கவிப்பிரியனைக் கவர்ந்த கவிதைகள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிப்பிரியனைக் கவர்ந்த கவிதைகள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஜூன், 2013

அண்ணிமார் கதை - எனக்குப் பிடித்த கவிதை


அண்ணிகள் என்றாலே
பிரியம் குழைந்த வெட்கமும்
வெட்கம் குழைத்த பிரியமும்தான்
கொழுந்தன்மார்களுக்கு!

துவைப்பதற்கு
எடுக்குப்போது
நம் சட்டைப் பையில் இருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
சிகரெட்டையும்
நம்மிடமே
திருப்பித் தந்து
நாணமுறச் செய்கிறார்கள்!

நம் காதல் குறித்தும்
அரியர்ஸ் குறித்தும்
அடிக்கடி
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்

நண்பர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
வீடு திரும்புகையில்
ஒட்டுமொத்தக் குடும்பமும்
ஒன்றாக எதிர்க்க
அண்ணிகள் மட்டும்
ஆதூரமாய்ப் பேசி
அமுது படைக்கிறார்கள்!

தாயைப் போலவே
நம் தவறுகளை
மென்மையாய்க் கண்டிக்கும்
அண்ணிகள்
‘தாயில்லாதவனின்
மணிபர்ஸில்
புகைப்படமாய்
இடம் பிடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு கோபத்தில்
அண்ணனுடன்
தனிக் குடித்தனம்
போய்விட்ட பிறகு
ஏனோ நம்மை
ஒரு பகைவனைப் போல்
பார்க்கத் தொடங்குகிறார்கள்!

அ. நிலாதரன், ஆ.வி.யில்

திங்கள், 15 ஏப்ரல், 2013

நட்பு என்பது ...


இதுவல்ல தோழி
நட்பு என்பது ...

முகம் கண்டவுடன்
முந்திவரும்
உதட்டோர அழைப்பு

முன்னேறினால் முகமலர்வு
பின்னேறினால் அகமகிழ்வு

உணவு பகிர்தல்
நட்புக் கயிறு கட்டுதல்
ஊர் சுற்றிப் பறத்தல்
தொலைபேசியில் நேரம் தொலைத்தல்
வாழ்த்தட்டை அனுப்பல்
இரகசியம் அலசல்
பயணச்சீட்டு முதல் பசியாறும் உணவு வரை
பணம் செலவழித்தல்

இதுவல்ல தோழி
நட்பு என்பது!

மலர வேண்டும்
அன்றலர்ந்த மொட்டாய்
அகமும் முகமும் ...

பேசவேண்டும்
எல்லைக்கோடற்ற வாழ்த்தைகள்

பல வருடப் பழக்கமல்ல
நட்பின் ஆழம் சொல்வது
சில நிமுடப் புரிதல்

காலச் சுழற்சியில்
தொலைதூர இடைவெளியில்
நம் நட்பு தொலையாதிருந்தால்

சூழல்களால் சூறையாடப்பட்டாலும்
மனவிளிம்பில் என் நினைவு
ஒட்டியிருபிரிந்து பல வருடம் கழிந்தும் என்
பிறந்தநாள் உன் நினைவிலிருந்தால்

தொலைபேசி சுழற்ற்றுகையில்
உன் மனதிற்குள்
என் வீட்டு எண் ஒலித்தால்

நரை கூடிய பின்னும் என்
கையெழுத்து உன்
கண் கண்டறிந்தால்

இவையனைத்தும்
இவையனைத்தும்
எனக்குள்ளும் உயிர்த்திருந்தால்...
நம் நட்பு
என்றும் நிலைத்திருக்கும்
எழுதப்படாத சரித்திரமாய்!

'ஜன்னலோரச் சிறகுகளிலில்' இருந்து .... கலைமதி ஆனந்த்

புதன், 15 ஆகஸ்ட், 2012

திரும்பி வா!



கொஞ்சம் கவனி!
கொடுத்த வாக்கைக்
காப்பாற்றுவதற்காய் மட்டும்
என்னிடம் வராதே!
புதிய உறவுகளின்
மோகத்தில்
களைப்படையும் போது
இளைப்பாறும் நிழலுக்காக
என்னிடம் வராதே!
ஒவ்வொரு விடியலையும்
ஒரு நதியாக மாற்று
தாகம் தீரும்வரை
மூழ்கி எழு!
என் காதல் ஒருபோதும்
உன்னைக் குற்றப்படுத்தாது-ஆனால்
உன்னுள் இருக்கும்
அன்புச்சுடர்
ஒரு தீப்பிழம்பாகி
என்று உன்னைச் சுடுமோ
உன் உயிர் அணுக்கள்
என்று என்னை
எண்ணி ஏங்கி அழுமோ
அன்று
அவசியம் என்னிடம்
திரும்பி வந்துவிடு!

திங்கள், 16 ஜூலை, 2012

தீர்ப்பு!


ஒருவரை நம் பட்டியலிலிருந்து
நாம் நீக்கும் போது
அவருக்கு ஒரு தீர்ப்பை
எழுதவேண்டும்.
அந்த தீர்ப்பில் 
நம்மையும் மீறி 
ஒரு துளிக் கண்ணீர்
சிந்த நேரிடலாம்.
ஒரு முற்றுப்புள்ளியிலிலேனும்
நினைவு உறைந்து
நம்மைச் சற்றே
தடுமாற்றமடையச் செய்யலாம்.
நம்முடைய பட்டியலிலிருந்து
ஒருவரை நீக்கும் போது
ஒரு உறுப்பை நீக்குவது போல
சில சமயம் அதிக வலி இருக்கலாம்.
எந்த கட்டத்திலும்
திரும்பிப் பார்க்காமலிருப்பதுதான்
ஒரு தீர்ப்பை எழுதத்தொடங்கிவிட்டவரின்
முதல் பணி.
இல்லாவிடில்
நமக்கு நாமே உருவாக்கிக்
கொண்ட தன்னலம் தோய்ந்த
வைராக்கியங்களை
செலுத்த முடியாமல் போகும்.
அல்லது
நீக்கப்படும் மனிதனுக்கு
தேவையற்ற ஒரு பிடிமானத்தையோ
கடைசி நம்பிக்கையையோ
அது கொடுத்தது போலாகும்.
நம்மிடம் ஒரு தேர்வு இருப்பது
ஒரு பட்டியல் இருப்பது
அதில் அகற்றுவதற்கான
ஒரு பெயர் இருப்பது,
அது நம்மை
அவ்வளவு வசீகரிக்கிறது.
அது ஒரு புனிதக் கடைமை போல
கண்களை மூட முடியாத 
இறந்த ஒருவனின் கண்களைப்
போல!
- மனுஷ்யபுத்திரன்.


ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இடிக்கப்பட்ட எங்கள் வீடு



அம்மா சொல்வாள்
அடிக்கடி
இது
கல்லால் ஆன
கர்ப்பப் பை
ஊர்சுற்றி விட்டு
உறங்க வரும்
அண்ணன் நினைப்பில்
தொட்டில்
சுவரில் தொங்கும்
கறைபடிந்த
புகைப்படங்கள்
கல்வெட்டாக்கும்
இதனை
வெள்ளை அடித்தே
வெகுகாலமாயிற்று
அப்பாவின்
வார்த்தைகளிலோ
அரண்மனைதான்
பட்டணத்தில்
வீடுகட்டிய
சித்தப்பாக்கள்
அழைத்தபோதெல்லாம்
மறுத்த பாட்டிக்கு
இது
தாத்தா வாழ்ந்த கோவில்
சிதறிக்கிடக்கும்
செங்கல்கள்
இப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன
இரத்த சம்பந்தத்தை!
இடிக்கப்பட்ட
எங்கள் வீடு!

- நெல்லை ஜெயந்தா


வியாழன், 19 ஏப்ரல், 2012

பிரித்த மடல்



அன்பிருந்தவளே!
நீ
அனுப்பிய மடல் கிடைத்தது
வரிவடிவம் தானே வழக்கம்
எப்படி உனக்கு
எழுத வருகிறது
வலி வடிவத்தில்?
உன் ஒற்றைக் கடிதம்
பிப்ரவரி14 ஐ
என்
எல்லா நாட்காட்டியிலும்
கிழித்து விட்டதே
தலைவி!
நான் மட்டும்தான்
அஞ்சல் பெட்டியில்
புதைக்கப்பட்டவன்
நீ
பதிலாய் அனுப்பிய
இந்த மடலே
என் வாழ்க்கையைக்
கேள்வி யாக்கிவிட்டது.
சொல்லிவிடு!
காதலை
மத்த்தின் பெயரால்
மறுத்த
இந்த மடலை
என்ன செய்வது…
உன் மதப்படி புதைப்பதா…?
என் மதப்படி எரிப்பதா…?

- நெல்லை ஜெயந்தா



வியாழன், 18 ஆகஸ்ட், 2011

உடல் எழுத்து









 





அதிகாலை எழு
ஆகாயம் தொழு
இருதயம் துடிக்கவிடு
ஈறழுந்தப் பல்தேய்
உடல் வேர்வை கழி
ஊளைச்சதை ஒழி
எருது போல் உண்
ஐம்புலன் புதுக்கு
ஒழித்துவிடு புகைமதுவை
ஓட்டம்போல் நட
ஔடதம் பசி
அஃதாற்றின் எஃகாவாய்.
-        -- வைரமுத்து