சனி, 31 டிசம்பர், 2011

இளமைக்குச் சாபமோ…?



ஆணுக்குப் பெண்ணின்று

சரிசம்மாய் சிறக்கின்ற

இக் காலத்தில்

ஆண் பெண் நட்பு மட்டும்

விரிவடைய ஏன் வில்லங்கம்?

ஆணும் பெண்ணும் பழகுவதென்றாலே

அனைவருக்கும் தெரிந்த்து

காதல் தானோ?

அடுத்து கல்யாணம்தானோ!?

ஆண் பெண் நட்பையே

இளமைக்குச் சாபமாய்

யார் மாற்றியது?

இந்த நட்பை அங்கீகரிக்கிற நாளெப்போது

தேடுவோம் நாமே!

18 வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கவிதை இது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

நீ எங்கே இருக்கிறாய்...... க்ளாரா!



உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவினைக் கோலாககொண்டாடும் இந்த தருணத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த எனது தோழி க்ளாரா எழுதிய கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எட்டாம் வகுப்பில் எனக்கு ஆங்கிலப்பாடம் எடுத்த ஜான் மனோகர் என்ற ஆசிரியரையும், பனிரெண்டாம் வகுப்பில் எனக்கு விலங்கியல் பாடம் சொல்லிக்கொடுத்த திருமதி. சாந்தி எமி அவர்களையும், கொஞ்சநாள் பழக்கமானாலும் நெருக்கமாகப் பழகிய நண்பர் அஷோக் கருணாகரனையும், மறக்க முடியாத சிங்கப்பூர் தோழி ஜெஸியையும் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நினைவு கூர்கிறேன்.

க்ளாரா பற்றி ஏற்கனவே சில பதிவுகளில் (உங்களை மறக்கவே முடியாது, நான் யார் உங்கள்மீது கோபப்பட...)எழுதி இருக்கிறேன். கன்னியாஸ்திரியாக மாறி எங்கள் பக்கம் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு பணிபுரிய வந்த இவரோடு அறிமுகம் ஆனபின் மிகவும் நம்பிக்கைக்குரிய தோழியாய் மாறிப்போனார். 

ஆனால் மற்றவர்களைப்போல மதப்பிரச்சாரத்தில் ஈடுபடாமல் சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர். ஆனால் இங்கு நடக்கும் அவலங்களை மனதுக்குள்ளே போட்டு புழுங்க முடியாமல் என்னிடம் தயங்கித் தயங்கி சொல்ல ஆரம்பித்தார். 

நான் அவருக்குச் சொன்ன ஒரே ஆலோசனை.... அங்கிருந்து வெளியேறு. வீட்டிற்குப் போ! வீட்டார் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள். இல்லேயேல் யாரையாவது காதலித்து திருமணம் செய்துகொள் என்று சொன்னேன்.

ஆனால் என்னிடம் கொண்ட பற்று காரணமாக உங்கள் நட்பு மட்டுமே எனக்குப் போதும் என்ற தீவிர நிலைக்குச் சென்றுவிட்டார். கடித்தைப் பாருங்கள்! இவரை எப்படி மாற்றுவது?


அன்பின் பிரியமுள்ள நண்பருக்கு,

உங்கள் தோழி எழுதுவது. இங்கு நான் நலம். தங்கள் நலன் கடிதம் மூலம் அறிந்தேன். இதற்கு முன் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் கடிதம் எழுதினேன். இது ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. உங்களுக்கு கடிதம் அனுப்பியபின் நான் போனமாதம் 22 ம் தேதி வேலூர் போய்விட்டேன். பின் இந்த மாதம் 10 ம் தேதிதான் இங்கு வந்தேன். வந்ததும் உங்கள் கடிதம் தந்தார்கள்.

எப்படி இருக்கிறீர்கள்? சரஸ்வதி பூஜை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தீர்களா? நான் அன்றைக்கு சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். என்னோடு 30 பேர் வந்திருந்தார்கள். மாலை 6 மணிக்கு மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தபோது உங்களைப் போலவே ஒருவரைப் பார்த்தேன். நான் நீங்கள்தான் என்று நினைத்து ஹலோ! ஹலோ! என்று கூப்பிட்டபடியே பின்னாலேயே சென்றேன். அவர் திரும்பிப் பார்த்தபோதுதான் அது நீங்கள் இல்லை என்று புரிந்தது. எனக்கு மிகவும் சங்கடமாகிப் போய்விட்டது. 

தொடர்ந்த உங்கள் நினைவால் என்னால் சந்தோஷமாக அன்றைய பொழுதைக் கழிக்க முடியவில்லை. எப்படியோ இங்கு வந்து சேர்ந்தேன்.
உங்கள் மனைவி, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? வாழ்க்கையில் நினைப்பது எல்லாம் எப்போதும் நடப்பதில்லை. உங்களுக்கு நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. உங்கள் லட்சியம்தான் எனக்கும் இப்படியே வாழலாம் என்கிற மன உறுதியைத்தருகிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற நினைவே உங்கள் நட்பால்தான் எனக்கு ஏற்பட்டது. இருந்தாலும் சில நேரங்களில் வேதனையாகத்தான் இருக்கிறது. எப்படியோ சமாளித்து விடுகிறேன். அதற்காக இந்த வாழ்க்கையைவிட்டு போகவும் மனம் வரவில்லை.

இங்கு இந்த கிராமத்து மக்கள் மிகவும் அன்பாகப் பழகுகிறார்கள். நான் முன்பு இருந்த இடங்களைவிட இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். நாங்கள் எது சொன்னாலும் கேட்பார்கள். இங்கு இருக்கும் பாதிரியார் மிகவும் எளிமையானவர். காலில் செருப்பு கூட இல்லாமல் இந்த மக்களோடு எல்லா வேலையும் செய்வார். அசைவம் எதுவும் சாப்பிடமாட்டார்.

மற்றபடி உங்களுக்கு அதிக நேரம் வேலை என்று எழுதியிருந்தீர்கள். உலகம் உருண்டை என்றும் எழுதி இருந்தீர்கள். அது எப்படித்தான் சுற்றி வந்தாலும் பார்க்கவேண்டும் என்பவர்களைப் பார்க்க முடியாமல்தான் போய்விடுகிறது. ஒருசில நேரங்களில் உங்களை எப்படியாவத் பார்த்தே ஆக வேண்டும்போல் தோன்றும். நினைப்பது எல்லாம் நடந்துவிடாதே? அதனால் அந்த நேரத்தில் உங்கள் கவிதைப் புத்தகத்தைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்வேன். 

மேலும் வீட்டில் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். தற்போது ஒரு வரன் வந்து, கண்டிப்பாக என்னைப் பார்க்கவேண்டும் என்றார்கள். நான் உங்களைக்கேட்டு முடிவெடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஏனோ எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனல் உங்கள் நட்பு மட்டும் கடைசிவரை இருந்தால் நான் இப்படியே இருந்துவிடுவேன்.

மற்றவை உங்கள் அன்பின் கடிதம் கண்டு. நீங்கள் கேட்ட யோபுவின் ஆகமம் விரைவில் எழுதி அனுப்புகிறேன்.
அன்புடன்,
க்ளாரா
12.10.1995
எல்லோருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

வேலை தேடுகிறீர்களா..........?



நமது முன்னேற்றத்திற்கு உதவும் முக்கியமான விஷயம் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. ‘எனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புன் இருக்கும் எவருமே, முன்னேற்றப் படிகளில் இரண்டைக்கூட தாண்ட முடியாது. கற்றுக்கொள்வது என்பது வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒரு நடைமுறை. கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர் குட்டையில் தேங்கியிருக்கும் நீரைப் போன்றவர்தான் என்பதைப் புரிந்து கொண்டு நடக்கவேண்டும்.

அடுத்து தலைமைப் பண்பு. தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதை பள்ளி கல்லூரிகளிலேயே துவங்க வேண்டும். அதற்கு மிகவும் உதவுவது விளையாட்டுக்கள்தான். மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும்; முடிவுகள் எடுப்பதில் உறுதியைக் காண்பிக்க வேண்டும். தமது கருத்துக்களை வலிந்து திணிக்காமல், தொடர்புடைய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். இதுதான் தலைமைப் பண்பு.


ஒரு நிறுவனம் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது முதலில் வேலைக்குச் செல்லும் நபரின் எண்ணம், குறியீடுகளுக்கு ஒத்துப்போக வேண்டும். தன்னுடைய கல்வித் தகுதியைப் பார்த்து நிறுவனத்தை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க, தனது நீண்ட காலத்திட்டம் என்ன என்பதையும் ஒருவர் வகுத்துக்கொள்ள வேண்டும். ‘இந்த நிறுவனத்தில் சேரலாம்; ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிறுவனத்தில் குழுத்தலைவராக (டீம் லீடர்) உருவாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் உழைக்க வேண்டும்.

தனிமனிதச் சாதனைகள் வரவேற்கப்படுகின்றன என்றாலும், தொழிலில் புதிய அணுகுமுறை, சவால்களைச் சந்திப்பது ஆகியவற்றில் குழுவாகச் சேர்ந்து ஊழியர்கள் செயல்படுவதையே நிறுவனங்கள் விரும்புகின்றன. குழு செயல்பாட்டில் புதிய சிந்தனைகள் பிறக்கும்; தனி மனித ஈகோ விலகிவிடும்.


தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை என்று உறவுகள் நிறைந்த கூட்டுக் குடும்பங்களில் வளர்பவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற பண்பும், பொறுமையும், கடமையுணர்ச்சியும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இன்றைய இளைஞர்கள் வீட்டில் உறவினர்கள் வருகை அதிகமாகிவிட்டாலே எரிச்சலடைகிறார்கள். எனவே இன்றைய நிலையில் குழு மனப்பான்மை மிகவும் அவசியம்.

சிலர் நேர்காணலின்போது குழு மனப்பான்மை தம்மிடம் இருப்பதாகச் ணொல்லி, மனிதவள அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது. உங்களுடைய எண்ணங்கள் ஆக்கபூர்வமாக இருந்தால் பேச்சும் அதேபோல் வெளிப்படும். அழிவுபூர்வமான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.

இப்போதெல்லாம் உங்கள் செயல்பாடு, அணுகுமுறை ஆகியவை 360 பிகிரி பார்வையோடு மதிப்பீடு செய்யப்படுகிறது. உங்கள் அதிகாரி மட்டுமின்றி உடன் வேலை செய்பவர்கள், உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் அகியோரும் உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கிறார்கள். உங்கள் ஏற்றத்திற்கு அவர்களின் நல்ல மதிப்பீடும் முக்கியம்.

நல்ல வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்! 


வியாழன், 29 டிசம்பர், 2011

கனவும் நினைவும்


 
காண்கின்றேன் கனவுகளை

சுமக்கின்றேன் நினைவுகளை

கனவுகளே நினைவானால்

களிப்படையும் நெஞ்சமெல்லாம்

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

மறந்தாலும் மறைவதில்லை

நெஞ்சுருக வேண்டுகின்றேன்

நினைவே நீ மறைகவென்று!

கண்ணீருடன் கதறுகின்றேன்

கனவே நீ கலைகவென்று

மனிதனாகப் பிறந்துவிட்டேன்

மனம் குழம்பித் தவிக்கின்றேன்-இந்த

மண்ணுலகக் கொடுமையெல்லாம்

மாளும் வரை பொறுத்திருப்பேன்.




மறக்கமுடியாத நினைவுகளுடன்,

செவ்வாய், 27 டிசம்பர், 2011

கண்ணம்மா என் தோழி!



பாரதிக்கு மட்டும் தான் கண்ணம்மாவா?
எனக்கும் தான்!
காதலியும் இல்லை
கனவுக்கன்னியும் இல்லை
தோழி!
ஆம், அவளென் தோழி!
என்னுள் இருந்து என்னை உயர்த்தி
வறண்ட என் மனதில் அன்பைச் செலுத்தி
அமாவாசைக் கனவுகளால்
நிராசையாய்
நீர்த்துப்போன
என் கனவை நிஜமாக்கி
உள்ளத்தில் உண்மையினைப் பரிமாறி
பலமாய்,
பாலமாய் என்
உயிராய் இருக்கும் இவள்
பாதியில் போகிறாள்!
என்ன செய்ய?
அவள் நட்பினை
நேசிப்பது உண்மை
அவள் நினைவையே
நேசித்துக்கொண்டிருப்பேன்
என்னைப்
பிரிந்து சென்றாலும்.

மறக்கமுடியாத நினைவுகளோடு,


திங்கள், 26 டிசம்பர், 2011

சந்தோஷமா அப்பா.............

எனக்கு மிகவும் பிடித்த கடிதம் இது. மறைந்த குமுதம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. அதை அவர் மகள் நினைவுகூர்ந்த விதமும் வியக்க வைக்கிறது.

அன்புள்ள அப்பா....

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்குத் திருமணமான புதிது. இருபது வயது. ‘கணவரின் பெற்றோர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை;  என்னை அன்புடன் நடத்தவில்லை. எனக்கு இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரவில்லை! என்ற ஆதங்கத்தில் நான் மூழ்கி இருந்த காலகட்டம். மைசூரில் இருக்கும் அக்கா வீட்டில் சில நாட்கள் மாறுதலுக்குந் தங்கி வரலாம் என்று புறப்பட்ட நேரம். ‘அப்பா கடிதம் எழுதுவார்கள், கலங்காமல் போ!என்று ஆத்தா அனுப்பி வைத்தார்கள்.

‘பெற்றோர் நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதே! என்ற ரீதியில் ஒரு சமாதான கடிதத்தைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையை வழிநடத்தப்போகும் ஒரு சாசனத்தைப் படைத்தனுப்புவீர்கள் என்று துளிகூட நினைக்கவில்லை.


ஆமாம். இதுதான் என் வாழ்க்கையின் மூலசாசனம். இதை மையமாக்கித்தான் என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதன் பலன் தெரியுமாப்பா?


வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடத் தோன்றுகிறது. இத்தகைய பேரின்பமான வாழ்க்கையைத் தந்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் மனம் தத்தளிக்கிறது. இந்தப் பிறவி எடுக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ? என்று மலைப்பாக இருக்கிறது. இதைவிட என்ன பலன் வேண்டும்?

யாருடனும் பகிர்ந்து கொள்ளாத இந்தக் கடிதத்தை, இன்று, உங்கள் நினைவுநாள் அன்று, எங்களை எல்லாம் விட, நீங்கள் அதிகம் நேசித்த உங்கள் குமுதம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சந்தோஷமா அப்பா?

உங்கள் அன்பு மகள்
கிருஷ்ணா சிதம்பரம்.
ஓம்
சென்னை.
06.08.1988


கவலையைச் சுட்டெறி. அது, மெதுவாக நுழைந்து, ஓசைப்படாமல் கடித்து உயிரைக் குடிக்கக் கூடிய நச்சுப்பாம்பு. அதற்கு இடம் தராதே என்கிறது கீதை. கவலையுறாதே. எழுந்திரு. உற்சாகமாக வாழ்க்கையைச் சந்தி. எத்தனையோ பிறவிகள் எடுத்து, புல்லாய், பூடாய், மிருகமாய், பறவையாய்த் திரிந்து, புண்ணியம் செய்து பெற்ற பெறற்கரிய ஜன்மம் இந்த மானிட ஜென்மம். 




அதுவும் கூன், குருடு, முடமாய் பிறக்காமல் முழுமையாய் பிறந்தது பேரதிஷ்டம். ‘அதை வீணாக்கலாமா? என்று கேட்பார் ஆதிசங்கரர். சந்தோஷமாக, முகமலர்ச்சியுடன் பழகு. இனிமையாகப் பேசு. மனதுக்குள் விளக்கு ஏற்றி வைத்துக்கொள். அது முகத்தில் பிரகாசித்து உன்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கு, கோழைத்தனத்திலிருந்து வீரத்திற்கு அழைத்து வரட்டும்.


எண்ணம் குட்டி போடும் தன்மையுடையது. எந்த எண்ணமும் தனித்துத்தோன்றி, தனியாக மறைவதில்லை. தன்னைப்போல் பத்து நூறு எண்ணங்களை அடுக்கடுக்காகத் தோற்றுவித்து விட்டுத்தான் போகும். 


‘நான் சோர்வாக இருக்கிறேன், நான் தோல்வி அடைந்துவிட்டேன், எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று ஒருமுறை, ஒரே ஒருமுறை நினைத்தாலும் கூட, அது குளத்திலே எறிந்த கல்லானால் எழும் வட்டங்களைப் போல் பெரிதாகிப், பெரிதாகி, ஆளையே அழித்துவிடும். எண்ணத்தை நீ ஏன் பயன்படுத்திக் கொள்ளலாகாது?


‘நான் நல்லவள் என்று நினை, நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எண்ணு. ‘எனக்கு எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு விரோதிகளே இல்லை. நான் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறேன். எனக்கு எல்லோரிடமும் பிரியம் உண்டு. எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள் என்று ஒரு முறை நினை. அந்த ஒரு எண்ணமே வேர்விட்டு, கிளைத்து, பெரிய ஆலமரமாகி, அசைக்கமுடியாத சக்தியாக உனக்குத் துணை நிற்கும்.


வாழ்க்கை அழகானது. வாழ்க்கை ரசிக்கத் தகுந்தது. தெய்வீகமானது. அது ஓர் வீணை. அதை அன்புடன் வாசித்து, இன்னிசை எழுப்பு.
அது உன் கையில்தான் இருக்கிறது.


எஸ்.ஏ.பி.


சனி, 24 டிசம்பர், 2011

எம்.ஜி.ஆர். ஒரு புதிர்


எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி!

திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர். 'தனது பாணி' என்று தனி முத்திரையைப் பதித்தவர். சினிமாவை எடுத்துக்கொண்டால் அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.

அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே! தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்தபோது, 'நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது' என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலிலேயே தி.மு.க.வை தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகிவிட்டார்!

பிறகு இந்திரா காந்தி அவரது ஆட்சியைக் கலைத்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று தப்புக்கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதல் அமைச்சர் ஆனார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக்கொண்டு வாகை சூடியவர் அவர்.

ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபிறகும் அவருக்கு பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் வெடித்ததையும் எதிர்கொண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும், கட்சித்தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள்முன் வெறும் செல்லாக்காசாக்கிக்காட்டினார்.


அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்டபோதும் தனது அரசியல் வாரிசு யார் என்பதை அவர் சொல்ல மறுத்தார். 'தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசு அரசியல் நியமிக்க என்று சொல்லாமல் சொன்னார்.

இதையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு புதிர், அவர் ஒரு தனி சாதனையாளர், அவர் ஒரு அதிசயம் என்றுதான் எடைபோட முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம்தான் என்ன? உண்மையில் யுகப்புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப்போல, அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.

உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர். தோன்றமுடியாது!

{1987 ல் எம்.ஜி.ஆர் இறந்தபோது 03.01.1988 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம் இது)

மறக்கமுடியாத நினைவுகளுடன்,

வெள்ளி, 23 டிசம்பர், 2011

நினைவெல்லாம் நீதானடி!



பேசத்துடிக்க விழைகின்றேன்
பேய் போல் மனத்தால் அலைகின்றேன்
எங்கு நோக்கினும் உன் உருவம்
எண்ணும் எண்ணத்தில் உன் வடிவம்!
தினம் தினம் உன்னைப் பார்ப்பதினால்
தேகத்தில் ஏதோ உணர்வலைகள்
ஏனோ எனக்கே புரியவில்லை
என்னால் இயம்ப முடியவில்லை!
உறங்கத்துவங்க முயல்கின்றேன்
ஊரும் உறங்கிய பின்னாலே-உன்
நினைவை மறக்க முயல்கின்றேன்
நிலை தடுமாறி விழுகின்றேன்!
சொல்லத் தெரியா நிகழ்சிகளில்
சொக்கிட வைக்கும் கனவுகளில்
சுகமாய் உன்னுடன் வாழ்கின்றேன்-அதில்
சோகம் கொஞ்சம் ஒழிக்கின்றேன்.