திங்கள், 26 டிசம்பர், 2011

சந்தோஷமா அப்பா.............

எனக்கு மிகவும் பிடித்த கடிதம் இது. மறைந்த குமுதம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. அதை அவர் மகள் நினைவுகூர்ந்த விதமும் வியக்க வைக்கிறது.

அன்புள்ள அப்பா....

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்குத் திருமணமான புதிது. இருபது வயது. ‘கணவரின் பெற்றோர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை;  என்னை அன்புடன் நடத்தவில்லை. எனக்கு இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரவில்லை! என்ற ஆதங்கத்தில் நான் மூழ்கி இருந்த காலகட்டம். மைசூரில் இருக்கும் அக்கா வீட்டில் சில நாட்கள் மாறுதலுக்குந் தங்கி வரலாம் என்று புறப்பட்ட நேரம். ‘அப்பா கடிதம் எழுதுவார்கள், கலங்காமல் போ!என்று ஆத்தா அனுப்பி வைத்தார்கள்.

‘பெற்றோர் நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதே! என்ற ரீதியில் ஒரு சமாதான கடிதத்தைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையை வழிநடத்தப்போகும் ஒரு சாசனத்தைப் படைத்தனுப்புவீர்கள் என்று துளிகூட நினைக்கவில்லை.


ஆமாம். இதுதான் என் வாழ்க்கையின் மூலசாசனம். இதை மையமாக்கித்தான் என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதன் பலன் தெரியுமாப்பா?


வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடத் தோன்றுகிறது. இத்தகைய பேரின்பமான வாழ்க்கையைத் தந்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் மனம் தத்தளிக்கிறது. இந்தப் பிறவி எடுக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ? என்று மலைப்பாக இருக்கிறது. இதைவிட என்ன பலன் வேண்டும்?

யாருடனும் பகிர்ந்து கொள்ளாத இந்தக் கடிதத்தை, இன்று, உங்கள் நினைவுநாள் அன்று, எங்களை எல்லாம் விட, நீங்கள் அதிகம் நேசித்த உங்கள் குமுதம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சந்தோஷமா அப்பா?

உங்கள் அன்பு மகள்
கிருஷ்ணா சிதம்பரம்.
ஓம்
சென்னை.
06.08.1988


கவலையைச் சுட்டெறி. அது, மெதுவாக நுழைந்து, ஓசைப்படாமல் கடித்து உயிரைக் குடிக்கக் கூடிய நச்சுப்பாம்பு. அதற்கு இடம் தராதே என்கிறது கீதை. கவலையுறாதே. எழுந்திரு. உற்சாகமாக வாழ்க்கையைச் சந்தி. எத்தனையோ பிறவிகள் எடுத்து, புல்லாய், பூடாய், மிருகமாய், பறவையாய்த் திரிந்து, புண்ணியம் செய்து பெற்ற பெறற்கரிய ஜன்மம் இந்த மானிட ஜென்மம். 




அதுவும் கூன், குருடு, முடமாய் பிறக்காமல் முழுமையாய் பிறந்தது பேரதிஷ்டம். ‘அதை வீணாக்கலாமா? என்று கேட்பார் ஆதிசங்கரர். சந்தோஷமாக, முகமலர்ச்சியுடன் பழகு. இனிமையாகப் பேசு. மனதுக்குள் விளக்கு ஏற்றி வைத்துக்கொள். அது முகத்தில் பிரகாசித்து உன்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கு, கோழைத்தனத்திலிருந்து வீரத்திற்கு அழைத்து வரட்டும்.


எண்ணம் குட்டி போடும் தன்மையுடையது. எந்த எண்ணமும் தனித்துத்தோன்றி, தனியாக மறைவதில்லை. தன்னைப்போல் பத்து நூறு எண்ணங்களை அடுக்கடுக்காகத் தோற்றுவித்து விட்டுத்தான் போகும். 


‘நான் சோர்வாக இருக்கிறேன், நான் தோல்வி அடைந்துவிட்டேன், எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று ஒருமுறை, ஒரே ஒருமுறை நினைத்தாலும் கூட, அது குளத்திலே எறிந்த கல்லானால் எழும் வட்டங்களைப் போல் பெரிதாகிப், பெரிதாகி, ஆளையே அழித்துவிடும். எண்ணத்தை நீ ஏன் பயன்படுத்திக் கொள்ளலாகாது?


‘நான் நல்லவள் என்று நினை, நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எண்ணு. ‘எனக்கு எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு விரோதிகளே இல்லை. நான் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறேன். எனக்கு எல்லோரிடமும் பிரியம் உண்டு. எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள் என்று ஒரு முறை நினை. அந்த ஒரு எண்ணமே வேர்விட்டு, கிளைத்து, பெரிய ஆலமரமாகி, அசைக்கமுடியாத சக்தியாக உனக்குத் துணை நிற்கும்.


வாழ்க்கை அழகானது. வாழ்க்கை ரசிக்கத் தகுந்தது. தெய்வீகமானது. அது ஓர் வீணை. அதை அன்புடன் வாசித்து, இன்னிசை எழுப்பு.
அது உன் கையில்தான் இருக்கிறது.


எஸ்.ஏ.பி.


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

Thanks a lot kavipriyan.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி அனானி.

நதிக்கரை சொன்னது… [Reply]

படித்த அப்பன்கள் எவ்வளோவோ பேர் ,ஆனாலும்
இப்படி படித்து பண்பட்டவர்கள் வெகு சிலரே !
அதை எடுத்துக் கொண்ட விதத்திற்காக,
மகளை வளர்த்த விதத்தையும் பாராட்டியே ஆக வேண்டும் !!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ந்திக்கரை!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!