அடுத்த முதல்வர் யார்?
ஜனவரி 1988 10-ம் தேதியன்று கல்கி வார இதழில் எம்.ஜி.ஆர். இறந்த சில தினங்களே ஆன போது வெளியான தலையங்கம் இது!
குடுமிப் பிடிச் சண்டை!
இந்த இதழ் வாசகர்களின் கரங்களை வந்தடைவதற்கு முன் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பது ஒருவேளை தீர்மாணமாகி விடலாம். ஆனாலும் அதற்கு முன்பாக நடந்து கொண்டிருக்கிற அசிங்கங்களின் நாற்றம் அடங்க இன்னும் பல காலம் ஆகும். ''உள்கட்சி விவகாரம்; நமக்கென்ன வந்தது?'' என்று நாம் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்க முடியாது. காரணம், நாளை நம்மை ஆளப்போகிறவர்கள் இவர்களே. ஒரு சோதனையான காலகட்டத்தில் எப்படி இவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை ஆராய்வது நமது கடமை.
முதல்வரின் உயிர் பிரிந்து அவரது உடல் பூமிக்கடியில் மறையுமுன்னரே இவர்கள் தங்கள் கோஷ்டிப் பூசலை ஆரமுபித்து விட்டார்கள். ஜெயலலிதாவை இறுதி ஊர்வல வாகனத்திலிருந்து இழுத்துத் தள்ளியதும் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அழைத்துப் போய் வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியதும் அ.தி.மு.க. கட்சிக்கும் அதனை நிறுவிய தலைவருக்கும் பெரிய அவமானத்தைத் தேடித்தந்துள்ளன. அதுதான் போகட்டும் என்றால் துக்க தினங்கள் முடிவடைவதற்கு முன்பாகவே அடுத்த முதல்வர் யார் என்பதில் ஏற்பட்டிருக்கிற போட்டா போட்டியும், ஒருவரை ஒருவர் கவிழ்க்க நடக்கிற சதித் திட்டங்களையும் காணச் 'சீ' என்று போய்விட்டது நமக்கு.
பார்க்கப் போனால் ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் காலமானால் அடுத்தவர் பதவிக்கு வருவது மிகவும் இயல்பாகவும் சுலபமாகவும் நடக்க வேண்டிய ஒரு காரியம். ஆனால் நமது நாட்டில் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி நல்ல ஜனநாயக மரபுகள் கடைபிடிக்கப் படுவதில்லை. உள்கட்சி ஜனநாயகம் என்பது அடியோடு இல்லாததால் புதிய நல்ல தலைவர்கள் உருவாவதில்லை என்பதோடு, இது போன்ற ஒரு சோதனையான காலகட்டத்தில் அவனவனும் தன்னைத்தானே தலைவனாக நினைத்துக் கொள்கிற தான்தோன்றித்தனம்தான் தலையெடுக்கிறது.
துணைப் பிரதம மந்திரியாக இருந்த பட்டேல் காலமான பிறகு அந்தப் பதவிக்கு வேட்டு வைத்தவர் நேரு. அந்த முன் மாதிரியை மாநில முதல்வர்களும் பின்பற்றப் போக, பிரதமரின் அல்லது முதல்வரின் இடத்தைத் தாற்காலிகமாகக் கூட இட்டு நிரப்புவது என்பது பெரும் பிரச்னையாகி விட்டது. அமைச்சரவையில் இரண்டாவது தகுதி, மூன்றாம் தகுதி என்ற ''ராங்க்'' முறை கூட அனைவரும் அறியத் தெளிவாக்கப்படுவதில்லை. இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
எப்படியோ எம்.ஜி.ஆர். மறைந்த கையோடு ஒரு நெருக்கடியைச் சமாளித்து, தாற்காலிக முதல்வர் என்ற அளவில் நெடுஞ்செழியனை பதவியில் அமர வைத்து விட்டார் ஆளுநர். அதன் பின்னர் பதிவிப் போட்டிகளும் பொறாமைக் கொந்தளிப்புகளும் வெடித்தெழ அதிக காலமாகவில்லை. இதுவரை கட்சி நடவடிக்கைகளிலோ ஆட்சி அதிகாரத்திலோ சம்பந்தப்படாமல், ஒரு எம்.எல்.ஏ. வாகக் கூட இல்லாமல் இருக்கிற வி.என்.ஜானகியை அடுத்த முதல்வராக்கப் பார்க்கும் வீரப்பன், ''கட்சி உடையாமல் இருப்பதற்காகத்தான் எம்.ஜி.ஆரின் மனைவியை முதல்வராக்க முயல்கிறேன்'' என்று காரணம் கற்பிப்பது சிரிபிற்கு இடமளிப்பது மட்டுமல்ல; அவரது உள் நோக்கமும் தெளிவாகவே புரிகிறது.
''ஜானகி ஒரு மோசமான முதல்வராக திகழ்வார்'' என்று நாம் இப்போதே தீர்ப்பு வழங்கக் கூடாதுதான் என்றாலும், 'அவர் பதவிக்கு வரவேண்டிய முறை இதுவல்ல என்று அழுத்தம் திருத்தமாகக் கூறலாம்.' இதற்கு மறுபுறமாக 'இப்போதுள்ள மந்திரி சபை இப்படியே அடுத்த தேர்தல் வரை தொடர்வதுதான் நியாயம்; அதைத்தான் எம்.ஜி.ஆர். விரும்புவார்' என்ற நெடுஞ்செழியனின் கூற்றும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. இதற்கிடையில் கே.ஏ.கே., எனக்கு மட்டும் அமைச்சராக உரிமை இல்லையா?' என்று ஏங்க, ஜெயலலிதா கோஷ்டி 'ஐயோ கட்சியை உடைக்கிறார்களே! என்று புலம்ப, எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதாகவும் கடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவர, நிலைமை படு கேவலமாகி விட்டது.
கட்சி எம்.எல்.ஏக்கள் முறையாகக் கூடி, நிர்பந்தங்கள் ஏதுமற்ற அமைதிச் சூழலில் சுதந்தரமாக இயங்கி, தங்கள் அடுத்த தலைவரை - தமிழக முதல்வரை - ஒழுங்கான விதத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் - அமைச்சரவையைக் கலைத்துவிட்டு மக்களைச் சந்திக்கச் செல்லட்டுமே! பார்க்கப்போனால் இவர்களில் யாருக்குத்தான் மக்கள் ஓட்டுப போட்டார்கள்? எல்லாமே எம்.ஜி.ஆருக்கு விழுந்த ஓட்டுக்கள்தானே!
4 கருத்துகள்:
இன்றும் தாய்குலங்கள் ஓட்டு எம்.ஜி.ஆருக்கு தான்...!
அந்த ஓட்டுக்களைத்தான் ஜெயலலிதா இன்றும் அறுவடை செய்து கொண்டிருக்கிறார். வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே!
I remember one english daily wrote an article under the heading " Miss Vs Mrs"
அது எந்த தினசரி என்று குறிப்பிட்டிருந்தால் நாங்களும் படிப்போமில்லையா சிவா?!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!