திங்கள், 3 ஜூன், 2013

வயசுக்கு மீறின விஷயம்?!

(மயிலாடுதுறை மாலாவின் கடிதங்கள்)


அன்புடையீர்,                                          27.08.1999

வணக்கம். நலம் நலமா? உங்கள் தம்பியின் திருமணம் நல்லபடியாக முடிந்ததா? வீட்டில் அனைவரும் நலம்தானே!

தேர்தல் வந்துவிட்டது. ஆளுக்கு 10 டாடா சுமோ, 4 ஜீப், 5 வேன், 6 கார் சகிதம் வலம் வருகிறார்கள். உங்கள் சென்னையில் எப்படி? ஜெ ஒருவழியா தன்னோட பொய் மூட்டைகளையெல்லாம் ஏமாந்த மக்களிடம் அவிழ்த்து விட்டுட்டு, சென்னை மக்களிடம் புழுகிக்கொண்டிருக்கிறார்.  

எங்க ஊர்ல மரம்வெட்டி புகழ் பா... வேட்பாளர் நிற்கிறார். இவனுங்களுக்கு ஓட்டுபோடறதவிட, பேசாம செல்லாத ஓட்டா போட்டுடலாம்னு பார்த்தா பி.ஜே.பி.க்காக பார்க்க வேண்டியதாயிருக்கு.
தமிழ்நாட்டுல கழக ஆட்சி ரெண்டுமே ஒழியனும்.  

மூப்பனார் ஏதாவது செய்வார்னு பார்த்தா, உருப்படாத கலவர கும்பலுடன் சேர்ந்திருக்கிறார். இருக்கிற குப்பைகள்ல எது பெஸ்ட்டுன்னு பார்த்தா, தி.மு.வைத்தான் சொல்லணும். கலைஞர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி (ஊழலையும் சேர்த்துத்தான்).

அரை நூற்றாண்டுவரை ஒரே மாதிரி இருந்துவிட்ட இந்தியா, இனியாவது வளருமா? ஸ்திரமான ஆட்சி இல்லாததுனாலதான் பாகிஸ்தான் கூட வாலாட்டியது. எனக்கென்னவோ பி.ஜே.பி.யை செலக்ட் பண்ணலாம்னு தோணுது. என்னதான் மதவாதம் என்றாலும், அஞ்சு வருஷம் கழித்து அதே மக்களிடம் வந்துதானே ஆகவேண்டும்.

நாட்டில் சிறுபான்மையினர் ஓட்டு பெருமளவில் முக்கியம் என்பதால்தான், அனைத்து அரசியல்வாதிகளும் அவர்களை அரவணைத்துக் கொள்கிறார்கள். அதனால, பி.ஜே.பி. ஒண்ணும் பெருமளவில் அராஜகம் செய்துவிட முடியாது என்று நான் கருதுகிறேன்.

வரதட்சணை பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கீங்க. நிறைய விரிவாகவே எழுதுங்க. என் வயசுக்கு மீறின விஷயமா ஒதுக்க முடியுமா இதை? இன்னிக்கு சமுதாயத்துல ஆணிவேர்ல இருந்து சல்லிவேர் வரைக்கும் சகல இடத்திலும் புரையோடிப் போயிருக்கிற ‘புற்றுநோய்’ மாதிரி இருக்கிறது இந்த வரதட்சணை.

அதனை குணமாக்க முடியலைன்னாலும், அட்லீஸ்ட்… என்னை, என்னைச் சார்ந்தவர்களையாவது இந்த நோய் பீடிக்காமலிருக்க என்ன செய்யலாம்னு யோசிப்பேனே! So, நிறைய எழுதுங்க. நீங்க பத்து பக்கம் எழுதினா நான் ஒரு பக்கம் எழுதுற அளவுக்காவது என்னோட சிந்தனைகள் இருக்கும்னு நம்பறேன்.

வேறொண்ணும் விஷயமில்லை. கோயில் குளம்னு போனேன். அதான் உடனே லெட்டர் எழுதலை. மற்றவை பிறகு. நிறைய விஷயங்கள் எழுதுங்க. அதை நான் அனுபவமா மாத்திக்கறேன்.

அன்புடன்,

மாலா. மயிலாடுதுறை.



அன்புடையீர்,                                          24.12.1999

வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. மனைவி மற்றும் குழந்தைகள் நலமா?

தங்கள் கடிதம் கிடைத்தது. நான் எழுதியது முற்றிலும் சரியென்றோ, தவறென்றோ நான் கூறவில்லை. என் மனதிற்கு தோன்றிய விஷயங்கள் அவை. அதில் தவறும் இருக்கலாம். ஒத்துக்கொள்கிறேன், சுட்டிக்காட்டினால்.

சிங்க்கப்பூர் தோழி ‘ஜெஸி’யிடமிருந்து தங்கள் வேலைக்காக ஏதாவது தகவல் வந்ததா?

பெண் விடுதலை என்று கோஷம் போடும் கும்பல்கள் பெருகித்தான் விட்டன. அவர்களது நோக்கம் ஆண்களை அவதூறு பேசுவது மட்டும்தான் என்று செயல்படுகின்றனர்.

எது விடுதலை? விடுதலை என்றால் என்ன? எதற்கு விடுதலை… ஹூம்… எந்தவித பதிலும் இல்லை, தெளிவும் இல்லை. ஆனால் கூட்டத்தோடு கோஷம் போடுகின்றனர்.

என் நண்பர் ஒருத்தர் சொன்னார், அவங்க காலேஜ் பொண்ணுங்க பேசினாங்களாம். கல்யாணமாயிடுச்சின்னு காட்ட நாம மட்டும் கழுத்துல தாலி கட்டணுமாம். ஆண்களுக்கு எதுவுமுல்லை. இது மாறணும். அவங்களும் ஒரு அடையாளமா கழுத்துல கயிறு கட்டணும்னு பேசினாங்களாம்.

இதை படிச்சா உங்களுக்கு என்ன தோணுது? இப்படித்தான் தாறுமாறாய் சிந்திக்கின்றனர். அதுவும் சிந்திப்பதுன்னு கூட சொல்லமுடியாது. ஏதோ அந்த கூட்டத்துல கைதட்டல் வாங்க உணர்ச்சிகரமா பேசறதோட முடிஞ்சிடறது அவங்க வேலை.

சுதந்திரம் என்பது சண்டை போட்டு மேடையில் பேசி வாங்கும் விஷயமில்லை. எங்களுக்கு சுதந்தரம் கொடுக்க நீங்க யார்னு ஒரு கேள்வி? மனிதகுல ஆரம்பத்திலிருந்தே ஆண் பெண் சுதந்திரத்தைக் கையகப்படுத்திக்கொண்டது உண்மை. இந்த நிலை மாற கோஷங்கள் ஒருபோதும் உதவப்போவதில்லை. விட்டுக்கொடுத்தலும், பரஸ்பர புரிந்துகொள்ளுதலுமே இதற்கு சரியான தீர்வு.

அப்புறம் மில்லினிய கொண்டாட்டம் எப்படியிருக்கிறது சென்னையில்? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனியொரு வாய்ப்பு இதுபோல் கிடைக்காது என்பதாலோ என்னவோ தெரியலை. மிலினியம் கிராஸ் பண்றப்போ நாம உயிரோட இருக்கோம் எனும் நினைப்பே அவ்ளோ சந்தோஷத்தைக் கொடுக்குது.

2000 வருஷம் மக்களுக்கு எந்தவித குறையுமில்லாம, போட்டி, பொறாமை, நயவஞ்சக எண்ணங்கள் மனிதனை விட்டு அகன்று, பொறுமையும் அன்பும் கருணையும் மனிதர்களை ஆட்கொள்ளட்டும் என்று பிரார்த்திப்போம்.

குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தை சொல்லிவிடுங்கள். BEST WISHES FOR A HAPPY MILLENNIUM YEAR 2000.
BY
மாலா, மயிலாடுதுறை.

4 கருத்துகள்:

கவியாழி சொன்னது… [Reply]

அனைவரும் படிக்க வேண்டிய கடிதம்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கடிதம் எழுதறதே குறைஞ்சி போச்சு. யாருங்க வந்து படிக்கப்போறாங்க இதெல்லாம்? குப்பையில வீச மனமில்லாம பதிவு செய்கிறேன் அவ்வளவுதான்!
வருகைக்கு நன்றி கண்ணதாசன் அவர்களே!

ஜோதிஜி சொன்னது… [Reply]

உங்களின் நுணுக்கமான பார்வைகள் உங்களின் நேரமின்மை காரணமாக எழுத்ததாக மாறுவதுஇல்லையோ என்று பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் ஜோதிஜி அவர்களே! எழுத நிறைய ஆசையிருக்கிறது. ஆனால் முடியவில்லை. ஆனால் உங்களிடம் மட்டும் முடியலை என்று சொல்லமுடியாதே!

தங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!