ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

காசேதான் காதலிடா!?.



‘இன்று ரொக்கம், நாளை கடன்’. ‘கடன் உடன் பகை’ என்று நம்மூரில் கடைக்குக் கடை அறிவிப்புப் பலகைகள் இருந்தாலும் கடன் கொடுக்கும் சமாசாரத்தில் நாம் அவ்வளவு உஷாரில்லை. ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று பாடல் இருந்தாலும் நம்மூரைப் பொறுத்தவரை கடன் வாங்கியவர்கள் யாரும் கலங்குவது இல்லை. கட்ன் கொடுத்தவர்கள்தான் சமயத்தில் கதிகலங்கிக் கலகலத்துப் போக நேரிடுகிறது.

கடன் கொடுக்கலாமா…? கொடுக்கலாம் என்றால் யாருக்குக் கொடுக்கலாம்? எவ்வளவு கொடுக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட யூதர்களிடமும், குஜராத்திகளிடமும்தான் நாம் பாடம் படிக்க வேண்டும்.

தங்களுக்கென்று தனியாக ஒரு நாடுகூட இல்லாத யூதர்கள், பன்னாட்டு நிறுவனங்களை மாத்திரமல்ல… அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள். உலகம் இவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய காரணம், இவர்களின் நிதி நிர்வாகத் திறமை. பணத்தைக் கையாள்வது பற்றி இவர்கள் பல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள். பணம் சம்பந்தமான முடிவுகள் எடுக்கும்போது அதில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். குஜராத்திகளும் இந்த வகைதான்.
ஒருவருக்கு நாம் கடன் கொடுக்க விரும்பவில்லை என்றாலும்கூட, கடன் கேட்டு வருகிற நபர் கண்ணீர் வடித்தாலோ அல்லது ‘குழந்தைக்கு மருந்து வாங்க வேண்டும்’ என்பது மாதிரி நாடகம் போட்டாலோ உணர்ச்சி வசப்பட்டு சட்டென்று கையில் இருக்கும் காசை எடுத்து நீட்டிவிடுவோம்.
‘இந்தப் பணத்தை நீ எப்போது திருப்பிக்கொடுப்பாய்?’ என்றுகூட பல சமயங்களில் நாம் கேட்காமல் சென்டிமென்டில் விழுந்துவிடுவோம். 

ஆனால் குஜராத்திகள் அப்படியல்ல! ஒருவர் தன்னை நோக்கி நடந்து வரும் தோரணையில் இருந்தே அவர் தன்னிடம் கடன் கேட்கத்தான் வருகிறார் என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். இவரிடம் பணம் கொடுத்தால் திரும்பி வராது என்று அவர்கள் முடிவெடுத்து விட்டால், அந்தர் பல்டி அடித்தால் கூட பணம் பெயராது.

‘கடன் கொடுக்க முடியாது!’ என்பதை எதிரில் இருப்பவர்களின் மனம் கோணாமல் சொல்வதில் மாக ஜித்தர்கள் அவர்கள். கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக்கூடாதா? ‘பொண்ணு கல்யாணச் செலவுக்கு வேணும்னு இப்பதான் நம்ம ராமசாமி ஐம்பதாயிரம் கேட்டு வாங்கிட்டுப்போறார்’ என்பார்கள். இல்லையென்றால் கடன் கேட்க வருகிறவர் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே, ‘நீங்க யாருக்கும் கடன் கொடுத்துடாதீங்க சார். காலம் கெட்டுக் கிடக்குது! என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
‘இவருக்கு கடன் கொடுக்காவிட்டால் இவர் நம்மை தப்பாக எடுத்துக்கொள்வாரோ?’ ‘உறவு முறிந்துவிடுமோ?’ என்றெல்லாம் அவர்கள் மனதைப் போட்டு அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ‘பணத்தைக் கடனாகக் கொடுத்தால்தான் இவரின் உறவு நிலைக்கும் என்றால், அத்தகைய உறவு எனக்குத் தேவையில்லை!’ என்று முடிவெடுத்துவிடுவார்கள்.

அதுபோலவே, ‘இந்த ஆளை நம்பிக் கடன் கொடுக்கலாம்!’ என்று ஒரு குஜராத்தி முடிவெடுத்துவிட்டால், ‘இந்தா பணம்’ என்று உடனே எடுத்து நீட்டிவிடமாட்டார். ‘கடன் கேட்டு வந்தவருக்கு உண்மையிலேயே பணம் தேவையா?’ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக, ஒரு இடத்திலிருந்து நாளை பணம் வரவேண்டியிருக்கிறது. நீங்கள் நாளைக்கு வந்து பாருங்கள்!’ என்று சொல்லி அனுப்பிவைப்பார்கள். கடன் கேட்டு வந்தவருக்கு உண்மையிலேயே பணத்தேவை இருந்தால் அடுத்தநாள் வருவார். 

ஆனால், அப்போதும் அந்த குஜராத்தி அவர் கேட்ட முழு பணத்தையும் எடுத்துக் கொடுத்து விடமாட்டார். பணத்தின் அருமை புரியவேண்டும் என்பதற்காக, அவர் நூறு ரூபாய் கேட்டிருந்தால் என்பது ரூபாய்தான் கடன் கொடுப்பார்!
ஆனால் நம்மூரில் என்ன நடக்கிறது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். யாராவது ஒருவர் நம்மிடம் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் பணம் ‘இல்லை’ என்று எப்படிச் சொல்வது?... அப்படிச்சொன்னால் அது நமக்கு கௌரவக் குறைச்சல் ஆகிவிடுமோ…? என்று ஏதேதோ வேண்டாத கற்பனைகள் எல்லாம் வரும். எனவே பணம் விஷயத்தில் ‘நோ’ சொல்லத் தயங்கக்கூடாது.

'சுரேஷ் பத்மநாபன்' ஆ.வி.யில்

6 கருத்துகள்:

உஷா அன்பரசு சொன்னது… [Reply]

கடன் கேட்டு வர்றவங்க கிட்ட அவங்க வாய் திறக்கறதுக்கு முன்னாடி நாமே அவங்களிடம் கடன் கேட்டா.. ஓடியே போயிடுவாங்க இல்ல...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் உஷா அவர்களே! இது நல்ல உத்திதான். வருகைக்கு மிக்க நன்றி!

Jayadev Das சொன்னது… [Reply]

நல்ல பதிவு.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஜெயதேவ்தாஸ் அவர்களே!

ப.கந்தசாமி சொன்னது… [Reply]

வந்தது வந்திட்டேன், ஒரு 1000 ரூபாய் கைமாத்தா கொடுத்தீங்கன்னா, ஒண்ணாம் தேதி பென்ஷன் வாங்கினதும் கரெக்ட்டா திருப்பிக் கொடுத்துடறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கொஞ்சம் முன்னாடி வரக்கூடாதா கந்தசாமி சார்! இப்பதான் உஷா அன்பரசும், ஜெயதேவ் தாஸூம் ஏதோ புத்தகம் போடப்போறேன்னு ஆளுக்கு பத்தாயிரம் வாங்கிட்டுப் போனாங்க!
இது எப்படி இருக்கு?

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!