1992 என்று நினைக்கிறேன்.
அப்போதுதான் கம்ப்யூட்டரை நெருக்கத்தில் பார்க்கிறேன்.
எனது தோழியும் அவரது நண்பர்களும் கம்ப்யூட்டர் கற்க ஒரு சிறிய பயிற்சிப்
பள்ளியில் சேர்ந்தனர். கணிணி கற்றுக்கொள்ள ஆர்வம் ஒரு புறமும்,
தோழியோடு சேர்ந்திருக்கும் சந்தோஷம் ஒருபக்கமுமாய் நானும் சேர்ந்தேன்.
சார்லஸ் பேபேஜ், அபாக்கஸ், பைனரி எண்கள் என்று சுவாரஸ்யமாய் வகுப்பு ஆரம்பமானது.
ஏதோ ஒரு மணிநேரம் கணிணியில் உட்கார
வைப்பார்கள். பிளாப்பி டிஸ்க்குகள் அப்போது பயன்பாட்டில் இருந்தன.
மௌஸ் நிச்சயம் இல்லை. மற்றவை ஞாபகம் இல்லை.
ஒருமாதம் கூட போயிருக்க மாட்டேன். தோழி ஏதோ ஒரு
காரணத்திற்காக நின்று விட நானும்… கேட்க வேண்டுமா மட்டம்தான்.
அப்புறம் வேலையில்லாத ஒரு காலகட்டத்தில்
தெரிந்த கணிணி நிறுவனத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றிய போது சின்னச்சின்ன கணிணி
விளையாட்டுக்களைக் கற்றுக்கொண்டேன்.
ஆனால் கணிணி பற்றிய அடிப்படை அறிவை மட்டும் கற்றுக்கொள்ளவே
இல்லை. அங்கிருந்தவர்களும் கற்றுத்தர தயாராக இல்லை. கணிணி கற்றுக்கொள்ளும் ஆசை வெறுங் கனவாகவே போனது.
காரணம் எனது துறை வேறு. இயந்திரங்கள் சம்பந்தமான
மெக்கானிக்கல் துறை. அதன் பின்பு சுமார் பத்து வருடங்கள் கணிணியைத்
தொடவே இல்லை. கணிணியில் கற்றிருந்த ஏ.பி.சி.யும் மறந்து போனது. அதெல்லாம்
மெத்தப் படித்தவர்களுக்கானது என்ற சமாதானமும் ஆர்வத்தைக் குறைத்தது.
திடீரென மனைவியின் உறவினர் மூலம்
வெளிநாட்டு வாய்ப்பு வந்தது.
வெளிநாடும் போயாயிற்று. குடும்பத்தாரிடம் தொடர்பு
கொள்ள தொலைபேசிதான் ஒரே வழி. கைத்தொலைபேசி கலாச்சாரம் அப்போதுதான்
நமது நாட்டில் அமர்க்களமாக ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும்
அது காசு விரயம் என்பதால் கடிதத்தில்தான் பெரும்பாலும் எனது தகவல் பரிமாற்றம் இருந்தது.
அப்போதுதான் சிலர் இன்டர்நெட் மூலம்
மிகக் குறைந்த செலவில் பேசிக் கொள்கிறார்கள் என்று கேள்விப் பட்டேன். திடீரென ஆவல் வந்தது.
தனியாக இன்டர்நெட் மையங்களுக்கு அதுவரை நான் சென்றதில்லை. அதுவும் வெளிநாட்டில். அரபு நாடு என்பதால் மொழிப் பிரச்னையும்
கூட. அரை குறை ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்த சமயம் அது.
தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து ஒரு கணிணியில் அமர்ந்தும் விட்டேன்.
ஆனால் அதற்கு மேல் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.
அப்போது கூகுள் ஆண்டவரைப் பற்றிக் கூட நான் தெரிந்திருக்கவில்லை என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.
பத்திரிகைகள் படிக்கும் பழக்கம்
நிறைய இருந்ததினால் அதிலுள்ள சில முகவரிகளை குறிப்பெழுதிக் கொண்டு அதை அட்ரஸ் பாரில்
தட்டச்சு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சில ஆங்கில தளங்களை பார்க்கத் துவங்கினேன். நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்
இன்டர்நெட் மையத்திற்கு போவதைப் பார்த்த என்னுடைய நண்பர் கண்ணன் என்பவர் அன்று என்னோடு
வந்தார். கணிணியில் தமிழ் தெரியுமா? என்ற
சந்தேகம் அவருக்கு! நான் தெரியும். ஆனால்
முயற்சித்துப் பார்க்கவில்லை, இன்று பார்த்து விடுவோம் என்றேன்.
தினமலரோ அல்லது குமுதமோ தான் அன்று (2002–ல்) முயற்சி செய்த தமிழ் தளங்கள். தலைப்பு
மட்டும்தான் தெரிந்தது. தளத்தினுள்ளே போக முடியவில்லை.
பயனர் பெயர், கடவுச்சொல் என்று வந்ததும் பயந்துபோய்
அப்படியே எழுந்து வந்துவிட்டேன். அப்போது ஒரு மணிநேரத்திற்கு
அரை ‘தினார்’ (இந்திய மதிப்பில்
60 ரூபாய்) கட்டணம் வசூலித்தார்கள். இரண்டு மணி நேரம் உபயோகித்தால் ஒரு மணி நேரம் இலவசம் வேறு. மூன்று மணிநேரம் முயற்சி செய்தும் உருப்படியாய் எதுவும் கற்றுக்கொண்ட பாடில்லை.
எனது தோழி மயிலாடுதுறை மாலாவிற்கு
கடிதம் எழுதி எப்படி கணிணியை உபயோகிப்பது என்று கேட்டிருந்தேன். அவரும் விளக்கமாய் எழுதியும்
ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அந்த இன்டர்நெட் மையங்களில் இன்னொன்றையும்
கவனித்தேன். அபூர்வமாய் சில தமிழர்கள் தங்கள் குடும்பத்தாரிடம்
கணிணி வழியே பேசிக் கொண்டிருந்தது தான் அது. அவர்களிடம் போய்க்
கேட்கவும் தயக்கம். சில நாட்களில் பெண்கள் குரலும் கேட்பதுண்டு.
இங்கு வேலைக்கு வரத்துடிக்கும் தனது உறவுகளிடம் தங்களது அவஸ்தைகளை விவரிக்கும்
துயரமான நிகழ்வு அது!
ஒரு நாள் என் வெளிநாட்டு வேலைக்கு
உதவி செய்த என் மனைவியின் உறவினர் அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அப்போதுதான் அவருடைய வீட்டில்
கணிணி இருப்பதைப் பார்த்தேன். தயக்கத்தை விட்டு அவரிடம் கேட்டேன்.
அவரும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சொல்லிக் கொடுத்தார். இருந்தாலும் தொடர்ச்சியான பயிற்சியும் பழக்கமும் இல்லாத காரணத்தால் கற்றவையும்
மறந்து போனேன்.
2006–ல் தற்போது பணிபுரியும்
நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் நடந்தவைகளை இந்த
‘வேலூர் மாவட்டம்’ என்ற பதிவில் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
ஆர்வம் வெறியாக மாற ஓய்வே இல்லாமல் கணிணியில் உட்கார ஆரம்பித்தேன்.
தழிழ் தொழில்நுட்ப வலைத் தளங்களிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
பொதுக் கணிணியிலோ அல்லது அலுவலக் கணிணியோலோ நமது விருப்பம் போல எதுவுமே
செய்ய முடிவில்லை. மென்பொருட்களை நிறுவவோ அல்லது நிறுவியதை அகற்றவோ
முடியவில்லை.
முக்கியமாய் தமிழ் தட்டச்சு செய்வதற்குரிய
மென்பொருளை (NHM Writer) நிறுவ வேண்டியிருந்தது. அலுவலகக் கணிணியை நமது தனிப்பட்ட பயன்
பாட்டிற்கு பயன்படுத்த சங்கடமாக இருந்தது. மற்றும் பணி முடிந்து வீட்டிற்கு போனதும்
கணிணி பற்றிய சிந்தனையிலேயே மனசு பரபரத்தது.
மடிக்கணிணி (2009-ல்) வாங்க முடிவு செய்தேன். ஆனால் கையில் காசில்லாமல் தவணை
முறையில் வாங்கினேன். அப்புறம் கணிணி என் கைவசமாயிற்று.
இப்போது கணிணியில் நான் செய்யாத வேலைகளில்லை. மெத்தப்
படித்தவர்கள் சாமாச்சாரம் என்று ஒதுங்கிய நான் இன்று மெத்தப் படித்தவர்களை விட பல மடங்கு
வேலைகளை இதன் மூலம் செய்கிறேன்.
என்னளவில் இது பெரிய சாதனைதான். அவரவர் துறை சார்ந்து கணிணியை
உபயோகிப்பதில் வல்லமை என்பது வேறு விஷயம். சம்பந்தமே இல்லாத ஒரு
துறையிலிருந்து கணிணியை ஆர்வத்தின்பால் கற்றுக்கொண்டு அவர்களைவிட அதிகமாக இதை பயன்படுத்துவது
என்பதும் ஒரு சாதனை தானே?!
என்னுடைய உயரதிகாரிகள் பலருக்கும்
நான் ‘பிளாக்’கில் எழுதுவது தெரியாது.
கணிணி சம்பந்தமான எந்த வேலை கொடுத்தாலும், அது
தொடர்பான மற்றவர்களைக் காட்டிலும் விரைவாக முடிப்பேன் என்பதும் தெரியாது.
வங்கிப் பரிமாற்றங்கள், ஆயுள் காப்பீடு கட்டணம்,
மின் கட்டணம், இரயில் மற்றும் பேருந்துகளின் இருக்கை
முன்பதிவு, ஆன்லைனில் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது,
பங்குப் பரிவர்த்தனை என ஆன்லைன் தொடர்பான அனைத்து வேலைகளையும் கணிணி
கற்றுக்கொள்ளத் தொடங்கிய 2009-ஆம் ஆண்டிலிருந்தே செய்து வருகிறேன்.
இருப்பினும் வலைப்பதிவு ஆரம்பித்து
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பலராலும் அறியப்படும் நிலைக்கு வந்திருக்கிறேன். இன்னும் சிறப்பாக வலைப்
பதிவில் எழுதும் ஆர்வம் இருந்தாலும் நேரம் ஒதுக்குவதிலுள்ள சிரமம் காரணமாக இயலவில்லை.
என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து
கடந்த கால கணிணி தொடர்பான நிகழ்வுகளை மீட்டெடுக்க உதவிய ‘தென்றல்’ திருமதி. சசிகலா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொடர் பதிவுக்கு இன்னும் யாரை அழைப்பது?! விருப்பம் உள்ளவர்கள் அவர்களாகவே எழுதலாமே!
4 கருத்துகள்:
சந்தேகமே இல்லை... இன்றைக்கு மிகவும் தேவையான ஆன்லைன் வேலைகள் உட்பட, உங்கள் துறைக்கு தேவையானதை கற்றுக் கொண்டு முதலிடம் வகிப்பதில் சாதனை தான்... ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
தொடர் வருகைக்கும் எனக்கு கொடுக்கும் உற்சாகத்திற்கும், தங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!
சில நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தங்கள் இன்றே படிக்க முடிகிறது. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
உங்கள் சாதனை மகத்தானதே ..விடா முயற்சியுடன் மொழி தெரியாத இடத்தில் கற்றுக்கொண்டது பாராட்டுக்குரியது. அழைப்பினை ஏற்று பதிவிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.
பதிவர் சந்திப்புக்கு வாங்க ... அங்கு கவிப்பிரியரை சந்திக்கிறோம்.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!