சனி, 4 ஜூலை, 2020

ஆற்று வெள்ளம் - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்; அகிலாண்ட பாரதி

ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அருமையான கதை. இவருக்கு இது முதல் கதையாக இருக்காது என்று நினைக்கிறேன். அத்தனை தெளிவான நடை. பொதுவாக குடும்பக்கதை, நாவல் போன்றவற்றைப் படிப்பதை விட்டு வெகு நாளாயிற்று.

ஒரு காலத்தில் எந்த புத்தகம் கிடைத்தாலும் விடமாட்டேன். பின்னர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டேன். அப்புறம் பாலகுமாரனை மட்டும் படித்தேன். மெல்ல மெல்ல நாவல்களையும், காதல் கதைகளையும் படிப்பதை அறவே நிறுத்திவிட்டேன்.

வயது ஒரு காரணம் என்றாலும், வேலை, பிழைப்பு, பிழைப்பின் நிமித்தமாய் மாநிலம் விட்டு, நாட்டை விட்டுப் பயணித்தல் போன்ற காரணங்களால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் வாசிப்பை விட முகநூலும் வாட்சப்புமே நேரத்தை விழுங்கி விடுகிறது. இப்போது இந்தக் குழுவில் சேர்ந்த பின்தான் மறுபடியும் எல்லாவற்றையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

என் நம்பிக்கை வீண் போகவில்லை. குறைந்த கதாபாத்திரங்கள், இந்தக் கதாபாத்திரங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை. வெறும் கதையாக நகர்த்தாமல் சமூக அவலங்களையும் தொட்டுச்செல்லும் சிறப்பு. அரசு அலுவலகங்களில் சான்றிதழ்களுக்காக அலையும் அப்பாவி மக்கள், இடைத்தரகர்களாய் அலையும் பணப்பேய்கள், காவல் நிலையங்கள், நீதி மன்றங்கள் போன்ற மக்கள் சேவை மையங்களெல்லாம் எப்படி மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையெல்லாம் கதையினுள் புகுத்தி தன் சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு பொறுக்கி அரசியல்வாதியின் மனைவியாக வரும் சுப்புலட்சுமி கதையின் நாயகியா அல்லது டீக்கடைக்கார முருகேஸ்வரி நாயகியா? என்னுடைய தேர்வு முருகேஸ்வரிதான்.

முருகேஸ்வரியின் மொழி லாவகமும் தன்னம்பிக்கையும், ஊரே வெறுத்தாலும் சுப்புலட்சுமியை அரவணைத்து, அவளை பாதுகாத்து, பள்ளிக்கூடம்வரை சென்று அவள் பிள்ளைகளையும் படிக்க வைத்து அன்னம்மா, அபிநயா, ஏட்டைய்யா, மற்றும் அன்னம்மா மூலம் மாமியார் ரத்தினம் என்று எல்லோரிடமும் பேசி அவளை வாழவைத்து வேலையும் கொடுத்தவள் முருகேஸ்வரிதான். அநியாயத்துக்குக் கதையில் வரும் எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள், சுப்புலட்சுமியின் கணவனைத் தவிர.

மனநிலை பிறழ்ந்தவனாக வரும் கோட்டையனுக்கு முக்கியமான வேலை ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். அதாவது சுப்புலட்சுமிக்கு உதவி செய்தது இவனாக இருக்குமோ என்று நினைத்தேன். திரைப்படங்களில் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தாடி வைத்த யாரோ ஒருவர் ‘கனவு காணும் வாழ்க்கை எல்லாம் கலைந்து போகும் மேகங்கள்’ என்று பாடுவதைப்போல அவ்வப்போது சரியான சமயத்தில் வந்து பொருத்தமான பாடல்களைப் பாடிவிட்டுப் போகிறான்.

//இதுவும் மனித மனத்தின் மற்றொரு விசித்திரம்தான். ஒரு ஆள் வழி காட்ட ஆரம்பித்துவிட்டால், ‘குழம்புக்கு உப்பு போதுமா’ என்பதைக் கூட அந்த ஆளிடம் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்பது போலத் தோன்றுகிறது// கதையில் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். உண்மைதான், நமக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அதுவும் நமது நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் இப்படித் தோன்றுவது இயல்புதான். நானே கூட முன்பெல்லாம் சிக்கலான நேரங்களில் நெருக்கமானவர்களிடம் இப்படிக் கேட்டுத்தான் முடிவெடுத்திருக்கிறேன்.

ஆதரவின்றி நிர்க்கதியாய் தனித்து நிற்கும்போது நமக்கு ஆறுதலாய் தோள் கொடுக்க, ஆலோசனை சொல்ல ஒருவர் தேவை. முடிவெடுக்கத் தெரியாத குழப்ப நிலையில் பலர் தற்கொலைக்குப் போவது இதனால்தான். அந்த நேரத்தில் முருகேஸ்வரி மாதிரியான துணிச்சலும் தன்னம்பிக்கையுமிக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பு கிடைப்பது வரம். இவர்களிடத்தில் இருக்கும் ‘பாஸ்டிவ் எனர்ஜி’ நம்மையும் மாற்றும்.

//இந்தப் பெண்களே இப்படித்தான், ஒன்றும் அறியாத வயதில் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வருகின்றனர். விளையாட்டாய் ஆரம்பிக்கும் வாழ்க்கை போகப்போகப் பொறுப்பு நிறைந்ததாகிவிடுகிறது// சத்தியமான உண்மை. நாற்று நடுவது போல ஓரிடத்திலிருந்து வேறோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது போலத்தான் பெண்களின் வாழ்க்கையும். தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வாழ வந்தாலும் சட்டென்று அந்தக்குடும்பத்தின் பொறுப்புகளையெல்லாம் சுமக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆண்களால் அப்படி முடியாது என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

//கலெக்ட்டரா இருந்தாக்கூட சட்டியைத் தேய்க்காமயோ, பிள்ளைய குளிப்பாட்டாமயோ இருக்க முடியுமா? // அதெல்லாம் இப்போது கிடையாது, வேலைக்காரி வைத்துக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால், கணவன்-மனைவி வேலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த மனநிலைக்கு ஆண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். வந்தாக வேண்டும்.

லஞ்சம் தவிர், நெஞ்சை நிமிர்- இப்படி ஆயிரத்தில் ஒருவர்தான் இருக்கிறார்கள். எல்லா சேவைகளும் ‘ஆன்லைன்’ என்பதை வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தாமலிருக்கிறார்கள். நம்மை விடப் பல ஆண்டுகள் பின் தங்கியிருந்த ஒதிஷா மாநிலம் நவீன் பட்நாய்க் எனும் அற்புத மனிதரால் டிஜிடல் மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

குடும்பத்தோடு தீக்குளிப்பு என்ற அபிநயாவின் ஐடியா மூலம் சான்றிதழ் வாங்கியது அருமை. அதே மாதிரி முன்னாள் காவலரின் மனைவியைத் தொந்தரவு செய்பவர்களிடமிருந்து காக்க அவருக்கு ‘எயிட்ஸ்’ என்று கதை கட்டி காப்பாற்றியது போற்றுதலுக்குரியது.

ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வாயிலாக மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டியிருப்பது மற்றொரு சிறப்பு. எந்தப் பாத்திரமும் இக்கதையில் சோடை போகவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பைக் கொடுத்து அதைக் கதையில் வலிந்து திணிக்காமல் இயல்பாக இருக்குமாறு கையாண்டிருக்கிறார்.

எழுத்து என்பது ஒரு படைப்பாளியின் மனசாட்சி. வெறுமனே கதை சொல்லாமல் சமுதாயப் பிரச்சினையை உள்ளடக்கியதாக, சமூக அவலங்களை அம்பலப்படுத்துவதாக நமது படைப்பு இருக்க வேண்டும். என் வாலிப வயதில் ஜெயகாந்தன், பிரபஞ்சன், நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களின் படைப்புக்களைத் தேடித்தேடிப் படித்திருக்கிறேன்.

தொடர்ச்சியான கதையாடல், தொய்வில்லாத நடை. வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல கதை படித்த திருப்தி. வாழ்த்துக்கள் அகிலாண்ட பாரதி.

இப்போதுதான் கவனித்தேன் கண்மணி நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் என்று. முற்றிலும் பரிசுக்கு தகுதி வாய்ந்த நூல் இது.

நட்புடன்,
எம். ஞானசேகரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!