ஞாயிறு, 16 ஜூன், 2013

உணவில் உப்பாய்: உதிரத்தில் வெப்பாய்!



பனிப் பெட்டியில்
படுத்திருக்கிறது...
நெற்றி
நெடுகத் -
திண்ணூறு பூசிய
தொண்ணூறு!

அது -
கண்ணூறு
படுமளவு - தினம் தினம்
பண்ணூறு
பாடிய நிலவு;
இன்று அது
இவ் அம்புவிமீது -
பற்றுக்கொண்டது போதுமெனப்
பெற்றுக்கொண்டது செலவு!

சரீரத்திலிருந்துதான்
சாரீரம் பிறக்கிறது;
ஆனால்
அதிசயம் யாதெனில் -
சாரீரம் இருக்க
சரீரம் இறக்கிறது!

அதற்குக் காரணம்
அவனது கானங்களைக்
காற்று - தன்
கணினியில் -
பதிவிறக்கம் செய்து
பத்திரமாய் வைத்திருக்கிறது -
ஒரு
நோன்பு போல்
நோற்று; அன்னணம்
நோற்ற காற்று முன்
தோற்று நிற்கிறது கூற்று!

 பாட்டிருக்கப்
பாடகன் போனான் என்று...
ஊர் அழுகிறது;
உறவு அழுகிறது;
ஓர்
ஓரமாய் உட்கார்ந்துகொண்டு...

வல்லினம்
மெல்லினம் அறிந்து - யாரினி
தன்னை உச்சரிப்பாரென்று
தமிழ் அழுகிறது!

ஒவ்வோர் எழுத்திற்கும்
ஒளி அளவை எடுத்தோத...

மாத்திரை உண்டு; அவன் பாடினான்
மாத்திரை கண்டு; அவ்வாறு
மாத்திரை கண்டு பாடியவனின்
யாத்திரை கண்டு...

அம்மவோ!
அழாமல் என்செய்யும் தமிழ்?
அரும்பி நிற்கிறது
அதன் கண்ணில் நீர்க் குமிழ்!

M.G.R. – மூன்றெழுத்து;
சிவாஜி – மூன்றெழுத்து;
ஜெமினி – மூன்றெழுத்து;
S.S.R. – மூன்றெழுத்து;

இத்துணை மூன்றெழுத்துக்களுக்கும்
இடம் கொடுத்து ...

தன் 
தொண்டையில் –
ஒருசேரக் குடிவைத்திருந்த
ஒரே மூன்றெழுத்து T.M.S.

‘இது உண்மைதானே? என்று – மக்களை
உசாவினால்...

‘ஆமாம்! ஆமாம்!என்று வரும்
ஆயிரம் ஆயிரம் S.M.S.!

ஆரே மறக்க வல்லார்
அவனது –
தொண்டை ஆற்றிய தொண்டை?

வெண்கலக் குரல்
வேந்தே! – உனை எண்ணி
வடித்தும் வடித்தும் – என்
விழிநீர் நிற்கிறதே மீந்தே!

என்
விரல் வழி
இறங்கிய தமிழ் – உன்
குரல் வழி
இறங்கியதும்...

நான் இறவாதவனானேன்;
நன்றி மறவாதவனானேன்!

அய்ம்பத்தாறு
ஆண்டுகளுக்கு முன்னால்...

அடியேனை நீதான்
அழைத்துவந்தாய் சென்னை; எனை –
ஆதரித்த நீ
ஆண் வேடமிட்ட அன்னை!

இன்றும் என்றும்
இருக்கின்றாய் நீ...
அன்புசால்
அண்ணனே! – என்
உணவில் உப்பாய்;
உதிரத்தில் வெப்பாய்!

T.M.S. மறைவிற்காக கவிஞர் வாலி இயற்றிய கவிதை இது!

நன்றி; ஆ.வி.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

/// தொண்டை ஆற்றிய தொண்டை? ///

கவிஞர் வாலி இயற்றிய கவிதை அருமை...

நன்றி...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

முதல் ஆளாய் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!