ஆசிரியர்; ஜே.வி.ஆர். சவிதாஷா
பால்யகாலத்
தெருக்கள் என்ற தலைப்பைப் பார்த்து இது எனது மறக்க முடியாத நினைவுகள் போன்ற ஒரு தொகுப்பு என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது இது ஒரு
கவிதைத் தொகுப்பு என்று. வாசிக்கத் தொடங்கியபின் நிறுத்த மனமில்லை. சரி
முடித்து விடுவோம் என்று உட்கார்ந்து விட்டேன்.
ஆரம்பத்தில்
எழுத வருபவர்கள் எல்லோருமே முயற்சி செய்வது கவிதை எழுதுவதுதான். அதுவும்
காதலிக்கும் நேரத்தில்தான். எதையாவது எழுதி நம்மவரை அசத்த வேண்டுமென்றால்
அதற்கு ஒரே வழி கவிதை எழுதுவதுதான். நான் கூட அப்படி எழுதிய காலம் உண்டு.
வயது ஏற, குடும்பப் பொறுப்புகள் சூழ்ந்த பிறகு அதற்கெல்லாம் நேரமேது.
வாசிப்பதோடு சரி, ஒரு காலகட்டத்துக்குப் பின் அதுவும் நின்று போய்விட்டது.
காலத்திற்குத் தகுந்த மாதிரி நமது ரசனைகளும் மாறிப்போவதுதான் காரணமேயன்றி
வேறில்லை.
நிறையத்
தலைப்புகளில் கவிதைகள். எழுத்தாளரே சொல்வது போல் சில கவிதைகளாகவும், சில
கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே மாட்டிக்கொண்டும் முழிக்கிறது. கதையையே கூட
குறை சொல்லிவிடலாம். ஆனால் கவிதையை... முடியவே முடியாது. ஏனென்றால்
கவிதைகள் எல்லாமே ஏகாந்த மனநிலையில் எழுதப்படுபவை. எத்தனை முறை
திருத்தினாலும் எல்லாமே சரியாய் இருப்பது போல் தோன்றும். இது
அடுத்தவருக்குப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கே எனக்காய்
எழுதப்படுபவை. அடுத்தவர்க்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்.
ஆரம்பத்தில்
கற்பனைகளும், அப்புறம் அனுபவங்களும், வலியும் வேதனைகளும் கூட கவிதைகளில்
கொட்டப்பட்டன. இங்கே சவிதாவின் கவிதைகளில் எல்லாமே அனுபவம். ஒவ்வொன்றும்
ஒரு விதம். கடவுள், பிரம்மா என்று அவர்களை அழைத்தாலும் பெரும்பாலும்
வாழ்க்கை அனுபவங்களே கவிதையில் நிறைந்திருக்கிறது.
‘வான் மேகம் பிரசவிக்கும்
மழைக்கும்
பெண் தேகம் பிரசவிக்கும்
மழலைக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு’
என்ற
வரிகள் அற்புதம். காய்ச்சல், மருந்தின் வாசம் இரண்டும் ஒரே தலைப்பின் கீழ்
வரவேண்டியவை. குழந்தைகள் உலகமான டோராவும், சோட்டா பீமும் தொலைக்காட்சிப்
பெட்டியில் முடங்கிப்போனதிலேயே குழந்தையின் சுகவீனம் உணர்த்துகிறது. அதே
போல பால்யகாலத் தெருக்களும் புளியமரமும் ஒரே தலைப்பில் வரவேண்டிய கவிதைகள்.
இந்த பால்யகாலத்தில் நாம் சுற்றாத தெருக்களா? எத்தனை புளியமரத்தினடியில் கில்லியும், கோலியும் விளையாடியிருப்போம். அந்தக்கால நினைவுகள் வராத மனிதர் உண்டா என்ன?
‘நடக்க நடக்க
நீண்டிருந்த தெருக்கள்
இப்போது இருபது எட்டில்
முடிந்து விடுகின்றன’.
சொந்த
ஊருக்குப் போகும்போதெல்லாம் என் மனதுக்குள் எழும் கேள்விகள் இவை.
எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும் என்று இப்போதுதான் புரிகிறது.
உறக்கம்,
நினைவொளி, ஆழ்மனம், விசித்திரம், கனவின் தொடர்ச்சி என எல்லாமே ஒன்றின்
ஒன்றான நீட்சியே. இரவில் உறங்கும்போது இப்படி நினைவுகளும் கனவுகளும் வந்து
உறங்கவிடாமல் தொல்லை கொடுக்கும். அப்போது நினைப்பவற்றை எழுதிவைக்க மனம்
நினைத்தாலும் உறங்கியும் உறங்காத மனநிலையில் விடிந்ததும் பார்த்துக்
கொள்ளலாம் என்று நினைத்து, விடிந்ததும் அது கனவாக மாறி மறந்து போவதுதானே
வாடிக்கை. ஆனால் அத்தனையையும் கவிதையாக்கியிருக்கிறார்.
‘அச்சம்’
தான் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பயந்து போய்விட்டேன். குச்சம், புச்சம்,
பிச்சம், கச்சம் என எதுகை மோனைக்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்.
எனக்குக்கூட தமிழின் சில வார்த்தைகள் தெரியவில்லையே என்று ஒரு தாழ்வு
மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது. உடனே இணையத்திலும் தேடத் தொடங்கி
விட்டேன். ஆனால் அடுத்த பக்கத்திலேயே அதற்கான பொருளும் கொடுத்து படிப்பவர்
பலரைக் காப்பாற்றியிருக்கிறார்.
தேர்தல்
திருவிழாவில் அரசியலையும் தொட்டிருக்கிறார். இந்த விழிப்புணர்வு ஒன்றே
போதும் பெண்களுக்கு, இந்த ஆட்சியின் அவலத்தையே மாற்றிக்காட்டலாம். ஏதோ ஒரு பாடல், பொக்கிஷம் போன்ற பல தலைப்புகள் எனக்கு அருமையான
கட்டுரைத் தலைப்புகள். மன்னிப்பு, நேசம் பிறவிக்குணம்-இதில் என் மனநிலையும்
பிரதிபலித்திருப்பதைக் கண்டேன்.
‘இனி வாக்களிக்கும் நாவையும்
உதவத்தூண்டும் மனதையும்
கட்டிவைக்கப்போகிறேன்.’
‘பழையது போல
பழையது எல்லாம்’......
முடியவே
முடியாத விஷயங்களிலெல்லாம் நிறைய இப்படிச் சபதமேற்றிருப்போம். அதெல்லாம்
எத்தனை அபத்தம் இல்லையா? புறக்கணிப்புகள் மிகப் பெரிய தலைப்பு. புறக்கணிப்பும், அவமானமும் அடையாத மனிதருண்டா உலகில்? ஐந்தாறு
பக்கத்துக்கு இதை வைத்து எழுதலாம்.
அதே
போல வார்த்தை ஆயுதம், காதலின் வார்த்தை, வார்த்தை மீறல் என எல்லாவற்றையும்
ஒரே குடையின் கீழ் கொண்டு வந்திருக்கலாம். முத்தாய்ப்பாய் கவிதைக்
கீற்றுகள்...
கடல் அலைபோல்தான்-என்
நினைவலைகளும் ஒரு நாளும்
உன்னைத் தீண்டாமல்
திருப்பியதில்லை....அருமை.
கவிதைப் பக்கமே தலைவைத்து படுக்காமலிருந்த என்னை எழுந்து உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது இந்தத் தொகுப்பு.
நட்புடன்,
எம். ஞானசேகரன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!