இயற்கைக்கு
முரணா வாழறதில் எனக்கே விருப்பம் இல்லை! கல்யாணம், குடும்பம்
எல்லாம் வாழ்வின் ஜஸ்ட் லைக் தாட் ஒரு பகுதிதான். அதை வேணாம்னு சொல்லிட்டு என்ன சாதிக்கப்போறோம் சொல்லுங்க! முதல்ல பேச்செடுத்தப்போ, இன்னும் ஒரு வருஷம் ஆகட்டுமேன்னு சொன்னேன். ஈஸ்வரிதான் 'அப்பாக்கு உடம்புக்கு முடியலை. எவ்ளோ பேர் இருந்தாலும், 'அப்பா-அம்மா' செஞ்சு வச்சாதாண்டி அது நிறைவா இருக்கும்னு சொன்னா. சரின்னுட்டேன். இன்னும் சொல்லப்போனா அத்தான் கூட தரகரைப் பார்க்க,
அம்மா கூட ஜோசியம் பார்க்கன்னு நானேதான் போய்க்கிட்டு
இருக்கேன். சில சமயம் எனக்கே
சிரிப்பு வரும். நாம இப்படி
மாப்பிள்ளை தேடி அலையறதை பார்க்கிற 'மாப்பிள்ளைகள்' என்ன
நினைப்பாங்கன்னு!
தீவிரமா
யோசிச்சா இதிலொண்ணும் தப்பிருக்கிறதா எனக்குப்படலை. நீங்க என்ன நினைக்கிறீங்க? ஈஸ்வரி சொல்றா… நீ அதுக்குன்னு அநியாயத்துக்கு தெளிவா இருக்கடி. ஆனா இந்தத் தெளிவும் இப்போ ரொம்ப
அவசியம்தாண்டின்னு சொன்னா.
அதானால
உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்… உங்களுக்கு தெரிந்த வரனிருந்தால் இந்த முகவரிக்கு அனுப்பவும்… திருச்சி சந்துருவிடம் எனக்கு மாப்பிள்ளை
பாருன்னு சொன்னேன். ஐயோ… அம்மா உன்னை காட்டிவிட்டுட்டு அவன்கிட்ட உதை
வாங்க என்னால முடியாதும்மான்னு அலர்றான். ஏன்னு கேட்டா உன்னை மாதிரி அநியாய விவரம்லாம் கட்டிட்டு வாழறது
கஷடம்ங்கிறான். நிஜமா அவன் சொல்றது?
என்
கண்டிஷன்னு சிலதை வீட்ல சும்மா ஜாலிக்காக சொல்லிட்டிருந்தேன். தம்பி உடனே, நீ சொல்றத பார்த்தா பில்கேட்ஸ் பையனைக்கூட வேணாம்னுதான் சொல்லுவ
போலிருக்கு. ஹூம் எங்க பாடு
கஷ்டம்தான்னு சொல்றான்.
30.01.2006
அப்புறம்
சமீபத்துல எதாவது சினிமா பார்த்தீங்களா? ச்சான்ஸ் கிடைச்சா 'தவமாய் தவமிருந்து' பாருங்க. நல்ல
திரைக்காவியம். சமீபமா எனக்கு
சினிமாத்துறையில நுழையற எண்ணம் வந்திருக்கு. (பயப்படாதீங்க ஹீரோயின் வேஷமெல்லாம் இல்ல) எடிட்டிங், கேமரா… இப்படி எதாவது டெக்னிக்கலா செய்தா
நல்லாயிருக்குமேன்னு தோணுது. பிராக்டிகலா
ரொம்ப கஷ்டம்னு தெரியும். இருந்தாலும்
ஜஸ்ட் ஒரு ஆசை. ஒருவேளை நிறைய
சினிமா பாரக்கறதாலயோ என்னமோ தெரியலை!
இங்கே
குளிர் ரொம்ப வாட்டி எடுக்குது. நாலு
மணியிலிருந்து குளிர ஆரம்பிச்சா காலைல ஒன்பது மணிவரைக்கும் ஓவர் பனி.
சரி, வீட்டுப்பிரச்னைக்கு வர்றேன்………
இந்த
கடிதத்தை தொடர்வதற்குமுன் என் மனதில் உள்ளவற்றை கொஞ்சம் சொல்லலாம்னு நினைக்கிறேன். 'படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்' என்ற
பழமொழி எல்லருக்கும் தெரிந்த ஒன்றுதான் இல்லையா? இதன் நேரிடையான பொருள் என்று நான் புரிந்துகொண்டிருப்பது, எல்லா நியாய அநியாயங்களைப் பற்றியெல்லாம்
பேசுவோம். ஜாதி, மதம், காதல், கற்பு
என்பதைப்பற்றியெல்லாம் மிகுந்த முற்போக்குவாதிகளைப் போல வாதிடுவோம். ஆனால் நமக்கென்று வரும்போது நத்தை தலையை தன்
கூட்டுக்குள் இழுத்துக்கொள்வதைப்போல வேறு ஒரு முகத்தைக் காட்டுகிறோம். இது அனைவருக்குமே பொருந்தும்.
நம்
அளவில் இதை கடைபிடிக்க விருப்பமிருந்தாலும் சமூகம், உறவுகள் என்ற பிடி நம்மை இறுக்கும்போது நம்மால் எதுவுமே செய்யமுடிவதில்லை. ஏனென்றால் நம்மைச் சுற்றியிருக்கிற உறவுகள்
நமக்கு முக்கியம். தாய், தந்தையின் விருப்பம் முக்கியம் என்ற நிலை
அவசியமாகிவிடுகிறது. சுயநலத்தோடு
என் வாழ்வு, என்விருப்பம் என்பது
மனசாட்சியே இல்லாதவர்கள் எடுக்கக்கூடிய முடிவாகத்தான் எனக்குப்படுகிறது. இதனால் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சமன்
செய்துகொள்ள வேண்டியதாகி விடுகிறது. சில நேரங்களில் நிர்பந்தங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அதே சமயத்தில் மகிழ்ச்சி அங்கே காணாமல் போகலாம்.
இந்தக்
கடிதங்களின் கதாநாயகி, பெற்றோரின்
அன்புக்கு கட்டுப்படவர். பலதும்
யோசித்து முடிவெடுக்கும் திறன் படைத்தவர். ஜாதி மதம் குறித்த விசாலமான பார்வை கொண்டவர். மதங்கள் என்பது மனிதனை நல்வழிப்படுத்தவே என்பதில் அசையாத நம்பிக்கை
கொண்டவர். கடிதம் எழுதும்போது சிலர்
கடிதத்தின் மேல் பகுதியில் கடவுள் துணை என்றோ, அன்பே கடவுள் என்றோ, சிலர்
பிள்ளையார் சுழி போட்டோதான் எழுதத் தொடங்குவர் இல்லயா? ஆனால் இவரோ ஒரு சிலுவைக்குறி, ஒரு பிள்ளையார் சுழி, அப்புறம்
786 இம்மூன்றையும் போட்டுத்தான்
கடிதம் எழுதுவார். எம்மதமும்
சம்மதமே என்பது அதன் பொருள்.
ஆனால்
இது எல்லாம் வெறும் நட்புக்கு மட்டுமே. சக மனிதர்களாக அவர்கள் எல்லாருடனும் நான் பழகத்தயார். அது எல்லாம் ஒரு எல்லை வரை மட்டுமே. அதே சமயத்தில் காதல் கல்யாணம் என்றெல்லாம்
வந்துவிட்டால் என் மதத்துக்குள் மட்டும்தான் அதிலும் குறிப்பாக என் ஜாதிக்குள்
மட்டும்தான் என்பதில் உறதியாக இருந்தார். இதை நாம் எப்படி புரிந்து கொள்வது? எனக்கு இன்று வரை இருக்கும் கேள்வி இது. இதைப்பற்றி நான் விவாதிக்கும் போதெல்லாம் ஒரு பழைமைவாதியாகத்தான் தன்னைக்
காட்டிக்கொள்வார். புதுமைப்பெண்ணாய்
நான் நினைத்த சில பேர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்படி இருப்பது இயல்பே
என்று எனக்கு இப்போது புரிகிறது.
இப்படித்தான் என்னை யாரும் காதலிக்கமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், என் மீது அன்பு, நட்பு பாராட்டிய ஒரு பெண்மீது ஈர்ப்பு வருவது இயல்புதானே! நட்பு என்ற போர்வையில் பழகிவிட்டு திடீர் என்று காதல் என்று சொன்னால் அசிங்கமாயிருக்காதா?... என்றாலும் என்னால் காதலைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதற்கான தருணம் பார்த்து தனியே அழைத்து என் விருப்பத்தைச் சொல்ல தயங்கியவாறு எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தபோதே, அவள் என்னைக் கேட்ட கேள்வி……. என்ன தெரியுமா?
நீங்க
என்னை 'லவ் பண்றீங்களா?' என்னை
லவ் பண்ணி ஏமாறாதீங்க, எங்கப்பா
அம்மா சொல்ற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா அவங்களுக்கு வாக்கு
கொடுத்திருக்கேன், என்றாள். ஏன் எனக்கென்ன குறைச்சல், நான் அழகாயில்லையா என்ற என் அசட்டுத்தனமான
கேள்விக்கு, நீங்க 'என் ஜாதியில்லை' என்று சிரித்தவாறே சொன்னாள். இதுதான் எதார்த்தம்.
நீங்கள்
அழகாயில்லை என்றோ, உங்கள் வருமானம்
போதாது என்றோ, குடும்பம் சரியில்லை
என்றோ அல்லது அடிப்படையிலே நல்லவன் இல்லை என்றோ சொல்லவில்லை. 'நீங்கள் என் ஜாதியில்லை' என்று கூறித்தான் என் காதலை நிராகரித்தாள். சமூக நிர்பந்தம் அப்படி. அவளின் தந்தை எனது ஆசிரியரும்கூட என்பதால்
அவரிடம் ஜாடை மாடையாகப் பேசிப் பார்த்ததிலிருந்து மிகத்தீவிரமான ஜாதிப்பற்றாளர்
என்பது தெரிந்தது. எனவே படிப்பு கூட
அல்லது படிப்பு கொடுக்கும் அறிவு கூட இங்கே மழுங்கிப்போவது ஆச்சர்யம்தான். எதிர்காலம், சந்ததிகள் அவர்களின் வாழ்க்கைமுறை என எல்லாமே மாறிப்போகும் என பயம் அவரின்
பேச்சில் தெரிந்தது. ஆனால் உலகம்
ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை எனக்குக் கற்பித்த ஆசிரியருக்கே
நான் எப்படி போதிப்பது?
ஆனாலும்
நான் கலப்புத்திருமணம் செய்துகொண்டேன். நான் இப்போது எந்தச்சாதியில் என் பிள்ளைகளை மணம் செய்துகொடுப்பது? நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. காலம் முடிவு செய்யட்டும் என காத்திருக்கிறேன். அதற்குள்ளாகவே அவர்கள் காதலித்து ஓடிப்போனாலும்
போகலாம். அல்லது எங்கள் விருப்பபடி
நடந்தாலும் நடக்கலாம்.
இங்கு
இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். காதலித்தவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், அல்லது காதலை ஆதரிப்பவர்கள் என எல்லாருக்குமே
இன்னொரு முகம் கண்டிப்பாக இருக்கும். தன் வீட்டுப்பெண்கள் தடம்மாறும்போதோ அல்லது காதலிக்கிறேன் என்ற ஒரு
வெடிகுண்டைப்போடும்போதோதான் அந்த முகம் தெரியவரும். இதை விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.
திருமணங்களில் ஜாதி பார்க்கும்செயல்களால் (தவறுகளினால்) சிலர் முதிர்கன்னிகளாகவே காலம் தள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுறது. சமூகத்துக்கும் பெற்றோருக்கும் கட்டுப்பட்டு இருப்பவர்களுக்கு கிடைப்பதோ முதிர்கன்னியாகவே இருக்கும் தண்டனை. யாருமே தேவையில்லை, என் வாழ்வு முக்கியம் என்ற சுயநலத்தோடு காதலனோடு ஓடிப்போய் வாழ்கிறவர்களுக்ககோ இனிமையான இல்வாழ்க்கை! என்ன முரன்பாடு இது?
என்
தோழியின் பிரச்னையும் அதுதான். இந்தக்
கடிதம் எழுதும் காலகட்டத்தில் 'மாப்பிள்ளை' பார்க்கத்தொடங்கியவர்,
இன்றளவிலும் பார்த்துக் கொண்டேதானிருக்கிறார். நான், 'மாப்பிள்ளை
செட்டாகிவில்லையா' என்று கேட்பதையே
நிறுத்திவிட்டேன். பதினைந்து
வருடங்களுக்கு முன் அனைவரையும் உதாசீனப்படுத்திவிட்டு ஓடிப்போன அவரின் தங்கையோ
குழந்தை குட்டி என இல்வாழ்க்கையில். இவரின் இன்னொரு மூத்த சகோதரியின் கதையும் இதுதான்.
குடும்பத்துக்காகவே உழைத்து, ஓடாய்ப்போய் தன் திருமணம் பற்றியே யோசிக்காமலிருந்தவர், இப்போது காலம் கடந்த சூழ்நிலையில் தனக்கென்று
ஒரு துணை வேண்டும் என்று முடிவெடுத்து தன் தாயிடமும், தங்கைகளிடமுமே வெட்கம்விட்டு கேட்கும் நிலையில்... இத்தனை வயதாகிய பின் கல்யாண ஆசையா? அதுவும் வேறு ஜாதியிலா? அந்தக்
குடும்பத்தினரின் பிரதிபலிப்பு என்னவாயிருக்கும்?
இது
உண்மையான சம்பவங்களின் தொகுப்புதான் என்றாலும், என்னை நம்பி பகிர்ந்துகொண்ட குடும்ப விஷயங்களை இப்படி பொதுவில்
பகிர்வதற்காக சங்கடமடைகிறேன். அதனால்
பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. இது தவறுதான் என்றாலும், என்
வாழ்வின் நடப்புகளை, என்னோடு
சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வியலை பதிவுசெய்ய விருபம்பியே இந்த வலைப்பக்கத்தை
ஆரம்பித்தேன் என்பது நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான்.
கடிதக்கனவுகள்
தொடரும்….
6 கருத்துகள்:
மிக ஆழமாக உணர்வு பூர்வமான விஷயத்தை
விரிவாக அருமையாக அலசியிருக்கிறீர்கள்
சிந்திக்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எனது குழந்தைகள் தொடரில் இந்த பகுதியை வேறு விதமாக கையாண்டு இருக்கின்றேன்.
இதில் உங்களை அறியாமல் செய்த ஒரு பிழை. ஏறக்குறைய சமூகம் பார்க்கும் பார்வையும் அதே.
அவர்கள் காதலித்து ஓடிப்போகலாம்.
அதாவது தற்போதைய சூழ்நிலையில் காதலித்தால் ஓடித்தான் போக வேண்டும் என்பதை இயல்பாகவே வார்த்தையில் வந்து விழுகின்றதல்லவா?
தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ரமணி அவர்களே! இன்னமும் விரிவாக அலசும் எண்ணமிருக்கிறது. தங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள்தான் என் எண்ணங்களை மேலும் விசாலமாக்கும்!
தங்களின் வருகைக்கு நன்றி ஜோதிஜி அவர்களே! தங்களின் வலைப்பக்கத்தை தொடர்ந்து விரும்பிப் படித்து வருபவன் நான். அதுவும் குழந்தைகள் தொடரை வெகு ஆழமாக உணர்ந்து படித்து வருகிறேன்.அதனால்தான் நானும் மனதில் தோன்றுவதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
//அவர்கள் ஓடிப்போகலாம்...//
இந்த வரிகள் அறியாமல் செய்த பிழையல்ல. தெரிந்தே செய்த பிழைதான். இங்கே அதை பின்னூட்டமாக எழுதாமல் வரும் பதிவுகளில் அதை நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்.
இதுதான் எதார்த்தம். அருமையான பதிவு, எப்படித்தான் விழுந்து விழுந்து காதலித்தாலும் ஜாதி என்ன என்பது முக்கியாமகவே இருக்கிறது. காதலிக்கும் முன்பே ஆணும் பெண்ணும் என்ன ஜாதி என்று தெரிந்துக்கொண்டே காதலிக்கிறார்கள்..
அருமையான எழுத்துநடையில் கலக்குறிங்க...
உண்மைதான் ஆகாஷ் அவர்களே!நடுத்தர குடும்பங்களில் ஜாதியும், வசதியான மேல்தட்டு குடும்பங்களில் பணமும்தான் காதலையும் கல்யாணத்தையும் தீர்மாணிக்கின்றன. இன்னும் தொடர்ந்து விவாதிப்போம். வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றியும் கூட!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!