சனி, 4 ஜூலை, 2020

கருப்பணசாமியின் சிநேகிதர்கள் - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்; நா. கோபாலகிருஷ்ணன்

விமர்சனம் என்பதே நிறை குறைகள் அடங்கியதுதான். நம்முடைய எழுத்தை எல்லோரும் பாராட்டித்தான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தால் நமது குறைகள் கண்ணுக்குத் தெரியவே தெரியாது.

திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இங்கே நாம் ஆளை விமர்சிப்பதில்லை. நட்புக்காக முகஸ்துதி பாடுவதில்லை. ஒருவரையொருவர் ஆதரிக்கிறோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துகிறோம், அவ்வளவுதான். இங்கு விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை. இந்தப் புரிதல் இருந்தால் தொடர்ந்த வாசிப்பும் விமர்சனங்களும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழும்.

‘கருப்பணசாமியின் சிநேகிதர்கள்’– இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. புத்தகத்தலைப்புதான் இதை விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம். அந்தக்கால தூர்தர்ஷனில் ‘மால்குடி டேஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பானதை என் வயதையொத்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே மாதிரி சென்னை தொலைக்காட்சியில் ‘தொலைந்து போனவர்கள்’ என்ற தொடரும் வந்தது.

ஒவ்வொரு வாரமும் ஒரு கதை, அதுதான் இதன் சிறப்பே. சிறுகதைத் தொகுப்பிலும் இதுதான் எனக்குப் பிடித்த விஷயமே. வேறு வேறு கதைகள், கதா பாத்திரங்கள். உள்ளே நறுக்குத் தெரித்தாற்போன்ற ஒரு விஷயம். கடைசியில் வாசகனின் அனுமானத்திற்கே முடிவை விட்டுவிடுவது போன்றவை சிறுகதையில் சிறப்பான அம்சம்.

இதில் முதல் கதை ‘மழை’யில்தான் ஆரம்பிக்கிறது. பாழடைந்த மண்டபத்தில் மழைக்காக ஒதுங்கியிருக்கும் முத்தையாவின் சைக்கிளில் உள்ள மூட்டை என்னவாக இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கிறது. இரண்டாவது ஏன் முத்தையாவின் குடும்பத்தை ஜமீன் குடும்பம் ஒதுக்கி வைத்திருக்கிறது என்ற ஆவல் பிறக்கிறது. இத்தனை நாள் வேலை கொடுக்காமல் ஒதுக்கிவைத்த ஜமீன் கூப்பிட்டு ஒரு திருட்டு வேலை கொடுத்ததும் ஏன் என்ற கேள்வி வருகிறது. இப்படி கேள்விகளூடே கதை நகர்வதால் சுவாரஸ்யமும் கூடிக்கொண்டே போகிறது.

பிள்ளையார் சிலையைத் திருடித்தான் வைக்கவேண்டுமா என்ன? இந்தத்தகவல் புதிதாக இருக்கிறது. கடைசியில் முத்தையன் ‘சிரித்தான்... உரக்கச்சிரித்தான்’ என்று முடித்தது இன்னும் சிறப்பு. மூக்கறுந்த பிள்ளையாரை அந்த ஊரிலிருந்து அகற்றியதால் அங்கு இடியுடன் கனமழை... அதே பிள்ளையார் இங்கே வந்ததால் இனி இந்த ஊர்ல மழையே வராது. சரி அது அவனது ஊரும்கூடத்தானே. அங்கு மழை பெய்யாது எனில் பாதிக்கப்படுவதில் அவனும் அடக்கம்தானே. பின் ஏன் சிரித்தான்? எல்லோரையும் யோசிக்கவைக்கும் கதை.

மனிதன் தன் தவறுகளை எப்போதும் ஒத்துக்கொள்வதே இல்லை. யார் மீதாவது பழியைப்போட்டுத் தப்பிக்கவே நினைக்கிறான். இல்லையேல் ‘நான் என்ன பண்றது?’ ‘என் சூழ்நிலை அப்படி’, ‘சந்தர்ப்பம் அப்படின்னு’ சமாதானம் சொல்லுவான். இது ரெண்டுமில்ல, மனசுதான் காரணம், அந்த மனசிலுள்ள ‘அழுக்கு’தான் காரணம்னும்னோ, அந்த மனசிலுள்ள பேராசைதான் காரணம்னோ ஒத்துக்கறதே இல்ல. இந்த இரண்டாவது கதையின் நாலுவரிக் கவிதையிலேயே கதையைச் சொன்னதுதான் சிறப்பு.

இறைவன் எப்போதும் எளியவர்களுக்கானவன் இல்லை. பணக்காரர்கள் தங்கள் பகட்டைக்காட்டப் படைக்கப்பட்டவனாக இருக்கலாம். எளியவர்களின் வறுமையைப் பற்றியும், பசியைப் பற்றியும் அவனுக்கென்ன கவலை. மூன்று வேளையும் பூஜை புனஸ்காரம் நடக்கிறதா என்பது மட்டும்தான் அவன் கவலை. அல்லது அவனை உரிமை கொண்டாடுபவர்களின் கவலை. பஞ்சைப் பராரிகள் அன்னதானம் போட்டால் வந்து தின்றுவிட்டுப் போகட்டும், அவ்வளவுதான் கடவுளின் கருணை. காலமெல்லாம் அந்த ஏழைகள் ஏழைகளாகவே செத்துப் போகிறார்கள்.

தகப்பன் சாமியிலும் அதேதான். ஊரே கொண்டாட்டமாக இருக்கிறது. மாரியம்மாளும் மகிழ்ச்சியோடு இருக்கிறாள். ஆனால் ஏழை மாசானத்தின் வாழ்வுக்கான அவன் கடையை கபளீகரம் செய்திருந்தாலும் அவன் இடத்தில் உட்கார்ந்து ஊரின் மொத்தப் பார்வையும் தன் கடையை நோக்கித் திருப்பிவிட்டாளாம். ‘தீப ஒளியில் தெரிந்த அம்மனின் இதழோரம் தெரிந்த புன்னகைக்கு இப்போது வேறு அர்த்தம் தோன்ற பரவசத்தோடு பார்த்து நின்றான்’ மாசானம். அவனுக்கு இனி பசியே எடுக்காது! அம்மன்தான் அருள்பாலித்து விட்டாளே?!

பாவம் கருப்பணசாமியும் அவன் குதிரையும். ‘கோபக்கார சாமி அடிச்சி கொன்னுருச்சிப்பா... என்ன தப்பு பண்ணினானோ...?’ போகிற போக்கில் எவனோ சொல்லிவிட்டு போனான். இதைப் படித்ததும் சிரிப்புதான் வந்தது. இப்படித்தான் இருக்கிறது எல்லா ஊரிலுமிருக்கிற எல்லைச்சாமிகளின் நிலையும்.

மனசின் ‘வலி’ மரணம்வரை மறக்காது. ஏதோ ஒரு பழங்குடியின மக்களின் வாழ்வியலில் இறந்த காலமே கிடையாதாம். இன்று இப்போது நடப்பைவை மட்டும்தான் அவர்களுக்கு நினைவிருக்குமாம். சமீபத்தில்தான் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. அப்படி இருந்தால் எத்தனை வசதியாக இருக்கும்!.

துரோகங்கள் சூழ் உலகில் எதை மறப்பது? எதை நினைப்பது? மனித வாழ்வில் ஒவ்வொரு இழப்பும் ஒரு வலிதான். வாழ்நாள் முழுவதும் அவனை இந்த வலி அலைக்கழித்து கொண்டே இருக்கிறது. யாரோ செய்த தவற்றைக்கூட மன்னித்து மறந்துவிடுகிறோம். ஆனால் நம்மைச் சார்ந்தவர்களின் தவற்றை மன்னிப்பதே இல்லை. ரகு கடைசியில் கண்ணீர் விட்டு என்ன பிரயோஜனம்? தனது தந்தையின் வலியைக்கூட கடைசிக்காலம் வரை தீர்க்கமுடியவில்லையே!

கதைகள் அத்தனையும் அருமை. குறை சொல்ல முடியாத எழுத்து நடை. தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணம். எழுத்துப் பிழைகளோ சொற்பிழைகளோ இல்லாத நேர்த்தி. எப்படி ஒரு சிறுகதை எழுதுவது என்று கற்றுக்கொள்ள ஒரு பாடம். வாழ்த்துக்கள் நா. கோபாலகிருஷ்ணன் அவர்களே!

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!