அண்ணிகள் என்றாலே
பிரியம் குழைந்த வெட்கமும்
வெட்கம் குழைத்த பிரியமும்தான்
கொழுந்தன்மார்களுக்கு!
துவைப்பதற்கு
எடுக்குப்போது
நம் சட்டைப் பையில் இருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
சிகரெட்டையும்
நம்மிடமே
திருப்பித் தந்து
நாணமுறச் செய்கிறார்கள்!
நம் காதல் குறித்தும்
அரியர்ஸ் குறித்தும்
அடிக்கடி
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்
நண்பர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
வீடு திரும்புகையில்
ஒட்டுமொத்தக் குடும்பமும்
ஒன்றாக எதிர்க்க
அண்ணிகள் மட்டும்
ஆதூரமாய்ப் பேசி
அமுது படைக்கிறார்கள்!
தாயைப் போலவே
நம் தவறுகளை
மென்மையாய்க் கண்டிக்கும்
அண்ணிகள்
‘தாயில்லாதவனின்’
மணிபர்ஸில்
புகைப்படமாய்
இடம் பிடிக்கிறார்கள்.
ஏதோ ஒரு கோபத்தில்
அண்ணனுடன்
தனிக் குடித்தனம்
போய்விட்ட பிறகு
ஏனோ நம்மை
ஒரு பகைவனைப் போல்
பார்க்கத் தொடங்குகிறார்கள்!
அ. நிலாதரன், ஆ.வி.யில்






