Thursday, May 23, 2013

வேலையை மட்டும் விட்டுடாதேடா…

"டாலர் நகரம்" எனது பார்வையில்....தொடர்ச்சி


இழப்பதற்கு ஒன்றுமில்லையில் ஆறுமுகத்தின் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு பாடம். படிப்பறிவு இருப்பவனைவிட பட்டறிவுடன் உழைப்பும் அதிர்ஷமும் இருந்தால் கோடீஸ்வரனாவது (திருப்பூரில்) சாத்தியமே என்ற செய்தி வியப்பைத்தான் ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்தக் காலத்தில் அரசியல்வாதியினால்தான் (அதிகாரத்திலிருக்கும்) கோடீஸ்வரனாவது சாத்தியம். மற்றவர்கள்…………….?

பெண்களில் பலர் உழைக்கவே தயாராயில்லாமல், உல்லாச வாழ்க்கையை அனுபவிக்க உடலை மூலதனமாக்கிய வாழ்க்கைக்கு நகரத்தொடங்கியிருப்பது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. ‘பணத்துக்குப் பணம், சுகத்துக்கு சுகம்இந்த வார்த்தையை இத்தனை வருடசென்னைவாழ்க்கையில் பலரிடம் கேட்டிருக்கிறேன்

பணம் என்கிற பலவீனத்துக்கு இவர்கள் சகலத்தையும் இழக்கத்துணிகிறார்களா இல்லைஉடல்என்ற ஒன்றைக்காட்டி ஆண்களின் பலத்தை பலவீனமாக்குகிறார்களா என்று பட்டிமன்றம்தான் நடத்தவேண்டும். இப்படித்தான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை.

அட்டையைப்போல ஒட்டிக்கொண்டு சகலத்தையும் உறிஞ்சியபின் வேறொருவரைத் தேடிப்போகும் மனசாட்சியற்றவர்களை என்ன சொல்வது? இருதரப்பிலும் தவறு உண்டென்றாலும், இங்கே இது தொழில் தர்மமாக மாறிவிடுகிறது. காசு இருந்தபோது கம்பனி கொடுத்தேன். இப்போ இல்லியா ஆளைவிடு. நான் யார்கூட போனா உனக்கென்ன? இந்த உரையாடல் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இவர்கள்தான் சாதனைப் பெண்மணிகளாய்………. 

கீழ்த்தட்டு மக்கள் அனைவரும் படும் அல்லல்களையும், அவர்களின் இயந்திர வாழ்க்கையையும் படிக்க படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது. ஒரு ஜான் வயிற்றுக்காக, நிர்வாணத்தை மறைக்கும் ஆடைக்காக, போராட்டமே ஆகிப்போன வாழ்க்கைக்காக மனிதர்கள் எதைஎதையெல்லாமோ இழக்கவேண்டியிருக்கிறது!

யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்? பதவியை வைத்துக்கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்!... எதுகுறித்தும் அக்கறை இல்லை’. ஏனென்றால் அடுத்தவேளை உணவுக்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் மற்ற எதுவுமே முக்கியமாகத் தெரியாத அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினால்தான் உண்டு கொழிக்கும் அதிகார வர்க்கத்தின் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை?!

வேலையை மட்டும் விட்டுடாதேடா…’ ‘மூணும் பொட்டப்புள்ளையா பெத்திருக்கே….’. இதில் மூணுக்கு பதிலாக ரெண்டு இதே வார்த்தையைத்தான் நானும் இன்றுவரை என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதே அனுபவங்களைத்தான் நானும் பெற்றிருக்கிறேன்.  

என்னோடு படித்தவர்கள் எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத அளவில் பணக்காரர்களாய் மாறிவிட்டிருக்க, நான் மட்டும் ஏதோ ஒரு வேலையில் கொடுத்ததை வாங்கிக் கொண்டிருக்க முடியாமல் அல்லது உழைப்புக்கு மரியாதை இல்லாத இடத்தில் தொடர்ந்து வேலை பார்க்கமுடியாமலோ வேலையை உதறிவிட்டு வீடு வரும் எண்ணத்தில் இருக்கும்போதெல்லாம் என் அம்மாவும் இப்படித்தான் கூறுவார்கள். என் நிலைமையை எப்படி இவருக்கு புரியவைக்க முடியும்?


இந்த வயதிலும் சான்றிதழ்களை தூக்கிக்கொண்டு நிறுவனங்களின் படியேறிசொந்த ஊருக்குப் பக்கத்தில் வேலை கிடைத்து விடாதாஅல்லது சுயதொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியோடு இருக்கும் என்னை, அம்மாவின்வேலையை மட்டும் விட்டுடாதேடாஎன்ற வார்த்தைகள்தான் இந்த வேலையிலும் தொடர வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் காலத்திற்கு தகுந்தமாதிரி வேறொரு வடிவம் எடுத்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. புதிய பொருளாதாரக் கொள்கையின் அவதாரங்கள் இன்றைய சூழலில் திருப்பூரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற அவலத்தை எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இயற்கை விவசாயம், மரபணு விதைகள், விளம்பரயுகம், உள்ளூர் சந்தை, உலக சந்தை, அவைகளின் சட்டதிட்டங்கள், போட்டி போடும் சீனா, தரகர்கள், உழைக்கும் தொழிலாளர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, சாயப்பட்டறைகள், அது உருவாக்கியிருக்கும் மாசு என எல்லாவற்றையும் அலசியிருக்கிறார்.


தண்ணீரில் விளையாடிய நாடுடா!’ என்ற தலைப்பில் தனியே பதிவுகூட எழுதியிருக்கும் இவர், தண்ணீரைப் பற்றி தாராளமாகவே விவரிக்கின்றார். எனக்கென்னவோ இதில் குழப்புகிறார் என்றுதான் தோன்றுகிறது. அதாவது சாயத்தொழில் நடக்கத் தண்ணீரை பயன்படுத்தியே தீரவேண்டும். இதனால் நிச்சயமாக நீர் மாசுபடும். சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதையும், அது எவ்வளவு விஷத்தன்மை உடையது எனபதையும், விவசாயமும் குடிநீரும் இதனால் எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதையும் இவரே விவரிக்கிறார். அதே சமயத்தில் ஸீரோ டிஸ்சார்ஜ் சாத்தியமில்லை என்கிறார். வேறு என்னதான் வழி?

ஒன்று சாயப்பட்டறைகளை மூடி விளைநிலங்களையும், குடிநீரையும் இனியாவது பாதுகாக்கவேண்டும். அல்லது திருப்பூரை தொடர்ந்து டாலர் நகரமாக தக்கவைத்துக்கொள்ள குடிநீரையும், விளைநிலங்களையும் நிரந்தரமாக விஷத்தன்மையுள்ளதாக மாற்றி, தண்ணீருக்காக தனியாரிடம் தொடர்ந்து கையேந்த வேண்டும். மற்ற நாடுகளில் இதற்காக என்ன செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாம். இவரே சொல்வது போலஅத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்’.


எங்கள் வேலூர் மாவட்டமும் இதே போன்ற பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம். ஆம்பூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை என இங்குள்ள தோல் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகி உவர்ப்பாகி உப்பாகி பல வருடங்களாகிறது. ஒரே ஆறுதல் பாலாறு. அங்கிருந்து பெறப்படும் நீரால்தான் மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் ஏதாவது பிரச்னை என்றால்…. தண்ணீர் தண்ணீர் படத்திலுள்ளது போலத்தான். ஆனால் பாலாறோ தண்ணீர் பார்த்து பல வருடம் ஆகிறது. நல்ல மழையும் இல்லை. ஆற்றிலே தண்ணீரும் இல்லை. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில்….

பெண்களின் உழைப்புதான் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. பொறுப்பற்ற ஆண்களைக் கொண்ட குடும்பங்களில் எல்லாப் பொறுப்பும் பெண்கள் மீதே விழுகிறது. வீட்டிலும் உழைப்பு, வெளியிலும் உழைப்பு. முடியாமல் போகும் பட்சத்தில் வலை விரிக்கவோ அல்லது வலையில் விழவோ தயாராகிவிடுகிறார்கள்


பொருளாதாரச் சுதந்திரம் கொடுக்கும் விடுதலை இவர்களை எல்லை தாண்ட வைக்கிறது. இது திருப்பூரில் மட்டுமல்ல எல்லா தொழில் நகரங்களிலும் வேரூன்றி பல வருடங்களாகிறது. சென்னை தாம்பரத்தில் உள்ள ஏற்றுமதி வளாக மண்டலத்தில் இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். புதிய நட்பும், புதிய உறவுகளும் அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களாலும், வசதிவாய்ப்புகளாலும் மனம் சலனமடைந்து வீட்டுப்பிரச்னைகளிலிருந்து விடுபட தவறான கள்ள உறவுகளில் வீழ்ந்து சீரழிகிறார்கள்.  

இதை ஜோதிஜி நயமாக, ‘காமம் கடத்த ஆட்கள் தேவைஎன்ற தலைப்பில் அலசியிருக்கிறார். ‘இவ்வாறான மாற்றங்கள் எதிர்கால சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறவர்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்என்ற இவரின் வரிகள் நூறு சதவிகிதம் உண்மையே!

இன்னும் மனதில் தோன்றுபவைகளையெல்லாம் எழுத விமர்சனம் என்ற இந்த எல்லை போதாது. தவிர ஜோதிஜியின் பதிவுகளைப் போல நீளமாகப் போகக்கூடிய(?) அபாயமும் உண்டு. மொத்தத்தில் திருப்பூரின் வரலாற்றைச் எதிர்காலத் தலைமுறைக்குச் சொல்லப்போகிற மிக முக்கியமான நூல் இந்தடாலர் நகரம்’.
நட்புடன்,

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

சாய நீரை குடிநீராக்கும் தொழிற்நுட்பமும் உள்ளன... ஆனால் விலை தான் அதிகம்... அதை செய்வதற்கு பணமிருந்தும் மனமில்லை என்பதும் உண்மை...

விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

உஷா அன்பரசு said... [Reply]

விமர்சனம் நல்லாயிருக்கு..!
த.ம-3

ப்ரியா said... [Reply]

விமரிசனம் நன்றாக இருக்கிறது. புத்தகத்தைப் படிக்க ஆவலாகவும் இருக்கிறது.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும், கருத்திற்கும், தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி உஷா அவர்களே!

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ப்ரியா அவர்களே!

கவியாழி கண்ணதாசன் said... [Reply]

தங்களின் விவாதத்தில் உண்மை இருக்கிறது

கவிப்ரியன் said... [Reply]

நன்றி கண்ணதாசன் அவர்களே!

மாலதி said... [Reply]

எத்தனை ஆக்கபூர்வமான பதிவு இந்த போலி சமூக அமைப்பு இந்த கிழட்டு முகமூடியை எப்போது கழற்றிப் பார்க்கப் போகிறது வறுமையும் போச்சு பாலியல் இன்பமும் முழுமையாய் கிடைச்சு ஆச்சு இது எத்தனை குடும்பங்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது பண்பாட்டுக் காவலர்களினால் இதை எப்படி சகித்துக் கொள்ளவியலும் இதற்க்கு மாற்றாக அல்லது இந்த சீரழிவுப் பண்பாட்டை தடுக்க இந்த போலி சமூக அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறது? உண்மையில் ஒரு சராசரி ஆண்மகன் விடும்பிய சுய தொழில் அல்லது நேர்மையான பணி எங்கே கிட்டுகிறது ? அவனை படு கேவலமாக அல்லவே சித்தரிக்கிறது? இதற்க்கு மிகப் பெரும்பான்மை யாக இருக்கும் நடுத்தட்டு இந்த சங்கடத்தை சங்கடத்தை நாளும் நாளும் அனுபவித்து வருகிறார்கள் ... இதற்க்கு தீர்வு காணவேண்டியது படித்த நடுத்தட்டு மக்கள்தானே யன்றி வேறல்ல ஏனெனின் இவர்கள்தான் மாற்றத்தின் மூலம் மகத்தான பலனைப் பெறப்போகிறவர்கள்.....

கவிப்ரியன் said... [Reply]

அத்தி பூத்தார்ப்போல் வந்தாலும் மிக அருமையாக கருத்திட்டிருக்கிறீர்கள். உங்களின் ஆதங்கமே என் போன்றவர்களுக்கும். உழைப்புக்கு மரியாதை இல்லாமல் இப்படி வாழ்பவர்களின் கூட்டம் பெருகிவிட்டால்... அப்புறம் இருக்கிற கூட்டமும் அதே சகதியில் விழத்தானே வேண்டும்? மாற்று என்ன யாருமே யோசிப்பதில்லை. ஆனால் காலம் மாறிக்கொண்டே இருக்கும்!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!