Tuesday, December 31, 2013

மறக்க முடியாத ஆண்டு - 2013


வருடந்தோரும் புத்தாண்டு வரத்தான் செய்கிறது. ஒவ்வோரு மனதிலும் சில நம்பிக்கைகள். வரும் ஆண்டாவது நம் வாழ்க்கையில் நல்லது நடக்காதா என்று. ஒவ்வொருவருக்கும் விதம் விதமான எதிர்பார்ப்புகள். ஆசை யாரை விட்டது! ஒவ்வொருவரின் லாப நட்டக்கணக்குகள்தான் அந்த ஆண்டு சிறப்பானதா இல்லை மோசமானதா என்று தீர்மாணிக்கின்றன.

இயற்கைப் பேரழிவுகளும், விபத்துக்களும் கூட அந்த ஆண்டின் தகுதியை நிர்ணயம் செய்துவிடுகின்றன. ஆனால் காலத்துக்கேது ஆண்டும் கிழமையும். அது தன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. விலங்குகள் எல்லாமே அதற்குத் தகுந்தாற்போல் தங்களுடைய வாழ்கையை தகவமைத்துக் கொள்கின்றன.

ஆனால் இந்த மனிதர்களுக்கு மட்டும் இது மிகப்பெரிய போராட்டம். பணம் பொருள், சொத்து, உறவு என எல்லாவற்றாலும் வாழ்க்கை பிண்ணிப் பிணைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். 2004-ல் தமிழ்நாட்டில் சுனாமிப் பேரலை வந்து கடற்கரையோர மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

அதே போல இந்த ஆண்டு ஓடிசாவில் ‘’பைலின்’’ புயல் வந்து வாரிச் சுருட்டிவிட்டுப் போனது. சுனாமியின் போது நான் தமிழ்நாட்டில் இல்லை. அப்போதுதான் ‘துபாயில்’ கால் வைத்திருந்தேன். பணியில்கூட சேர்ந்திருக்கவில்லை. நான் அங்கு போன மூன்றாவது நாளில் சுனாமி வந்து அடித்து விட்டுப் போனதை தொலைக்காட்சியில்தான் பார்க்க நேர்ந்தது. ஆனால் இந்த ‘பைலின்’ புயலின் போது ஒடிசாவில் தாக்குதலுக்கு முக்கிய இலக்கான பகுதியில் இருந்தது மறக்க முடியாத அனுபவம். அந்த அனுபவத்தை ''புயலும் வாழ்வும்’’ என்ற பதிவில் எழுதியிருந்தேன்.


இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு மாநில முதல்வரை (ஒடிசா) மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பையும் பெற்றேன். தமிழ்நாட்டுச் சூழலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. மிக எளிமையான மக்களுக்கான முதல்வர் ‘’நவீன் பட்நாயக்’’ என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. எங்கள் நிறுவனத்தோடு டாடா ஸ்டீல் நிறுவனமும் இணைந்து கலிங்கநகர் பகுதியில் அமைத்த ஒரு தொழிற் பயிற்சி நிறுவனத்தைத் துவக்கி வைக்கவே ஒடிசா முதல்வர் வந்திருந்தார். அதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 

புத்தகங்களைப் படிப்பது என்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. ஒரு காலத்தில் புத்தகப் புழுவாகவே இருந்தேன். வெளியில் எங்கு கிளம்பினாலும் கையில் புத்தகம் இருக்கும். அல்லது ஏதாவது வாங்கிவிடுவேன். பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்கிளிலும், பயணங்களின் போதும் புத்தகம் எப்போதும் என்னுடன் இருக்கும்.

ஆனால் இப்போது இணைய தளங்களில் வாசிப்பதோடு வாசிப்பனுபவம் நின்று போய்விடுகிறது. அதனால் புத்தகங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. படிப்பதற்கு நேரமும் இருப்பதில்லை. இப்படி நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் ‘’தேவியர் இல்லம்’’ மிக முக்கியமானது. அதில் ஜோதிஜி அவர்களின் எல்லா பதிவுகளையும் படித்துவிடுவேன்.
இந்த ஆண்டு அவரின் ‘’டாலர் நகரம்’’ புத்தகமாக வெளிவந்தபோது வெகு ஆர்வமாக அவருக்கு கடிதம் எழுதி எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதுதான் இந்த ஆண்டு நான் படித்த ஒரே புத்தகம். அந்த புத்தகத்தைப் பற்றிய எனது கருத்துக்களை இந்த எனது பதிவுகளில் (டாலர் நகரம் எனது பார்வையில்..., வேலையை மட்டும் விட்டுடாதேடா...) எழுதியிருக்கிறேன். 

இப்போது மீண்டும் அவரது ஈழம் குறித்த பதிவுகளைத் தொகுத்து மின்நூலாக இலவசமாக வெளியிட்டிருக்கிறார். இந்த இணைப்பில் 'ஈழம் வந்தார்கள் வென்றார்கள்' என்ற அந்த நூலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆனாலும் நான் இதை இன்னும் முழுமையாக படிக்கவில்லை.

அப்புறம் இந்த ஆண்டு நான் எழுதிய பதிவுகளில் காதல் திருமணம் மற்றும் ஜாதி குறித்த ஒரு பதிவு எனக்கு மன நிறைவைத் தந்த ஒன்று. அந்தப் பதிவை (தன் வினை தன்னைச்சுடும்) இந்த இணைப்பில் படிக்கலாம். மற்றுமொரு பதிவாகிய 'என் இனிய ஸ்நேகிதிக்கு' என்ற பதிவில் என் பழைய காதல் கதையைச் சொல்லியிருந்தேன். ஆனால் நான் இன்னும் எழுதவேண்டியது இன்னும் இருக்கிறது.

சதா எழுதிக்கொண்டேயிருக்கும் வா. மணிகண்டனின் 'நிசப்தம்' தளமும் நான் விரும்பி தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் ஒன்று. இவரின் தளத்தைப் பார்த்து நாமும் இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். அப்புறம் வேலைப் பளுவில் எல்லாம் மறந்துபோவேன்.

அதே போல குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு சலிப்பில்லாமல் எழுதிக்கொண்டிருக்கும் 'காணாமல் போன கனவுகள்' ராஜி அவர்களின் பதிவுகளும், பத்திரிகைத் துறையிலும், சிறு கதைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் 'உஷா அன்பரசு' இவர்கள் இந்த ஆண்டில் என்னைக் கவர்ந்த பதிவாளர்கள்.

மேலும் இந்த பதிவில் 'கவிப்ரியன்' என்ற புனைப்பெயரில் பதிவுகளை எழுதி வந்த நான் முதன்முறையாக நான் யார் என்பதையும் அறிவிக்கிறேன். அதாவது என் நிஜமுகத்தையே பதிவின் முகப்பில் காட்டியிருக்கிறேன். எனது நிஜப்பெயர் எம்.ஞானசேகரன். வேலூர் மாவட்டம் இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலுக்கு மிக அருகில் உள்ள எனது சிற்றூர்  வேலூர் மற்றும் ஆர்காட்டுக்கு நடுவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இனி நிஜப்பெயரிலேயே சந்திப்போம்.

அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு (2014) வாழ்த்துக்கள்!

அன்புடன், 
கவிப்ரியன் என்கிற ஞானசேகரன்.

4 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

எங்கள் குடும்பத்தின் இனிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!