Friday, July 13, 2012

எப்படி அந்த முடிவை எடுப்பது? சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம்


                                                              God is Love                   02.05.2000
அன்புள்ள கவிப்ரியன் அவர்களுக்கு, ஜென்ஸி எழுதுவது. நான் நலமாக உள்ளேன். உங்களுடைய கடிதத்திற்காக ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். 27-ம் தேதி உங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். கடிதம் வரவில்லை என்றதும் பயந்துவிட்டேன். காரணம் நான் ஏதாவது தவறாக எழுதிவிட்டேனா என்று!

உங்கள் கடிதம் படித்து உங்களின் சூழ்நிலைகளை அறிந்துகொண்டேன். கடவுள் கிருபையால் நான் நல்லபடியாக உள்ளேன். மற்றபடி நான் போன தடவை உங்களுக்கு கடிதம் அனுப்பியபோது கவிதாவிற்கும் லெட்டர் அனுப்பியிருந்தேன் அல்லவா? அந்த கடிதத்திற்கு கவிதா உடனே பதில் அனுப்பியிருந்தாள். நீங்கள் எழுதியபடியே கவிதா அவளது வீட்டு சூழ்நிலைக்காகத்தான் சரவணனை திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று சொல்லியிருக்கிறாள். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

மற்றபடி என் கணவர் இதுவரை எனக்கு ஒரு லெட்டர் கூட போடவில்லை. அவருக்கு பணம் அனுப்பிக்கொடுக்கவில்லை என்று கோபம். மாதம் 3000 ரூபாய் வண்டிக்கு கட்டவேண்டும். அதைக்கூட ஒழுங்காக கட்டுவதில்லை. வண்டியில் வருகிற வருமானத்தை என்னதான் செய்கிறார் என்று தெரியவில்லை. என் மகளிடம் ஒருநாள் ஃபோனில் பேசியபோது, வண்டிக்கு இன்னும் DUE  கட்டவில்லையாம், அப்பா உங்களிடம் சொல்லச்சொன்னார் என்றாள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் இப்படி சிங்கப்பூர் வராமலிருந்திருந்தால் இவர் எப்படி வண்டிக்கும் தவணை கட்டி எங்களையும் காப்பாற்றுவார்? எல்லோர் முன்னாலும் வேஷம் போட்டார். அந்த சமயத்தில் நான் மட்டும் அங்கேயே இருந்திருந்தால் என் நிலைமை என்னவாயிருக்கும். இதெல்லாம் தெரிந்துதான் நான் மறுபடியும் சிங்கப்பூர் வந்தேன்.

இன்னும் இவருக்கு ஒரு பொறுப்பும் வரவில்லை. நான் இவரைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்தேன். எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இனி அந்த மனிதனை நம்பினால் வேஸ்ட்தான். என் மேல் பாசம் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார். கடவுள்தான் இவரை திருத்தவேண்டும். நீங்கள் எழுதினபடியே என் அண்ணன்மார்கள் எல்லோரும் சொன்னார்கள். அவரை விவாகரத்து செய். உன்னையும் உன் மகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் காதல் திருமணம் செய்த நான் எப்படி அந்த முடிவை எடுப்பது என்றுதான் குழம்பிப்போய் உள்ளேன்.

என் மகளுக்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போனமுறை நான் இந்தியா வந்தபோது, என் கணவரிடம் உங்களுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு அதற்கு முழு சம்மதம். நானும் என் மகளும் எப்படியாவது வாழ்ந்துகொள்கிறோம் என்று சொன்னேன். அதற்கு அவர் விவாகரத்துக்கு ஒத்துக்கொள்ளமாட்டாராம். என் மகளையும் கொடுக்கமாட்டாராம். என்னை வாழவும் விடமாட்டாராம், சாகவும் விடமாட்டாராம். நீ சிதரவத்தைப்படவேண்டும் என்று சொல்கிறார். இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும்?


உணமையிலேயே என் வாழ்க்கை நரகமாகிவிட்டது. இதைவிட நல்ல வசதியானவர்கள், படித்தவர்கள் எல்லாம் என்னை விரும்புவதாகச் சொன்னார்கள். அதற்க்கெல்லாம் நான் ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் எப்படியோ இவரிடம் வந்து மாட்டிக்கொண்டேன். சிலவேளை நினைப்பேன்... என் சொந்த மாமாவின் மகன் என்னை அதிகமாக நேசித்தான். என்னைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தான். ஆனால் நான்தான் சம்மதிக்கவில்லை. அவனை மட்டும் திருமணம் செய்திருந்தால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கும். என் தலையெழுத்து இவரை திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படவேண்டும் என்று உள்ளது! என்ன செய்வது அவரவர் விதியை மாற்ற முடியுமா?


அதனால் என் வாழ்க்கை இனி சந்தோஷமாக மாறுமா என்று சொல்ல முடியாது. என் மகளுக்காக வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் இனி என் கணவருக்கு லெட்டரோ, பணமோ அனுப்ப மாட்டேன். கடவுள் அவரை திருத்தட்டும், அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும். மற்றபடி உங்கள் கடிதம் வந்ததில் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். அதாவது எனக்கு நல்ல ஆலோசனையும் ஆறுதலும் சொல்ல உங்களைப் போன்ற ஒரு நண்பர் கிடைத்ததில் சந்தோஷப் படுகிறேன். உங்களுடைய ஒரு லெட்டர் வந்து, அடுத்த லெட்டர் வரும்வரை வந்த அந்த பழைய லெட்டரை எடுத்து படித்துக்கொண்டே இருப்பேன். மனதிற்கு உண்மையிலேயே ஆறுதல் அளிக்கிறது உங்கள் கடிதம்.

யாருமில்லாமல் அனாதையாக வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கும் அன்பு காட்ட ஒரு குடும்பம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றபடி தற்சமயம் தலைவலி பராவாயில்லை. மருத்துவமனைக்குச் சென்றுவந்தேன். அதன் பிறகு தலைவலி இல்லை. ஆனாலும் தனிமையில் உட்கார்ந்து ஏதாவது நினைத்து அழுதுவிட்டால் உடனே தலைவலி வந்துவிடும். மாத்திரை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் ஃபேமிலி ஊருக்கு போனதாக எழுதியிருந்தீர்கள். தனிமையில் எப்படி சமாளிக்க முடிகிறது. காரணம் இரண்டு இடத்தில் வேலை செய்து களைத்துப் போய் வரும் உங்களுக்கு வீட்டில் ஆள் இல்லை என்றால் இன்னும் கஷ்டம் இல்லையா? எல்லாவற்றையும் சமாளிக்க தைரியம் உள்ளது அப்படித்தானே! நான் எழுதியது சரிதானே! மற்றபடி ஊருக்குப் போனால் அவர்களையும் கேட்டதாகச் சொல்லவும்.

மற்றபடி உங்கள் வேலை விஷயம்.... தொடர்ந்து ஜகந்நாதன் அவர்களிடமே முயற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்போம். நான் இங்கு பல இடங்களில் விசாரித்துவிட்டேன், பணம் இல்லாமல் யாரிடமும் நெருங்க முடியாது. என்ன செய்வது தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கடவுள் நிச்சயம் ஒரு வழி காட்டுவார் என்று நம்பிக்கையோடு இருப்போம்.

கவிதா உங்கள் வீட்டிற்கு வரும்போது அவளிடம் என் விபரங்களைச் சொல்லுங்கள். மற்றபடி உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது கடிதம் எழுதுங்கள். நானும் கண்டிப்பாக கடிதம் எழுதுகிறேன்.

தற்சமயம் இந்த மடலை முடித்துக்கொள்கிறேன். மீண்டும் அடுத்த மடலில் என் சோகக் கதையைத் தொடர்கின்றேன்.

By,
Jensy Singapore
0 comments:

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!