அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து மூப்பனார் தனியாக தமிழ் மாநில காங்கிரஸ் என்கிற புதிய கட்சியைத் துவங்கி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலைச் சந்தித்து பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி தி.மு.க. அரியனையில் ஏறக் காரணமாக இருந்தது.
இதே கூட்டணி 1998-ல் பாராளுமன்றத் தேர்தலிலும் நீடித்தது. அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து போட்டியிட்டது. தமிக வாக்காளர்கள் மாநிலத்திற்கென்று ஒரு முடிவையும், மத்தியில் ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பவர்கள். காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க.வை தேர்ந்தெடுக்க முடிவெடுத்த காரணத்தாலும், வைகோ, ராமதாஸ் எல்லோரும் ஜெ. அணியில் இடம் பெற்றதாலும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனாலும் மத்தியில் தொங்கு பாராளுமன்றமே அமைந்தது.
வாஜ்பாய் பிரதமரானார். ஆனாலும் ஜெயலலிதாவின் போக்கால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது என எல்லாம் நாம் அறிந்ததுதான்.
அப்போது ‘‘துக்ளக்’’ வார இதழ் ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்திருந்தது. பரிசுகளை தமிழ் மாநில காங்கிரஸ் தருவதாகவும் ஏற்பாடாகியிருந்தது. கட்டுரைப்போட்டியின் தலைப்பு, ‘’என்ன செய்யவேண்டும் புதிய அரசு?’’
நான் வேலை செய்த நிறுவனத்தில் அப்போது தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நிறுவனத்திற்கு வெளியில் பந்தல் அமைத்து நாள் முழுவதும் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவதும், அவ்வப்போது நிறுவனத்திற்கெதிராக கோஷம் போடுவதுமாய் இருந்தவர்களில் நானும் ஒருவன். நான் எப்போதும் கையில் ஏதாவது வாரப் பத்திரிகையையோ அல்லது பாலகுமாரன் புத்தகத்தையோ வைத்துக்கொண்டு வாசித்துக்கொண்டிருப்பது வழக்கம்.
அப்போது தொடர்ந்து ‘துக்ளக்’கை வாங்கிக்கொண்டிருந்தேன். அதில் இந்தக் கட்டுரைப் போட்டி அறிவிப்பைப் பார்த்ததும், ‘நான் இதில் கலந்து கொள்கிறேன், ஜெயித்தும் காட்டுகிறேன் என்று பேச்சு வாக்கில் நண்பர்களிடத்தில் சவால் விட்டேன். அன்றே அக் கட்டுரையை எழுதி அனுப்பியும் விட்டேன். ஒவ்வொரு வாரமும் முடிவு எப்போது வரும் என்று ஆவலாய் காத்திருந்தேன். ஏனென்றால் நிச்சயம் எனது கட்டுரை பரிசுக்குரியதாக தேர்வாகும் என்ற நம்பிக்கை. இதற்கு முன் கட்ட்டுரைப் போட்டி எதிலும் பங்கெடுத்ததில்லை. ஆனாலும் பள்ளியில் படித்த நாட்களில் எப்போது கட்டுரைப்போட்டி அறிவித்தாலும் அதில் நான் கலந்து கொண்டால் எனக்குத்தான் முதல் பரிசு என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
இதற்குக் காரணம் எனது வாசிப்புப் பழக்கமே காரணமின்றி வேறேதுமில்லை. அந்த நம்பிக்கையில்தான் காத்திருந்தேன். வேலூருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது கிண்டியில் இறங்கி மின்சார இரயிலில் பயணிக்கும்போது ஒருவர் கையில் அந்த வார துக்ளக்கை பார்த்தேன். இரயில் நின்றதும் இறங்கிப்போய் வாங்கிப் பார்க்கும் வரை பொறுமை இல்லாததால், பக்கத்தில் பயணித்த அந்த நபரிடம், சார், ஒரு நிமிஷம் ஒரு தகவல் ஒன்றைப் பார்க்கணும், உடனே கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி புத்தகத்தை வாங்கி பரபரவென்று புரட்டி அந்தப் பக்கத்தைப் பார்த்தால்….
ஆம்.. முடிவு
வெளியாகி பரிசு பெற்றவர்களின் விபரமும் அதில் இருந்தது. எனக்கோ மகிழ்ச்சி ஒரு புறம், வருத்தம் மறுபுறம்! மகிழ்ச்சிக்குக் காரணம் எனக்கு கட்டுரைப்போட்டியில் ‘’பரிசு’’ கிடைத்திருந்தது. வருத்தத்திற்குக் காரணம் முதல் பரிசு கிடைக்காமல், இரண்டாம் பரிசு கிடைத்ததுதான். அன்றைய தினத்தில் நண்பர்களிடையே எனக்குக் கிடைத்த பராட்டைச் சொல்லவா வேண்டும்!?
அதே போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த மாலா என்கிற தோழியின் நட்பும், அமெரிக்காவிலிருந்து இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு நண்பரான திரு. சுப்ரமணியன் அவர்களின் நட்பும் எனக்கு இதன் மூலம் சாத்தியமாயின. கூடவே பரிசுத்தொகையாக ரூபாய் 1500-ம் கிடைத்த்தையும் சொல்லியாக வேண்டும் இல்லையா!?
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த கராணத்தால் சம்பளமே கேள்விக்குறியாய்ப் போன அந்த நேரத்தில் இந்தத் தொகை எனக்கு அந்த மாதத்திய செலவுக்கு மிகவும் உதவியாய் இருந்தது.
அந்தக்கட்டுரை வெளிவந்த ‘துக்ளக்’கின் அட்டைப்படம்,
‘’என்ன செய்யவேண்டும் புதிய அரசு?’’ - கட்டுரை
மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு அரசு
அமையுமானால், நம் எதிர்பார்ப்பு என்னென்னவாக இருக்கும்? அவை கவனிக்க வேண்டிய பிரச்னைகள் எவை?
முதலில் அரசாங்கம் எதுவாக இருந்தாலும்
செயல்படக்கூடிய அரசாக இருக்க வேண்டும். திறமையும் நேர்மையும் உடையவர்களுக்கு மட்டுமே
அமைச்சர் பொறுப்புக்களை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரவர்
துறைகளில் நிர்வாகம் ஒழுங்காக இயங்கும்.
உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா
திகழ்கிறது. இருப்பினும் புதிய பொருளாதாரக் கொள்கையால் பொருளாதார அசைவுகள்
அனைத்தையுமே உலக வங்கியின் (IMF) உத்தரவுகளே இயக்கும் என்ற மோசமான
நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. நமது நாடு சந்தைப் பொருளாதாரத்தை
ஏற்றுக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்குவது எளிதல்ல. எனவேதான்
உலக அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
வறுமையில் சிக்கித் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கில்
இருக்கும்போது, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை உலக மயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார் மயமாக்கம் என்ற பெயர்களில் மக்களின்
அடிப்படை வசதிகளுக்கும்,, வாழ்க்கைத் தரத்துக்கும் சாவு மணியடிக்கும்
சவாலாக மாறி வருகிறது.
இது மட்டுமல்ல, பொருளாதார
சீர்திருத்தத்தால் வரும் சர்வதேசப் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாமல், இந்திய நிறுவனங்கள் பல படுத்து விட்டன. அதாவது இழுத்து
மூடப்பட்டு விட்டன. காந்திஜி கூறியபடி நம் நாட்டிற்குத் தேவை
பெருவாரியான உற்பத்தி அல்ல. பெருவாரியான மக்களால் செய்யப்படும்
உற்பத்திதான் தேவை.
மக்கள் நலம் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு, பொருளாதாரத்தின் நாடி நரம்புகளாக இருக்கும் துறைகளில் பன்னாட்டு
நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும். அதே போல அரசுக்கு வருவாய்
ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியார்களுக்கு தாரை வார்க்கப்படுவதும்
தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் இறக்குமதித் தீர்வைகள் வெட்டப்பட்டு
அந்நியப் பொருட்கள் குவிக்கப்படுவதையும் நிறுத்தியாக வேண்டும்.
நமீபத்தில் கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட
நிலைமை நம் நாட்டுக்கும் வராமல் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மொத்தத்தில்
பொருளாதார மேம்பாட்டுக்கும், ஏழ்மையை விரட்டுவதற்கும் சம்பந்தமே
இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும்.
100-க்கு 66 பேர் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ள நம் நாட்டில், விவசாயத்திற்காக விவசாயம் மற்றும்
ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியால் (Bank of Agriculture and Rural
Development) ரூ. 500 கோடி என்று ஒதுக்கப்பட்ட
தொகையை, ரூ.2000 கோடி வரை உயர்த்தப்போவதாக
இப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்ததை, புதிய அரசும் தொடர வேண்டும்.
அடுத்து ஜனநாயகம், மனித
உரிமை இவை பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசும் நம்மால் ஜாதி மத மோதல்களில்லாமல் வாழ
முடியவில்லை. நாடு எதிர்நோக்க வேண்டிய பிரச்னைகளை கருத்தில் கொண்டு
ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் அனைத்து அமைப்புகளையும்,
தீவிரவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும். அயோத்தியில்
பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்னையை நீதி மன்றத்திடம் விட்டுவிட
வேண்டும். மதப் பிரச்னைகளில் அரசு தாற்காலிகத் தீர்வு கண முயலாமல்
நிரந்தரமாக தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக – கடந்த
25 வருடங்களாக ஒரு நிலையான தீர்வு ஏற்படாமல் இழுபறி நிலையிலேயே இருந்து
வரும் காவிரி நீர்ப் பிரச்னையில், காவிரி நடுவர் மன்றம் அளித்த
இடைக்கால உத்தரவை இணக்கமான முறையில் அமுல் படுத்தப்பட வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய
நதிகளை இணைப்பதன் மூலமும், கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து
வீணாகக் கடலில் கலக்கும் ஆறுகளையும் தமிழகத்திற்குத் திருப்புவதன் மூலமும் ஆந்திரா,
கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தண்ணீர்
தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
மூன்றாவதாக ஊழல் ஒழிப்புக்கு முதலிடம்
தந்து, அது பற்றிய வழக்கு விசாரனைகளுக்கு தனி நீதி மன்றம் அமைத்து,
உடனடி தீர்ப்பு வழங்கி தண்டனை அளிக்க வகை செய்ய வேண்டும். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற நிலையை
உருவாக்க வேண்டும். லோக்பால் மசோதாவை நிறைவேற்றி ஒரு முன்னுதாரணமாக
விளங்க வேண்டும்.
நான்காவதாக – அடிமட்டத்தில்
உள்ள சுமார் முப்பது கோடி பேர் சொத்து, நிலம், கல்வி, நிரந்தர வேலை, ஓய்வூதியம்,
கிராஜூவிடி, பிராவிடென்ட் ஃபண்ட், போனஸ், தொழிலாளர் நலச்சட்டம் என இவை எதுவுமே இன்றி வாழ்கிறார்கள்.
இவர்கள் நலனில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி,
ஆரம்ப சுகாதார வசதி, பள்ளிக்கூடம் இவை எதுவுமே
இல்லாமல் வாழும் கிராம வாழ் மக்களுக்கு, வரும் 21-ம் நூற்றாண்டிலாவது விடிவு பிறக்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
ஐந்தாவதாக – வருவாய்
நிதி ஆதாரங்கள் நம் நாட்டில் அதிகமில்லை என்ற காரணத்தால், பாதுகாப்புத்
துறைக்கான செலவினங்களைக் குறைத்து விட முடியாது. CTBT – அணு ஆயுத
சோதனைத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கடைபிடித்து வரும் உறுதியான நிலை தொடர வேண்டும்.
பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்னையில் தீர்வு ஏற்பட முயற்சிக்க வேண்டும்.
வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் நம் நாட்டில் ஊடுருவாமல் பாதுகாப்பு
நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
கடைசியாக – ஏற்றுமதியின்
அளவு குறைந்து இறக்குமதியின் அளவு பெருகுவதையும், விவேகமற்ற,
கட்டுப்பாடற்ற முறையில் அந்நியத் தொழில் நுட்பத்தைப் புகுத்துவதும்
– நம் சமுதாயத்திற்கு ஏற்றவையல்ல என்பதை புதிய அரசு கவனத்தில் கொள்ள
வேண்டும். வறுமை ஒழிப்பு, அனைவருக்கும்
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை வெறும் கனவாகிப் போய்விட்டாலும்,
இவற்றைத் தீர்க்க முடியாவிட்டாலும் குறைக்கவாவது முடியும் என்ற நம்பிக்கை
உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற புதிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எம். ஞானசேகரன்,
சென்னை – 63.
‘துக்ளக்’ வார இதழில்
11.03.1998 –ல்.
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள்...
வாழ்த்திற்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!