திங்கள், 16 ஜூலை, 2012

தீர்ப்பு!


ஒருவரை நம் பட்டியலிலிருந்து
நாம் நீக்கும் போது
அவருக்கு ஒரு தீர்ப்பை
எழுதவேண்டும்.
அந்த தீர்ப்பில் 
நம்மையும் மீறி 
ஒரு துளிக் கண்ணீர்
சிந்த நேரிடலாம்.
ஒரு முற்றுப்புள்ளியிலிலேனும்
நினைவு உறைந்து
நம்மைச் சற்றே
தடுமாற்றமடையச் செய்யலாம்.
நம்முடைய பட்டியலிலிருந்து
ஒருவரை நீக்கும் போது
ஒரு உறுப்பை நீக்குவது போல
சில சமயம் அதிக வலி இருக்கலாம்.
எந்த கட்டத்திலும்
திரும்பிப் பார்க்காமலிருப்பதுதான்
ஒரு தீர்ப்பை எழுதத்தொடங்கிவிட்டவரின்
முதல் பணி.
இல்லாவிடில்
நமக்கு நாமே உருவாக்கிக்
கொண்ட தன்னலம் தோய்ந்த
வைராக்கியங்களை
செலுத்த முடியாமல் போகும்.
அல்லது
நீக்கப்படும் மனிதனுக்கு
தேவையற்ற ஒரு பிடிமானத்தையோ
கடைசி நம்பிக்கையையோ
அது கொடுத்தது போலாகும்.
நம்மிடம் ஒரு தேர்வு இருப்பது
ஒரு பட்டியல் இருப்பது
அதில் அகற்றுவதற்கான
ஒரு பெயர் இருப்பது,
அது நம்மை
அவ்வளவு வசீகரிக்கிறது.
அது ஒரு புனிதக் கடைமை போல
கண்களை மூட முடியாத 
இறந்த ஒருவனின் கண்களைப்
போல!
- மனுஷ்யபுத்திரன்.


2 கருத்துகள்:

சசிகலா சொன்னது… [Reply]

நம்முடைய பட்டியலிலிருந்து
ஒருவரை நீக்கும் போது
ஒரு உறுப்பை நீக்குவது போல
சில சமயம் அதிக வலி இருக்கலாம்.
எந்த கட்டத்திலும்
திரும்பிப் பார்க்காமலிருப்பதுதான்
ஒரு தீர்ப்பை எழுதத்தொடங்கிவிட்டவரின்
முதல் பணி.

உணர்ச்சிப்பூர்வமான வரிகள்.


தங்களை தொடர் பதிவிற்கு அழைக்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும், தொடர் பதிவிற்கான அழைப்பிற்கும் நன்றி சசிகலா அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!