ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

அடியேனும் அமேசான் கிண்டிலும்

நான் இணையத்தில் பொருட்களை வாங்க ஆரம்பித்தது 2011 அல்லது 2012 என நினைக்கிறேன். ரெடிஃப் ஷாப்பிங் மற்றும் ஸ்நாப்டீல் தளங்களின் விளம்பரங்களை பார்த்து சில பொருட்களை வாங்கியிருக்கிறேன். அப்போதுதான் அமேசானும் அறிமுகமானது எனக்கு. 2014-ல் அமேசானில் பொருட்களை வாங்க ஆரம்பித்து 2016-லேயே வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் வாங்க ஆரம்பித்து விட்டேன். 2017-லிருந்து கிண்டில் அன்லிமிட்டட் பயன்படுத்தி புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால் இன்னும்கூட பலருக்கு அமேசான், ப்ளிப்கார்ட் எல்லாம் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்கும் தளமாகத்தான் இருந்து வருகிறது. காரணம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை என்பது பலருக்கு ஒவ்வாமையாக இருப்பதுதான்.  அமேசானின் கிண்டில் அறிமுகமான காலகட்டத்திலேயே Epub Reader-ஐ செல்பேசியில் நிறுவி மின்னூல்களைப் படித்துவந்தேன். அதற்கு உதவியது FreeTamilEbooks.com என்ற இணையத்தளம். இங்கே எல்லா வடிவமைப்பிலும் (PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT) மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. இந்த வலைதளங்களிலிருந்து யார் வேண்டுமானாலும் மின் புத்தகங்களை இலவசமாகவே பதிவிறக்கம்-download) செய்து கொள்ளலாம்.

இதுவரை 70 லட்சம் பதிவிறக்கங்களைத்தாண்டி வெற்றிநடை போடுகிறது இந்தத்தளம். தன்னார்வலர்களைக் கொண்டு சேவை மனப்பான்மையோடே இத்தனையும் செய்து வருகிறார்கள். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களையும் மின்னூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிண்டில் நூல்களைப் பயன்படுத்துவது குறித்த தெளிவின்மை இன்னமும் கூட பலருக்கு இருக்கிறது. உறவினர்கள் நண்பர்கள் எனப் பலருக்கு எனது கிண்டில் புத்தகத்தின் இலவச அறிவிப்பு செய்யும்போது அதன் இணைப்பைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் எப்படி வாங்குவது என்று தெரியவில்லை என்றுதான் சொல்கிறார்கள். சிலர் தரவிறக்கம் செய்துவிட்டேன். ஆனால் கைப்பேசியிலோ கணினியிலோ எங்கும் இல்லை என்று சொல்கிறார்கள். இணையத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தாலும் முகநூல், வாட்சப்பில்  இருந்தாலும்கூட இதைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.

காரணம் அமேசான் தளத்தை இன்னும் மக்கள் பரவலாகப் பயன்படுத்தாததே. எலக்ட்ரானிக் சாதனம் முதற்கொண்டு மளிகைப் பொருட்கள்வரை அமேசானை பயன்படுத்துபவர்கள் இருந்தாலும் அமேசானின் கிண்டில் கருவி, கிண்டில் மின் புத்தகங்கள் குறித்து இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை.

யார் வேண்டுமானாலும் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடமுடியும் என்பதையும் அறிந்திருக்கவில்லை. தமது எழுத்துக்கள் அச்சில் வராதா என்று ஒருகாலத்தில் ஏங்கிய கதைகள் எல்லாம் இப்போது கிடையாது. எதையோ கிறுக்கிவைத்து அதைப் புத்தகமாக்க போகிறேன் என்று சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டவர்கள் பல பேர்.

வாட்சப்பும் (புலனம்), பேஸ்புக்கும் (முகநூல்) இதை தீ்ர்த்து வைத்திருக்கிறது. வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நாயக நாயகியைப் போல் தம்மையே கற்பனை செய்து கொண்டவர்களுக்காகக் கூட டிக் டாக் செயலி பெரிதும் உதவி வருகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. தெருக்கூத்து நாடகமாகி அதுவே சரித்திர ராஜா ராணிக் கதைகளைக் கொண்ட திரைப்படங்களாகி கலைஞர் கருணாநிதியால் நீண்ட வசனங்களைக் கொண்ட சமுதாயக் கருத்துக்களடங்கியதாய் மாறி, உள் அரங்குகள் என்னும் ஸ்டுடியோக்களை விட்டு வெளியே வந்து யதார்த்த சினிமாவரை வந்து நின்றிருக்கிறோம். அதே மாதிரி பாடல்கள் கிராமபோன் ரெக்கார்டுகளில் (ஒலித்தட்டு) தொடங்கி நாடா வடிவ டேப்புகள், சி.டி.தட்டுக்கள், ப்ளாஷ் ட்ரைவ் வரை வந்து இப்போது எல்லாமே கையடக்க செல்பேசியில்.

அதே போல வாசிப்பும் வந்து நின்றிருக்கிறது. காசு கொடுத்து புத்தகங்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் நூலகமே கதியென்று கிடந்தவர்கள் ஏராளம். காசு சம்பாதிக்கும்போது கொஞ்சமாவது மிச்சப்படுத்தி மாதம் ஒரு புத்தகத்தையாவது வாங்கியவர்கள் பலருண்டு. இரவல் வாங்கிப்படிப்பவர்களும், பழைய புத்தகக் கடையைத் தேடித்தேடி அலைந்தவர்களும் உண்டு. வாய்ப்பு கிடைக்கிற பயணங்களிலெல்லாம் ஒரு புத்தகத்தைக் கையோடு எடுத்துச்சென்று படிப்பவர்கள் பலர்.

ஆனால் இன்று இணையத்தில் எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. படித்து முடிக்க ஒரு ஆயுள் போதாது. ஆனால் அந்தக்காலத்தில் வாசித்ததைப்போல வாசிக்க முடியவில்லை. நூலகம் போக முடியவில்லை. எந்த நேரமும் முகநூலும் வாட்சப்பும்தான். இதுவும் மாறக்கூடிய சூழல் வந்திருக்கிறது. எதிர்காலத்தில் புத்தக வாசிப்பு என்பது இணையத்தில்தான் என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. சாமான்ய மக்களிடம் ஸ்மார்ட் போனும் ரிலையன்ஸ் ஜியோவும் செய்த மாற்றம் அளவிடற்கரியது. இது இப்போது தொலைக்காட்சி சீ்ரியல்களிடமிருந்து வீட்டுப் பெண்களையும் விடுவித்துக் கொண்டிருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டுதான் அமேசான் நிறுவனம் இதன் எதி்ர்கால சந்தையைக் கருத்தில்கொண்டு தமிழ்ப்புத்தகங்களுக்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்து பல்வேறு போட்டிகளை அறிவித்து இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தும் வருகிறது.

Electronic Book அல்லது e-book என்பதைத்தான் மின்னூல் என்கிறோம். இந்த மின்னூல்களை ஐ-ரீடர் (I-Reader), இ-ரீடர் (E-Reader), டேப்லெட் (Tablet), லேப்டாப் (Laptop) மற்றும் டெஸ்க் டாப் பி.சி (P.C ) போன்ற அனைத்து மின்னணுக் கருவிகளிலும் படிக்க முடியும். இருந்தாலும் மின்னூல்களைப் படிப்பதற்கென்று பிரத்தியேகமாக அமேசான் நிறுவனம் கிண்டில் கருவி ஒன்றினையும் அறிமுகப் படுத்தியிருக்கிறது.

கைப்பேசியில் அல்லது கணினியில் மின்னூல்களைப் படிப்பதற்கும் கிண்டில் கருவியில் படிப்பதற்கும் என்ன வித்தியாசம்? கண்ணிற்கு இதமாக இருக்கும். அச்சுப்புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்வு இருக்கும். கண்களைச் சோர்வடையச் செய்யாது போன்ற பல வசதிகள் இருக்கும். ஆனால் நம் நாட்டில் இந்தக் கருவியைப் பயன்படுத்துவது இன்னும் பரவலாகவில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலானோர் தங்களது கைப்பேசியிலேயேதான் மின்னூல்களை வாசிக்கின்றனர்.

சரி, எப்படி அமேசான் கிண்டில் மின்னூல்களைத் தரவிறக்கி வாசிப்பது? அமேசான் தளத்தில் ஏற்கனவே பொருட்களை வாங்குபவராக இருந்தால் அந்தக்கணக்கே (User Account) போதுமானது. அமேசான் தளத்தில் கணக்கு இல்லையென்றால் உங்கள் செல்பேசி எண்ணையோ அல்லது மின்னஞ்சல் (e-mail) முகவரி கொடுத்தோ கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதற்கெல்லாம் கட்டணம் ஏதுமில்லை. (அமேசான்.காம் தளத்தில் கணக்கைத் தொடங்க  இங்கே அழுத்துங்கள்). இந்தக்கணக்கில் அமேசான் தளத்தில் உங்கள் ஏ.டி.எம். டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையைப் பயன்படுத்தியோ வங்கி ஆன்லைன் கணக்கைப் பயன்படுத்தியோ உங்களால் எந்தப்பொருளையும் வாங்க முடியும்.

அதே மாதிரி அமேசான் கிண்டில் தளத்துக்குப்போய் கிண்டில் நூல்களையும் வாங்க முடியும். (அமேசான் கிண்டில் தளத்திற்குப் போக இங்கே அழுத்தவும்). அங்குள்ள தேடுதல் பெட்டியில் (Search Box) எந்த தலைப்பில், எந்த மொழியில், எந்த நூலாசிரியரின் புத்தகம் வேண்டுமோ அதைத் தேடி வாங்கலாம். ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொரு விலையில் இருக்கும். ஆனால் பெரும்பாலும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இருக்காது.

எழுத்தாளர்களுடைய புத்தகத்துக்கு அமேசான் ராயல்டி கொடுக்கிறது. இது தவிர வாசகர்கள் படிப்பதைக் கணக்கிலெடுத்து அதற்கும் எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுக்கிறது. எல்லா புத்தகங்களையும் எல்லோரும் வாங்குவதில்லை. மின் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் இப்போதுதான் பரவலாகிக் கொண்டு வருகிறது. அதனால் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை இலவசமாகவே வாசிக்கக் கொடுக்கிறார்கள். அந்த அறிவிப்பை நண்பர்கள் வட்டத்திற்கு பேஸ்புக் மற்றும் வாட்சப் மூலமாக அனுப்புவார்கள். அந்த சமயத்தில் விலையில்லாமலேயே தரவிறக்கிப் படிக்கலாம். இப்படி தினமும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

சரி, நமக்குத் தேவையான நல்ல புத்தகம் வேண்டும். ஆனால் காசு அதிகம், விலை கொடுத்தும் வாங்க முடியாது என்ன செய்யலாம்? அதற்கும் வழி இருக்கிறது. கிண்டில் அன்லிமிடெட் என்று ஒரு திட்டம் உள்ளது. இது தற்போது பயன்படுத்திவரும் 'லெண்டிங் லைப்ரரி' திட்டம் போன்றதுதான். ஒரு வருடத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு என அமேசான் நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைக் கட்டிவிட்டால் (மாதம் 169 ரூபாய்) ஒரே சமயத்தில் பத்து புத்தகங்களைத் தரவிறக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியே பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. படித்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு ஒரு புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் படிக்கலாம்.

இப்போது தரவிறக்கிய புத்தகங்களை எப்படிப் படிப்பது? உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கவேண்டும். அல்லது மடிக்கணினியோ (Laptop)  மேசைக்கணினியோ (Desktop) இருக்க வேண்டும். இது இல்லாமல் முன்பே கூறியபடி கிண்டில் கருவியைக்கூட பயன்படுத்தலாம். இது 7000 ரூபாயிலிருத்து 20,000 வரை அமேசான் தளத்திலேயே கிடைக்கிறது.

ஸ்மார்ட் போனில் எப்படிப் படிப்பது என்பதைப் பார்ப்போம். உங்கள் செல்பேசியில் வழக்கமான செயலிகளை (App) தரவிறக்க (Download) உதவும் ப்ளே ஸ்டோர் (Play store) சென்று Amazon Kindle என்று தட்டச்சு செய்யுங்கள். அங்கே தோன்றும் அந்த செயலியைத் (App) தரவிறக்கி நிறுவிக் (Install) கொள்ளுங்கள். அவ்வளவுதான் அமேசான் கிண்டில் இப்போது உங்கள் செல்பேசியில்...

இப்போது அந்த செயலியைத் திறந்து அமேசான் தளத்தில் நுழைவதற்காக உருவாக்கிய அதே கணக்கில் உள் நுழையுங்கள். அங்கு நீங்கள் அமேசான் கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களும் இலவசமாக வாங்கிய புத்தகங்களும் கிண்டில் நூலகத்தில் தானாகவே தோன்றும். இனி எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். கண்ணிற்கு இதமான இரவு மற்றும் பகலில் படிப்பதற்கேற்ற அமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி, அச்சுப்புத்தகங்களின் பக்கங்களைத் திருப்புவது போன்ற உணர்வு, எழுத்துக்களை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாற்றிக்கொள்ளும் வசதி என எல்லாம் கொண்டிருக்கிறது இந்தக் கிண்டில் செயலி.

மின் புத்தகங்களும் இணையப் பத்திரிகைகளும் வந்தபிறகு அச்சுப் பத்திரிக்கைகள் தங்களது வணிகத்தை இழந்து வருகின்றன. இந்தக் கொரோனா காலத்தில் நிறையப் பத்திரிகைகள் தங்களது வெளியீடுகளை நிறுத்தத் தொடங்கியிருக்கின்றன. இனி வாசிப்பின் எதிர்காலம் என்பது இணையத்தின் மூலமாக மட்டுமே நடைபெறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

உலகளாவிய அளவில் நாம் டிஜிட்டலில் வாசிப்பது என்பது இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், டிஜிட்டல் ஊடகம் என்பது நமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.

இன்றே அமேசானில் கணக்கைத் துவங்கி வாசிப்பைத் தொடங்குங்கள்.

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.


10 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது… [Reply]

பலருக்கும் இதன் பயன்பாடு தெரிவதில்லை என்பது உண்மை. எனது மின்னூல்களை இலவசமாகத் தரும்போது நண்பர்களிடமிருந்து பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விகள் வருவதுண்டு!

இந்தப் பதிவின் இரண்டாவது பத்தி (Para) இரண்டு முறை வந்திருக்கிறது - சரிபார்க்கலாமே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@வெங்கட் நாகராஜ் தங்களின் வருகைக்கும் பதிவிலுள்ள தவறைச் சுட்டிக்காட்டியமைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே. தவறை சரி செய்து விட்டேன்.

நமது கிண்டில் நூல் குறித்த தகவல்களை நம் நண்பர்களுக்குப் பகிரும்போது அவர்களுக்கு விளக்கம் சொல்வதே பெரிய வேலையாகி விடுகிறது. அதற்காகத்தான் இந்த பதிவு.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது… [Reply]

பயனுள்ள பதிவு
கடந்த இரண்டு வருடங்களாக கிண்டில் கருவினைப் பயன்படுத்தி வருகிறேன்
புத்தகம் படிப்பது போன்ற உணர்வைத் தருவது உண்மைதான்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@கரந்தை ஜெயக்குமார் வருகைக்கு நன்றி ஐயா. கைப்பேசியில் படிக்க முடியவில்லை. நானும் இப்போதுதான் ஆர்டர் செய்திருக்கிறேன். இரண்டொரு நாளில் வந்துவிடும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

தற்போது கிண்டில் யுகம் தான்... பலருக்கும் பயன்தரும் அருமையான விளக்கங்கள்...

தங்களின் கருத்துரையால் இங்கு வர முடிந்தது... நன்றி... தொடர்கிறேன்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே.
நான் தொடர்ந்து உங்கள் வலைத்தளத்தைப் படிப்பவன்தான்.

பிச்சைக்காரன் சொன்னது… [Reply]

பயனுள்ள பதிவு

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@பிச்சைக்காரன் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

Thulasidharan V Thillaiakathu சொன்னது… [Reply]

நல்ல பயனுள்ள விளக்கங்கள்

துளசிதரன்

கீதா

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@Thulasidharan V Thillaiakathu வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!