ஆர்.எம்.வீ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.எம்.வீ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜனவரி, 2014

இந்த நாளில் அன்று... எம்.ஜி. ஆர். மரணத்திற்குப் பிறகு!

 அடுத்த முதல்வர் யார்?
ஜனவரி 1988 10-ம் தேதியன்று கல்கி வார இதழில் எம்.ஜி.ஆர். இறந்த சில தினங்களே ஆன போது வெளியான தலையங்கம் இது!

குடுமிப் பிடிச் சண்டை!
இந்த இதழ் வாசகர்களின் கரங்களை வந்தடைவதற்கு முன் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பது ஒருவேளை தீர்மாணமாகி விடலாம். ஆனாலும் அதற்கு முன்பாக நடந்து கொண்டிருக்கிற அசிங்கங்களின் நாற்றம் அடங்க இன்னும் பல காலம் ஆகும். ''உள்கட்சி விவகாரம்; நமக்கென்ன வந்தது?'' என்று நாம் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்க முடியாது. காரணம், நாளை நம்மை ஆளப்போகிறவர்கள் இவர்களே. ஒரு சோதனையான காலகட்டத்தில் எப்படி இவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை ஆராய்வது நமது கடமை.

முதல்வரின் உயிர் பிரிந்து அவரது உடல் பூமிக்கடியில் மறையுமுன்னரே இவர்கள் தங்கள் கோஷ்டிப் பூசலை ஆரமுபித்து விட்டார்கள். ஜெயலலிதாவை இறுதி ஊர்வல வாகனத்திலிருந்து இழுத்துத் தள்ளியதும் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அழைத்துப் போய் வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியதும் அ.தி.மு.க. கட்சிக்கும் அதனை நிறுவிய தலைவருக்கும் பெரிய அவமானத்தைத் தேடித்தந்துள்ளன. அதுதான் போகட்டும் என்றால் துக்க தினங்கள் முடிவடைவதற்கு முன்பாகவே அடுத்த முதல்வர் யார் என்பதில்  ஏற்பட்டிருக்கிற போட்டா போட்டியும், ஒருவரை ஒருவர் கவிழ்க்க நடக்கிற சதித் திட்டங்களையும் காணச் 'சீ' என்று போய்விட்டது நமக்கு.

பார்க்கப் போனால் ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் காலமானால் அடுத்தவர் பதவிக்கு வருவது மிகவும் இயல்பாகவும் சுலபமாகவும் நடக்க வேண்டிய ஒரு காரியம். ஆனால் நமது நாட்டில் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி நல்ல ஜனநாயக மரபுகள் கடைபிடிக்கப் படுவதில்லை. உள்கட்சி ஜனநாயகம் என்பது அடியோடு இல்லாததால் புதிய நல்ல தலைவர்கள் உருவாவதில்லை என்பதோடு, இது போன்ற ஒரு சோதனையான காலகட்டத்தில் அவனவனும் தன்னைத்தானே தலைவனாக நினைத்துக் கொள்கிற தான்தோன்றித்தனம்தான் தலையெடுக்கிறது. 

துணைப் பிரதம மந்திரியாக இருந்த பட்டேல் காலமான பிறகு அந்தப் பதவிக்கு வேட்டு வைத்தவர் நேரு. அந்த முன் மாதிரியை மாநில முதல்வர்களும் பின்பற்றப் போக, பிரதமரின் அல்லது முதல்வரின் இடத்தைத் தாற்காலிகமாகக் கூட இட்டு நிரப்புவது என்பது பெரும் பிரச்னையாகி விட்டது. அமைச்சரவையில் இரண்டாவது தகுதி, மூன்றாம் தகுதி என்ற ''ராங்க்'' முறை கூட அனைவரும் அறியத் தெளிவாக்கப்படுவதில்லை. இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

எப்படியோ எம்.ஜி.ஆர். மறைந்த கையோடு ஒரு நெருக்கடியைச் சமாளித்து, தாற்காலிக முதல்வர் என்ற அளவில் நெடுஞ்செழியனை பதவியில் அமர வைத்து விட்டார் ஆளுநர். அதன் பின்னர் பதிவிப் போட்டிகளும் பொறாமைக் கொந்தளிப்புகளும் வெடித்தெழ அதிக காலமாகவில்லை. இதுவரை கட்சி நடவடிக்கைகளிலோ ஆட்சி அதிகாரத்திலோ சம்பந்தப்படாமல், ஒரு எம்.எல்.ஏ. வாகக் கூட இல்லாமல் இருக்கிற வி.என்.ஜானகியை அடுத்த முதல்வராக்கப் பார்க்கும் வீரப்பன், ''கட்சி உடையாமல் இருப்பதற்காகத்தான் எம்.ஜி.ஆரின் மனைவியை முதல்வராக்க முயல்கிறேன்'' என்று காரணம் கற்பிப்பது சிரிபிற்கு இடமளிப்பது மட்டுமல்ல; அவரது உள் நோக்கமும் தெளிவாகவே புரிகிறது.
''ஜானகி ஒரு மோசமான முதல்வராக திகழ்வார்'' என்று நாம் இப்போதே தீர்ப்பு வழங்கக் கூடாதுதான் என்றாலும், 'அவர் பதவிக்கு வரவேண்டிய முறை இதுவல்ல என்று அழுத்தம் திருத்தமாகக் கூறலாம்.' இதற்கு மறுபுறமாக 'இப்போதுள்ள மந்திரி சபை இப்படியே அடுத்த தேர்தல் வரை தொடர்வதுதான் நியாயம்; அதைத்தான் எம்.ஜி.ஆர். விரும்புவார்' என்ற நெடுஞ்செழியனின் கூற்றும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. இதற்கிடையில் கே.ஏ.கே., எனக்கு மட்டும் அமைச்சராக உரிமை இல்லையா?' என்று ஏங்க, ஜெயலலிதா கோஷ்டி 'ஐயோ கட்சியை உடைக்கிறார்களே! என்று புலம்ப, எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதாகவும் கடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவர, நிலைமை படு கேவலமாகி விட்டது.

கட்சி எம்.எல்.ஏக்கள் முறையாகக் கூடி, நிர்பந்தங்கள் ஏதுமற்ற அமைதிச் சூழலில் சுதந்தரமாக இயங்கி, தங்கள் அடுத்த தலைவரை - தமிழக முதல்வரை - ஒழுங்கான விதத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் - அமைச்சரவையைக் கலைத்துவிட்டு மக்களைச் சந்திக்கச் செல்லட்டுமே! பார்க்கப்போனால் இவர்களில் யாருக்குத்தான் மக்கள் ஓட்டுப போட்டார்கள்? எல்லாமே எம்.ஜி.ஆருக்கு விழுந்த ஓட்டுக்கள்தானே!

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது... கருணாநிதி



அப்போது நான் எஸ்.டி. சுந்தரத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். கோவையிலிருந்து என் உறவினர்கள் சென்னை வந்தவர்கள், படப்பிடிப்பு ஏதாவது பார்க்கவேண்டும் என்றனர். எஸ்.டி.எஸ். தயாரித்த படம் வாஹினியில் எடுக்கப்பட்டதால் அந்த அனுபவத்தை வைத்து என் உறவினர்களை வாஹினி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றேன்.
 
அப்போது மக்கள் திலகம் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ பட்ப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. மக்கள் திலகத்தின் காதல் காதல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பைப் பார்க்க என் உறவினர்களை அழைத்துச் சென்றேன். ‘எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடிக்கிறார். அதனால் படப்பிடப்பைப் பார்க்க வெளியார் யாரும் அனுமதிக்கக் கூடாது என்று நொல்லியிருக்கிறார். எனவே உள்ளை அனுமதிக்க முடியாது’ என்று தயாரிப்பு நிர்வாகி கூறிவிட்டார்.

துரதிஷ்டவசமாக அன்று வாஹினியில் வேற் எந்த படபிடிப்பும் இல்லை. புரட்சித்தலைவரின் படபிடிப்பு ஒன்றுதான் நடந்தது. அதிலும் அனுமதி இல்லை என்றவுடன் எனக்கு ஒருபக்கம் வேதனை, மறுபக்கம் அவமானம். என்ன செய்வது என்று புரியாமல் தவித்த சமயம் எம்.ஜி.ஆர். வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் வணக்கம் தெரிவித்தேன்.

அவரும் வணக்கம் தெரிவித்துவிட்டு என்னைத் தெரிந்தவர் போல ‘என்ன சௌக்கியமா? என்றார். ‘நல்லாயிருக்கேன்” என்றேன் நான். பின் என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். ஊரிலிருந்து தங்கள் படபிடிப்பைப் பார்க்க வந்திருக்கிறார்கள்’ என்று தெரிவித்தேன்.
‘’பார்க்கலாமே! உள்ளே கூட்டிப்போங்கள்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். அவ்வளவுதான், என் உறவினர்களை உள்ளே கூட்டிச் சென்று படபிடிப்பைக் காட்டினேன். தயாரிப்பாளர் எனக்கும், என் உறவினர்களுக்கும் ஏகப்பட்ட மரியாதை காட்டினார். நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருங்கியவன் என்ற நினைப்பு அவருக்கு.

அன்றுதான் நான் முதன் முதலில் புரட்சித்தலைவரை முதன் முதலாக சந்தித்துப் பேசியது. அதன் பின்னர் விஜயா கார்டனில் ஒரு விழா. ஒரே நட்சத்திரக்க்கூட்டம். நானும் போயிருந்தேன். அந்த விழாவிற்கு புரட்சித்தலைவரும் வந்தார். வழியில் நின்ற என் முதுகில் யாரோ தட்டுவது தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். புரட்சித்தலைவர்தான் என் முதுகைத் தட்டியவாறே உள்ளே சென்றவர் என்னைப் பார்த்து, ‘’ என்ன சௌக்கியமா?’’ என்றார். அவரது நினைவாற்றலை யினைத்து என்னுள் நானே வியந்து கொண்டேன்.

அவர் அப்போது குடியிருந்த லாயிட்ஸ் சாலையில்தான் எஸ்.டி.எஸ். புரோடக்ஷன்ஸ் அலுவலகமும் இருந்தது. காலை நேரத்தில் நான் வெளியே நிற்பதுண்டு. அப்போது அவ்வழியே காரில் போகும்போதெல்லாம் கையை ஆட்டி என்னைப் பார்த்து சிரித்தவாறே செல்வார். அது சமயம் என் மெய் சிலிர்க்கும். நானோ மிகவும் சாதாரணமானவன், அவரோ மிகவும் பிகழ் பெற்றவர். மிக எளியவர்களிடம்கூட அவர் காட்டும் பரிவை எண்ணி நான் இன்று கூட வியப்பதுண்டு.

நாடோடி மன்னன் படம் வெளியிடுவதற்கு முன்பு; பெரிய தலைவர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு அதை போட்டுக்காட்டினார் மக்கள் திலகம். என் குரு எஸ்.டி.எஸ். என்னையும் அந்தப் படத்தைப் பார்க்க கூட்டிச் சென்றார். படம் தொடங்குவதற்கு முன்னர் எஸ்.டி.எஸ்.ஸிடம் எம்.ஜி.ஆர். பேசிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன். பின்னர் தலைவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் எஸ்.டி.எஸ்.

‘’அவரை எனக்குத் தெரியுமே!’’ என்றார் எம்.ஜி.ஆர். அப்போது அவரது உயர்ந்த பண்பை நினைத்து என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.

சோ. கருணாநிதி.


வெள்ளி, 4 அக்டோபர், 2013

“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம்.ஜி.ஆர். மனதை மிகவும் நோகச் செய்துள்ளன. எம்.ஜி.ஆரே பலமுறை தோட்டத்துக்கு வரச் சொல்லியும் ஜெயலலிதா சரியாக ‘ரெஸ்பான்ஸ்’ செய்யவில்லை. ஒரே ஒருமுறை தோட்டத்துக்குப் போனபோது எம்.ஜி.ஆரோடு தகராறு செய்து மேலும் அவர் கோபத்தை அதிகப் படுத்தினார்.

தவிர, எம்.ஜி.ஆர். தலைமைக் கழகத்திற்கு வரும்போது ஜெயலலிதா வேண்டுமென்றே அங்கு வராமல் தவிர்த்தார். கட்சிக்காரர்கள் முன்னிலையில் தன்னை ஜெயலலிதா அவமதிப்பதாகத் தோன்றியது எம்.ஜி.ஆருக்கு. எனவே ஜெயலலிதாவுக்கு ஒரு அதிர்ச்சி தந்தால்தான் சரிப்பட்டு வருவார் என்று தீர்மானித்தார் எம்.ஜி.ஆர்.

இது போல ஒரு ஷாக்கை ஆர்.எம்.வீ. முன்பு வாலாட்டியபோது தந்தார் எம்.ஜி.ஆர். அவர் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் இதர அமைச்சர்களிடமும் ஆர்.எம்.வீ. செய்யும் எந்த சிபாரிசுகளையும் ஏற்கக் கூடாது, அதோடு கட்சிக் கூட்டங்களில் அவரைச் சேர்க்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார். இதனால் பதிவி இழந்த ஆர்.எம்.வீ. அரசியல் ரீதியாகவும் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டார்.

இப்போது அதைவிட பெரிய நெருக்கடியை ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தியுள்ளார் எம்.ஜி.ஆர். சட்டமன்றக் கூட்டம் முடிய ஒருநாள் இருக்கையில் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருந்த அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களையும் ராமாவரம் தோட்டத்திற்கு வரும்படி எம்.ஜி.ஆரின் பி.ஏக்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். உடனே அங்கிருந்த எம்.எல்.ஏக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அவர்கள் தோட்டத்தை அடைந்தவுடன் வந்திருந்தவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்டர்காம் மூலமாக எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு எம்.ஜி.ஆரின் அந்தரங்க உதவியாளர்கள் வந்திருந்த எம்.எல்.ஏக்களிடம் ஜெயலலிதாவுக்கு எந்த விதமான முக்கியத்துவமும் அவர்கள் அளிக்கக் கூடாது என்றும், அல்லது அவரோடு தொடர்பு கொள்வதோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது என்றும் அதுபோல அவரது படத்தை கட்சியின் வால்போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டுள்ளதாக் கூறினார்கள். இது மட்டுமல்லாமல் தலைமைக் கழகத்துக்கு அவர் வந்திருந்தாலும், அவரிடம் மனுக்களோ, இதர தகவல்களோ தரக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது.

உடனே அங்கு வந்திருந்த எம்.எல்.ஏக்கள் அப்படியே நடக்கிறோம் என்று உறுதி அளித்தார்கள். அன்று கூட்டத்திற்கு வரமுடியாத எம்.எல்.ஏக்கள் மறுநாள் காலை தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

ஆர்.எம்.வீரப்பனுக்காவது மந்திரிகள் மட்டத்தில்தான் இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனல் ஜெயலலிதாவுக்கு எம்.எல்.ஏக்களின் மட்டத்திலேயே இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவை கட்சியிலிருந்தே தூக்கி எறிய எம்.ஜி.ஆர். தீர்மானித்துவிட்டார் என்று தெரிகிறது.

ஆனால் எப்போதும் போல அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்குப்போய் வருகிறார் ஜெயலலிதா, அங்கு கட்சித் தொண்டர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதுவும் எத்தனை நாளைக்கு நிலைக்கப் போகிறது என்று தெரியவில்லை. அநேகமாக கட்சித் தொண்டர்களோடு அவருக்கு இருக்கும் உறவையும் எம்.ஜி.ஆர். அறுத்து விடுவார் என்றே தோன்றுகிறது.

அதற்குப் பிறகு வேறு வழியே இல்லை. ஜெயலலிதா கட்சியை விட்டு தானே வெளியேறியாக வேண்டும். இதை வைத்துப் பார்த்தால், ஆர்.எம்.வீக்குத் தந்தது போல ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தராமல் ஒரே நெத்தியடியாக கட்சியிலிருந்தே ஓடச்செய்ய திட்டமிடுகிறார் என்றே தோன்றுகிறது.

(17.07.1987 தராசு இதழில் வெளிவந்த செய்தி இது! யாரை வெளியேற்ற நினைத்தார்களோ அவர் இன்று விசுவரூபமாய் வளர்ந்து நிற்கிறார். அவரை வளரவிடாமல் தடுத்தவர்களோ அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். இதுதான் காலத்தின் கோலம் என்பதோ?!)