வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 நவம்பர், 2015

இந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா?


எத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது? கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து! பிள்ளைகளின் படிப்பும், ஒரே இடத்தில் பணியில்லாத காரணத்தாலும் இப்படி ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாகவே பணியிட மாறுதல் குறித்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எனது மேலிடத்தில் கோரிக்கை வைத்தபடிதான் இருந்தேன். அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. நான் கோரிக்கை வைத்த எனது மேலதிகாரியே மாறுதலாகி போய்விட்ட பிறகு இனி எதற்கு இங்கு வேலை செய்ய வேண்டும் என்ற சலிப்பு வந்துவிட்டது. 

 

காரணம், நம்மை இத்தனை வருடங்களாக புரிந்து கொண்டவர்களாலேயே நமக்கு மாறுதல் கிடைக்க வழியில்லாத போது புதிதாய் வருபவரிடம் வேலை செய்து அவரின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் கோரிக்கை வைத்து ‘என்ன பொழப்புடா’ இது என்றுதான் தோன்றுகிறது. புதிய புதிய இடங்களையும் மனிதர்களையும் பார்க்கும் ஆவல் இருந்தாலும் சில மாதங்களில் ‘எப்படா சொந்த ஊருக்குப்போய் நிரந்தரமாக குடும்பத்தோடு வாழ்வது’ என்ற ஏக்கம் வர ஆரம்பித்து விடுகிறது.

என்னதான் வசதிகள் செய்து கொடுத்தாலும், மனைவி மக்களோடு இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடாகுமா? வெளிநாட்டில் வேலை செய்தபோது வருடத்திற்கு ஒரு முறையும், இந்தியாவில் பிற மாநிலங்களில் வேலை பார்க்கும்போது குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்தான் ஊருக்குப்போய் வரமுடிகிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன? இந்த வேலையை விட்டுவிட வேண்டும். வேலையை விட்டுவிட்டு ஊருக்குப்போய் என்ன செய்வது? அடுத்த வேலைக்கு முயற்சி செய்வது… அல்லது சுயதொழில் ஆரம்பிப்பது. இப்படித்தான் கொஞ்ச நாளாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும், கல்லூரிக்குள் காலடி வைக்கத் தயாராய் இன்னொரு பெண்ணும் இருக்கும்போது அவர்களுக்கு வழிகாட்ட தந்தையின் அருகாமை அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். சென்னைக்கு அருகாமையில் அல்லது பெங்களூரில் கிடைத்தால்கூட வேலை மாறிவிடலாம் என்றுதான் முடிவெடுத்திருக்கிறேன்.

நான்கு வருடங்களுக்கு முன்புகூட இதே மாதிரி மாற்று வேலைக்கு முயற்சித்து பன்னாட்டு நிறுவனம், வாரத்திற்கு ஐந்து நாட்கள்தான் வேலை, சம்பளமும் அதிகம் என்று ஆசைப்பட்டு இருக்கிறதை விட்டு அங்கு தாவினேன். யாருடைய ஒத்துழைப்பும் இல்லாத அந்த நிறுவனத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதைப்போல மூன்று மாதம் வேலையில்லாமல் அமர்ந்திருந்தேன். பொறுத்தது போதுமென்று ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு கிளம்பிப் போய்விட்டேன். அவர்கள் கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது வேலையில் தொடர விருப்பமில்லை என்று சொல்லி மின்னஞ்சலிலேயே என்து ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்.

அடுத்து என்ன செய்வது என்று ஒரே யோசனை? மீண்டும் வேலை தேடும் படலமா? பிள்ளைகள் கல்லூரிப்படிப்பைத் தொடங்கும் காலத்தில் அப்பன் வேலை தேடுவதில் உள்ள சிக்கலும் நிலைமையும் எத்தனை பேருக்கு வாய்த்திருக்குமோ தெரியவில்லை. நான் அனுபவித்திருக்கிறேன். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை பழைய நிறுவனத்தில் நல்ல பெயர் சம்பாதித்து, நல்லபடியாய் வெளியே வந்ததினால் தொடர்பு விட்டுப் போகாமலிருந்தது. எங்கிருக்கிறாய்?... என்ன செய்கிறாய்?... என்று வினவியபோது வேலை தேடிக்கொண்டிருப்பதைச் சொல்ல மீண்டும் வந்து சேரச்சொல்லி விட்டார்கள்.

பொதுவாக ஒரு நிறுவனத்திலிருந்து போனபின் அதே நிறுவனத்தில் மீண்டும் வேலை கொடுக்க மாட்டார்கள். நாம் போய் சேர்ந்தாலும் அத்தனை மதிப்பிருக்காது. ஆனால் சேர்த்து வைத்து நற்பெயரால் அந்த மாதிரி தர்மசங்கடங்கள் எதுவும் எனக்கு நிகழவில்லை. இன்றுவரை அங்குதான் இருக்கிறேன். இங்கிருந்து வெளியேறத்தான் தற்போது சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறுவனத்தைப் பிடிக்காமல் போகவில்லை. கடைசி காலத்தில் குடும்பத்தோடு வாழ ஆசைப்படுகிறேன் அவ்வளவுதான்.

அதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மீண்டும் இன்டர்வியூக்களுக்கு போய்வந்து கொண்டிருக்கிறேன்.


அப்படித்தான் போன வாரம் ஊருக்குப் போயிருந்தபோது சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின்  நேர்காணலுக்கும் போயிருந்தேன். இப்போதெல்லாம் இன்டர்வியூக்குப் போகும்போது எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்வதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் வருத்தமில்லை என்ற மனநிலையில்தான் சென்றிருந்தேன். 30 வருட அனுபவம் என்பதால் அதிகம் கேள்விகள் கேட்கவில்லை. முதல் கட்டமாக தெரிவு செய்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள். சம்பளமும் பரவாயில்லை. மிகப்பெரிய சந்தோஷம் சென்னையிலேயே வேலை. அடுத்தது மருத்துவ சோதனையிலும் பிரச்னை ஏதுமில்லாமல் இருந்தால்தான் பணி வாய்ப்பு கிடைக்கும்.

அதையும் முடித்துவிட்டு வந்திருக்கிறேன். என்ன ஆகும் என்று தெரியவில்லை. இத்தனை வயதுக்கு அப்புறமும் இப்படி வேலை தேடி இன்டர்வியூக்களுக்குப் போவது எனக்கென்னவோ அசிங்கமாக இருக்கிறது. ஐம்பதை நெருங்கும் வயதில் வேலை தேடுவது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.

புதன், 10 ஜூலை, 2013

பாலகுமாரன் பக்கம் (கேள்வி-பதில்)



 

பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். மேற்கொண்டு என்ன செய்ய?

ஏனேனும் தனியார் கம்பனியில் உங்கள் படிப்புக்கேற்ற வேலை தேடுங்கள். அல்லது சுயமாய் வியாபாரம் செய்யுங்கள்.

மறந்து போயும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து விடாதீர்கள்! அரசாங்கத்தில் கடுமையாய் உழைப்பவர்கள் மிகச்சிலரே. டீ குடித்துவிட்டு, பேப்பர் படித்துவிட்டு ஒரு மெத்தனமான வாழ்க்கை உங்களைச் சுற்றிக் கொண்டுவிடும். வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் மாதச் சம்பளம் வந்து விடும் என்று இருந்தால் குறைவான சம்பளம், குறுகிய புத்தியையும் தான் கொடுக்கும்.

வயதான பிறகு அரசாங்கம் போடுகிற பிச்சைக் காசு பென்ஷனை நம்பிக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். அந்த இரண்டரையணா காசு மிகப்பெரிய கர்வத்தைக் கொடுத்து உங்களை எந்த முனைப்பும் இல்லாமல் மழுங்கடித்து விடும். சுய தொழில் செய்கின்ற சவாலோ, தனியார் கம்பனியில் காட்ட வேண்டிய ஒழுக்கமோ, வீர்யமோ இங்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

எப்போது வேண்டுமானாலும் வேறு கம்பனிக்குத் தாவலாம் என்கிற சுறுசுறுப்போடும், மதர்ப்போடும், கம்பீரத்தோடும் இருங்கள். அம்மாதிரி இளைஞர்கள் பலபேர் இப்போது வளர்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து ஐந்து வருடத்தில் நாற்பதாயிரம் என்று சம்பாதிக்கிறார்கள்.

உழைப்பு மறந்துபோய் சோம்பலுடன் உயிரோடு இருப்பதை விட இல்லாமல் இருத்தலே உத்தமம்.

சென்னையிலுள்ள டிராக்டர் கம்பனி, அங்கு கற்றுக் கொண்ட வேலை, அங்கு காட்டிய சுறுசுறுப்பு, இடைவிடாத உழைப்பு, உழைப்புக்கு கைமேல் கிடைத்த பலன்கள், ஆங்கில அறிவு, மனிதர்களை அறியும் புத்தி, நல்லதும் கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து நிற்க அவைகளை ஏற்று சமாளித்த விதம் போன்றவைதான் என் சிறப்புக்குக் காரணம்.

என் உற்றார் உறவினர்கள் எவ்வளவு வற்புறுத்திய போதும் அரசாங்க வேலையில் சேரமாட்டேன் என்று நான் அப்பொழுதே திடமாக மறுத்தேன். எனக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது. இன்னும் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு குருவருளும், அந்த டிராக்டர் கம்பனியில் கற்றுக் கொண்டதும் காரணம்.

ஒருவேளை அரசாங்க வேலையில் ஈடுபட்டிருந்தால் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யாத தற்குறியாய் போயிருப்பேன்.

காசு சம்பாரிப்பது கடினமாக இருக்கிறதே!?

உங்களுக்கு எதில் காசு இருக்கிறது, அதை எப்படி சம்பாதிக்க வேண்டுமென்று புரியவில்லை. வெறுமே கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. உழைப்புக்குண்டான பலனைப் பெறுவதிலும் சற்று கூர்மையாக இருக்க வேண்டும்.

எது முக்கியம்? ஓய்வா? உழைப்பா? எவ்வளவு ஓய்வு, எவ்வளவு உழைப்பு என்று உங்களுக்குள் நீங்களே தீர்மாணம் செய்துகொள்ள வேண்டும். உழைக்கின்ற நேரத்தையே ஓய்வு நேரமாக பல பேர் பயன் படுத்துகிறார்கள்.

உழைப்பு என்பது இடைவிடாத விஷயம். ஓய்வு நேரத்திலும் உழைப்பதற்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். முக்கிய விஷயம் எவ்வளவு காசு வேண்டும் என்பது? அதிக காசுக்கு ஆசைப்பட்டோமானால் அதற்கு முடிவே கிடையாது!

கற்பு நெறி தவறிய ஆண்களும் பெண்களும் அதிகமாகி வருகிறார்களே?

ஆமாம் இது இயல்பு. படிப்பும் படிப்பால் பொருளாதார விடுதலையும் ஏற்படுகிறபோது இம்மாதிரி எல்லைகள் உடைத்து வேறு எல்லைகள் போடப்படுவது வழக்கம்தான்.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

வாழ்ந்து காட்டவேண்டும்... தொடர்ச்சி


திரைப்படங்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள் அல்லவா? நான் சிறுவயதில் டி.வி.சினிமா போன்றவற்றை பார்த்ததே கிடையாது! காரணம் எங்கள் கிறித்துவ முறைப்படி டி.வி.,சினிமா பார்க்கக்கூடாது. என்னுடைய 18-வது வயதில் என்னுடைய கணவரை காதலிக்க ஆரம்பித்ததிலிருந்துதான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். தற்சமயம் சிங்கப்பூரைப் பொறுத்தவரை சன் டிவி பார்க்க முடியும். சிங்கப்பூர் டி.வி.யிலும் (பிரைம் 12) தமிழ்ப்படம் பார்க்க முடியும். பொதுவாக நல்ல படம் என்று அறிந்தால் மட்டுமே நேரம் செலவழித்துப் பார்ப்பேன். இல்லையென்றால் அதற்காக நிறைய நேரம் செலவழிப்பதில்லை. சிங்கப்பூர் வந்து இதுவரை திரையரங்கில் போய் பார்த்த படங்கள், ஜீன்ஸ், நிலாவே வா, படையப்பா.

மற்றபடி சிங்கப்பூரைப்பற்றி நிறைய அறிய ஆவல் உண்டு என்று எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு பாக்கியம் இருந்தால் நிச்சயம் சிங்கப்பூர் வருவீர்கள். அப்பொழுது முழுமையாக அறியலாம். என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறேன். என்னிடம் பணப்பற்றாக்குறை இல்லாதிருந்தால் நானே ஏதாவது ஏற்பாடு செய்திருப்பேன். பணம் மட்டும் ரெடியாக அதாவது ஒன்றரை லட்சம் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் சிங்கப்பூர் வரலாம். இது ஒன்றுதான் பயங்கர கொடுமை. காரணம் இங்குள்ள ஏஜன்ட்டுகள் இதன் மூலம் நன்றாக சம்பாதிப்பதுதான்.

இன்னொரு விஷயம், பெண்களுக்கு சிங்கப்பூரில் நல்ல மதிப்பும் மரியாதையும் எங்கு சென்றாலும் கிடைக்கும். வேலை பார்க்கின்ற இடமாக இருந்தாலும் சரி, அல்லது வீடாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் சம உரிமை சிங்கப்பூரில்! மற்றவற்றை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். மற்றபடி கவிதாவிற்கு நல்ல ஆலோசனை சொல்லுங்கள். நன்றாக யோசித்து ஒரு முடிவு எடுக்கச்சொல்லுங்கள். அவளுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

உங்கள் மனைவி, குழந்தைகளைக் நான் நிறையவே விசாரித்ததாகச் சொல்லுங்கள். குழந்தைகள் இருவருக்கும் அன்பின் முத்தங்கள். என்னை யார் என்றே அவர்களுக்குத் தெரியாது. பரவாயில்லை. நான் சென்னை வந்தால் நிச்சயம் உங்களை வந்து பார்க்கிறேன். தற்போது என்னுடைய புகைப்படம் ஒன்றை அனுப்புகிறேன். அதை அவர்களிடம் காட்டுங்கள். மற்றபடி எல்லா நலனும் பெற்று, வாழ்வில் வெற்றிநடை போட உங்கள் குடிம்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இப்படிக்கு,
என்றும் நட்புடன்,

ஜென்ஸி, சிங்கப்பூர்.

குறிப்பு; இந்த கடிதம் எழுதி முடித்தபிறகு எனக்கு ஒரு தகவல் ஒரு நண்பர் மூலமாகக் கிடைத்தது. மாம்பலத்தில் ஒரு ஏஜன்ஸி உள்ளது. அதில் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். அந்த முகவரியை எழுதுகிறேன். நீங்கள் உங்களுடைய எல்லா விபரங்களையும் எடுத்துக்கொண்டு அங்கு போய் முயற்சி செய்யவும். அங்கு தேர்வானால் விமானப் பயணத்திற்கான கட்டணம் மட்டும்தான் செலவாகும். கண்டிப்பாக அங்கு போய் முயற்சி செய்யவும். அங்கிருந்து நிறைய பேரை சிங்கப்பூருக்கு அனுப்புகிறார்கள். அதிர்ஷடம் இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.