புதன், 28 நவம்பர், 2012

பூமியை ஏன் பெண்களோடு ஒப்பிடுகிறார்கள்?


கொஞ்சம் சுவாரஸ்யமான கேள்வி பதில் இது. பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பு பாக்யா வாரஇதழில் படிச்சதா ஞாபகம். அரசியல்வாதிகள் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நில ஆக்ரமிப்பு சர்வசாதாரணம். இது சம்மந்தமான செய்திகள் வரும்போதெல்லாம் எனக்கு இந்த கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது!

பூமியும் பெண்ணும் சிரித்தால் மர்மச்சிரிப்புகள்னு எமன் தன் தூதர்கள்கிட்ட சொல்லி விளக்கமும் தந்தாரு.

மங்கை தன் கணவன் அல்லாத ஒருவனுடன் கூடிஒரு குழந்தை பெற நேர்ந்தால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கணவன் மடியிலேயே கிடத்தி மகிழ்வாள். அப்போது அவன் குழந்தையைப் பார்த்து கொஞ்சும்போது, அவள் தன் மனசுக்குள் தனக்கு சொந்தமில்லாத குழந்தையை தன்னுடையதுன்னு கொஞ்சுகிறானேன்னு மர்மச்சிரிப்பு சிரிப்பாளாம். அதுபோல....

நிலபுலன்களையெல்லாம் வாங்கிக்கொண்டு இதெல்லாம் என்னுடையது யாருக்கும் கொடுக்கமாட்டேன்னு சொல்லும்போது, பூமாதேவி அட முட்டாளே நிலமாகிய நான் இயற்கையின் அம்சம். யாருக்கும் சொந்தமல்ல. நீ என்மேல் முட்டாள்தனமாய் உரிமை கொண்டாடுகிறாய். நான் என்றும் நிவந்தம். நீ என்னுள் அடங்கப்போகிறவன், என்று மர்மச்சிரிப்பு சிரிப்பாளாம்!.

இது எப்படி இருக்கு?


சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தருமபுரி கலவரத்தைப்பற்றிய உண்மையான நிலையை ஒரு பதிவில் படிக்க நேர்ந்தது. பத்திரிகைகள் மட்டும் ஊடகங்கள் எதை எப்படி வேண்டுமானாலும் திரிக்கமுடியும் மறைக்க முடியும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இந்த தருமபுரி நிகழ்வு. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது!

இணைப்பு; உண்மை என்ன? கலவரபுரியிலிருந்து..........

இது சம்மந்தமான மற்றுமொரு பதிவு தேவியர் இல்லம் திருப்பூர் ஜோதிஜியின்
தரும்புரி - வன்முறையும் வன்மமும்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பெண் மண் எப்போதும் புதிர்!


என்ன செய்வது
என்னைப் போலவே
எச்சரிக்கையாய்
இருந்ததில்லை
காதலும்...

உன் ஆறுதலைக்
கேட்பதற்காகவே
அதிகமாய் அழுதுபார்க்க
ஆசைப்பட்டவன் நான்
இப்போது
அதிகமாய் சிரித்துப்
பார்க்க ஆசைப்படுகிறேன்
நீ விட்டுப்போனதை
மறந்துவிட!

அது எப்படி
பெண்மையைப் போலவே
உணர்வுகளையும்
ஒளித்துக்கொள்ள
முடிகிறது?
திறமைதான்!

நேசிப்பாயா
தூரமாய் நானிருந்தால்
கொஞ்சம் பொறு
தொலைந்து போகிறேன்.

நியாயமானதுதான்
கோபம்
மரித்துவிடுவதற்குமுன்
மறந்துவிடுவது நல்லதுதான்
இப்போது போலவே
சிதையிலும் மலரும் இதயம்.

பெண்
மண்
எப்போதும் புதிர்!
எதுவும் எப்போதும்
முடியும்
நானும் நீயும் கூட!


திங்கள், 19 நவம்பர், 2012

பால்வீதி - MILKY WAY GALAXY

அறிவியல் அறிவோம்



நாம் வசிக்கும் பால்வீதியில் (Milky way Galaxy) சுமார் 25,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. நம் சூரிய நட்சத்திரத்தைப் போலவே கோடானுகோடி நட்சத்திரங்களைச் சுற்றிலும் கிரகங்களும் உண்டு.
பால்வீதி என்னும் தாம்பாளத்தின் அகலம் 70,000 ஒளி ஆண்டுகள். அதாவது ஒளியின் வேகத்தில் (ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள்) போனால், தாம்பாளத்தின் அந்தப்பக்கத்தை அடைய 70,000 ஆண்டுகள் ஆகும்! கற்பனை செய்ய முடிகிறதா?

இந்தப் பால்வீதியில் ஒரு மூலையில் உள்ள மிளகு சூரியன். அதைச் சுற்றிவரும் ஒரு சின்ன கடுகுதான் பூமி! பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களில் இரண்டு லட்சத்தில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றம் ஒரு கிரகத்தில் உயிர்கள் உண்டு என்று எடுத்துக்கொண்டாலும் கூட கணக்குப்படி பால்வீதியில் மட்டும் சுமார் 10 லட்சம் மனித நாகரிகங்கள் (பூமி) இருந்தாக வேண்டும்.

பால்வீதியிலேயே இப்படி! அதுபோல கோடானுகோடி பால்வீதிகள் அகண்ட கண்டத்தில் உண்டு. அப்படி இருந்தாலும் இரண்டு நாகரிகங்களுக்கு இடையே உள்ள சராசரி தூரமே 300 ஒளி ஆண்டுகள் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒளிவேகத்தில் பயணிப்பவை ரேடியோ அலைகள் மட்டுமே! அதன் மூலம் ஒரு கேள்வியை அனுப்பினால் வேற்று கிரகவாசியின் பதல் நமக்கு வந்து சேர, மொத்தம் 700 ஆண்டுகள் பிடிக்கும். இந்த அழகில் என்னத்தை அவர்களோடு தொடர்புகொள்வது?

1974-ம் ஆண்டிலேயே இப்படிக் கேள்விகள் அனுப்ப ஆரம்பித்துவிட்டோம். ‘எஸ் என்று வேற்றுக் கிரகத்திலிருந்து பதில் சொன்னாலும் அது நமக்கு கி.பி.2674-ம் ஆண்டுதான் வந்து சேரும்!

பிரபஞ்சத்தின் பிரமாண்டத்திற்கு முன் நாம் வெறும் தூசுதானே. ஹூம்... ம்... நாமெல்லாம் ரொம்பத்தான் அலட்டிக்கிறோமில்ல?!

சனி, 17 நவம்பர், 2012

எனக்குப் பிடித்த கேள்வி-பதில்கள்-2



அனுபவம் என்பது என்ன?

ஒவ்வோருவரும் தம் தவறுகளுக்குத் தரும் பெயர்.

வாழ்க்கை என்பது ஏன் புதிராய் இருக்கிறது?
அதனால்தான் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

வாழ்க்கை எப்போது சுமையாகிறது?

நகைச்சுவை உணர்ச்சி போய்விடுகிறபோது!

வெற்றிக்கு தடையாக இருப்பது எது?

கவலை. அது நாளைய தோல்விகளை அழிப்பதில்லை. இன்றைய வலிமையைக் குறைத்துவிடுகிறது.


சந்தோஷம் என்பது என்ன?

சந்தோஷம் என்பது என்ன என்று ஆராய்ந்து கொண்டிருந்தால் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியாது. வாழ்க்கையின் அர்த்தம் என்று சிந்தித்தால் வாழ முடியாது.

எதனால் அழிவு ஏற்படுகிறது?

மனிதனுக்கு பற்றுதலால் விருப்பமும், விருப்பத்தினால் சினமும், சினத்தால் மயக்கமும், மயக்கத்தால் புத்தி நாசமும், புத்தி நாசத்தால் அழிவும் ஏற்படுவதாக கீதை சவல்கிறது!

ஒரு மனிதன் வெற்றியை அடைய என்ன செய்யவேண்டும்?

வெற்றியின் நடுவிலே உள்ள ஒற்றெழுத்தை (ற்) நீக்கிவிட வேண்டும். ஆம் வெறி கொள்ள வேண்டும்.
 
என்னிடம் மது, மாது, புகைப்பழக்கம் கிடையாது! நான் நூறு வயது வரை வாழ முடியும்தானே?

பிறகெதற்கு நூறு வருட வாழ்க்கை?!

இலட்சியங்கள் காலம் செல்லச் செல்ல ஒளி மங்கிவிடுவதேன்?

பதினெட்டு வயதில் லட்சியங்கள் மலையுச்சியில் இருக்கின்றன. அவற்றை நோக்கி வெறியுடன் முன்னேறுகிறோம். ஐம்பது வயதில் அவை குகைகளாகிவிடுகின்றன. அதில் ஒளிந்துகொள்கிறோம்.

சில நேரங்களில் நல்ல நட்பில் கூட விரிசல் ஏற்பட்டுவிடுகிறதே?

நல்ல நட்பு ஆரோக்கியத்தைப் போல ஒரு பொக்கிஷம்! ஆரோக்கியம் போனபின் ஏற்படும் அவஸ்தை போல, நட்பை இழந்தபின்தான் அதன் மதிப்பு நமக்குப் புரியவரும்.

உலகத்தின் முதல் விஞ்ஞானி யார்?

குழந்தை! மூடிக்கிடந்த மனசு, மூடிக்கிடந்த பூமி இரண்டும் கேள்விகளால்தான் திறக்கப்பட்டன. உலகை வியத்தல்..., கேள்விகள் எறிதல்...., ரகசியம் அறிதல்... இம்மூன்றுமே ஒரு குழந்தைக்கும், விஞ்ஞானிக்குமான பொதுக்குணங்கள்.

விஞ்ஞானத்தை கேள்வி தொடங்கி வைக்கிறது. கேள்வியை குழந்தை தொடங்கி வைக்கிறது. எனவே உலகத்தின் முதல் விஞ்ஞானி குழந்தைதானே!

சிருஷ்டியின் ஆபத்தான படைப்பு எது?

மனம்!

தொடர்புடைய இடுகை: எனக்குப் பிடித்த கேள்வி-பதில்

வியாழன், 15 நவம்பர், 2012

எத்தனை எத்தனை மூக்கணாங் கயிறுகள்?



பால் நிறத்துப் பனிக்கும் பௌர்ணமிக்கும்
பிறந்த அன்பு மகளே, மல்லிகை அன்னமே
கால்நடைகள் கன்று ஈன்றதும்
அடைக்கோழி முட்டை பொரித்ததும்
பெட்டை என்று பெருமைப்பட்ட
உன் பெற்றோர் முகத்தில்
ஒரு மனிதக் குமரியாகப் பூமியின் வயிற்றில்
உன் பாதம் பட்டதும்
பிளேடு கிழித்ததைப்போல
பீதி ரத்தம் ஓடியது ஏன்?

பெண் என்பதால் நீ - பூப்படைகிறாய்,
கன்னியாகிறாய் பத்தினியாகிறாய்,
வேசியுமாகிறாய், விதவையுமாகிறாய்.
எனில் இவை எவற்றுக்கேனும்
ஓர் ஆண்பால் பெயர் உண்டா?
சிவகாசியில் நீ தீக்குச்சியானாய்,
சிவப்பு விளக்குகளில் கவர்ச்சித் திரியானாய்,
சேற்று வயலை ஈரமாக்கியது
உன் பிஞ்சு ரத்தமும்தான்,
ஆலைச்சக்கரங்களில் ஆரக்காலும் நீயே.

பின் ஏனடி இப்படி ஆனாய்?
புன்னகை புதைத்த கல்லறையாக
பூக்களின் பூக்களின் சுடுகாடாக,
ஏனடி ஏனடி இப்படி மாறினாய்?
நீ துலக்கிய பாத்திரம் தூய்மையானது,
நீயோ அழுக்கானாய்!
நீ பெருக்கிய வீடு சுத்தமானது,
நீயோ அசுத்தமானாய்!
நீ பற்ற வைத்த நெருப்பு எரிந்தது,
நீயோ இருட்டில்!

கோலுசுகள் போட்டனர்;
உன் கால்கள் நொண்டியாயின.
தோடுகள் மாட்டினர்;
உன்  காதுகள் செவிடாயின.
வளையல்கள் மாட்டினர்;
உன் கைகளில் விலங்குகளாக.
மூக்குத்தி குத்தினர்;
எத்தனை எத்தனை மூக்கணாங் கயிறுகள்?

மூக்கணாங் கயிற்றை எதிர்த்து
மாடே திமிரும் என்றால்,
பெண்ணே நீ எப்போது திமிறப் போகிறாய்?
தலை நிமிரப்போகிறாய்?

புதன், 14 நவம்பர், 2012

நெருப்புக் கோழிகள் - படித்ததில் பிடித்தது


டாக்டர் அம்பேத்கருக்கு, ஆங்கிலேயப் பெண் பிரான்சிஸ் பிரிட்ஸ் ஜெரால்ட் எழுதியதாகச் சொல்லப்படும் காதல் கடிதங்கள் 2005-ல் புத்தகமாக வெளியிடப்பட்டன. பிரான்சிஸ், அம்பேத்கரின் சிநேகிதி. லண்டனில் இந்தியா ஹவுசிலும், காமன்ஸ் சபையிலும் டைப்பிஸ்ட்டாக இருந்தவர்.

அந்தப் புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று அம்பேத்கரின் பேரனும் அரசியல்வாதியுமான பிரகாஷ் அம்பேத்கர் வழக்கு போட்டார். அம்பேத்கரை ஒரு பெண் காதலித்திருந்தால் அதில் என்ன தவறு? அல்லது அம்பேத்கரும் அந்தப் பெண்ணைக் காதலித்திருந்தால்தான், அது ஒரு குற்றமா?

தலைவர்களின், அரசியல் பிரமுகர்களின் ஆண்-பெண் உறவுகள், காதல், காமம் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்ற போலித்தனம்தான் நமது சமூகத்தில் செக்ஸை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

காந்தியும் பெரியாரும் மட்டுமே இத்ல் விதிவிலக்குகள். இருவரும் செக்ஸ், ஆண்-பெண் உறவு பற்றிய தங்கள் பார்வையை, சொந்த அனுபவங்களைத் தயங்காமல் பகிரங்கமாகத் தெரிவித்தவர்கள். காந்தி தமது ஆசிரமத்தில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒன்றாகக் குளிக்கச் செய்தார். பிரித்து வைத்து 'ஒழுக்கத்தை'க் காப்பாற்றுவதை விட, சேர்த்திருக்கும் சூழலில் மனக் கட்டுப்பாட்டின் மூலம் 'பிரம்மச்சரியத்தை' நிறுவ வேண்டும்மென்று தான் செய்த சோதனைகளை அவரே பதிவு செய்திருக்கிறார்.

'40 வயதுக்கு முன் நான் சீமானாக, காலியாக, மைனராக வாழ்க்கை நடத்தினேன்' என்று தன்னைப் பற்றித் தானே எழுதினார். மதுப் பழக்கமுடைய தன் சிநேகிதர்களுடன், ஆற்றங்கரையில் நிலவொளியில் தாசிகளுடன் இரவெல்லாம் கழித்ததையும், வூட்டுக்குத் தெரியாமல் தங்களுக்கு உணவு சமைத்து எடுத்துவரும் வேலையில் மனைவி நாகம்மாளை ஈடுபடுத்தியதையும் அவரேதான் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

தன் 53-வது வயதில் ஐரோப்பிய பயணத்தின் போது நிர்வாணச் சங்கங்களின் கோட்பாடுகள் என்ன என்பதை அறியும் ஆர்வத்தில் அங்கு சென்றதையும், அவர்கள் விதிக்கு உட்பட்டு தானும் அவ்விதமாக நிர்வாணமாகச் சென்றதையும் இந்தச் சமுதாயம் தெரிந்துகொள்ளட்டும் என்றேதான் அவர் பதிவு செய்திருக்கிறார். அதை எல்லாம் தாண்டிய மாண்புகள் தன்னிடம் இருக்கிறது என்பதால், தனது சொந்த வாழ்க்கையின் சில பக்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் அவர் சங்கடம் எதுவும் படவில்லை.

குஷ்பு சர்ச்சையின்போது, பெரியாரின் தலையும் சேர்த்து உருட்டப்பட்டது. 'ஆண்-பெண் உறவுகொள்ள, சேர்ந்து வாழ்ந்தால் போதும்; திருமணம் தேவையில்லை. பிடிக்காவிட்டால் பிரிந்து போகலாம்' என்று சொன்னவர் பெரியார். பெண்கள், 'திருமணத்துக்கு முன் கன்னித்தன்மையை இழக்கலாம்' என்று பெரியார் எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? என்று கேட்கப்பட்டது. திருமணமே தேவையில்லை என்று சொல்லிவிட்ட பின், தி.மு, தி.பி. எங்கிருந்து வரும்?

'சோற்றைவிட மானம்தான் பெரிது என்று வாழ்பவர்கள் தமிழ்ப்பெண்கள்!' என்ற அலங்காரமான பேச்சு நிஜமானால், வறுமையினால் பாலியல் தொழிலில் ஈடுபட்ட எந்தப் பெண்ணைப் பற்றியும் போலிசில் வழக்கு பதிவாகி இருக்கக் கூடாதே!

அரசியல் தலைவர்கள் நெருப்புக் கோழிகளாக மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.


கட்டுரையாளர் - ஞானி

திங்கள், 12 நவம்பர், 2012

தமிழும் தவறும்


தமிழ்! நாம் நமது வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தும் வார்த்தை. பிறந்து தவழத் தொடங்கும் போதே தாயின் தாலாட்டால் தலைக்குள் புகுத்தப்படும் ஒரு உணர்வு. பேச்சு எழுத்து என எல்லாநேரங்களிலும் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள உபயோகப்படும் ஒரு மொழி!

ஆனால் தமிழர்களாகிய நாம் பேசும்போதும் எழுதும்போதும் தவறில்லாமல் பயன்படுத்துகிறோமா? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறை தமிழாசிரியர்களுக்கே தமிழிலக்கணம் பற்றி தெரியுமா என்பதே ஐயப்பாடு!

அன்றாட வாழ்க்கையில் புழங்கும் வார்த்தைகளில் எத்தனை தவறுகளை நம்மில் பலர் செய்கிறோம் என்பதை கொஞ்சம் கவனியுங்களேன்.

          தவறு               சரி

           சுவற்றில்             சுவரில்
           ஒருக்கால்            ஒருகால்
           பத்திரிக்கை           பத்திரிகை
           வெய்யில்            வெயில்
           கொப்பளம்            கொப்புளம்
           அடமழை             அடைமழை
           சில்லரை             சில்லறை
           அவரல்ல             அவரல்லர்
           அருவாமனை         அரிவாள் மனை
           அலமேலு             அலர்மேலு
           எழவு                 இழவு
           ஒண்டியாய்           ஒருவனாய்
           கருத்துக்கள்          கருத்துகள்
           சிலவு                செலவு
           தெய்வீகம்            தெய்விகம்
           தொந்திரவு            தொந்தரவு
           சுதந்திரம்             சுதந்தரம்
           தேசீயம்              தேசியம்
           பண்டகசாலை         பண்டசாலை
           நாகரீகம்              நாகரிகம்
           பதட்டநிலை           பதற்றநிலை
           உடமை               உடைமை
           கோர்வை             கோவை
           கோர்த்து              கோத்து
           முகர்ந்து              மோந்து
           சிகப்பு                சிவப்பு    
           சம்மந்தி              சம்பந்தி
           சமயல்               சமையல்
           எடக்கு               இடக்கு 

ஞாயிறு, 11 நவம்பர், 2012

பாலகுமாரன் பக்கம் -2



நான் நம்பத்தயாரில்லை. ஆண்-பெண் உறவில் பிறக்கும் ஸ்நேகத்தைப் பற்றிய பரிசீலனையில் இருப்பவன் நான். ஸ்நேகிதம் என்ற ஒன்றை நம்பி தோற்றுப் போனவன். அதனாலேயே சந்தேகிப்பவன். எதிலும் ஆதாயம் காணும் சமூகம் இது என அனுபவத்தில் கண்டிருப்பவன். எனக்கு மயக்கம் தெளிஞ்சி போச்சி. யாருமே வேண்டாம்! நல்லவர்கள் கூட!

கவலைப்படாதே நானிருக்கேன் என்ற நல்லத்தனம் எனக்கு வேண்டாம். அதுவும் சுமை. ஆயுசுக்கும் என்னை கடனாளியாக்கும்.

நல்ல காதல் தோன்றிய பிறகு காமம் விலகி நிற்கும். எப்போது தேவையோ அப்போது கைகட்டி அருகே வந்து சேவைகள் செய்யும். வெறும் காமம் அபத்தம். காதலோடு கூடிய காமம் சொர்கம்.

மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். சந்தோஷம் துக்கம், நட்பு, பகைமை எல்லாம் மனம் காட்டும் மாயைகள். கோபம் குறைய நியாயங்கள் தெளிவாய் தெரியும். ஆத்திரம் குறைய நல்லது கெட்டது எதுவென்று அறியமுடியும்.

கற்றல் எப்போது நிற்கும்? கற்ற பிறகே! ஆசை எப்போது அடங்கும்? அனுபவித்த பிறகே!. ஆசைதான் கற்றுக்கொள்ளல். ஆசைதான் வாழ்க்கை. கற்றுக்கொள்ள, கற்றுக்கொள்ள, அனுபவிக்க அனுபவிக்க உள்ளே ஒரு நிறைவு வரும். போதும் என்கிற நிறைவு வரும் வரை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எதுவுமே கொடுக்கமுடியாத போது என்னையே எடுத்துக்கோங்கிற விஷயம் பெண்ணிம் மட்டுமே உண்டு. ஆண் இப்படி எதைக் கொடுப்பான்? யார் உயர்வு?

நான் தான தருமம் பண்ணல. ஆம்பளைக்கும் அலையல. எனக்குப் பிடிச்சிருந்தது, என்னைக்கொடுத்தேன். இதுக்கு நன்றி எதுக்கு?

கேலிக்கு கோபப் படுபவன் தோற்றுப் போனவன். வாழ்க்கையின் ரசம் தொலைத்தவன். வாழ்தலின் வெளிப்பாடு இடி போன்ற சிரிப்பு. இடைவிடாத ஆனந்தம். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை.

தொடர்புடைய இடுகை;

 பாலகுமாரன் பக்கம் - பாலகுமாரன் ரஜினிகாந்த் உரையாடல்