கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூலை, 2020

பால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்

ஆசிரியர்; ஜே.வி.ஆர். சவிதாஷா

பால்யகாலத் தெருக்கள் என்ற தலைப்பைப் பார்த்து இது எனது மறக்க முடியாத நினைவுகள் போன்ற ஒரு தொகுப்பு என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது இது ஒரு கவிதைத் தொகுப்பு என்று. வாசிக்கத் தொடங்கியபின் நிறுத்த மனமில்லை. சரி முடித்து விடுவோம் என்று உட்கார்ந்து விட்டேன்.

ஆரம்பத்தில் எழுத வருபவர்கள் எல்லோருமே முயற்சி செய்வது கவிதை எழுதுவதுதான். அதுவும் காதலிக்கும் நேரத்தில்தான். எதையாவது எழுதி நம்மவரை அசத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கவிதை எழுதுவதுதான். நான் கூட அப்படி எழுதிய காலம் உண்டு.

வயது ஏற, குடும்பப் பொறுப்புகள் சூழ்ந்த பிறகு அதற்கெல்லாம் நேரமேது. வாசிப்பதோடு சரி, ஒரு காலகட்டத்துக்குப் பின் அதுவும் நின்று போய்விட்டது. காலத்திற்குத் தகுந்த மாதிரி நமது ரசனைகளும் மாறிப்போவதுதான் காரணமேயன்றி வேறில்லை.

நிறையத் தலைப்புகளில் கவிதைகள். எழுத்தாளரே சொல்வது போல் சில கவிதைகளாகவும், சில கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே மாட்டிக்கொண்டும் முழிக்கிறது. கதையையே கூட குறை சொல்லிவிடலாம். ஆனால் கவிதையை... முடியவே முடியாது. ஏனென்றால் கவிதைகள் எல்லாமே ஏகாந்த மனநிலையில் எழுதப்படுபவை. எத்தனை முறை திருத்தினாலும் எல்லாமே சரியாய் இருப்பது போல் தோன்றும். இது அடுத்தவருக்குப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கே எனக்காய் எழுதப்படுபவை. அடுத்தவர்க்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்.

ஆரம்பத்தில் கற்பனைகளும், அப்புறம் அனுபவங்களும், வலியும் வேதனைகளும் கூட கவிதைகளில் கொட்டப்பட்டன. இங்கே சவிதாவின் கவிதைகளில் எல்லாமே அனுபவம். ஒவ்வொன்றும் ஒரு விதம். கடவுள், பிரம்மா என்று அவர்களை அழைத்தாலும் பெரும்பாலும் வாழ்க்கை அனுபவங்களே கவிதையில் நிறைந்திருக்கிறது.

வான் மேகம் பிரசவிக்கும்
மழைக்கும்
பெண் தேகம் பிரசவிக்கும்
மழலைக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு’

என்ற வரிகள் அற்புதம். காய்ச்சல், மருந்தின் வாசம் இரண்டும் ஒரே தலைப்பின் கீழ் வரவேண்டியவை. குழந்தைகள் உலகமான டோராவும், சோட்டா பீமும் தொலைக்காட்சிப் பெட்டியில் முடங்கிப்போனதிலேயே குழந்தையின் சுகவீனம் உணர்த்துகிறது. அதே போல பால்யகாலத் தெருக்களும் புளியமரமும் ஒரே தலைப்பில் வரவேண்டிய கவிதைகள். இந்த பால்யகாலத்தில் நாம் சுற்றாத தெருக்களா? எத்தனை புளியமரத்தினடியில் கில்லியும், கோலியும் விளையாடியிருப்போம். அந்தக்கால நினைவுகள் வராத மனிதர் உண்டா என்ன?

நடக்க நடக்க
நீண்டிருந்த தெருக்கள்
இப்போது இருபது எட்டில்
முடிந்து விடுகின்றன’.

சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் என் மனதுக்குள் எழும் கேள்விகள் இவை. எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும் என்று இப்போதுதான் புரிகிறது.

உறக்கம், நினைவொளி, ஆழ்மனம், விசித்திரம், கனவின் தொடர்ச்சி என எல்லாமே ஒன்றின் ஒன்றான நீட்சியே. இரவில் உறங்கும்போது இப்படி நினைவுகளும் கனவுகளும் வந்து உறங்கவிடாமல் தொல்லை கொடுக்கும். அப்போது நினைப்பவற்றை எழுதிவைக்க மனம் நினைத்தாலும் உறங்கியும் உறங்காத மனநிலையில் விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, விடிந்ததும் அது கனவாக மாறி மறந்து போவதுதானே வாடிக்கை. ஆனால் அத்தனையையும் கவிதையாக்கியிருக்கிறார்.

‘அச்சம்’ தான் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பயந்து போய்விட்டேன். குச்சம், புச்சம், பிச்சம், கச்சம் என எதுகை மோனைக்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். எனக்குக்கூட தமிழின் சில வார்த்தைகள் தெரியவில்லையே என்று ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது. உடனே இணையத்திலும் தேடத் தொடங்கி விட்டேன். ஆனால் அடுத்த பக்கத்திலேயே அதற்கான பொருளும் கொடுத்து படிப்பவர் பலரைக் காப்பாற்றியிருக்கிறார்.

தேர்தல் திருவிழாவில் அரசியலையும் தொட்டிருக்கிறார். இந்த விழிப்புணர்வு ஒன்றே போதும் பெண்களுக்கு, இந்த ஆட்சியின் அவலத்தையே மாற்றிக்காட்டலாம். ஏதோ ஒரு பாடல், பொக்கிஷம் போன்ற பல தலைப்புகள் எனக்கு அருமையான கட்டுரைத் தலைப்புகள். மன்னிப்பு, நேசம் பிறவிக்குணம்-இதில் என் மனநிலையும் பிரதிபலித்திருப்பதைக் கண்டேன்.

இனி வாக்களிக்கும் நாவையும்
உதவத்தூண்டும் மனதையும்
கட்டிவைக்கப்போகிறேன்.’
‘பழையது போல
பழையது எல்லாம்’......

முடியவே முடியாத விஷயங்களிலெல்லாம் நிறைய இப்படிச் சபதமேற்றிருப்போம். அதெல்லாம் எத்தனை அபத்தம் இல்லையா? புறக்கணிப்புகள் மிகப் பெரிய தலைப்பு. புறக்கணிப்பும், அவமானமும் அடையாத மனிதருண்டா உலகில்? ஐந்தாறு பக்கத்துக்கு இதை வைத்து எழுதலாம்.

அதே போல வார்த்தை ஆயுதம், காதலின் வார்த்தை, வார்த்தை மீறல் என எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்திருக்கலாம். முத்தாய்ப்பாய் கவிதைக் கீற்றுகள்...

கடல் அலைபோல்தான்-என்
நினைவலைகளும் ஒரு நாளும்
உன்னைத் தீண்டாமல்
திருப்பியதில்லை....அருமை.

கவிதைப் பக்கமே தலைவைத்து படுக்காமலிருந்த என்னை எழுந்து உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது இந்தத் தொகுப்பு.

நட்புடன்,

எம். ஞானசேகரன்.

ஞாயிறு, 6 மே, 2018

நான் வரும் வரை

ஆசைப்படுவது ஆணின் குணம்
ஆசைப்படுபவனை அலைக் கழிப்பது
பெண்ணின் குணம்
காத்திருப்பது ஆணின் குணம்
காத்திருப்பவனைத் துடிக்க வைப்பது
பெண்ணின் குணம்
ஆண் அடைகிறவனாகவும், பெண்
ஆடையப்படுகிறவளாகவும் இயற்கை
விதித்திருக்கிறது
அதனால் காதல் உலகத்தில் பெண்
உயரத்தில் நிற்கிறாள்
ஆண் கீழே நிற்கிறான்
இதனால் பெண்ணுக்கு கர்வம்
அவள் சிம்மாசனத்தில் அமர்ந்து
கட்டளை இடுகின்றவளாக இருக்கிறாள்
அவனோ அவள் ஏவுவதைச் செய்யும்
அடிமையாகிறான்
தன் கண் ஜாடைக்கும் கைவிரல்
அசைவுக்கும் அவன் ஆடுவதைப்
பார்ப்பதில் அவளுக்கு இன்பம்
தன் கண் பார்வைக்கு
அவன் ஏங்க வேண்டும், தன் தயவுக்கு
அவன் கெஞ்ச வேண்டும் என்று
அவள் ஆசைப்படுகிறாள்
அவன் குற்றமே புரியாதிருந்தும்
வேண்டுமென்றே குற்றம் சுமத்தி
ஊடுகின்றாள். அவன் சமாதானம்
சொல்லிக் காலில் விழுந்து
கெஞ்ச வேண்டுமென்று அவளுக்கு ஆசை
காதலி காத்திருக்கச் சொன்னாள்
காதலனும் அதை நம்பி காத்திருந்தான்
ஒரு நாளல்ல, இரு நாளல்ல, பல நாள்...
அவள் வரவே இல்லை.
அவன் அவளுக்காக காத்திருந்து
துடித்தே இறந்து விட்டான்
செய்தி அறிந்து அவள் வந்தாள்
அப்போதும் தனக்காக காத்திருந்து
இறந்துவிட்டானே என்று பரிதாபப்படவில்லை
அதிலும் குறை கண்டாள்.
நான் வரும் வரை உன்னால்
காத்திருக்க முடியவில்லையே!

- அப்துல் ரகுமான்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை!



நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை.

அவசரப் படாமல்

அனுபவிக்கத்தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்

சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை

அவசியத்துக்குக் கூடக்

கோபப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்

தெரியும் என்ற

வாய்ச் சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை.

-
கல்யான்ஜியின் முன்பின்கவிதைத் தொகுப்பிலிருந்து.

படித்ததில் பிடித்தவை !

உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க
புத்திசாலித்தனம் தேவையில்லை.
அமைதியாக இருக்கத்தான்
புத்திசாலித்தனம் தேவை

புதன், 26 ஜூன், 2013

பைத்தியம் - எனக்குப் பிடித்த கவிதை

                       காதலர்களுக்குத்தான்
                       காதலிப்பவர் மீது
                       பைத்தியம்
                       கணித அறிஞனுக்கு
                       எண்கள் மீது
                       பைத்தியம்

                       கவிஞனுக்குச்
                       சொற்கள் மீது
                       பைத்தியம்

                       ஓவியனுக்கு
                       வண்ணங்கள் மீது
                       பைத்தியம்

                       பாடகனுக்கு
                       இசை மீது
                       பைத்தியம்

                       குழந்தைகளுக்கு
                       பொம்மைகள் மீது
                       பைத்தியம்

                       ஒவ்வொருவருக்கும்
                       ஒவ்வொன்றின் மீது
                       பைத்தியம்

                       நம் எல்லோருக்கும்
                       புகழ் மீது
                       பைத்தியம்

                       எந்தவொன்றின் மீதும்
                       பைத்தியமில்லாமல்
                       இருக்கிறது
                       பைத்தியம்.
                        அ. நிலாதரன்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

உணவில் உப்பாய்: உதிரத்தில் வெப்பாய்!



பனிப் பெட்டியில்
படுத்திருக்கிறது...
நெற்றி
நெடுகத் -
திண்ணூறு பூசிய
தொண்ணூறு!

அது -
கண்ணூறு
படுமளவு - தினம் தினம்
பண்ணூறு
பாடிய நிலவு;
இன்று அது
இவ் அம்புவிமீது -
பற்றுக்கொண்டது போதுமெனப்
பெற்றுக்கொண்டது செலவு!

சரீரத்திலிருந்துதான்
சாரீரம் பிறக்கிறது;
ஆனால்
அதிசயம் யாதெனில் -
சாரீரம் இருக்க
சரீரம் இறக்கிறது!

அதற்குக் காரணம்
அவனது கானங்களைக்
காற்று - தன்
கணினியில் -
பதிவிறக்கம் செய்து
பத்திரமாய் வைத்திருக்கிறது -
ஒரு
நோன்பு போல்
நோற்று; அன்னணம்
நோற்ற காற்று முன்
தோற்று நிற்கிறது கூற்று!

 பாட்டிருக்கப்
பாடகன் போனான் என்று...
ஊர் அழுகிறது;
உறவு அழுகிறது;
ஓர்
ஓரமாய் உட்கார்ந்துகொண்டு...

வல்லினம்
மெல்லினம் அறிந்து - யாரினி
தன்னை உச்சரிப்பாரென்று
தமிழ் அழுகிறது!

ஒவ்வோர் எழுத்திற்கும்
ஒளி அளவை எடுத்தோத...

மாத்திரை உண்டு; அவன் பாடினான்
மாத்திரை கண்டு; அவ்வாறு
மாத்திரை கண்டு பாடியவனின்
யாத்திரை கண்டு...

அம்மவோ!
அழாமல் என்செய்யும் தமிழ்?
அரும்பி நிற்கிறது
அதன் கண்ணில் நீர்க் குமிழ்!

M.G.R. – மூன்றெழுத்து;
சிவாஜி – மூன்றெழுத்து;
ஜெமினி – மூன்றெழுத்து;
S.S.R. – மூன்றெழுத்து;

இத்துணை மூன்றெழுத்துக்களுக்கும்
இடம் கொடுத்து ...

தன் 
தொண்டையில் –
ஒருசேரக் குடிவைத்திருந்த
ஒரே மூன்றெழுத்து T.M.S.

‘இது உண்மைதானே? என்று – மக்களை
உசாவினால்...

‘ஆமாம்! ஆமாம்!என்று வரும்
ஆயிரம் ஆயிரம் S.M.S.!

ஆரே மறக்க வல்லார்
அவனது –
தொண்டை ஆற்றிய தொண்டை?

வெண்கலக் குரல்
வேந்தே! – உனை எண்ணி
வடித்தும் வடித்தும் – என்
விழிநீர் நிற்கிறதே மீந்தே!

என்
விரல் வழி
இறங்கிய தமிழ் – உன்
குரல் வழி
இறங்கியதும்...

நான் இறவாதவனானேன்;
நன்றி மறவாதவனானேன்!

அய்ம்பத்தாறு
ஆண்டுகளுக்கு முன்னால்...

அடியேனை நீதான்
அழைத்துவந்தாய் சென்னை; எனை –
ஆதரித்த நீ
ஆண் வேடமிட்ட அன்னை!

இன்றும் என்றும்
இருக்கின்றாய் நீ...
அன்புசால்
அண்ணனே! – என்
உணவில் உப்பாய்;
உதிரத்தில் வெப்பாய்!

T.M.S. மறைவிற்காக கவிஞர் வாலி இயற்றிய கவிதை இது!

நன்றி; ஆ.வி.

திங்கள், 15 ஏப்ரல், 2013

நட்பு என்பது ...


இதுவல்ல தோழி
நட்பு என்பது ...

முகம் கண்டவுடன்
முந்திவரும்
உதட்டோர அழைப்பு

முன்னேறினால் முகமலர்வு
பின்னேறினால் அகமகிழ்வு

உணவு பகிர்தல்
நட்புக் கயிறு கட்டுதல்
ஊர் சுற்றிப் பறத்தல்
தொலைபேசியில் நேரம் தொலைத்தல்
வாழ்த்தட்டை அனுப்பல்
இரகசியம் அலசல்
பயணச்சீட்டு முதல் பசியாறும் உணவு வரை
பணம் செலவழித்தல்

இதுவல்ல தோழி
நட்பு என்பது!

மலர வேண்டும்
அன்றலர்ந்த மொட்டாய்
அகமும் முகமும் ...

பேசவேண்டும்
எல்லைக்கோடற்ற வாழ்த்தைகள்

பல வருடப் பழக்கமல்ல
நட்பின் ஆழம் சொல்வது
சில நிமுடப் புரிதல்

காலச் சுழற்சியில்
தொலைதூர இடைவெளியில்
நம் நட்பு தொலையாதிருந்தால்

சூழல்களால் சூறையாடப்பட்டாலும்
மனவிளிம்பில் என் நினைவு
ஒட்டியிருபிரிந்து பல வருடம் கழிந்தும் என்
பிறந்தநாள் உன் நினைவிலிருந்தால்

தொலைபேசி சுழற்ற்றுகையில்
உன் மனதிற்குள்
என் வீட்டு எண் ஒலித்தால்

நரை கூடிய பின்னும் என்
கையெழுத்து உன்
கண் கண்டறிந்தால்

இவையனைத்தும்
இவையனைத்தும்
எனக்குள்ளும் உயிர்த்திருந்தால்...
நம் நட்பு
என்றும் நிலைத்திருக்கும்
எழுதப்படாத சரித்திரமாய்!

'ஜன்னலோரச் சிறகுகளிலில்' இருந்து .... கலைமதி ஆனந்த்

செவ்வாய், 5 மார்ச், 2013

இரகசியத் தோழி




தூண்டிவிட்ட தேடல்கள்
தூக்கிலிட்ட தோல்விகள்
சிற்பமாக்கிய அனுபவப் பொழுதுகள்
உளியாக்கிய கால நிகழ்வுகள்
அத்தனையும் சுமக்கும்
நெஞ்சப் பொதியில்
குவிந்து போயின
உணர்வுக் குப்பைகள்.
குப்பை கொட்ட
தொட்டி தேடினேன்
பிறர் மனத்தொட்டியில்
கொட்டி வைத்தால்
உதட்டுக் காற்று என்
குப்பை எடுத்து வேறு
செவித் தொட்டிக்கு இடம் மாற்றிவிடும்
இடம் மாறினால்
குப்பையின் நிறம் மாறிவிடும்
இரகசியத் துகள்கள்
அரிதாரம் பூசி
அவதாரம் எடுத்து
வீதிகளில் மணந்து திரியும்
தொலையக்கூடாத குப்பைகளைப்
பத்திரப்படுத்த
வேறு தோட்டி தேடினேன்
தேடலின் விளிம்பில் நீ
தொட்டியாய் சிக்கினாய்
என்
கனத்த உணர்வுகளைக்
கழற்றி வைத்தேன்
உன்னுள்
வேர்க்க வைத்த நினைவுகளும்
வேக வைத்தத் துயரங்களும்
விதையாயின உன்
காகிதக் களத்தில்
பூட்டிடாத வார்த்தைகள்
வெளி மூடாத எண்ணங்கள்
நாணிய நிமிடங்கள் மனம்
கூனிய பொழுதுகள்
இரகசியம் ஏதுமின்றி
இரகசியமாய்ப் பதிவு செய்தேன்
என் ப்ரிய டைரியே
பின்னொரு நாள் உனைப் புரட்டினால
பூக்கச் செய்திருப்பாய்
உன்னுள் பதியமிட்ட என்
வாழ்க்கை விதைகளை!

ஒரு  கவிதைத் தொகுதியை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னைக் கவர்ந்த கவிதை இது!