வெள்ளி, 10 ஜூலை, 2020

உனக்காக - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்;        அன்னபூரணி தண்டபாணி

இது குடும்பக் கதையா இல்லை காதல் கதையா? இரண்டும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பெரிய நாவல், வாசித்து முடிக்கப் பல நாளாயிற்று. பழைய மாலைமதியில் வரும் ரமணிசந்திரன் நாவல் படிப்பது போன்றதொரு பிரமை ஏற்பட்டது உண்மைதான்.

கதை எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுவென்று நகர்கிறது. நவநாகரிக மங்கையாகத் திருமணத்தை வெறுப்பவளாக வரும் காவ்யாவுக்குக் கல்யாணம் பண்ணி, காதலிக்க வைத்து சராசரி பெண்ணாக  மாற்றிக் குடும்பக் குத்துவிளக்காக்கி கதையை முடித்திருக்கிறார்.

சாஃட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் சில ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைப்போலக் கதிரும் காவியாவும் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்காக சில நிபந்தனைகளோடு திருமணம் செய்துகொண்டு வாழ முற்படுகிறார்கள். இந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளினால் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு கடைசியில் ஒன்று சேர்கிறார்கள் இது தான் கதை.

கதை சொல்லிய விதம், பாத்திரப் படைப்புகள் எல்லாம் அருமை. குமரன்-மீனாட்சி திருமணத்திலேயே கதையோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார். எல்லோருக்கும் பிடித்தவளாக மீனாட்சி. ஒரு சின்ன விஷயத்துக்காகத் தம்பியுடன் பேசாமலிருக்கும் அண்ணன், கட்டாய திருமணம் செய்துவைக்கும் அப்பா என ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும் அழகாகக் காட்டி விடுகிறார். இந்தக்காலத்தில் கல்யாணம் வேண்டாத ஆண்களா? அதுதான் நெருடுகிறது. அதுவும் வெறுமனே சாப்பாட்டுக்காகத்தான் கல்யாணம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆணோ பெண்ணோ ஒரு காலகட்டம் வரைதான் கல்யாணம் வேண்டாம் என்கிற பிடிவாதம் இருக்கும். போகப்போக வெறுமை சூழ்ந்து கொள்ள, உடல் ஒத்துழையாமை செய்ய, மனம் அலை பாய எப்போது கல்யாணம் செய்து வைப்பார்கள் என்ற ஏக்கம் ஆரம்பித்து விடும். அதற்கு முன்னரே இவர்களுக்குப் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவிடுவதால் அந்த வேதனையை இந்த இருவருமே அனுபவிக்க வில்லை. முதிர் கன்னிகளாய் இருப்பவர்களும், சரியான வேலை கிடைக்காததால் திருமணம் தள்ளிப் போகிறவர்களும்தான் இங்கு அதிகம்.

இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. சென்னையின் வெள்ளப் பாதிப்பினை கண்முன்பே கொண்டு வந்த காட்சி, பிரிவில் தோன்றும் பரிவு, அதனால் ஏற்படும் நெருக்கம் எனக் காதல் காட்சிகளையும் அபாரமாக விவரித்திருக்கிறார். இருவருக்கும் மாற்றி மாற்றி உடல்நலப் பிரச்சினை ஏற்பட, அப்போது ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை காதலாக மாறுவதும் அருமை.

புரட்சிப் பெண்ணாய் அறிமுகப்படுத்தப்பட்ட காவ்யா கடைசியில் ஸ்லோகம் படித்து கடவுளை வேண்டி, புடவைக்கு மாறி, கிராமத்துக்குப் போய் அன்பு பாசம் என்ற கூட்டுக்குள் அடங்கி, ஆணாதிக்கம் விரும்பும் அடிமையாய் மாறி தன் சுயம் இழந்து போகிறாள். பெரும்பான்மையானவர்கள் இதை ஆதரிக்கக்கூடும். ஏன் இதற்குப் பெண்களின் ஆதரவும் அதிகமிருக்கும். படித்து முடித்ததும் ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை, இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டில’ என்ற பாடல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதனால் கதை நாடகத்தனமாகி விடுகிறது. அதே மாதிரி கதிரும் வேலையை உதறி, அமெரிக்க வாய்ப்பையும் உதறி கிராமத்துக்குப் போய் அண்ணனோடு விவசாயம் பார்ப்பதும் சினிமாத்தனமே!

காரணம் உறவுகள் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. அப்பா-மகன், சகோதரர்களுக்குள் என எந்த நேரத்திலும் மனக்கசப்புகள் வரலாம். பொருளாதாரம்தான் இப்போது அத்தனையையும் தீர்மானிக்கிறது. மனிதம் மெல்ல மெல்ல மரணித்து வருகிறது. உறவுகளுக்குள் கொலை சாதாரணமாகியிருக்கிறது. சுயநலம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனித மனங்களைக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த மாதிரிக் ‘கதைகள்’ படிப்பதை எப்போதோ நிறுத்திவிட்டிருந்தேன். குழு நண்பர்களுக்காகவே வாசிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் பெரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடவே நினைப்பேன். நாம் அவசரகால யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரபரப்பான வாழ்க்கை முறையில் சட்டென்று முடிக்கும் வகையிலிருந்தால் இன்னும் நிறைய பேரைச் சென்றடையும். ஒருவேளை வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகளைக் குறி வைத்து எழுதியிருந்தால் நீங்கள் அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கொரோனா காலம் என்பதாலேயே இத்தனை வாசிப்பு சாத்தியமாகியிருக்கிறது. மடிக்கணினியில் வாசிக்க முடியாதது பெரும் குறையாக இருக்கிறது. கைப்பேசியில் படித்தால் கண்வலி வந்துவிடுகிறது. எல்லா வகை கருவிகளிலும் படிக்கிற மாதிரியான பாஃர்மேட்டில் மாற்றுங்கள். அதுதான் என்னைப் போன்றவர்களுக்கு வசதி. மற்றபடிக் குறை சொல்ல எதுவும் இல்லாத படைப்பு. வாழ்த்துகள்.

நட்புடன்,

எம். ஞானசேகரன்.

2 கருத்துகள்:

யசோதா.பத்மநாதன் சொன்னது… [Reply]

வணக்கம் ஞானசேகரன்.
பல மாதங்களுக்குப் பிறகு பதிவுப் பக்கம் வந்திருக்கிறீர்கள் போலும்! நல்வரவு.
நேர்மையாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் என் பாராட்டுக்கள்.
அண்மையில் கனலி என்றொரு இணையத்தளம் பார்க்கக் கிடைத்தது. சிரப்பானதொரு இணையத்தளம். மிகத்தரமான மொழிபெயர்ப்புப் படைப்புகளை மிகச்சிறப்பாக மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறார்கள்.
நேரமுள்ள நேரம் இங்கு சென்று பாருங்கள். புதிய ஜன்னல்களைத் திறந்து, புதிய வெளிச்சங்களையும், புதிய காற்றையும் தமிழ் இலக்கியத்துக்குள் கொண்டு வருகிறது இந்த அமைதியான இனையத்தளமான கனலி. அதன் இணைப்பு

http://kanali.in

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வணக்கம் மணிமேகலா. எப்படி இருக்கிறீர்கள். உங்கள் நாட்டில் கொரோனா தொற்று எந்த அளவில் இருக்கிறது? ஆம் வெகு நாளாயிற்று இந்தப்பக்கம் வந்து. இந்த விமர்சனத்திறகு அந்தப் புத்தகத்தின் ஆசிரியரிடமிருந்து கடுமையான தாக்குதல் வந்தது.சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் எப்படி எழுத வருகிறார்கள் என்று தெரியவில்லை.
ம்... கனலி இணையத்தளம் அறிந்ததுதான். அங்கே அ. வெண்ணிலாவின் ஒரு கதையையும், பெருந்தேவியின் படைப்பையும் வாசித்திருக்கிறேன். அதில் நானும் சென்று பங்காற்ற விரும்புகிறேன். பார்ப்போம். வருகைக்கு நன்றி. தொடர்ந்து இணைப்பிலிருங்கள்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!