Tuesday, July 16, 2013

மனித குலத்திற்கு மரணம் மட்டும் இல்லாமல் போனால் என்னவாகும்?


(படித்ததில் பிடித்தது)

வாழ்க்கை வண்ணங்கள் இல்லாத வானவில்லாகி விடும். இறப்பே இல்லாவிடில் மனிதனுக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பு பறிபோய்விடும். சருகுகளே இல்லாவிட்டால் புதிய தளிர்களுக்கு யார் பூபாளம் பாடுவது? 

கரையே இல்லாத கடலைக் காணக்கூடுமா?

முடிவே இல்லாத நதியைத் தேடலாகுமா? கரையற்ற கடலும், முடிவற்ற நதியும் இயற்கையின் மூல தர்மத்திற்கு முரணானவை. ஒவ்வொரு மூலத்துக்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது. மனித வாழ்க்கையில் மரணமும் அப்படித்தான்!

மரணம் ஆராதனைக்குரியது. அச்சத்திற்குரியதன்று. வாழ்க்கையை சரியான வழியில் அதுதான் செலுத்துகிறது. மனதனை மேலான நெறியில் அதுதான் செதுக்குகிறது. ஞானம் போதிப்பதில் எந்த ஆசானும் மரணத்துக்கு இணையாக முடியாது.

ஒரு நூறு ஞானிகளும் ஓராயிரம் புத்தகங்களும் சாதிக்க முடியாததை ஒரே ஒரு மரணம் சாதித்து விடுகிறது. மரணப் பிரக்ஞை மட்டும் மனிதனுக்கு இல்லாவிட்டால் அத்தனை நியாயங்களும் அன்றாடம் சிலுவையில் அறையப் படும். ஒன்றின் மரணம் மற்றொன்றின் ஜனனம்.

பூ காயாகி, காய் கனியாகி, கனி விதையாகி, விதை மீண்டும் விருட்சமாவதில் இந்த நியதியின் நிறம் தெரிகிறது. பூவின் மரணமே கனியின் ஜனனம். ஒன்று உரமானால் இன்னொன்று உருவாகும். மரணம் அனைவருக்கும் பொதுவானது. அதனாலேயே மரணம் ஆண்டவனுக்குச் சமமாக ஆகிவிடுகிறது.

ஆக…. ஏன் என்று இயற்கையிடம் கேட்காதீர்கள். எத்தனை பிறவிகளை வீண்டித்தாலும் பதில் கிடைக்காது. வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை முழுமையாகும்.

10 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

ஆனால் மரணம் அருகே வந்ததும் எல்லோருமே பயந்து சாகுறோமே?

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

வாழ்க்கை முழுமையாக அறிந்து / தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ள வேண்டும்...

மரணத்தை விடுங்க... சின்ன விசயம்...

மறதி மட்டும் இல்லாமல் போனால் என்னவாகும்...? யோசிங்க... நன்றி... வாழ்த்துக்கள்...

ezhil said... [Reply]

##மரணப் பிரக்ஞை மட்டும் மனிதனுக்கு இல்லாவிட்டால் அத்தனை நியாயங்களும் அன்றாடம் சிலுவையில் அறையப்படும்..##. அருமையான வரிகள்.அரை நூற்றாண்டு முன்னால் இந்த எண்ணங்கள் இருந்தது..ஆனால் இப்போதெல்லாம் அது என்னைக்குன்னாலும் வரப்போறதுதானேன்னு அதுக்கு கவலைப்பட்டா ஆச்சா என்பது போல் மனதை மாற்றிக்கொண்டு பொது ஒழுக்கம் குறைந்த வண்ணம்தான் உள்ளது...

ராஜி said... [Reply]

வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை முழுமையாகும்.
>>
நல்ல அட்வைஸ்

கவிப்ரியன் said... [Reply]

ஜோதிஜி!

அதெல்லாம் முன்பு! இப்போது யாரும் சாவிற்கு பயப்படுவதில்லை. இருக்கிற வரை அனுபவித்துவிட்டுப் போவோம் என்ற மனநிலையில்தான் இருக்கிறது இன்றைய தலைமுறை!
வருகைக்கு மிக்க நன்றி!

கவிப்ரியன் said... [Reply]

தனபாலன்!

உண்மைதான் மரணம் என்னமோ எதிர்பாராமல் நிகழ்கிறது. இந்த மறதி இருக்கிறதே வாழும்போதே கூட இருந்து நம்மை வழிநடத்துகிறது. உயிர்கள் இறந்து புதியன பிறப்பது போல நினைவுகள் மறந்து போய் புதியன குடிகொள்வதால் தான் நாம் உயிர்ப்போடு உலா வரமுடிகிறது.
தங்களின் வருக்கைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

கவிப்ரியன் said... [Reply]

எழில்!

ஆமாம், தங்கள் கூற்று உண்மைதான். மரண பயம் போய்விட்டதால்தான் ஒழுக்கம் என்பதைப் பற்றிய அக்கரை யாருக்கும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இது நல்லதா கெட்டதா என்றுதான் தீர்மாணிக்க முடியவில்லை!?
தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

கவிப்ரியன் said... [Reply]

ராஜி!

வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

கோவை மு சரளா said... [Reply]

புரிதலுடனான தேடல் .........உணர முடிந்தும் உள்வாங்க முடிவதில்லை சில நேரம்

கவிப்ரியன் said... [Reply]

கோவை மு சரளா!

தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!