Wednesday, July 10, 2013

பாலகுமாரன் பக்கம் (கேள்வி-பதில்) 

பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். மேற்கொண்டு என்ன செய்ய?

ஏனேனும் தனியார் கம்பனியில் உங்கள் படிப்புக்கேற்ற வேலை தேடுங்கள். அல்லது சுயமாய் வியாபாரம் செய்யுங்கள்.

மறந்து போயும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து விடாதீர்கள்! அரசாங்கத்தில் கடுமையாய் உழைப்பவர்கள் மிகச்சிலரே. டீ குடித்துவிட்டு, பேப்பர் படித்துவிட்டு ஒரு மெத்தனமான வாழ்க்கை உங்களைச் சுற்றிக் கொண்டுவிடும். வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் மாதச் சம்பளம் வந்து விடும் என்று இருந்தால் குறைவான சம்பளம், குறுகிய புத்தியையும் தான் கொடுக்கும்.

வயதான பிறகு அரசாங்கம் போடுகிற பிச்சைக் காசு பென்ஷனை நம்பிக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். அந்த இரண்டரையணா காசு மிகப்பெரிய கர்வத்தைக் கொடுத்து உங்களை எந்த முனைப்பும் இல்லாமல் மழுங்கடித்து விடும். சுய தொழில் செய்கின்ற சவாலோ, தனியார் கம்பனியில் காட்ட வேண்டிய ஒழுக்கமோ, வீர்யமோ இங்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

எப்போது வேண்டுமானாலும் வேறு கம்பனிக்குத் தாவலாம் என்கிற சுறுசுறுப்போடும், மதர்ப்போடும், கம்பீரத்தோடும் இருங்கள். அம்மாதிரி இளைஞர்கள் பலபேர் இப்போது வளர்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து ஐந்து வருடத்தில் நாற்பதாயிரம் என்று சம்பாதிக்கிறார்கள்.

உழைப்பு மறந்துபோய் சோம்பலுடன் உயிரோடு இருப்பதை விட இல்லாமல் இருத்தலே உத்தமம்.

சென்னையிலுள்ள டிராக்டர் கம்பனி, அங்கு கற்றுக் கொண்ட வேலை, அங்கு காட்டிய சுறுசுறுப்பு, இடைவிடாத உழைப்பு, உழைப்புக்கு கைமேல் கிடைத்த பலன்கள், ஆங்கில அறிவு, மனிதர்களை அறியும் புத்தி, நல்லதும் கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து நிற்க அவைகளை ஏற்று சமாளித்த விதம் போன்றவைதான் என் சிறப்புக்குக் காரணம்.

என் உற்றார் உறவினர்கள் எவ்வளவு வற்புறுத்திய போதும் அரசாங்க வேலையில் சேரமாட்டேன் என்று நான் அப்பொழுதே திடமாக மறுத்தேன். எனக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது. இன்னும் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு குருவருளும், அந்த டிராக்டர் கம்பனியில் கற்றுக் கொண்டதும் காரணம்.

ஒருவேளை அரசாங்க வேலையில் ஈடுபட்டிருந்தால் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யாத தற்குறியாய் போயிருப்பேன்.

காசு சம்பாரிப்பது கடினமாக இருக்கிறதே!?

உங்களுக்கு எதில் காசு இருக்கிறது, அதை எப்படி சம்பாதிக்க வேண்டுமென்று புரியவில்லை. வெறுமே கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. உழைப்புக்குண்டான பலனைப் பெறுவதிலும் சற்று கூர்மையாக இருக்க வேண்டும்.

எது முக்கியம்? ஓய்வா? உழைப்பா? எவ்வளவு ஓய்வு, எவ்வளவு உழைப்பு என்று உங்களுக்குள் நீங்களே தீர்மாணம் செய்துகொள்ள வேண்டும். உழைக்கின்ற நேரத்தையே ஓய்வு நேரமாக பல பேர் பயன் படுத்துகிறார்கள்.

உழைப்பு என்பது இடைவிடாத விஷயம். ஓய்வு நேரத்திலும் உழைப்பதற்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். முக்கிய விஷயம் எவ்வளவு காசு வேண்டும் என்பது? அதிக காசுக்கு ஆசைப்பட்டோமானால் அதற்கு முடிவே கிடையாது!

கற்பு நெறி தவறிய ஆண்களும் பெண்களும் அதிகமாகி வருகிறார்களே?

ஆமாம் இது இயல்பு. படிப்பும் படிப்பால் பொருளாதார விடுதலையும் ஏற்படுகிறபோது இம்மாதிரி எல்லைகள் உடைத்து வேறு எல்லைகள் போடப்படுவது வழக்கம்தான்.

4 comments:

சங்கவி said... [Reply]

நல்ல தகவல்..

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

இவர் எழுதிய கேள்வி பதில் இன்னமும் இருந்தால் தொடர்ந்து போடவும். தேவையான பதில்கள்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி சங்கவி அவர்களே!

கவிப்ரியன் said... [Reply]

நிறைய இருக்கிறது ஜோதிஜி அவர்களே! தொடர்ந்து வெளியிடுகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!