வெள்ளி, 30 டிசம்பர், 2011

வேலை தேடுகிறீர்களா..........?



நமது முன்னேற்றத்திற்கு உதவும் முக்கியமான விஷயம் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. ‘எனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புன் இருக்கும் எவருமே, முன்னேற்றப் படிகளில் இரண்டைக்கூட தாண்ட முடியாது. கற்றுக்கொள்வது என்பது வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒரு நடைமுறை. கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர் குட்டையில் தேங்கியிருக்கும் நீரைப் போன்றவர்தான் என்பதைப் புரிந்து கொண்டு நடக்கவேண்டும்.

அடுத்து தலைமைப் பண்பு. தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதை பள்ளி கல்லூரிகளிலேயே துவங்க வேண்டும். அதற்கு மிகவும் உதவுவது விளையாட்டுக்கள்தான். மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும்; முடிவுகள் எடுப்பதில் உறுதியைக் காண்பிக்க வேண்டும். தமது கருத்துக்களை வலிந்து திணிக்காமல், தொடர்புடைய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். இதுதான் தலைமைப் பண்பு.


ஒரு நிறுவனம் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது முதலில் வேலைக்குச் செல்லும் நபரின் எண்ணம், குறியீடுகளுக்கு ஒத்துப்போக வேண்டும். தன்னுடைய கல்வித் தகுதியைப் பார்த்து நிறுவனத்தை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க, தனது நீண்ட காலத்திட்டம் என்ன என்பதையும் ஒருவர் வகுத்துக்கொள்ள வேண்டும். ‘இந்த நிறுவனத்தில் சேரலாம்; ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிறுவனத்தில் குழுத்தலைவராக (டீம் லீடர்) உருவாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் உழைக்க வேண்டும்.

தனிமனிதச் சாதனைகள் வரவேற்கப்படுகின்றன என்றாலும், தொழிலில் புதிய அணுகுமுறை, சவால்களைச் சந்திப்பது ஆகியவற்றில் குழுவாகச் சேர்ந்து ஊழியர்கள் செயல்படுவதையே நிறுவனங்கள் விரும்புகின்றன. குழு செயல்பாட்டில் புதிய சிந்தனைகள் பிறக்கும்; தனி மனித ஈகோ விலகிவிடும்.


தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை என்று உறவுகள் நிறைந்த கூட்டுக் குடும்பங்களில் வளர்பவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற பண்பும், பொறுமையும், கடமையுணர்ச்சியும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இன்றைய இளைஞர்கள் வீட்டில் உறவினர்கள் வருகை அதிகமாகிவிட்டாலே எரிச்சலடைகிறார்கள். எனவே இன்றைய நிலையில் குழு மனப்பான்மை மிகவும் அவசியம்.

சிலர் நேர்காணலின்போது குழு மனப்பான்மை தம்மிடம் இருப்பதாகச் ணொல்லி, மனிதவள அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது. உங்களுடைய எண்ணங்கள் ஆக்கபூர்வமாக இருந்தால் பேச்சும் அதேபோல் வெளிப்படும். அழிவுபூர்வமான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.

இப்போதெல்லாம் உங்கள் செயல்பாடு, அணுகுமுறை ஆகியவை 360 பிகிரி பார்வையோடு மதிப்பீடு செய்யப்படுகிறது. உங்கள் அதிகாரி மட்டுமின்றி உடன் வேலை செய்பவர்கள், உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் அகியோரும் உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கிறார்கள். உங்கள் ஏற்றத்திற்கு அவர்களின் நல்ல மதிப்பீடும் முக்கியம்.

நல்ல வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்! 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!