வியாழன், 6 ஜூன், 2013

என் இனிய ஸ்நேகிதிக்கு....


இது அன்பா? அடிமைத்தனமா? எனக்கு உன்னைத் தவிர வேறு ஸ்நேகிதிகள் இருந்தால் பொறாமைப்படுவியா? உனக்கு என்னைத் தவிர வேறு ஆண் நண்பர்கள் இருந்தால் காழ்ப்புணர்ச்சி வருமா? நான் சாதாரண நலம் விசாரிக்கும் பல தோழிகளைப் பெற்றிருந்தாலும் உன்னுடன் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கமான நெருங்கின நண்பனாக இருக்க விரும்புகிறேன்.

இது அன்புக்கட்டுப்பாடா? இல்லை என்னுடன் மட்டுமே நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற அடிமைத்தனமா? புரியவில்லை. பெண்கள் பொதுவாய் தன்னுடையவனை அடுத்தவருக்கு விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. அதுபோல நாங்களும் இருக்கக்கூடாதா என்ன?

பெண் அண்மை, பெண் வாசனை என்னவென்று 27, 28 வயதில் எனக்கு உணர்த்திய அந்த முதல் தோழியைப் பற்றி சொல்லவா? என் அந்த வயது வரை என் நிலைமை என்ன தெரியுமா? இப்போது உன் புலம்பலைப் போலத்தான் அன்று என் நிலைமை!

என்னடா செய்யனும் உன்னை? ப்ளீஸ் அது மட்டும் வேண்டாம். என்னக் கட்டிக்கோ. இறுகித் தழுவிக்கோ! உனக்கு இந்த அளவுக்காவது நான் ஆறுதல் கொடுக்கலேன்னா நான் என்ன நெருங்கிய தோழி?



‘கற்பு பற்றி எனக்கு கவலையில்லை. அதனால எனக்கு கற்பு போயிட்டுதா நான் நினைக்கலை. ரொம்ப கஷ்டமாயிருந்தா "அந்த மாதிரி" பொண்ணுங்க கிட்ட போயிட்டுவா. ஆனா இதுக்கு மட்டும் என்னக் கூப்பிடாதே! என் புருஷனுக்கு நான் முழுசா போகணும்’. ஏனோ இது மட்டும் ஒப்பலைடா. அப்படி கண்டிப்பா நான் வேணும்னா ஜடமாய்த்தான் நான் வருவேன். அன்னிக்கே என் மனசிலே இருந்து உங்களை தூக்கி எறிஞ்சிடுவேன்.

என்னவோ எனக்கு அது அசிங்கமா படுது. அந்த அசிங்கம் என் புருஷனோட போகட்டும். இந்த தமிழ்ப்பண்பாடு உம்புல மனசுல ஊறிப்போய்க் கிடக்கு. ப்ளீஸ்… என்னைக் கம்பல் பண்ணாதீங்க. ஒரு வேளை என் வாழ்க்கை பாழாப்போச்சின்னா நிச்சயமா உன்கிட்ட வருவேன். அப்போ என்னை ஏத்துக்குவியா?!

என் தவிப்பு தெரிந்து  இந்த அளவுக்காவது எனக்கு ஆறுதல் கொடுக்கிற அவள் தேவதையாய்த் தெரிந்தாள். தவிப்பு அடங்க கட்டிக்கப்போய் எரிகின்ற கொள்ளியில் எண்ணை வார்த்தது போல நான் கொதித்து அடங்கி நொந்து போனேன்.

என் வேகம் தெரிந்து தன்னையும் காத்துக்கொண்டு என்னையும் முழுசாய் அனுப்பிவைத்தாள். இந்த போக்கிஷம் எனக்கில்லையோ என்று பல நாள் அழுதிருக்கிறேன். ஏங்கியிருக்கிறேன். சில நேரங்களில் என்னை எரிச்சலூட்டியிருக்கிறாள். என்னுடன் முரண்பட்டிருக்கிறாள். ஆனால் அதே சமயம் தான் காதலித்தவனோடு விரல் நகம்கூட படாமல் பழகியவள் என்னைக் கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தியிருக்கிறாள்.

அப்படி ஒருநாள் ‘இந்த’ ஆறுதலுக்கு நான் "நன்றி" சொன்னப்போ, எதுக்குன்னு கேட்டாள்.

எனக்காகவா? என் அன்புக்காகவான்னு நான் கேட்டப்போ….

இல்லை…. ‘எனக்கும் தேவையாயிருந்திச்சின்னு’ ஒளிவு மறைவில்லாமல் சொல்லி அதிர்ச்சி வைத்தியமும் செய்திருக்கிறாள்.

‘உணர்ச்சிகளே மரத்துப்போச்சின்னு நினைச்சிருந்ததை நீங்க புதுப்பிச்சிருக்கீங்கன்னு’… என்று சொல்லி என்னை யோசிக்க வைத்திருக்கிறாள். அவளை நேசித்ததின் விளைவுதான் இன்று சகலரையும் நேசிக்க வைக்கிறது. காதல் உணர்வுகள் என்ன என்பதும், பெண்ணை புரிந்து கொள்ள ஆரம்பித்ததும் அப்போதுதான். அது முதலே ஒவ்வொரு பெண்ணையும் அவர்கள் கோணத்திலேயே என்னைப் பார்க்கச்செய்தது.

அவளை நான் மதித்ததும், அவள் என்னை மதித்ததும் இன்றும் நினைத்தால் மனதில் பசுமையாய் இருக்கிறது. அவள் தோழிகளையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி, என்னைப் பற்றி உயர்வாய்ச் சொல்லி… ‘நீ கொடுத்து வச்சவடி’ உனக்கு நல்ல நண்பர்களாகவே அமையறாங்கன்னு சொன்னதையும் வந்து சொன்னாள்.

என் திருமண நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் தன் குடும்பத்தோடு தோழிகளையும் மறக்காமல் அழைத்து வந்திருந்தாள். திருமணத்திற்கு முதல் நாள் இவள் மட்டும் எல்லோரையும் அனுப்பிவிட்டு என்னுடன் பேச காத்திருந்தாள். சற்று முன்பு வரை கலகலப்பாக பேசியவள் என்னிடம் பேச வந்ததும் ஓவென்று அழத் தொடங்கி விட்டாள்.

அழுகையை நிறுத்தி, சமாதானப்படுத்தி என்னவென்று கேட்டால்… அவளோட ஆள யாரோ ஒரு பொண்ணு வந்து கல்யாணம் பண்ணி சொந்தமாக்கிக்கப் போறாளாம். 

நான் சிரிப்பதா? அழுவதா? என்ன செய்திருப்பேன் சொல் பார்க்கலாம்?

இப்பக்கூட சரின்னு ஒரு வார்த்தை சொல்லு… நான் ரெடிப்பான்னு… நான் நிஜத்தையே ஜோக்காகாகச் சொல்லித்தான் அவளைச் சிரிக்க வைக்க முடிந்தது.

உண்மையில் அவளைக் கல்யாணம் பண்ணிக்க எவ்வளவோ முறை கெஞ்சிப்பார்த்தாயிற்று! என்ன பண்றது? ஜாதி குறுக்கே நிக்குதே?! அதுவுமில்லாம அவள் அவளுடைய பெற்றோரிடத்தில், நீங்க பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்கு கொடுத்திருக்காளாம்.!???



நம்ம நட்பு என்னைக்கும் தொடருமா?

எனக்கு நம்பிக்கை இல்லை! நட்போ காதலோ எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். பின்னாளில் பாத்துக்கவும் முடியாது. பார்த்தா அதிகம் பேசவும் முடியாது. கணவன் சந்தேகப்படுவான் என்பது ஒரு காரணமா இருந்தாலும், நேரம் இருக்காது.

வாழ்க்கையே யந்திரமாய் மாறிப்போய், கணவன், குழந்தை, வீடு, வேலைன்னு சிந்தனை அதைச் சுற்றியே இருக்கும்போது பழைய காதலையோ, நட்பையோ நினைச்சு அப்போ பூரிச்சி போகவும் முடியாது. ஒண்ணஓட்டலுக்குப் போய் காஃபி சாப்பிடவும் முடியாது.

ஆனா நட்பு மறக்காது. எப்பவாது நினைச்சுக்குவேன். நீங்க செஞ்ச உதவி, எனக்கு கொடுத்த மதிப்பு, சந்தோஷம் எல்லாத்தையும்….

வாழ்க்கை எனும் சூறாவளி நம்மை சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது. இன்று யார் யாரோ நம் அருகில். ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு உறவுகளும் நண்பர்களும். இவர்களும் நாளை காணாமல் போகலாம். மீண்டும் புதிய உறவுகள்…..


கல்யாணம் பெண்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்துகிறது? என்னைப்போன்ற ஆண்களை கட்டுப்படுத்துவதில்லையே ஏன்? இந்த தோழி இல்லை என்றால் வேறு ஆள் தேடுவேனா? இல்லை குடும்ப பிரச்னையில் மூழ்கிவிடுவேனா?

என்னைத் தோலுறித்துக் காட்டுவதிலும், சமூகத்தை இந்த வயது வரை உற்று நோக்கி வந்ததன் விளைவாக நான் தெரிந்துகொண்டவைகளை, படித்தவைகளை, அனுபவித்தவைகளை உன்னோடு பகிர்ந்து கொள்வதில் உனக்கேதும் சங்கடமில்லைதானே தோழி?....


தேனை மறந்திருக்கும் வண்டும்
ளி சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிறும்
இந்த வையக முழுதுமில்லை தோழி!
என்னை மறந்துவிட்ட நீயும்
என்னால் நம்ப முடியவில்லை தோழி!


இன்னும் இருக்கு….
 

27 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது… [Reply]

அருமையான உணர்வுகள் பகிர்வு அருமை...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

ஆனா நட்பு மறக்காது. மறக்கக் கூடாது...

சிவக்குமார் சொன்னது… [Reply]

நட்பின் தவிப்பும், காதலின் தவிப்பும் தெரிகிறது. பல பேரின் அனுபவம் சற்றேறக்குறைய இது போன்றதே ! நானும் இது போன்ற (இவ்வளவு நெருக்கமில்லாத போதும்) சில தோழிகளின் பிரிவில் வருத்தப்படுகிறேன்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி நாஞ்சில் மனோ! இதெல்லாம் நான் எப்போதோ கிறுக்கி வைத்தவை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே! இந்தக்காலத்துல நட்பு கூட போலியா மாறிக்கிட்டு வருது நண்பரே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் தமிழாணவன். காதலில் நட்பில் உருகிப்போகிற ஆண் மென்மையாகிறான். மனித் ததன்மையோடு ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் யாராலோ விரும்பப்படுகிறான் என்றி அர்த்தம். பழைய நினைவுகளே இனிமையானவை அல்லவா? இது நான் 2000 ஆம் ஆண்டு டைரியில் எழுதி வைத்தவை.

ஜோதிஜி சொன்னது… [Reply]

உள்ளுர சமாச்சாரம் நிறைய இருக்கும் போலிருக்கே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நிறைய இருக்கு ஜோதிஜி அவர்களே! ஆனா கொட்டத்தான் இடமுமில்ல, நேரமுமில்ல?!

ஜோதிஜி சொன்னது… [Reply]

http://www.seenuguru.com/2013/06/contest-info.html

கலந்து கொள்ளவும்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

Thank You for your Information Jothi G

ராஜி சொன்னது… [Reply]

நல்லதொரு துணையை நீங்க இழந்திருக்கீங்கன்னு மட்டும்தான் சொல்ல தோணுது. கல்யாணத்துக்கு பின் அன்பிருந்தாலும்..., பகிர்ந்துக்க முடியாத சூழலையும் அழகா சொல்லீட்டீங்க. உங்க கூடலாம் போட்டி போடுறேனே ஜெயிப்பேனா? ஜெயிக்காட்டியும் உங்களோடு கலந்துக்குறதுல ஒரு மகிழ்ச்சியே சகோ!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ராஜி!
இது போட்டிக்காக எழுதிய கடிதம் இல்லை. ஒரு தற்செயல் நிகழ்வு போல நான் பதிவு (கடிதம்) எழுதிய அதே நேரத்தில் போட்டியை அறிவித்திருக்கிறார்கள். அதுவும் நண்பர் ஜோதிஜி அவர்கள் மூலம்தான் போட்டி பற்றியே அறிந்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது… [Reply]

ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்களே பாஸ். அனுபவிச்சது மாதிரியே இருந்தது. தங்க்ஸ்ப்பா.

கவியாழி சொன்னது… [Reply]

களங்கமற்ற நட்பு ஆனாலும் கல்யாணம் செய்ய முடியாமல் தடுப்பது சாதி.இருவரும் ஒருமனதாய் இருந்தாலும் இறுக்கி அனைத்து மகிழ்ந்தாலும் மனித உறவை புனிதமாக கடந்தாலும் இப்படியும் எப்படி இருக்க முடியும் ? ஆனாலும் இப்படி ஒரு காதல் மிருதுவானது மேன்மையானது மதிப்பிற்குரியது.
அருமை வாழ்த்துக்கள் கவிப்பிரியன்

பெயரில்லா சொன்னது… [Reply]

ஸ்நேகிதிக்கு என்று தலைப்பிட்டு இம்மாதிரி அருவருப்பு உணர்ச்சிகளைத் தூண்டும் அளவுக்கு எழுதுவதை தயவு செய்து நிறுத்துங்கள்..
உங்கள் மனைவிக்கு, அல்லது மனைவியாக வரப்போகும் பெண்ணுக்கு இம்மாதிரி ஒரு 'ஸ்நேகிதம்' இருப்பது உங்களுக்கு ரசிக்கத் தக்கதா?

நேர்மையான பதிலை எனக்குச் சொல்ல வேண்டாம்.உங்கள் நெஞ்சத்தைக் கேளுங்கள்..

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ஜே தா!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணதாசன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அனானி!
இடம் மாறி வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது ஆபாச தளமல்ல. அறுவெறுப்பு உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய எந்த தகவலும் இதில் இல்லை. காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவது கூட தவறென்றால் என்ன சொல்வது? அதுவும் கற்பனையில்!? பாவம் எங்கோ யாராலோ பாதிக்கப்படிருக்கிறீர்கள்.

கனிந்த நட்புதான் காதலாக மாறுகிறது. எல்லா காதல்களும் கல்யாணத்தில் முடிவதில்லை. இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் இங்கு பின்னூட்டமிட வாராதீர்கள். நேர்மையாய் நான் இருப்பதினால்தான் இந்த பதிவே. அதுவும் இந்தக் கால காதல் இல்லை இது. இருபது வருஷத்துக்கு முந்திய காதல். இந்தக்கால காதலில் எல்லாமே முடிந்திருக்கும்.அதெல்லாம் உங்களுக்குப் பரியாது. புரியவைப்பதும் என் வேலையில்லை.

மாலதி சொன்னது… [Reply]

இதயத்தை கனக்கச் செய்யும் கடிதம் . இது எனை தேற்றுவதற்கு எழுதப் பட்டதா அல்லது வேறு காரணங்களுக்கவா புரியவில்லை இருந்தாலும் எனது கண்ணீர் பலமடங்கு மிகையாகிப் போனது ...கரணம் நீங்கள் எழுதியது என்னை பாதிக்கவில்லை என்று சொல்லவோ மறுக்கவோ இல்லை .இது இயல்பாகவோ அல்லது நட்பு ரீதியோலோ நடந்து முடிந்து இருக்கலாம் . அனால் அந்த உங்களின் தோழி உண்மையில் பாராட்ட வேண்டியவளே . அனால் அவளின் கணவனுக்கு இந்த தகவலை திருமணத்திற்கு முன்பே தெரிவித்து இருந்தால் அவளை வணங்குவேன் பின்னல் வரும் பிணக்கு களுக்கு முற்றுப் புள்ளி வைத்து இல்லறம் சிறக்க துணை செய்து இருக்கும் என நான் நினைப்பதால் .... நீங்கள் எல்லாம் கோரிய மற்றம் என்னுள்ளே வந்து கொண்டு தான் இருக்கிறது மாறுவேன் .... எழுவேன் ... எழுதுவேன்.... பாராட்டுகளுடன் மாலதி .....

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மாலதி!

இந்தப் பதிவு ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதன்பிறகே உங்கள் வலைப்பதிவின் கடைசி பதிவைக் கண்டேன். உங்களை தேற்றுவதற்கு பயன்படக்கூடும் என்பதால்தான் இதை படிக்கச் சொன்னேன்.

இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த கதை. இன்று அவர் எங்கோ, நான் எங்கோ!

//அவளின் கணவனுக்கு இந்த தகவலை திருமணத்திற்கு முன்பே தெரிவித்திருந்தால்\\

எப்படி சாத்தியம்? ஆண்கள் என்ன அத்தனை பெருந்தன்மையானவர்களா என்ன? வாழ்க்கை முழுவதும் நரகமாயிருக்கும். 'என் நண்பன்' என்று என்னை அறிமுகப்படுத்தும்போதே பிரச்னையின் ஆரம்பம் புரிந்துபோனது.

அன்று விலகியதுதான்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மாலதி!

//நீங்களெல்லாம் கோரிய மாற்றம் என்னுள்ளே வந்துகொண்டுதான் இருக்கிறது. மாறுவேன், எழுவேன், எழுதுவேன்.\\

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களுடன்............

அப்பாதுரை சொன்னது… [Reply]

வித்தியாசமான படைப்பு. தொடக்கத்திலேயே கொக்கி போட்டு தொடர்ந்து படிக்க வைத்தமைக்குப் பாராட்டுக்கள். கடித பாணியில் தொடங்கி இடையே நினைவுக்கட்டுரை போல் மாறியது ஏன்?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி அப்பாதுரை அவர்களே!

கொஞ்சம் உண்ணிப்பாய் கவனியுங்கள். பழைய காதலி (தோழியை)பற்றி, கடந்து போன வாழ்க்கை பற்றி புதிய ஸ்நேகிதிக்கு எழுதிய கடிதம் அது.

Tamilthotil சொன்னது… [Reply]

எதார்த்தமாக உணர்வை பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான பிணைப்பில் நட்பும் காதலும் நிறையவே புரிதலையும், புரிதலின்மையையும் தருகிறது என்பதை உங்கள் பதிவு அச்சு அசலாக வெளிப்படுத்துகிறது...

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்... இதைப் படிக்கையில் உண்மையில் மனம் காதல் கடிதம் படித்த உணர்வை தர வில்லை... ஒரு நட்பு கடிதம் படித்த உணர்வைத் தான் பெற்றேன்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தமிழ் ராஜா!

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! ஆண்-பெண் உறவுதான் பல உருவங்களில் மனத வாழ்க்கையை அலைகழிக்கிறது. அது காதலாகவோ, பாசமாகவோ அல்லது தோழமையாகவோ ஏதோ ஒன்று சரிதானே?!

பாலன் சொன்னது… [Reply]

அனைவருக்கும் வாழ்வில் இதுபோல ஏதாவது ஒரு பசுமையான நினைவுகள் இருக்கத்தான் செய்கிறது,அதனை வெளிபடுத்த எதார்த்தம் கலந்த தைரியம் வேண்டும் அது உங்களிடம் இருக்கிறது.நல்ல பதிவு நண்பரே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மையிலேயே பசுமையான நினைவுகள்தான் பாலா! தங்களின்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!