Friday, December 30, 2011

நீ எங்கே இருக்கிறாய்...... க்ளாரா!உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவினைக் கோலாககொண்டாடும் இந்த தருணத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த எனது தோழி க்ளாரா எழுதிய கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எட்டாம் வகுப்பில் எனக்கு ஆங்கிலப்பாடம் எடுத்த ஜான் மனோகர் என்ற ஆசிரியரையும், பனிரெண்டாம் வகுப்பில் எனக்கு விலங்கியல் பாடம் சொல்லிக்கொடுத்த திருமதி. சாந்தி எமி அவர்களையும், கொஞ்சநாள் பழக்கமானாலும் நெருக்கமாகப் பழகிய நண்பர் அஷோக் கருணாகரனையும், மறக்க முடியாத சிங்கப்பூர் தோழி ஜெஸியையும் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நினைவு கூர்கிறேன்.

க்ளாரா பற்றி ஏற்கனவே சில பதிவுகளில் (உங்களை மறக்கவே முடியாது, நான் யார் உங்கள்மீது கோபப்பட...)எழுதி இருக்கிறேன். கன்னியாஸ்திரியாக மாறி எங்கள் பக்கம் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு பணிபுரிய வந்த இவரோடு அறிமுகம் ஆனபின் மிகவும் நம்பிக்கைக்குரிய தோழியாய் மாறிப்போனார். 

ஆனால் மற்றவர்களைப்போல மதப்பிரச்சாரத்தில் ஈடுபடாமல் சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர். ஆனால் இங்கு நடக்கும் அவலங்களை மனதுக்குள்ளே போட்டு புழுங்க முடியாமல் என்னிடம் தயங்கித் தயங்கி சொல்ல ஆரம்பித்தார். 

நான் அவருக்குச் சொன்ன ஒரே ஆலோசனை.... அங்கிருந்து வெளியேறு. வீட்டிற்குப் போ! வீட்டார் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள். இல்லேயேல் யாரையாவது காதலித்து திருமணம் செய்துகொள் என்று சொன்னேன்.

ஆனால் என்னிடம் கொண்ட பற்று காரணமாக உங்கள் நட்பு மட்டுமே எனக்குப் போதும் என்ற தீவிர நிலைக்குச் சென்றுவிட்டார். கடித்தைப் பாருங்கள்! இவரை எப்படி மாற்றுவது?


அன்பின் பிரியமுள்ள நண்பருக்கு,

உங்கள் தோழி எழுதுவது. இங்கு நான் நலம். தங்கள் நலன் கடிதம் மூலம் அறிந்தேன். இதற்கு முன் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் கடிதம் எழுதினேன். இது ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. உங்களுக்கு கடிதம் அனுப்பியபின் நான் போனமாதம் 22 ம் தேதி வேலூர் போய்விட்டேன். பின் இந்த மாதம் 10 ம் தேதிதான் இங்கு வந்தேன். வந்ததும் உங்கள் கடிதம் தந்தார்கள்.

எப்படி இருக்கிறீர்கள்? சரஸ்வதி பூஜை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தீர்களா? நான் அன்றைக்கு சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். என்னோடு 30 பேர் வந்திருந்தார்கள். மாலை 6 மணிக்கு மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தபோது உங்களைப் போலவே ஒருவரைப் பார்த்தேன். நான் நீங்கள்தான் என்று நினைத்து ஹலோ! ஹலோ! என்று கூப்பிட்டபடியே பின்னாலேயே சென்றேன். அவர் திரும்பிப் பார்த்தபோதுதான் அது நீங்கள் இல்லை என்று புரிந்தது. எனக்கு மிகவும் சங்கடமாகிப் போய்விட்டது. 

தொடர்ந்த உங்கள் நினைவால் என்னால் சந்தோஷமாக அன்றைய பொழுதைக் கழிக்க முடியவில்லை. எப்படியோ இங்கு வந்து சேர்ந்தேன்.
உங்கள் மனைவி, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? வாழ்க்கையில் நினைப்பது எல்லாம் எப்போதும் நடப்பதில்லை. உங்களுக்கு நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. உங்கள் லட்சியம்தான் எனக்கும் இப்படியே வாழலாம் என்கிற மன உறுதியைத்தருகிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற நினைவே உங்கள் நட்பால்தான் எனக்கு ஏற்பட்டது. இருந்தாலும் சில நேரங்களில் வேதனையாகத்தான் இருக்கிறது. எப்படியோ சமாளித்து விடுகிறேன். அதற்காக இந்த வாழ்க்கையைவிட்டு போகவும் மனம் வரவில்லை.

இங்கு இந்த கிராமத்து மக்கள் மிகவும் அன்பாகப் பழகுகிறார்கள். நான் முன்பு இருந்த இடங்களைவிட இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். நாங்கள் எது சொன்னாலும் கேட்பார்கள். இங்கு இருக்கும் பாதிரியார் மிகவும் எளிமையானவர். காலில் செருப்பு கூட இல்லாமல் இந்த மக்களோடு எல்லா வேலையும் செய்வார். அசைவம் எதுவும் சாப்பிடமாட்டார்.

மற்றபடி உங்களுக்கு அதிக நேரம் வேலை என்று எழுதியிருந்தீர்கள். உலகம் உருண்டை என்றும் எழுதி இருந்தீர்கள். அது எப்படித்தான் சுற்றி வந்தாலும் பார்க்கவேண்டும் என்பவர்களைப் பார்க்க முடியாமல்தான் போய்விடுகிறது. ஒருசில நேரங்களில் உங்களை எப்படியாவத் பார்த்தே ஆக வேண்டும்போல் தோன்றும். நினைப்பது எல்லாம் நடந்துவிடாதே? அதனால் அந்த நேரத்தில் உங்கள் கவிதைப் புத்தகத்தைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்வேன். 

மேலும் வீட்டில் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். தற்போது ஒரு வரன் வந்து, கண்டிப்பாக என்னைப் பார்க்கவேண்டும் என்றார்கள். நான் உங்களைக்கேட்டு முடிவெடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஏனோ எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனல் உங்கள் நட்பு மட்டும் கடைசிவரை இருந்தால் நான் இப்படியே இருந்துவிடுவேன்.

மற்றவை உங்கள் அன்பின் கடிதம் கண்டு. நீங்கள் கேட்ட யோபுவின் ஆகமம் விரைவில் எழுதி அனுப்புகிறேன்.
அன்புடன்,
க்ளாரா
12.10.1995
எல்லோருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

2 comments:

Rathnavel said... [Reply]

நல்ல பதிவு.
மனப்பூர்வ புத்தாண்டு வாழ்த்துகள்.

கவிப்ரியன் said... [Reply]

வர்கைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரத்னவேல் அவர்களே!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!