம் எல்லோருக்கும்
                       புகழ் மீது
                       பைத்தியம்

                       எந்தவொன்றின் மீதும்
                       பைத்தியமில்லாமல்
                       இருக்கிறது
                       பைத்தியம்.
                        அ. நிலாதரன்.

செவ்வாய், 25 ஜூன், 2013

அண்ணிமார் கதை - எனக்குப் பிடித்த கவிதை


அண்ணிகள் என்றாலே
பிரியம் குழைந்த வெட்கமும்
வெட்கம் குழைத்த பிரியமும்தான்
கொழுந்தன்மார்களுக்கு!

துவைப்பதற்கு
எடுக்குப்போது
நம் சட்டைப் பையில் இருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
சிகரெட்டையும்
நம்மிடமே
திருப்பித் தந்து
நாணமுறச் செய்கிறார்கள்!

நம் காதல் குறித்தும்
அரியர்ஸ் குறித்தும்
அடிக்கடி
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்

நண்பர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
வீடு திரும்புகையில்
ஒட்டுமொத்தக் குடும்பமும்
ஒன்றாக எதிர்க்க
அண்ணிகள் மட்டும்
ஆதூரமாய்ப் பேசி
அமுது படைக்கிறார்கள்!

தாயைப் போலவே
நம் தவறுகளை
மென்மையாய்க் கண்டிக்கும்
அண்ணிகள்
‘தாயில்லாதவனின்
மணிபர்ஸில்
புகைப்படமாய்
இடம் பிடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு கோபத்தில்
அண்ணனுடன்
தனிக் குடித்தனம்
போய்விட்ட பிறகு
ஏனோ நம்மை
ஒரு பகைவனைப் போல்
பார்க்கத் தொடங்குகிறார்கள்!

அ. நிலாதரன், ஆ.வி.யில்

ஞாயிறு, 23 ஜூன், 2013

அபூர்வமான புகைப்படங்கள் - 2

1.கூகுல் ஆரம்பித்த போது அதன் முதல் குழு.


2. முதல் மெக்டோனால் உணவகம்.


3. அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி துறைமுகம் 1907 ல்...


4. நியூயார்க்  நகரத்தின் டைம்ஸ் ஸ்கொயர் 1911 ல் எடுக்கப்பட்ட புகைப்படம்!


5. மச்சுபிச்சு: பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தபொது எடுக்கப்பட்ட படம், 1912 ல். இதைப்பற்றி மேலும் அறிய இந்த சுட்டியை சொடுக்கவும். உயர் தரத்தில் பனோரமா படம் சுட்டி.


6.அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் மிகப்பெரிய செம்மரம்
ஒன்றை அறுத்துத் தள்ளும் காட்சி....




7. குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி.



9. பில் கிளிண்டனும் அவரதுமனைவி ஹிலரி கிளிண்டனும் வாலிபால் விளையாடும் காட்சி 1975 ல்...


10. பாரிஸ் நகர ஐஃபில் கோபுரத்தின் முன் ஹிட்லர்...



வியாழன், 20 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது….ஏ.வி.எம். சரவணன்

(எம்.ஜி.ஆர். பற்றிய தொடர்)


திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு நாள் அடையாறிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூஷன் மாஸ்டராக இருந்த திரு.ஜே. சந்தானகிருஷ்ணன் அவர்களோடு போயிருந்தேன். எம்ஜி.சக்ரபாணி அவர்களின் குமாரர் எம்.சி.ராமமூர்த்திக்கும் இவர் தான் ஆசிரியர்.

இங்கேதான் எம்.சி.ராமமூர்த்தியின் வீடு இருக்கிறது. அவனையும் பார்த்துவிட்டுப் போகலாம் வாஎன்று என்னை எம்.ஜி.சக்ரபாணியின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

திரு. எம்.ஜி.ஆர். அப்போது தனது சகோதரருடன் அடையாறு காந்தி நகரில் வசித்து வந்தார். நாங்கள் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த அறைக்குள் திடீரென எம்.ஜி.ஆர். வந்தார். அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

பொன்னிற மேனி, திறந்த மார்பு, இடுப்பில் வேஷ்டி. கருகருவென அடர்ந்து வளர்ந்திருந்த முடியை ஒரு துவாலையால் துவட்டியபடி வந்தார் அவர். பையன் யார்?’ என்று என் ஆசிரியரிடம் கேட்டார். அவர் விபரம் சொன்னார். சொன்னதும் நன்றாகப் படிக்கிறாயா? என்று கேட்டார்.

என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.

சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.

எனவே முதன் முதலாக அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.

அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணேஎன்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.

தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.

அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். அன்பே வா இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.

‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.

இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம்  நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்  என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.

இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார். 


முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.