ஆயிரத்தில் ஒருவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயிரத்தில் ஒருவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூலை, 2013

நாத்திகர் எம்.ஜி.ஆர் ஆத்திகர் ஆன போது…


எம்.ஜி.ஆர். தி.மு..வில் சேரும் வரை (1952) காந்தியவாதியாக கதர் உடை அணிந்து கழுத்தில் துளசி மாலை அணிந்து நெற்றியில் பட்டையாக சந்தனம், குறுக்காக குங்குமக் கோடிட்டு பக்திப் பழமாக இருப்பாராம்.

முருகக் கடவுள், அம்மனின் மீது அவருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜி.ஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோவில்களுக்கு தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் அன்னை சத்தியபாமா அடிக்கடி தன் உறவினர் வேலு நாயர் துணையுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வருவாராம். சில சமயம் எம்.ஜி.ஆரும் தாயுடன் சென்று வந்திருக்கிறார்.

தி.மு..வில் சேர்ந்த பின் எம்.ஜி.ஆர். நாத்திகவாதியாக மாறினார். கோவில்களுக்குச் செல்வதை நிறுத்தினார். கதர் உடை பட்டுத் துணியாக மாறியது. திரைப் படங்களிலும் நாத்திக உணர்வுடன் நடித்தார். நடிப்புக்காகக் கூட நெற்றியில் விபூதி இட்டுக் கொள்ளமாட்டார். ஆனாலும் வீட்டில் ஏசுவின் படத்தை மாட்டி வைத்திருக்கிறார். துன்பம் நேரிடும் சமயங்களில்முருகாஎன்றும் ஏசுவே என்றும் கூறுவதை அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

புராணப் படங்களே அதிகமாக தயாரிக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில்புராணப் படங்களில் நடிப்பதில்லை. சமூக கதைப் படங்களில்தான் நடிப்பது என்ற சபதத்தோடு இரண்டு நடிகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும். ஆனாலும் இருவருமே அதை கடைபிடிக்க முடியவில்லை. இதற்கான காரணம் பற்றி 1949-ல் வெளிவந்த சினிமா இதழ் ஒன்றில் இப்படி சொல்லப் பட்டிருந்தது.

படத் தொழிலில் ஈடுபட்ட உடனேயே ராமச்சந்திரன் சமூகப் படங்களில்தான் நடிப்பதுஎன்று தீர்மானம் செய்து கொண்டார். முதல் மூன்று படங்களையும் அவற்றில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும் கவனித்த பின்னர்இந்த தீர்மானத்தை முதலில் பறக்க விடவேண்டும். இல்லாவிட்டால் நாமே சினிமா உலகில் இருந்து பறந்து விடவேண்டும்என்பதை அறிந்து கொண்டார். சூழ்நிலை கருதி தன் தீர்மானத்தை கைவிட்டு விட்டார்.’

இதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த புராணப் படங்கள் தட்சயக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதா ஜனனம் (இந்திரஜித் வேடத்தில்), ஜோதி மலர் (சிவன் வேடம்), தமிழறியும் பெருமாள், அரிச்சந்திரா, மீரா, ஸ்ரீமுருகன் (சிவன் வேடம்), அபிமன்யூ (அர்ச்சுனன் வேடம்). இதெல்லாம் தி.மு..வில் சேருவதற்கு முன்.

சேர்ந்த பின் புராணம் சம்பந்தப்பட்ட படங்களை அறவே தவிர்த்திருக்கிறார். மாயாஜாலம், பக்தி சம்பந்தப்பட்ட படம் என்பதற்காக ராமண்ணா டைரக்ஷனில் காத்தவராயன் படத்தில் நடிக்க மறுத்தார். ராமண்ணாவை தன் விருப்பப்படி சம்மதிக்கச் செய்து விடலாம் என்று முதலில் காத்தவராயன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு செட்டுக்குப் போன எம்.ஜி.ஆர்- அங்கு மந்திரக் காட்சிகளை தந்திரத்தால் வெல்வது போன்ற காட்சிகளாக மாற்ற வேண்டும் என்று யோசனை தர, ராமண்ணா மனுத்துவிட்டார். அதனால் அந்த படத்தில் இருந்தே எம்.ஜி.ஆர். பின் வாங்கியதால் பிறகு சிவாஜி நடித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தேவரின் தனிப் பிறவி படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஜெயலலிதா வள்ளிக் குறத்தியாக, எம்.ஜி.ஆர். முருகக் கடவுளாக நடித்தார். அதுவும் கனவுக் காட்சி என்ற பெயரில். முருகன் எம்.ஜி.ஆரின் இஷ்ட தெய்வம் வேறு.

ஏசு படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த தலைவன் படத் தயாரிப்பாளர் பி..தாமஸ் ஒரு யுக்தி செய்தார்.

தலைவன் படம் தொடங்கி நீண்ட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ் எம்.ஜி.ஆர். விருப்பப்படி ஏசுநாதர் படத்தை துவக்கினார். ஆனால் கதையின் முடிவில்ஏசுவைச் சிலுவையில் அறைவதுபோன்ற காட்சியில் நடிப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம் என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க படம் பூஜையோடு நின்றது.

ஆனால் தாமஸ் அதை ஜீஸஸ் என்ற பெயரில் மளையாளத்தில் எடுத்து தமிழிலும் வெளியிட்டார். ஜெயலலிதா அதில் நடனக்காரியாக நடித்தார்.
1976-ல் வெளிவந்த உழைக்கும் கரங்கள் படத்தில் எம்.ஜி.ஆர். சிவன் வேடத்தில் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தார்.

எம்.ஜி.ஆரின் பல படங்களை டைரக்ட் செய்திருப்பவர் கே.சங்கர். அவர் மூகாம்பிகை கோயிலுக்கு வருடம் தவறாமல் சென்று வந்தவர். அந்த கோவிலின் மகிமையைப் பற்றி எம்.ஜி.ஆரிடமும் பலமுறை கூறியிருக்கிறார்.

1976 நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள உடுப்பியில் மீனவயண்பன் படப்பிடிப்பு நடந்தது. பட்ப்பிடிப்பு முடிந்தபின் ஒருநாள் டைரக்டர் கே.சங்கருடன் அதிகாலை ஐந்து மணிக்கு கொவிலுக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வணங்கிவிட்டு பொழுது விடிவதற்குள் திரும்பி விட்டார்.

1977-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஒருமுறை சென்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பின் தன் மனைவி வி.என்.ஜானகியுடம் (மதுரையில் நாடோடி மன்னன் வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளை கொடுத்து அனுப்பினார்.

உறையுடன் சேர்த்து முக்கால் கிலோ தங்கம் உள்ள அந்த வாளின் மொத்த எடை இரண்டரை கிலோ. தங்க வாளை இரவு மூகாம்பிகைக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள். மூகாம்பிகை கோவில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள கோவில்களில் உள்ள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி ஆண் பக்தர்கள் தங்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எம்.ஜி.ஆரும் ஒவ்வொரு முறையும் தொப்பி, கண்ணாடி, மேல் சட்டையைக் கழற்றி கோவிலுக்குள் சென்று வந்திருக்கிறார்.


வெள்ளி, 28 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா



பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை. 

பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

நான் வணக்கம் தெரிவித்தேன். 

பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.



‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன். 

சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன். 

‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
               நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)


வியாழன், 20 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது….ஏ.வி.எம். சரவணன்

(எம்.ஜி.ஆர். பற்றிய தொடர்)


திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு நாள் அடையாறிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூஷன் மாஸ்டராக இருந்த திரு.ஜே. சந்தானகிருஷ்ணன் அவர்களோடு போயிருந்தேன். எம்ஜி.சக்ரபாணி அவர்களின் குமாரர் எம்.சி.ராமமூர்த்திக்கும் இவர் தான் ஆசிரியர்.

இங்கேதான் எம்.சி.ராமமூர்த்தியின் வீடு இருக்கிறது. அவனையும் பார்த்துவிட்டுப் போகலாம் வாஎன்று என்னை எம்.ஜி.சக்ரபாணியின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

திரு. எம்.ஜி.ஆர். அப்போது தனது சகோதரருடன் அடையாறு காந்தி நகரில் வசித்து வந்தார். நாங்கள் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த அறைக்குள் திடீரென எம்.ஜி.ஆர். வந்தார். அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

பொன்னிற மேனி, திறந்த மார்பு, இடுப்பில் வேஷ்டி. கருகருவென அடர்ந்து வளர்ந்திருந்த முடியை ஒரு துவாலையால் துவட்டியபடி வந்தார் அவர். பையன் யார்?’ என்று என் ஆசிரியரிடம் கேட்டார். அவர் விபரம் சொன்னார். சொன்னதும் நன்றாகப் படிக்கிறாயா? என்று கேட்டார்.

என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.

சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.

எனவே முதன் முதலாக அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.

அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணேஎன்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.

தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.

அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். அன்பே வா இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.

‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.

இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம்  நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்  என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.

இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார். 


முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.