புதன், 29 மே, 2013

தண்ணீர் துளிகள்...

சாதனை;

1947-ல் ரஷ்யாவில் பாலைவனத்தையே சோலைவனமாக்கிய வரலாறு நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது! சோவியத் நாட்டின் துர்க்மேனியக் குடியரசில் 3,50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஒரு பாலைவனம். அதற்குப் பக்கத்திலேயே அமுதாரியா என்ற ஜீவநதி. அதைத் திருப்பினால் பாலைவனம் சோலைவனமாக பூத்துக் குலுங்கும். திட்டம் தீட்டப்பட்டது. சுமார் 1400 கி.மீ. நீள கால்வாய் வெட்டப்பட்டது.

ஐந்தே ஆண்டுகளில் அமுதாரியா ஆற்றுநீர் கால்வாயில் பாய்ந்து 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. பாலைவனத்தில் திராட்சைத் தோட்டங்கள் பொங்கிப் பூத்தன. இதற்காக ஆன மொத்த செலவு இந்திய ரூபாய் மதிப்பில் 187 கோடி ரூபாய்.

கிட்டத்தட்ட கங்கை காவிரி இணைப்பிற்கான கால்வாய் தூரமும் இதே 1400 கிலோ மீட்டர்தான். திட்டம் நிறைவேறினால் நீர்வழிப்பாதையும் கிடைக்கும் என்பது கூடுதல் பலன்.

வேதனை;

ஒடிஸாவில் மகாநதி நீரில் 600 டி.எம்.சி. பயன்றறு கடலில் கலக்கிறது. கோதாவரி நதி நீரில் 2000 டி.எம்.சி அளவு வீணாகக் கடலில் கலக்கிறது. மகாநதி, கோதாவரி, காவிரி இம்மூன்றும் இணைக்கப்பட்டால் தமிழகத்திற்கு நிரந்தரமாக 300 டி.எம்.சி. நீர் கிடைக்கும்.

கோதாவரி, கிருஷணாவிலிருந்து கிடைக்கும் உபரி நீரை, இணைப்புக் கால்வாய் மூலம் காவிரி மேலணைக்கு கொண்டு வரலாம். எப்படி? கோதாவரியிலிருந்து 40,000 கோடி கடடி நீரை இழப்பு அதிகமில்லாமல் கிருஷ்ணா ஆற்றின் ஸ்ரீசைலம் அணைக்கு கொண்டு வரலாம். பின்னர் அந்த கோதாவரி நீரோடு கிருஷ்ணாவிலுள்ள மிகுதி நீர் 20,000 கோடி கன அடி நீரையும் சேர்த்து இணைப்புக் கால்வாய் மூலம் கிருஷ்ணாவிலிருந்து காவிரி மேலணைக்கு கொண்டு வரலாம்.

இன்னொன்று கங்கைத் தண்ணீரை ஸ்ரீசைலம் கொண்டு சென்று அங்கிருந்து மேட்டூர் நீர்த்தேக்கதிற்கு அனுப்பவேண்டும் என்றால் மின் ஏற்றிகள் மூலம்தான் செய்ய முடியும். ஏனென்றால் கடல் மட்டத்திலிருந்து ஸ்ரீசைலம் கால்வாய் கீழ்மட்டம் 885 அடி அளவாகும். மேட்டூர் கால்வாய் மட்டம் 800 அடி அளவாகும். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள தூரம் சுமார் 800 கிலோ மீட்டர். இதிலும் புதிய கால்வாய் செல்வதற்கு வேண்டிய நிலச்சரிவு இல்லை.

எனவே கால்வாயை மேட்டூருக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக காவிரி மேலணைக்கு கொண்டு போகலாம். இதற்கு காரணம் இருக்கு. மேலணையின் மட்டம் 200 அடி. புதிய கால்வாய் எடுத்துச் செல்ல (போதிய) வேண்டிய நிலச்சரிவு உள்ளது. ஆகவே கோதாவரித் தண்ணீரை போச்சம்பாடு அருகிலிருந்து விரைவாக, எளிதாக காவிரி மேலணைக்கு கொண்டு வந்துவிடலாம்.

ஸ்ரீசைலத்திலிருந்து இணைப்புக் கால்வாய் கடப்பாவிற்கு அருகில் வடபெண்ணையைக் கடந்து மேல் திருப்பதி, புத்தூர், சோளிங்கர், காட்பாடிக்கு வடக்கு வழியாக விரிஞ்சிபுரம் அருகே பாலாற்றில் கலந்து பின்னர் பாலாற்றின் வழியே புதுப்பாடி மேலணைக்கு வருகிற மாதிரி கால்வாயை அமைக்கலாம்.

பாலாற்றின் அணையிலிருந்து செய்யாறு அணைக்கட்டு வழியாகவும் பின்னர் செஞ்சி வழியாக திருக்கோவிலூர் அருகே தெண்பெண்ணையைக் கடந்து, பெரம்பலூர், அரியலூர் வழியாக காவிரி மேலணைக்கு தண்ணீரை கொண்டு வந்துவிடலாம்.

முடிவாக கோதாவரி-காவிரி இணைப்புக் கால்வாய் தெலுங்கானா, ராயலசீமா, வேலூர், திருவண்ணாமலை, விருப்புரம், திருச்சி மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் நீர்ப்பாசனம் பெற்று ஏறக்குறைய 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். அதோடு திருத்தணி, திருப்பதி, அரக்கோணம், வேலூர், ஆரணி, செஞ்சி, திருக்கோவிலூர், விழுப்புரம், அரியலூர் போன்ற நகரங்களுக்கு குடிநீர் வசதியும் கிடைக்கும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுவும் இந்த ஜனநாயக நாட்டில்! அரசியல் கட்சிகள் இதை ஏன் தேர்தல் வாக்குறுதிகளாய் சொல்லமாட்டேன் என்கிறார்கள்? வழக்கம் போல இதிலும் கோடி கோடியாய் சம்பாதிக்க முடியும் இல்லையா? நமக்கோ பாதி வேலை தொடங்கிவிட்டால் எப்படியும் முடிந்துவிடும் என்ற அற்ப ஆசைதான்.

போதனை; 

காலங்கள் மாறலாம். இன்றுள்ள மனித சமுதாயம் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் இந்த சமுதாய மக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த திட்டம் நிறைவேற்றினால் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். இதற்கு முயற்சி எடுக்கும் தலைவர்களும் காலம் காலமாக நினைக்கப்படுவார்கள். கரிகாலன் கட்டிய கல்லணையை இன்றுவரை நினைவுகூறுகிறோம் இல்லையா அதேபோல!

குட்டித்தகவல்;

எங்கெல்லாம் பூமியில் வேகமாக நீர் உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர்வளம் அதிகமாக உள்ளது!

இந்தியா முழுமையும் ஓராண்டில் பெய்யும் மழையளவு ஏறத்தாழ நாலாயிரம் கியூபிக் கிலோ மீட்டர். நாம் பயன்படுத்தும் அளவு 700 கியூபிக் கிலோ மீட்டர்.

2 கருத்துகள்:

கவியாழி சொன்னது… [Reply]

நீரின்றி அமையாது இவ்வுலகு ?அது மக்களுக்கு பயன்பட வேண்டுமே? உங்கள் யோசனையை செயல்படுத்தினால் தண்ணீர் பிரச்சனைத்தீரும் யாரறிவார்?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணதாசன் அவர்களே!

இதெல்லாம் சொந்த ஆராய்ச்சி இல்லை. எல்லாமே படித்த செய்திகள் தான். குறிப்பாக தென்னக ரயில்வே பொறியாளர் திரு. என்.நடராஜன் அவர்கள் எழுதிய 'கோதாவரியை வரச்செய்வோம் காவிரியுடன் இணைத்திருவோம்' என்ற நூலிருந்து சுருக்கமாக தொகுத்தவை. இப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியவர். டாக்டர்.எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!