தர்ம நியாயங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் ஒரு தரப்பாய் வாதாட முடியும். இந்த அசிங்கத்துக்குள் நடுநிலையாளர்கள் யாரும் வரவில்லை என்பதே ஆறுதலான விஷயம். ஜாதி... ஜாதிக்காரர்களின் சண்டையாகத்தான் இது எல்லாராலும் பார்க்கப் படுகிறது.
இதிலுள்ள அடிப்படை பிரச்னைகளைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. இந்த ஜாதித் துவேஷம் பிடித்தவர்களால் எத்தனை தூரம் பெரிதாக்க முடியுமோ அத்தனை தூரம் பெரிதாக்கி கலவரம், 144 தடை உத்தரவு, கொலை, தற்கொலை என்று விரிவடைந்து கொண்டே போகிறது. காதலுக்கும் ஜாதிக்கும் குரல் கொடுக்க தங்களை விட்டால் ஆளே இல்லை என்கிற ரீதியில் மிகவும் கேவலமான வார்த்தைகளால் இணையத்தை நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள். சகட்டுமேனிக்கு எல்லா ஜாதிகளையுமே வசைமாரி பொழிகிறார்கள்.
ஜாதிப் பிரச்னையைப் பற்றி வெளிவரும் அனைத்து பதிவுகளும் ஒன்றை ஒன்று குதறி எடுப்பதில்தான் முனைப்பைக் காட்டுகின்றன. யாராவது நடு நிலைமையில் எழுதினால் இரண்டு தரப்புமே வந்து தாக்குகிறார்கள்.
சரி, இந்தப் பிரச்னை இத்தனை தூரம் வளர்ந்ததற்கான காரணம் என்ன?
அதற்கு முன் சில கேள்விகள்?
உங்களுக்கு வயசுக்கு வந்த பெண்ணோ பையனோ இருந்தால்... அதுவும் படிக்கிற வயதில் இருந்தால் கொஞ்சம் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். வழியில் எங்கேயோ யாரையோ பார்த்துப் பேசி பழிகி காதல் எனும் கருமாந்திரத்தில் விழுந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்.
ஆஹா மகன்(ள்) காதலித்துவிட்டாள். படிப்பாவது மண்ணாங்கட்டியாவது, உற்றாராவது உறவினராவது, பதினெட்டோ, பத்தொன்பதோ , வசதி இருக்கோ இல்லலையோ உடனே மாலை மருவாதி செஞ்சி அவங்கள சேர்த்து வைப்பீங்களா?
ஐயோ... கனவெல்லாம் கலைஞ்சி போச்சே... படிப்பு போய்ச்சே... பையனைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே. வேலை வெட்டி இல்லாத பையனாமே, இங்க நாமளே கஷடப் படறோம், இன்னும் மோசமான சூழ்நிலையிலா வாக்கப்பட போகணும். அவ குழந்தையாச்சே... இன்னும் இரண்டு வருஷம் போனா படிப்பும் முடிஞ்சா நல்ல இடமா பார்த்து, பத்திரிகை அடிச்சி விமர்சியா கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேனே.....என்று புலம்புவீர்களா?
ஒவ்வொரு பெற்றவர்களும் எப்படி எல்லாம் குழந்தையை வளர்த்தெடுக்கிறார்கள். அது பையனாகட்டும் பெண்ணாகட்டும். பையனாக இருந்தால் வளர்ந்து வேலைக்குப் போய் தகப்பனின் பாரத்தை குறைப்பன் என்றுதானே ஒவ்வொரு தகப்பனும் நினைப்பான். காதல் கத்திரிக்கான்னு படிக்கிற வயசுல ஒரு பெண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து நின்னா அந்தக் குடும்பத்தோட நிலைமை? எங்கே எப்படி காப்பாத்துவான் அவன்.
இதை எப்படி பிள்ளை வீட்டில் அனுமதிக்கிறார்கள். பெண்ணைப் பெற்றவன் என்ன கவலைப்படக் கூடாதா? என்ன நியாயம் இது. பெண்ணை உயிரோடு பறிகொடுத்துவிட்டு எப்படி அவன் நடமாடுவான்? தன் பெண்ணுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கனவுக் கோட்டை கட்டியிருப்பான்.
துக்கம் தாளாமல் அவன் தூக்கில் தொங்கியபோது எங்கே போனார்கள் இன்று குரைப்பவர்கள் எல்லாம். அவன் குடும்பம் நிற்கதியாய் நின்றபோது அவன் பெற்ற பெண்ணோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தார்களே இவர்கள். திருமண வயதைக் கூட நிரம்பாத ஒரு பையனுக்கு வக்காலத்து வாங்கி ஜாதி துவேஷத்தைத் தூண்டி பிரச்னையை பெரிதாக்கி வேடிக்கை பார்த்தார்கள்.
இந்த வயதில் என்ன தெரியும் அவர்களுக்கு? புள்ள பெத்துக்கத் தெரியும் அவ்வளவுதான். அப்புறம்....
சீராட்டிப் பாராட்டி வளர்த்த பிள்ளைகள் ஓடிப்போவது என்பது எத்தனை மானக்கேடு! எத்தனை துக்கம். இது பெண்ணைப் பெற்ற அத்தனை பேருக்கும் தெரியும். தெரியவில்லை எனில் அவன் எல்லவற்றிற்கும் துணிந்தவனாக இருப்பான்.
சினிமா என்கிற வஸ்து இப்படி எல்லாரையும் ஆட்டுவிக்கிறது. நல்ல குடும்பங்களில், படித்த குடும்பங்களில் இந்த ஓடிப்போதலே இல்லை என்பது உண்மை ஏன்? படிப்பு முக்கியம், வேலை முக்கியம், இலட்சியம் முக்கியம். இதெல்லாம் முக்கியமாக இருப்பவர்களுக்கு காதலும் கத்திரிக்காயும் தோணாது. அப்படி தோணுகிற போது நல்ல வேலையில் இருப்பார்கள். நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பார்கள். பெற்றோர்களிடத்தில் சொல்லி அவர்களையே மணம் முடிப்பார்கள்.
பொறுக்கிகள், ஊதாரிகள், எவன் வீட்டுப் பெண் எங்கே போகிறாள், எப்படி கவிழ்க்கலாம் என்ற பிழைப்போடு வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. காதல் வலை வீசி மயக்கி... அப்புறம் என்ன ... எல்லாம் முடிந்ததும்.. சண்டை சச்சரவு என வழமையான பிரச்னைகள். நண்பர்கள்னு ஒரு போலி உதவாக்கரை கூட்டம் இவங்களுக்கு உதவ எப்பவும் எல்லா
இடத்துலயும் இருக்கும். சோத்துக்கு டிங்கி அடிக்கும் போதுதான் பிரச்னையே பெரிசாவும்.
இங்கே ஜாதி எப்படி யாரால் திணிக்கிப்படுகிறது பாருங்கள். இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கும்போல. உண்மையில் பெண் ஓடிப்போவதுதான் அவமானம். அது யாரோடு ஓடிப்போனாள் என்பது பிரச்னையில்லை. சொந்த ஜாதியாக இருந்தாலும் சரி, சொந்தக் காரணாக இருந்தாலும் சரி. அவமானம் அவமானம்தான். துக்கம் துக்கம்தான். அதை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது.
இவர்களின் கூற்றைப் பார்த்தால் ஜாதிக்காரனாக இருந்தால் அவர்களே கூட்டிக்கொடுத்து அனுப்பிவிடுவார்களா என்ன? அது எந்தச்சாதியாக இருந்தாலும் தம்மை விட வசதியானவர்களோடோ அல்லது தமக்கு சமமாக இருப்பவர்களோடோதான் சம்மந்தம் வைத்துக் கொள்கிறார்கள். இது நடைமுறை எதார்த்தமும் கூட. பொருளாதாரம்தான் வாழ்க்கையை தீர்மாணிக்கிறது. பணம் இல்லையேல் காதல் சீக்கிரத்தில் கசந்துவிடும்.
எத்தனையோ உதாரணங்களை விவரிக்க முடியும். அது தேவையில்லாதது என நினைக்கிறேன். நீதி, நேர்மை, காரணகாரியமெல்லாம் அப்புறம்தான். ஏன்னா ஜாதி உணர்வு. ஜாதிக்காரனுக்கு வக்காலத்து என்ற அடிப்படை விஷயம்தான் இங்கே முதன்மையா இருக்கு.
குறிப்பிட்ட ஜாதியைப் பிடிக்காதவங்க அல்லது அந்த ஜாதியால பாதிக்கப்பட்டவங்கன்னு இரண்டு கும்பல்களின் அலப்பறை தாங்காமல் அந்த 19 வயது பாலகனும் தற்கொலை செய்து கொண்டான். அவனுக்கு எப்படியும் அந்தப் பெண் வேண்டும். ஊரும், ஊடகங்களும் அவன் பக்கம் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பெண்ணோ மிஞ்சியிருக்கும் தனது தாயையும் இழக்க விரும்பாமல் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள்.
எதையுமே தீர்மாணிக்க முடியாமல் இருக்கும் அந்தச் சிறுவனோ இனி அவள் இல்லை என்கிற துக்கத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். திருமண வயது வரை காத்திருந்திருக்கலாம். எல்லாம் சுமுகமாக அமைதியாக இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் (அது உண்மையான காதலாக இருந்திருந்தால்) அவர்கள் இணைந்திருக்கலாம்.
ஊடகங்களும், உறவினர்களும் செய்த அட்டகாசத்தால் இன்று அவனை இழந்து நிற்கிறார்கள். அன்று பெண்ணின் தகப்பன் இறந்தபோது அப்படித்தானே இருந்திருக்கும். வினை விதைத்தவர்கள் அதன் பலனையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
எதிர்வினைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால் அது அவர்களின் இயல்பு என்றே ஒதுங்கிப் போவேன். எல்லோரும் அவர்கள் கருத்தை உரக்கச் சொல்லும்போது என் கருத்தையும் பதிவு செய்வது என் கடமையும் கூட. இன்னும் எழுதுவேன்....
தொடர்புடைய இடுகைகள்; தேவியர் இல்லம் திருப்பூர் தளத்தின் பதிவு ஒன்று
நிசப்தம் என்ற தளத்தின் பதிவு ஒன்று...