கிண்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிண்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஆகஸ்ட், 2020

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - கிண்டில் நூல் விமர்சனம்

தலைப்பைப் பார்த்துத்தான் இந்த நூலைத் தேர்ந்தெடுத்தேன். இது ஒரு அருமையான சிறுகதைத் தொகுப்பு. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒடிஸா, மத்தியப்பிரதேசத்தில் பணிபுரிந்தவன் நான். புத்தகங்களில்லாத இரயில் பயணங்களே இல்லை எனலாம். தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள பழைய புத்தகக்கடைகளிலிருந்து கணிசமான புத்தகங்களை வாங்கிக் கொள்வது வழக்கம். கூடவே அன்றைய செய்தித்தாள்கள், வாரப்பத்திரிகைகளும் வாங்கிக் கொண்டுதான் பயணிப்பேன்.

அதே போல இதன் முதல் கதையில் பழைய புத்தகக் கடையில் கிடைத்த ஒரு டைரியோடு துவங்குகிறது ஒரு ரயில் பயணம். டைரியில் எழுதப்பட்டுள்ள வரிகளைப் படிக்கும்போதே அந்தச்சிறுமி மனதுக்குள் புகுந்து விடுகிறாள். வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மும்பையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதைக்கூட அறியாத அந்தச் சிறுமியின் வாக்குமூலம் போல விரியும் அந்த டைரிக்குறிப்புகளைத் தேதி வாரியாகப் பக்கங்களைப் படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. என்ன ஆனது அந்தச்சிறுமிக்கு? மும்பையில் நடந்த சம்பவம். சென்னையில் கிடைத்த டைரி. பல வருடங்களுக்குப் பிறகு தில்லி ரயிலில் சந்தித்த ஒரு பெண்ணின் பையிலிருந்து விழுந்த டைரி. முதல் கதையே அசத்தல்.

சங்கமித்திரை – கிராமத்து வீட்டையும் அந்த மனிதர்களையும் அழகாகப் படம்பிடிக்கிறது. சங்கமித்திரை காதல் தோல்வியினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயல அவள் எதிர்வீட்டு செல்வராசின் அப்பா காப்பாற்றுவதிலிருந்து தொடங்குகிறது கதை. வாழ்க்கை யாருக்கு எதை நிர்ணயித்திருக்கிறது என்று கணிக்க முடிவதேயில்லை. பழைய உறவுகளைப் பார்க்கிறபோது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியாது. அது சகோதரி உறவாகவோ அல்லது வேறு என்ன உறவாகவோ இருந்தால் என்ன? அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...

வேட்கையின் நிறங்கள் – அப்பாவைப் பார்த்து ஆண்களையே வெறுக்கும் வேதா மாதவன் பால் மனம் மயங்குகிறாள். அவனின் அதிரடி செய்கையால் ஆண்களே இப்படித்தான் என்று அவனையும் வெறுக்கிறாள். வளர்ந்ததும் மாதவனுக்கே அவளை மணமுடிக்க ஏற்பாடு செய்ய, தன் தோழி நதியாவுடன் ஓடிப்போகிறாள். ‘திரியின்றி எரிந்து சாம்பலாகி, நாங்கள் மீண்டபோது’ என்ற ஒற்றை வரியில் இருவருக்குமுள்ள தன்பாலுறவைச் சொல்லாமல் சொல்லி விரசமில்லாமல் விவரிக்குமிடம் அருமை. முடிவு எதிர்பாராதது. ஏதோ ஒன்றைத் தேடிப்போய் மீண்டும் பாழுங்கிணற்றில் விழுவதுதான் பலரது வாழ்க்கையில் நடக்கிறது. வேட்கை யாரையும் விட்டு வைக்காது, சகலவிதங்களிலும் ருசி பார்த்துவிட்டுத்தான் ஓயும்.

வேலியோர பொம்மை மனம் – ஈழத்துக்கதை என்றுதான் நினைக்கிறேன். குண்டுவெடிப்புகளும் மரணங்களும் நிரம்பிய போர்ச்சூழலில் வாய் பேசாத, காது கேளாத ஜெயாவுக்கு வெடிச்சத்தம் காதில் விழாமலேயே ‘ரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள்’ இந்த வரிகளில் தெரிந்து போகிறது ஜெயாவின் நிலைமை. முள் வேலியிட்ட அகதி முகாமில் அவளின் சோகமும் இருந்த ஒரு துணையான கரடி பொம்மையைப் பறிகொடுத்தும் மனிதநேயம் மாறா செயலையும் விவரிக்கிறது இந்தக் கதை. அந்த இராணுவ வீரன் பொம்மையைப் பிடுங்கி கருணையே இல்லாமல் பிய்த்துப் போட்டும், மறுநாள் தன் அன்பால் அதே வீரனை வீழ்த்துவதாய்க் கதை முடிகிறது.   

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு A பிரிவு – ப்ரியாக்குட்டி என் மனசிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டாள். அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரிவதைப்போல ப்ரியாக்குட்டியின் விளையாட்டுக்கள் சுவாரசியமானவை. உடனிருக்கும் உறவுகளின் இழப்பு, அதுவும் வாழ வேண்டிய வயதிலிருப்பவர்களுடைய இழப்பு வாழ்நாள் முழுவதும் வருத்திக்கொண்டே இருக்கும். அருணுக்கும் அப்படித்தானிருக்கும்.

சேமியா ஐஸ் – பால்ய காலத்தில் சைக்கிளில் தெரித்தெருவாய் வரும் சேமியா ஐஸை ருசிக்காத கிராமத்தான்கள் குறைவு. காசுக்குப் பதில் கிராமங்களில் என்ன விளைகிறதோ அதை அந்தந்த பருவ காலங்களில் வாங்கிக்கொண்டு ஐஸைக் கொடுப்பது வழக்கம். எங்கள் பக்கத்தில் வேர்க்கடலை பிடுங்கும் சமயத்தில் வீட்டுக்குத் தெரியாமல் பாக்கட்டில் நிரப்பி வந்து ஐஸ்காரணிடம் கொடுத்து சேமியா ஐஸை வாங்கிச் சாப்பிட்டது இன்றும் நினைவிலிருக்கிறது. இந்தக் கதையில் சித்தியின் பழைய பிளாஸ்டிக் செருப்பு. அடி வாங்கியது மறக்கவில்லை என்றாலும் ஆசை யாரை விட்டது. அடுத்த புது செருப்பும் அவனது இலக்காகிவிட்டதுதான் நகைச்சுவை.

வால் பாண்டி சரித்திரம் – நமக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்க அவர்கள் பெயரை நாய்க்கும் பூனைக்கும் வைக்கும் பழக்கம் தெரியும்தானே. சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கான் தன் நாய்க்கு அமீர்கான் பெயரை வைத்ததைப் படித்திருக்கிறேன். ஆனால் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் பிடிக்காத ஆசிரியருக்கும், அடிக்கின்ற ஆசிரியருக்கும்கூட பட்டப்பெயர் வைப்பது வழக்கம்தான். அந்த மாதிரி பள்ளிக்கூட நினைவுகளை விவரிப்பதும், காடைக்கறி வாங்கி வரச்சொன்னா காக்கா கறியைக் கொண்டு வரும் வால் பாண்டியின் கதை இது. தான் பிடித்த அனில் குட்டியை கொடுக்காததால், டேவிட் கொடுத்த சாபத்தினால்தான் தான் பெயிலானதாக தன் வரலாற்றைப் பெருமையாக நினைக்கும் பாண்டியின் சரித்திரம் இது.

சைக்கிள் – மாணவப் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் சைக்கிள்தான் சொத்து பெருமை எல்லாம். ஒரு காலத்தில் கிராமங்களில் சைக்கிள் அத்தியாவசியத் தேவையாக இருந்தது. 2014 வரை கூட என் வீட்டில் இரண்டு சைக்கிள் இருந்தது. படித்து முடித்து வெளியூருக்கு வேலைக்குப் போன பிறகு கவனிக்க ஆளில்லாமல் போன சைக்கிளுக்கு உயிர் கொடுத்து வைத்திருந்த அப்பா என்றைக்கும் ஓட்டாமல் அன்று எடுத்துக்கொண்டு வெளியே போக எமன் அவரை அழைத்துக்கொண்ட கதை இது. நிச்சயம் 80 காலத்தவர்களின் சொர்கத்தை நினைவு படுத்தும் கதை.

தனலட்சுமி டாக்கீஸ் – கிராமத்து டெண்ட்டு கொட்டாய் நினைவுகள். இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு இந்த அனுபவம் இல்லாமலேயே போய்விட்டது. என்னுடைய பிள்ளைகளைக் கடைசியாக 2014-ல் அழைத்துப் போனது நினைவுக்கு வருகிறது. டிக்கட் கொடுக்கும் கட்டையனின் பொழப்பு புஸ்வானமாய்ப் போன கதைதான் இது. படிக்கும் போது நிச்சயம் பழைய நினைவுகளைக் கிளறிவிடும். ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த 2020-ல் கூட எங்களூர் டெண்ட் கொட்டாய் (கணேஷ் திரையரங்கம்) உயிர்ப்போடு இருப்பதுதான்.

தாய்மை கதையும், பட்டாணியின் கதையும் கூட கிராமத்து வாடையுடன் கூடிய சுவாரசியமான கதைகள்தான். ஒன்று சந்தேகத்தின் அடிப்படையிலானது. அடுத்தது கள்ளக்காதலை மறைக்கப் பட்டாணி என்ற மனிதன் மீது பழி போடுவது. படித்ததும் மனசு பாரமாகிப்போனது. தூவல் கதையும் அதே மாதிரிதான்.

கடைசி இரண்டு கதைகள் சம்யுக்தையும், அப்பா சொன்ன நரிக்கதையும். வாழ்க்கையின் எதார்த்தங்களை இப்படிக்கூடச் சொல்ல முடியுமா என்று வியக்க வைத்தவை. காதல் வாழ்க்கையில் ஒருவரை எப்படியெல்லாமோ மாற்றிவிடுகிறது. ஆனால் பிரிவு வாழ்க்கையையே உருக்குலைத்து விடுகிறது. எத்தனை படித்தும் என்ன பயன்? மயக்கத்தில் இருப்பவனிடமோ அல்லது துயரத்தில் இருப்பவனிடமோ எந்த ஆலோசனையும் அல்லது ஆறுதலும் எடுபடாது இல்லையா?

கட்டாயம் வாசிக்க வேண்டிய அருமையான சிறுகதைகள். நன்றி நிலாரசிகன். 

நட்புடன்,

எம்.ஞானசேகரன்

சனி, 4 ஜூலை, 2020

பால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்

ஆசிரியர்; ஜே.வி.ஆர். சவிதாஷா

பால்யகாலத் தெருக்கள் என்ற தலைப்பைப் பார்த்து இது எனது மறக்க முடியாத நினைவுகள் போன்ற ஒரு தொகுப்பு என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது இது ஒரு கவிதைத் தொகுப்பு என்று. வாசிக்கத் தொடங்கியபின் நிறுத்த மனமில்லை. சரி முடித்து விடுவோம் என்று உட்கார்ந்து விட்டேன்.

ஆரம்பத்தில் எழுத வருபவர்கள் எல்லோருமே முயற்சி செய்வது கவிதை எழுதுவதுதான். அதுவும் காதலிக்கும் நேரத்தில்தான். எதையாவது எழுதி நம்மவரை அசத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கவிதை எழுதுவதுதான். நான் கூட அப்படி எழுதிய காலம் உண்டு.

வயது ஏற, குடும்பப் பொறுப்புகள் சூழ்ந்த பிறகு அதற்கெல்லாம் நேரமேது. வாசிப்பதோடு சரி, ஒரு காலகட்டத்துக்குப் பின் அதுவும் நின்று போய்விட்டது. காலத்திற்குத் தகுந்த மாதிரி நமது ரசனைகளும் மாறிப்போவதுதான் காரணமேயன்றி வேறில்லை.

நிறையத் தலைப்புகளில் கவிதைகள். எழுத்தாளரே சொல்வது போல் சில கவிதைகளாகவும், சில கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே மாட்டிக்கொண்டும் முழிக்கிறது. கதையையே கூட குறை சொல்லிவிடலாம். ஆனால் கவிதையை... முடியவே முடியாது. ஏனென்றால் கவிதைகள் எல்லாமே ஏகாந்த மனநிலையில் எழுதப்படுபவை. எத்தனை முறை திருத்தினாலும் எல்லாமே சரியாய் இருப்பது போல் தோன்றும். இது அடுத்தவருக்குப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கே எனக்காய் எழுதப்படுபவை. அடுத்தவர்க்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்.

ஆரம்பத்தில் கற்பனைகளும், அப்புறம் அனுபவங்களும், வலியும் வேதனைகளும் கூட கவிதைகளில் கொட்டப்பட்டன. இங்கே சவிதாவின் கவிதைகளில் எல்லாமே அனுபவம். ஒவ்வொன்றும் ஒரு விதம். கடவுள், பிரம்மா என்று அவர்களை அழைத்தாலும் பெரும்பாலும் வாழ்க்கை அனுபவங்களே கவிதையில் நிறைந்திருக்கிறது.

வான் மேகம் பிரசவிக்கும்
மழைக்கும்
பெண் தேகம் பிரசவிக்கும்
மழலைக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு’

என்ற வரிகள் அற்புதம். காய்ச்சல், மருந்தின் வாசம் இரண்டும் ஒரே தலைப்பின் கீழ் வரவேண்டியவை. குழந்தைகள் உலகமான டோராவும், சோட்டா பீமும் தொலைக்காட்சிப் பெட்டியில் முடங்கிப்போனதிலேயே குழந்தையின் சுகவீனம் உணர்த்துகிறது. அதே போல பால்யகாலத் தெருக்களும் புளியமரமும் ஒரே தலைப்பில் வரவேண்டிய கவிதைகள். இந்த பால்யகாலத்தில் நாம் சுற்றாத தெருக்களா? எத்தனை புளியமரத்தினடியில் கில்லியும், கோலியும் விளையாடியிருப்போம். அந்தக்கால நினைவுகள் வராத மனிதர் உண்டா என்ன?

நடக்க நடக்க
நீண்டிருந்த தெருக்கள்
இப்போது இருபது எட்டில்
முடிந்து விடுகின்றன’.

சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் என் மனதுக்குள் எழும் கேள்விகள் இவை. எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும் என்று இப்போதுதான் புரிகிறது.

உறக்கம், நினைவொளி, ஆழ்மனம், விசித்திரம், கனவின் தொடர்ச்சி என எல்லாமே ஒன்றின் ஒன்றான நீட்சியே. இரவில் உறங்கும்போது இப்படி நினைவுகளும் கனவுகளும் வந்து உறங்கவிடாமல் தொல்லை கொடுக்கும். அப்போது நினைப்பவற்றை எழுதிவைக்க மனம் நினைத்தாலும் உறங்கியும் உறங்காத மனநிலையில் விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, விடிந்ததும் அது கனவாக மாறி மறந்து போவதுதானே வாடிக்கை. ஆனால் அத்தனையையும் கவிதையாக்கியிருக்கிறார்.

‘அச்சம்’ தான் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பயந்து போய்விட்டேன். குச்சம், புச்சம், பிச்சம், கச்சம் என எதுகை மோனைக்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். எனக்குக்கூட தமிழின் சில வார்த்தைகள் தெரியவில்லையே என்று ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது. உடனே இணையத்திலும் தேடத் தொடங்கி விட்டேன். ஆனால் அடுத்த பக்கத்திலேயே அதற்கான பொருளும் கொடுத்து படிப்பவர் பலரைக் காப்பாற்றியிருக்கிறார்.

தேர்தல் திருவிழாவில் அரசியலையும் தொட்டிருக்கிறார். இந்த விழிப்புணர்வு ஒன்றே போதும் பெண்களுக்கு, இந்த ஆட்சியின் அவலத்தையே மாற்றிக்காட்டலாம். ஏதோ ஒரு பாடல், பொக்கிஷம் போன்ற பல தலைப்புகள் எனக்கு அருமையான கட்டுரைத் தலைப்புகள். மன்னிப்பு, நேசம் பிறவிக்குணம்-இதில் என் மனநிலையும் பிரதிபலித்திருப்பதைக் கண்டேன்.

இனி வாக்களிக்கும் நாவையும்
உதவத்தூண்டும் மனதையும்
கட்டிவைக்கப்போகிறேன்.’
‘பழையது போல
பழையது எல்லாம்’......

முடியவே முடியாத விஷயங்களிலெல்லாம் நிறைய இப்படிச் சபதமேற்றிருப்போம். அதெல்லாம் எத்தனை அபத்தம் இல்லையா? புறக்கணிப்புகள் மிகப் பெரிய தலைப்பு. புறக்கணிப்பும், அவமானமும் அடையாத மனிதருண்டா உலகில்? ஐந்தாறு பக்கத்துக்கு இதை வைத்து எழுதலாம்.

அதே போல வார்த்தை ஆயுதம், காதலின் வார்த்தை, வார்த்தை மீறல் என எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்திருக்கலாம். முத்தாய்ப்பாய் கவிதைக் கீற்றுகள்...

கடல் அலைபோல்தான்-என்
நினைவலைகளும் ஒரு நாளும்
உன்னைத் தீண்டாமல்
திருப்பியதில்லை....அருமை.

கவிதைப் பக்கமே தலைவைத்து படுக்காமலிருந்த என்னை எழுந்து உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது இந்தத் தொகுப்பு.

நட்புடன்,

எம். ஞானசேகரன்.

கருப்பணசாமியின் சிநேகிதர்கள் - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்; நா. கோபாலகிருஷ்ணன்

விமர்சனம் என்பதே நிறை குறைகள் அடங்கியதுதான். நம்முடைய எழுத்தை எல்லோரும் பாராட்டித்தான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தால் நமது குறைகள் கண்ணுக்குத் தெரியவே தெரியாது.

திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இங்கே நாம் ஆளை விமர்சிப்பதில்லை. நட்புக்காக முகஸ்துதி பாடுவதில்லை. ஒருவரையொருவர் ஆதரிக்கிறோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துகிறோம், அவ்வளவுதான். இங்கு விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை. இந்தப் புரிதல் இருந்தால் தொடர்ந்த வாசிப்பும் விமர்சனங்களும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழும்.

‘கருப்பணசாமியின் சிநேகிதர்கள்’– இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. புத்தகத்தலைப்புதான் இதை விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம். அந்தக்கால தூர்தர்ஷனில் ‘மால்குடி டேஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பானதை என் வயதையொத்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே மாதிரி சென்னை தொலைக்காட்சியில் ‘தொலைந்து போனவர்கள்’ என்ற தொடரும் வந்தது.

ஒவ்வொரு வாரமும் ஒரு கதை, அதுதான் இதன் சிறப்பே. சிறுகதைத் தொகுப்பிலும் இதுதான் எனக்குப் பிடித்த விஷயமே. வேறு வேறு கதைகள், கதா பாத்திரங்கள். உள்ளே நறுக்குத் தெரித்தாற்போன்ற ஒரு விஷயம். கடைசியில் வாசகனின் அனுமானத்திற்கே முடிவை விட்டுவிடுவது போன்றவை சிறுகதையில் சிறப்பான அம்சம்.

இதில் முதல் கதை ‘மழை’யில்தான் ஆரம்பிக்கிறது. பாழடைந்த மண்டபத்தில் மழைக்காக ஒதுங்கியிருக்கும் முத்தையாவின் சைக்கிளில் உள்ள மூட்டை என்னவாக இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கிறது. இரண்டாவது ஏன் முத்தையாவின் குடும்பத்தை ஜமீன் குடும்பம் ஒதுக்கி வைத்திருக்கிறது என்ற ஆவல் பிறக்கிறது. இத்தனை நாள் வேலை கொடுக்காமல் ஒதுக்கிவைத்த ஜமீன் கூப்பிட்டு ஒரு திருட்டு வேலை கொடுத்ததும் ஏன் என்ற கேள்வி வருகிறது. இப்படி கேள்விகளூடே கதை நகர்வதால் சுவாரஸ்யமும் கூடிக்கொண்டே போகிறது.

பிள்ளையார் சிலையைத் திருடித்தான் வைக்கவேண்டுமா என்ன? இந்தத்தகவல் புதிதாக இருக்கிறது. கடைசியில் முத்தையன் ‘சிரித்தான்... உரக்கச்சிரித்தான்’ என்று முடித்தது இன்னும் சிறப்பு. மூக்கறுந்த பிள்ளையாரை அந்த ஊரிலிருந்து அகற்றியதால் அங்கு இடியுடன் கனமழை... அதே பிள்ளையார் இங்கே வந்ததால் இனி இந்த ஊர்ல மழையே வராது. சரி அது அவனது ஊரும்கூடத்தானே. அங்கு மழை பெய்யாது எனில் பாதிக்கப்படுவதில் அவனும் அடக்கம்தானே. பின் ஏன் சிரித்தான்? எல்லோரையும் யோசிக்கவைக்கும் கதை.

மனிதன் தன் தவறுகளை எப்போதும் ஒத்துக்கொள்வதே இல்லை. யார் மீதாவது பழியைப்போட்டுத் தப்பிக்கவே நினைக்கிறான். இல்லையேல் ‘நான் என்ன பண்றது?’ ‘என் சூழ்நிலை அப்படி’, ‘சந்தர்ப்பம் அப்படின்னு’ சமாதானம் சொல்லுவான். இது ரெண்டுமில்ல, மனசுதான் காரணம், அந்த மனசிலுள்ள ‘அழுக்கு’தான் காரணம்னும்னோ, அந்த மனசிலுள்ள பேராசைதான் காரணம்னோ ஒத்துக்கறதே இல்ல. இந்த இரண்டாவது கதையின் நாலுவரிக் கவிதையிலேயே கதையைச் சொன்னதுதான் சிறப்பு.

இறைவன் எப்போதும் எளியவர்களுக்கானவன் இல்லை. பணக்காரர்கள் தங்கள் பகட்டைக்காட்டப் படைக்கப்பட்டவனாக இருக்கலாம். எளியவர்களின் வறுமையைப் பற்றியும், பசியைப் பற்றியும் அவனுக்கென்ன கவலை. மூன்று வேளையும் பூஜை புனஸ்காரம் நடக்கிறதா என்பது மட்டும்தான் அவன் கவலை. அல்லது அவனை உரிமை கொண்டாடுபவர்களின் கவலை. பஞ்சைப் பராரிகள் அன்னதானம் போட்டால் வந்து தின்றுவிட்டுப் போகட்டும், அவ்வளவுதான் கடவுளின் கருணை. காலமெல்லாம் அந்த ஏழைகள் ஏழைகளாகவே செத்துப் போகிறார்கள்.

தகப்பன் சாமியிலும் அதேதான். ஊரே கொண்டாட்டமாக இருக்கிறது. மாரியம்மாளும் மகிழ்ச்சியோடு இருக்கிறாள். ஆனால் ஏழை மாசானத்தின் வாழ்வுக்கான அவன் கடையை கபளீகரம் செய்திருந்தாலும் அவன் இடத்தில் உட்கார்ந்து ஊரின் மொத்தப் பார்வையும் தன் கடையை நோக்கித் திருப்பிவிட்டாளாம். ‘தீப ஒளியில் தெரிந்த அம்மனின் இதழோரம் தெரிந்த புன்னகைக்கு இப்போது வேறு அர்த்தம் தோன்ற பரவசத்தோடு பார்த்து நின்றான்’ மாசானம். அவனுக்கு இனி பசியே எடுக்காது! அம்மன்தான் அருள்பாலித்து விட்டாளே?!

பாவம் கருப்பணசாமியும் அவன் குதிரையும். ‘கோபக்கார சாமி அடிச்சி கொன்னுருச்சிப்பா... என்ன தப்பு பண்ணினானோ...?’ போகிற போக்கில் எவனோ சொல்லிவிட்டு போனான். இதைப் படித்ததும் சிரிப்புதான் வந்தது. இப்படித்தான் இருக்கிறது எல்லா ஊரிலுமிருக்கிற எல்லைச்சாமிகளின் நிலையும்.

மனசின் ‘வலி’ மரணம்வரை மறக்காது. ஏதோ ஒரு பழங்குடியின மக்களின் வாழ்வியலில் இறந்த காலமே கிடையாதாம். இன்று இப்போது நடப்பைவை மட்டும்தான் அவர்களுக்கு நினைவிருக்குமாம். சமீபத்தில்தான் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. அப்படி இருந்தால் எத்தனை வசதியாக இருக்கும்!.

துரோகங்கள் சூழ் உலகில் எதை மறப்பது? எதை நினைப்பது? மனித வாழ்வில் ஒவ்வொரு இழப்பும் ஒரு வலிதான். வாழ்நாள் முழுவதும் அவனை இந்த வலி அலைக்கழித்து கொண்டே இருக்கிறது. யாரோ செய்த தவற்றைக்கூட மன்னித்து மறந்துவிடுகிறோம். ஆனால் நம்மைச் சார்ந்தவர்களின் தவற்றை மன்னிப்பதே இல்லை. ரகு கடைசியில் கண்ணீர் விட்டு என்ன பிரயோஜனம்? தனது தந்தையின் வலியைக்கூட கடைசிக்காலம் வரை தீர்க்கமுடியவில்லையே!

கதைகள் அத்தனையும் அருமை. குறை சொல்ல முடியாத எழுத்து நடை. தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணம். எழுத்துப் பிழைகளோ சொற்பிழைகளோ இல்லாத நேர்த்தி. எப்படி ஒரு சிறுகதை எழுதுவது என்று கற்றுக்கொள்ள ஒரு பாடம். வாழ்த்துக்கள் நா. கோபாலகிருஷ்ணன் அவர்களே!

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.

ஆற்று வெள்ளம் - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்; அகிலாண்ட பாரதி

ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அருமையான கதை. இவருக்கு இது முதல் கதையாக இருக்காது என்று நினைக்கிறேன். அத்தனை தெளிவான நடை. பொதுவாக குடும்பக்கதை, நாவல் போன்றவற்றைப் படிப்பதை விட்டு வெகு நாளாயிற்று.

ஒரு காலத்தில் எந்த புத்தகம் கிடைத்தாலும் விடமாட்டேன். பின்னர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டேன். அப்புறம் பாலகுமாரனை மட்டும் படித்தேன். மெல்ல மெல்ல நாவல்களையும், காதல் கதைகளையும் படிப்பதை அறவே நிறுத்திவிட்டேன்.

வயது ஒரு காரணம் என்றாலும், வேலை, பிழைப்பு, பிழைப்பின் நிமித்தமாய் மாநிலம் விட்டு, நாட்டை விட்டுப் பயணித்தல் போன்ற காரணங்களால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் வாசிப்பை விட முகநூலும் வாட்சப்புமே நேரத்தை விழுங்கி விடுகிறது. இப்போது இந்தக் குழுவில் சேர்ந்த பின்தான் மறுபடியும் எல்லாவற்றையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

என் நம்பிக்கை வீண் போகவில்லை. குறைந்த கதாபாத்திரங்கள், இந்தக் கதாபாத்திரங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை. வெறும் கதையாக நகர்த்தாமல் சமூக அவலங்களையும் தொட்டுச்செல்லும் சிறப்பு. அரசு அலுவலகங்களில் சான்றிதழ்களுக்காக அலையும் அப்பாவி மக்கள், இடைத்தரகர்களாய் அலையும் பணப்பேய்கள், காவல் நிலையங்கள், நீதி மன்றங்கள் போன்ற மக்கள் சேவை மையங்களெல்லாம் எப்படி மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையெல்லாம் கதையினுள் புகுத்தி தன் சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு பொறுக்கி அரசியல்வாதியின் மனைவியாக வரும் சுப்புலட்சுமி கதையின் நாயகியா அல்லது டீக்கடைக்கார முருகேஸ்வரி நாயகியா? என்னுடைய தேர்வு முருகேஸ்வரிதான்.

முருகேஸ்வரியின் மொழி லாவகமும் தன்னம்பிக்கையும், ஊரே வெறுத்தாலும் சுப்புலட்சுமியை அரவணைத்து, அவளை பாதுகாத்து, பள்ளிக்கூடம்வரை சென்று அவள் பிள்ளைகளையும் படிக்க வைத்து அன்னம்மா, அபிநயா, ஏட்டைய்யா, மற்றும் அன்னம்மா மூலம் மாமியார் ரத்தினம் என்று எல்லோரிடமும் பேசி அவளை வாழவைத்து வேலையும் கொடுத்தவள் முருகேஸ்வரிதான். அநியாயத்துக்குக் கதையில் வரும் எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள், சுப்புலட்சுமியின் கணவனைத் தவிர.

மனநிலை பிறழ்ந்தவனாக வரும் கோட்டையனுக்கு முக்கியமான வேலை ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். அதாவது சுப்புலட்சுமிக்கு உதவி செய்தது இவனாக இருக்குமோ என்று நினைத்தேன். திரைப்படங்களில் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தாடி வைத்த யாரோ ஒருவர் ‘கனவு காணும் வாழ்க்கை எல்லாம் கலைந்து போகும் மேகங்கள்’ என்று பாடுவதைப்போல அவ்வப்போது சரியான சமயத்தில் வந்து பொருத்தமான பாடல்களைப் பாடிவிட்டுப் போகிறான்.

//இதுவும் மனித மனத்தின் மற்றொரு விசித்திரம்தான். ஒரு ஆள் வழி காட்ட ஆரம்பித்துவிட்டால், ‘குழம்புக்கு உப்பு போதுமா’ என்பதைக் கூட அந்த ஆளிடம் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்பது போலத் தோன்றுகிறது// கதையில் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். உண்மைதான், நமக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அதுவும் நமது நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் இப்படித் தோன்றுவது இயல்புதான். நானே கூட முன்பெல்லாம் சிக்கலான நேரங்களில் நெருக்கமானவர்களிடம் இப்படிக் கேட்டுத்தான் முடிவெடுத்திருக்கிறேன்.

ஆதரவின்றி நிர்க்கதியாய் தனித்து நிற்கும்போது நமக்கு ஆறுதலாய் தோள் கொடுக்க, ஆலோசனை சொல்ல ஒருவர் தேவை. முடிவெடுக்கத் தெரியாத குழப்ப நிலையில் பலர் தற்கொலைக்குப் போவது இதனால்தான். அந்த நேரத்தில் முருகேஸ்வரி மாதிரியான துணிச்சலும் தன்னம்பிக்கையுமிக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பு கிடைப்பது வரம். இவர்களிடத்தில் இருக்கும் ‘பாஸ்டிவ் எனர்ஜி’ நம்மையும் மாற்றும்.

//இந்தப் பெண்களே இப்படித்தான், ஒன்றும் அறியாத வயதில் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வருகின்றனர். விளையாட்டாய் ஆரம்பிக்கும் வாழ்க்கை போகப்போகப் பொறுப்பு நிறைந்ததாகிவிடுகிறது// சத்தியமான உண்மை. நாற்று நடுவது போல ஓரிடத்திலிருந்து வேறோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது போலத்தான் பெண்களின் வாழ்க்கையும். தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வாழ வந்தாலும் சட்டென்று அந்தக்குடும்பத்தின் பொறுப்புகளையெல்லாம் சுமக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆண்களால் அப்படி முடியாது என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

//கலெக்ட்டரா இருந்தாக்கூட சட்டியைத் தேய்க்காமயோ, பிள்ளைய குளிப்பாட்டாமயோ இருக்க முடியுமா? // அதெல்லாம் இப்போது கிடையாது, வேலைக்காரி வைத்துக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால், கணவன்-மனைவி வேலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த மனநிலைக்கு ஆண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். வந்தாக வேண்டும்.

லஞ்சம் தவிர், நெஞ்சை நிமிர்- இப்படி ஆயிரத்தில் ஒருவர்தான் இருக்கிறார்கள். எல்லா சேவைகளும் ‘ஆன்லைன்’ என்பதை வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தாமலிருக்கிறார்கள். நம்மை விடப் பல ஆண்டுகள் பின் தங்கியிருந்த ஒதிஷா மாநிலம் நவீன் பட்நாய்க் எனும் அற்புத மனிதரால் டிஜிடல் மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

குடும்பத்தோடு தீக்குளிப்பு என்ற அபிநயாவின் ஐடியா மூலம் சான்றிதழ் வாங்கியது அருமை. அதே மாதிரி முன்னாள் காவலரின் மனைவியைத் தொந்தரவு செய்பவர்களிடமிருந்து காக்க அவருக்கு ‘எயிட்ஸ்’ என்று கதை கட்டி காப்பாற்றியது போற்றுதலுக்குரியது.

ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வாயிலாக மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டியிருப்பது மற்றொரு சிறப்பு. எந்தப் பாத்திரமும் இக்கதையில் சோடை போகவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பைக் கொடுத்து அதைக் கதையில் வலிந்து திணிக்காமல் இயல்பாக இருக்குமாறு கையாண்டிருக்கிறார்.

எழுத்து என்பது ஒரு படைப்பாளியின் மனசாட்சி. வெறுமனே கதை சொல்லாமல் சமுதாயப் பிரச்சினையை உள்ளடக்கியதாக, சமூக அவலங்களை அம்பலப்படுத்துவதாக நமது படைப்பு இருக்க வேண்டும். என் வாலிப வயதில் ஜெயகாந்தன், பிரபஞ்சன், நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களின் படைப்புக்களைத் தேடித்தேடிப் படித்திருக்கிறேன்.

தொடர்ச்சியான கதையாடல், தொய்வில்லாத நடை. வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல கதை படித்த திருப்தி. வாழ்த்துக்கள் அகிலாண்ட பாரதி.

இப்போதுதான் கவனித்தேன் கண்மணி நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் என்று. முற்றிலும் பரிசுக்கு தகுதி வாய்ந்த நூல் இது.

நட்புடன்,
எம். ஞானசேகரன்