கவிப்ரியனைக் கவர்ந்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிப்ரியனைக் கவர்ந்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை!



நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை.

அவசரப் படாமல்

அனுபவிக்கத்தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்

சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை

அவசியத்துக்குக் கூடக்

கோபப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்

தெரியும் என்ற

வாய்ச் சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை.

-
கல்யான்ஜியின் முன்பின்கவிதைத் தொகுப்பிலிருந்து.

படித்ததில் பிடித்தவை !

உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க
புத்திசாலித்தனம் தேவையில்லை.
அமைதியாக இருக்கத்தான்
புத்திசாலித்தனம் தேவை

செவ்வாய், 5 மார்ச், 2013

இரகசியத் தோழி




தூண்டிவிட்ட தேடல்கள்
தூக்கிலிட்ட தோல்விகள்
சிற்பமாக்கிய அனுபவப் பொழுதுகள்
உளியாக்கிய கால நிகழ்வுகள்
அத்தனையும் சுமக்கும்
நெஞ்சப் பொதியில்
குவிந்து போயின
உணர்வுக் குப்பைகள்.
குப்பை கொட்ட
தொட்டி தேடினேன்
பிறர் மனத்தொட்டியில்
கொட்டி வைத்தால்
உதட்டுக் காற்று என்
குப்பை எடுத்து வேறு
செவித் தொட்டிக்கு இடம் மாற்றிவிடும்
இடம் மாறினால்
குப்பையின் நிறம் மாறிவிடும்
இரகசியத் துகள்கள்
அரிதாரம் பூசி
அவதாரம் எடுத்து
வீதிகளில் மணந்து திரியும்
தொலையக்கூடாத குப்பைகளைப்
பத்திரப்படுத்த
வேறு தோட்டி தேடினேன்
தேடலின் விளிம்பில் நீ
தொட்டியாய் சிக்கினாய்
என்
கனத்த உணர்வுகளைக்
கழற்றி வைத்தேன்
உன்னுள்
வேர்க்க வைத்த நினைவுகளும்
வேக வைத்தத் துயரங்களும்
விதையாயின உன்
காகிதக் களத்தில்
பூட்டிடாத வார்த்தைகள்
வெளி மூடாத எண்ணங்கள்
நாணிய நிமிடங்கள் மனம்
கூனிய பொழுதுகள்
இரகசியம் ஏதுமின்றி
இரகசியமாய்ப் பதிவு செய்தேன்
என் ப்ரிய டைரியே
பின்னொரு நாள் உனைப் புரட்டினால
பூக்கச் செய்திருப்பாய்
உன்னுள் பதியமிட்ட என்
வாழ்க்கை விதைகளை!

ஒரு  கவிதைத் தொகுதியை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னைக் கவர்ந்த கவிதை இது!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பெண் மண் எப்போதும் புதிர்!


என்ன செய்வது
என்னைப் போலவே
எச்சரிக்கையாய்
இருந்ததில்லை
காதலும்...

உன் ஆறுதலைக்
கேட்பதற்காகவே
அதிகமாய் அழுதுபார்க்க
ஆசைப்பட்டவன் நான்
இப்போது
அதிகமாய் சிரித்துப்
பார்க்க ஆசைப்படுகிறேன்
நீ விட்டுப்போனதை
மறந்துவிட!

அது எப்படி
பெண்மையைப் போலவே
உணர்வுகளையும்
ஒளித்துக்கொள்ள
முடிகிறது?
திறமைதான்!

நேசிப்பாயா
தூரமாய் நானிருந்தால்
கொஞ்சம் பொறு
தொலைந்து போகிறேன்.

நியாயமானதுதான்
கோபம்
மரித்துவிடுவதற்குமுன்
மறந்துவிடுவது நல்லதுதான்
இப்போது போலவே
சிதையிலும் மலரும் இதயம்.

பெண்
மண்
எப்போதும் புதிர்!
எதுவும் எப்போதும்
முடியும்
நானும் நீயும் கூட!


வியாழன், 15 நவம்பர், 2012

எத்தனை எத்தனை மூக்கணாங் கயிறுகள்?



பால் நிறத்துப் பனிக்கும் பௌர்ணமிக்கும்
பிறந்த அன்பு மகளே, மல்லிகை அன்னமே
கால்நடைகள் கன்று ஈன்றதும்
அடைக்கோழி முட்டை பொரித்ததும்
பெட்டை என்று பெருமைப்பட்ட
உன் பெற்றோர் முகத்தில்
ஒரு மனிதக் குமரியாகப் பூமியின் வயிற்றில்
உன் பாதம் பட்டதும்
பிளேடு கிழித்ததைப்போல
பீதி ரத்தம் ஓடியது ஏன்?

பெண் என்பதால் நீ - பூப்படைகிறாய்,
கன்னியாகிறாய் பத்தினியாகிறாய்,
வேசியுமாகிறாய், விதவையுமாகிறாய்.
எனில் இவை எவற்றுக்கேனும்
ஓர் ஆண்பால் பெயர் உண்டா?
சிவகாசியில் நீ தீக்குச்சியானாய்,
சிவப்பு விளக்குகளில் கவர்ச்சித் திரியானாய்,
சேற்று வயலை ஈரமாக்கியது
உன் பிஞ்சு ரத்தமும்தான்,
ஆலைச்சக்கரங்களில் ஆரக்காலும் நீயே.

பின் ஏனடி இப்படி ஆனாய்?
புன்னகை புதைத்த கல்லறையாக
பூக்களின் பூக்களின் சுடுகாடாக,
ஏனடி ஏனடி இப்படி மாறினாய்?
நீ துலக்கிய பாத்திரம் தூய்மையானது,
நீயோ அழுக்கானாய்!
நீ பெருக்கிய வீடு சுத்தமானது,
நீயோ அசுத்தமானாய்!
நீ பற்ற வைத்த நெருப்பு எரிந்தது,
நீயோ இருட்டில்!

கோலுசுகள் போட்டனர்;
உன் கால்கள் நொண்டியாயின.
தோடுகள் மாட்டினர்;
உன்  காதுகள் செவிடாயின.
வளையல்கள் மாட்டினர்;
உன் கைகளில் விலங்குகளாக.
மூக்குத்தி குத்தினர்;
எத்தனை எத்தனை மூக்கணாங் கயிறுகள்?

மூக்கணாங் கயிற்றை எதிர்த்து
மாடே திமிரும் என்றால்,
பெண்ணே நீ எப்போது திமிறப் போகிறாய்?
தலை நிமிரப்போகிறாய்?

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

எத்தனை யுகங்கள்!


எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
முகமும் அற்று முகவரி அற்று
முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்!
இல்லம் அலுவல் இரண்டிலும் நொந்து
இரட்டைச் சுமைக்கு ஆளானோம் !
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!

இப்போதாவது சிறை உடைப்போம்
எத்தனை காலம் உறங்கி விட்டோம்!
பெண்கள் ஜாதி உலகில் பாதி
என்பதை உணர்த்த குரல் கொடுப்போம்!
நாணம் சுமந்த பெண்கள் எழுந்து
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
வானம் சுமக்கும் காலமிது!

ஆடை நகைகள் அணிந்தது போல்
ஆயுதம் அணியும் காலமிது!
ஆணும் பெண்ணும் எதிலும் பாதி
அறிவியல் சொல்லிய வேதமிது!
பெண்ணின் இறக்கை பறியாதிருந்தால்
வானம் அவர்களின் எல்லையன்றோ!
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!

ஆணும் பெண்ணும் ஆணையிட்டழைத்தால்
வானம் பூமியில் வந்திறங்கி வணங்காதோ!
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
இன்றே தோன்றின எங்கள் முகங்கள்!

- வைரமுத்து