Thursday, May 30, 2013

அந்தரங்கம் புனிதமானதா?

அந்தரங்கம் அப்படின்னா என்ன? யாருக்கிட்டயும் சொல்லக்கூடாத விஷயம்தானே? அதை பகிர்ந்துக்க கூடாதா? நெருக்கமானவங்க கிட்ட சில விஷயங்களைப் பகிருவோம். ஆனா பெரும்பாலும் மனசுக்குள் ரகசியமாகத்தான் வைத்திருப்போம். சிலரோ நாள்குறிப்பில் எழுதி வைப்பதுண்டு. ஆனா அதுல மாட்டிக்க நிறைய வாய்ப்பிருக்கு. எதை எழுதலாம் எதை எழுதக்கூடாதுன்னு மனசுக்குள்ள ஒரு போராட்டமே இருக்கும். 

அதுவும் காதல் சம்பந்தப்பட்டதுன்னா ஏதோ தத்துப்பித்துன்னு இருக்கும். பேரெல்லாம் எழுதாம பொதுப்படியா இருக்கும். அப்படி நான் கிறுக்கி வைத்த டைரிக் குறிப்புகள்தான் இவை. கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு முன் (02.02.1996) எழுதியவை. ஆனா இது அந்தரங்கமா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும்.

ஒரு முடிவு எடுக்கும்போது நினைவுகள் பின்னோக்கிச் செல்வது அவசியம். அனுபவம் இப்போது கைகொடுக்கும். சறுக்கல் ஏற்பட்டிருந்தால் எச்சரிக்கை தோணும். என் நிலைமை இப்போது அப்படித்தான். இந்த வேலை பிடிக்கவில்லை என்று போனால் அடுத்து... 

பெங்களூரிலேயே வேலை நிரந்தரமாகியிருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். கடையும் ஆரம்பித்திருக்க மாட்டேன், என்று அவளிடம் சொன்னபோது 'எல்லாம் நல்லதுக்குத்தான்' என்றாள்.

புரியவில்லையே என்றேன் நான்.


நீங்க இங்கே வரலைன்னா நம்ம சந்திப்பும் பழக்கமும் ஏற்பட்டிருக்காது இல்லையா?

மனசு சந்தோஷத்தில் ஆடிப்போனது. பதிலுக்குப் புன்னகைத்தேன்.

சந்தோஷம் தரும் எதையுமே, எவருமே அப்போதைக்கு மட்டுமே அனுபவிக்க கற்றுக்கொள்கிறார்கள். பின் விளைவுகள் பற்றியோ, எதற்கு இந்த சந்தோஷம் என்கிற சிந்தனையோ, இது நிலைத்திருக்குமா என்ற ஐயப்பாடோ எழுவதே இல்லை.

ஆனால் எனக்கு இந்த உறவு இன்னும் எத்தனை நாளைக்கு என்று ஏங்கும். அந்த ஏக்கத்தலேயே சந்தோஷம் காணாமல் போய்விடும். அந்தரத்தில் மனம் வெறுமனே நிற்கும்.

பெண் ஆணுக்கு துணை மட்டுமில்லை. அவள் உற்சாகம் எனும் மாமருந்தை வைத்திருக்கும் வைத்தியரும் கூட. ஆண் பெண் சார்ந்த ஒரு ஜீவி. ஆணுக்கு ஒரு பெண்ணால் மட்டுமே உடல், மன சாந்தி அளிக்க முடியும். ஆண் ஆணுக்கு இப்படி எந்த வகையிலும் உதவ முடியாது. அது இயற்கை மனித வாழ்வுக்கு அளித்த நியதி!

இதை இப்போது என்னால் உணர முடிந்தது. இப்போது அவள் எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? அறிய முடியவில்லை. அறியமுடியாமலிருப்பதே நல்லது. அறிய முற்படின் பேச ஆவல் வரும். பின் ஏக்கமாகி மனச்சபலம் அதிகமாகும். அவளை பார்த்த சந்தோஷம் போய் வேதனைதான் மிஞ்சும்.

திடீரென்று  நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது. பெண் பார்க்க வந்தவர்கள் நிச்சயம் செய்துவிட்டுப் போய்விட்டார்கள். இவள் ஒத்துக்கொண்டு விட்டாள். என்னிடம் மறைத்தும் விட்டாள். நான் தெரிந்து கேட்டபோது 'வேதனைப் படுவேன்' என்றுதான் சொல்லவில்லையாம்!?

புரட்சிப் பெண் போல பேசும் பெண்கள் செயல்முறையில் அல்லது நடைமுறையில் வாய் பேசாத ஊமைகளாய், கணவனுக்கு அடங்கிய மனைவியாய் அதுவே வாழ்க்காய் மாற்றிக்கொண்டு முற்றிலும் மாறிவிட்டிருப்பார்கள். இவளும் அப்படித்தானோ என்னவோ?!

பதினெட்டு வயசு பெண்ணுக்கு காதல்னா என்னென்னோ, ஆண் ஸ்நேகம் எப்படிப்பட்டதுன்னோ புரியாது. ஆனா 25 வயசு தாண்டினா பெண் புத்திசாலியாயிடறா. மனிதனை எடை போடத் தெரிஞ்சிக்கிறா. நல்லவன் யார் கெட்டவன் யார், எதுவரை பழகலாம் என்று கற்றுத்தேர்ந்துவிடுகிறாள்.

ஆனால் நான் தெளிவாய் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குழம்பிக் கொண்டிருந்தேன். அவள் இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனோ தனிமைப் படுத்தப்பட்டதாய்  ஒரு உணர்வு. அவள் இல்லாத என் நிலைமையை எண்ணி துடித்தது மனசும் உடம்பும்.

7 comments:

Ramani S said... [Reply]

நிச்சயம் அந்தரங்கம் இனிமையானதுதான்
புனிதமானதுதான் கட்டிக்காக்கப்படுமவரை
என நினைக்கிறேன்

Ramani S said... [Reply]

tha.ma 2

கவியாழி கண்ணதாசன் said... [Reply]

இனிமையானது சொல்லமுடியாதது

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

/// 25 வயது தாண்டினா ///

அதற்கு முன்பே...

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும், தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி அவர்களே!

தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கும் நன்றி!

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

கவிப்ரியன் said... [Reply]

உண்மைதான் திண்டுக்கல் தனபாலன் அவர்களே! இது எழுதப்பட்ட காலம் 1996. இப்போ எல்லாம்தான் மாறிப்போச்சே?!

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!