திங்கள், 17 ஜூன், 2013

காதலை நட்புச்சாயம் பூசி மறைக்கலாமா?



 

அன்புள்ள நண்பருக்கு,                                 22.02.2000

எப்படி இருக்கிறீர்கள்? நலமா? மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமா? நான் மற்றும் வீட்டில் அனைவரும் நலமே!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எளிமையாக இருந்தது. நன்றாக எழுதி உள்ளேன். அறுவடைக் காலம் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து நெல் பிடிப்பதில் பிஸியாக உள்ளேன். சீசன் முடிஞ்சதும் நீ மெட்ராஸ் போறத வெச்சுக்கோன்னு சொன்னாங்க. அதனால இப்போதைக்கு அப்பாவோட வொர்க்கிங் பார்ட்னரா (!) இருக்கேன். அதனாலதான் உடனே லெட்டர் எழுத முடியலை.

என்ன! இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா? எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். என்ன எழுதியிருக்கிறார் யாழினி? நீங்கள் பதில் கடிதம் போட்டுவிட்டீர்களா?

எனது தங்கையைப் பார்த்தால் பேசுங்களேன்! இதிலென்ன தயக்கம்? நல்லா படிக்கச்சொல்லுங்க. அதெல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா.

அப்புறம் உங்கள் தோழியைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் எதுவும் தப்பா நினைக்கல. உங்களோட அனுபவங்கள என்னுடன் பகிர்ந்துக்கறீங்க. எல்லாருடைய அனுபவமுமே நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடம் என்பது என் கருத்து. அதனால நீங்க எழுதுங்க.

எனக்குத் தோணும் கருத்துக்களையும் சொல்லலாம்தானே?! புரட்சியாய் பேசிய, அறிவாளியாய் இருந்த உங்கள் தோழி இரட்டை வேடம் போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். உள்ளுக்குள் உங்கள் மேல் இருந்த காதலை, நட்புச் சாயம் பூசி மறைத்திருக்கிறார்.

நண்பராக நினைத்திருந்தால் திருமண பத்திரிகையைக் கொடுத்துவிட்டு, என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்கன்னு சொல்லமாட்டார். அப்புறம் உங்களை வேறு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கிறத தாங்க முடியலைன்னு அழுது அரற்றவும் மாட்டார்.

அதானலதான் காதலிப்பவர்களுக்கு துணிவு வேணும்னு சொல்றாங்க போலிருக்கு!?

அதே சமயம், இந்த தலைமுறைல நம்ம வரைக்கும்கூட ஜாதி என்பது பிரிக்க முடியாத பெரிய சக்தியாதான் இருக்கு இந்த சமூகத்துல. நம்மைப் போன்றவர்கள் அதை ஒழிக்க நினைத்தாலும் நடக்காத விஷயமாகத்தான் இருக்கிறது அது.

எங்க அக்காவுக்கு வரன் பார்க்கிறோம். Msc., B.Ed., படிச்சிருக்காங்க. படிப்புக்கேத்த வரன் எங்க ஜாதில கிடைக்கிறது கஷ்டம். நான் சொல்றேன், “Cast” வேண்டாம்னு சொல்லுங்க ஒரே மாசத்துல கல்யாணமே முடிச்சிடலாம்னு. ஆனா எங்க வீட்ல யாரும் ஒத்துக்கலை. அப்படி இருக்க எழுத்தளவுல எழுதறதாலயோ, பேசறதாலேயோ ஒண்ணும் மாறிடப் போறதில்ல இது.

வேணும்னா நாம நம்ம சந்ததிகள் மேல இந்த ஜாதிச் சாயம் பரவ விடாம தடுத்து அவங்கள உருவாக்கலாம்.

புரட்சியாய் செய்த எத்தனையோ திருமணங்கள் புஸ்வாணமாகிக் கொண்டிருக்கின்றன. காதல்ன்ற பேர்ல ஒருத்தரை ஒருத்தர் நம்பி, பெத்தவங்கள எதிர்க்க முடியம தப்பியோடி, சில காலம் வாழ்ந்து பிறகு அதுவும் வெறுத்துப்போய் பரஸ்பரம் குறைகூறிக்கொண்டு ஏனோ தானோவென்று வாழ்ந்து (பிரிந்து) வருகின்றனர்.

காதலில் இருக்கும் வேகம் இவர்களுக்கு வேறெதிலும் இல்லை. இப்படி விட்டேற்ற்றியாய் வாழ்வதைவிட, பேசாமல் பெற்றோர் பார்க்கும் அந்த ஜாதிவாழ்க்கையை வாழ்ந்துவிடலாம்?!

அதற்கும் மேல் நமது கலாச்சாரம் காலங்காலமாய் உபயோகித்து வரும் வார்த்தை கற்பு. கற்புன்னா என்ன? அது உடல்ல இருக்கிற ஒரு வஸ்துவா? இல்ல டி.என்.. ஜீன் போன்ற சமாச்சாரங்களா?

ஏன் அப்படின்னா அது ஆணுக்கு கிடையாதா? திருமணம் கற்பை பாதுகாக்கிறதா? விபத்தா நடந்தா கூட கற்பை பறிகொடுத்தாட்டான்னு சொல்றவங்க திருமணமானவங்களை சுமங்கலின்னு சொல்லுவதேன்?!

‘ஒருவனுக்கு ஒருத்தி’ன்ற கொள்கைதான் தடம் புரண்டு கற்புன்னு மாறி இருக்கணும். ராஜேஷ்குமார் சொல்வார் – இந்த உலகத்துல காற்றை சுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய விஷயம் கற்புன்னு. ஒழுக்கம், நேர்மைன்னு எல்லாத்தையும் சேர்த்து கற்புன்னு ஒரு வார்த்தையைச் சொல்லி பெண்களுக்குன்னு முத்திரையும் குத்திட்டாங்க.!

பெண்களா இதை புரிஞ்சிகிட்டு வெளில வந்தாதான் இதுக்கு விடிவு காலம்.

அதுக்கும் மேல நம் மக்களோட சிந்தனை எப்போதும் உடலைப் பற்றியதாகவே இருப்பது. அதுல முக்கிய பங்கு தமிழ் சினிமாவுக்குத்தான். ஆதி காலத்திலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இப்படியே தொடர்கிறது.

இதனால்தான் ஆண்-பெண் நட்பு கூட இங்கு அன்னியமாய், வித்தியாசமாய் பார்க்கப்படுகிறது. அடிமட்டத்திலிருந்து மாறணும். வாழ்க்கைல செக்ஸ் ஜஸ்ட் சாதாரணம்தான் எனும் எண்ணம் வரணும். அதன் பிறகே நல்ல சிந்தனைகள் எழும்பும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

விடுதலை உணர்வை விரும்புகிற பெண்களுக்கு அவர்களது கணவர்கள் தடையாய் இருப்பதாலேயே அவர்கள் தனித்தே வாழலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர் போலிருக்கிறது.

சுய சம்பாத்தியம் இருக்கும்போது பெண்ணுக்கு ஒரு தைரியமும், எதையும் எதிர்கொள்ளும், சமாளிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
அப்படி இல்லாதபோது ஆணை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும், அதனாலேயே எதையும் எதிர்க்க முடியாமல், அவனுக்கு பயந்து அடிமையாய் வாழ்தலும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

நான் ஆனந்தவிகடன் படிப்பதில்லை. ஏற்கனவே காசை பேப்பராக்கியே வீண்டிக்கறேன்னு திட்டறாங்க. பட்ஜட் பற்றாக்குறை வேறு. அதனால்தான் வேறு புத்தகங்கள் எதையும் சேர்க்கவில்லை என் லிஸ்டில்.

இன்னும் கொஞ்ச நாள்ல மெட்ராஸ் வந்துடுவேன். நல்ல லைப்ரரியா சொல்லுங்க, அங்க வந்து என் படிப்பு ஆசைக்கு தீனி போட்டுக்கிறேன். எனக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் படைப்பை (ஜெயகாந்தனுடையதுன்னு நினைக்கிறேன்) படிக்க ரொம்ப நாளா ஆசை. நீங்க படிச்சிருக்கீங்களா?

அப்புறம் உங்க சிங்கப்பூர் தோழி ஜென்ஸி வீட்டுக்கு வந்தாங்களா? உங்களுக்கு வேலை விஷயமா என்ன சொன்னாங்க? எண்ணம் போல வாழ்க்கைன்னு சொல்வாங்க, அதனாலதான் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைத்திருக்கிறது.

என் நண்பர் கோபு நிறைய சின்னச்சின்ன பரிசுகள் வாங்கியிருக்கார். கவிதை, விமர்சனம், துணுக்கு… என்று நிறைய படைப்புகள் வெளியகியிருக்கு. வாசகர் வட்டத்தில் நன்கு அறிமுகமான நபர். ‘பாக்யா’தான் அவரோட ஆஸ்தான பத்திரிகை. பெரிய விஷயமா இப்போதான் கவிதை நூல் எழுதி அதை அச்சுக்கு கொண்டுவர முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்.

பெற்ற தாய் இறந்தால் கூட அதிலும் அரசியல் கலந்து அசிங்கம் பண்ணுவார்கள் போலிருக்கிறது நம் அரசியல்வாதிகள். தரும்புரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கழக கட்சிகள் ஒன்றையொன்று சாடிக்கொண்டிருக்கிறதே தவிர, அய்யோ… கண்ணு முன்னாடி உயிரோட எரிஞ்சாங்களேங்கிற ஒரு மனிதாபிமானம் எவருக்கும் இல்லை.

இன்னிக்கு பார்லிமெண்ட்ல மொராக்கோ பிரதமரை வச்சுகிட்டு நம்ம எம்.பி.ங்க குழாயடி சண்டை போட்டுக்கிட்டத பார்த்தா இங்க ஒரு ‘முஷாஃரப்’ இருக்கலாமோன்னு தோணுது.

வேறென்ன… நிறைய எழுதுங்கள். எனக்குள் தெளிவு வர உங்கள் எழுத்து உதவியாய் இருக்கும். உங்கள் மகள்களை நல்லா ‘ஷேப்’ பண்ணுங்க. இந்த வயசிலேயே ஆரம்பிச்சாதான் அவங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

வேறொன்றும் விஷயமில்லை. மற்றவை தங்கள் பதில் கண்டு.

மாலா, மயிலாடுதுறை.
24.02.2000

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

"ஜஸ்ட் சாதாரணம்தான்" என்ற நிலையானதால் தான் இந்தளவு சீரழிவே... சார்ந்திருப்பது, இல்லாமல் இருப்பது அவரவர் மனதை பொறுத்தது... அதற்கும் படிப்பிற்கும், சம்பாத்தியதற்கும் சம்பந்தம் இல்லை...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஒரு வகையில் நீங்கள் சொல்வதும் சரிதான் தனபாலன்! வருகைக்கு நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!