புதன், 14 நவம்பர், 2012

நெருப்புக் கோழிகள் - படித்ததில் பிடித்தது


டாக்டர் அம்பேத்கருக்கு, ஆங்கிலேயப் பெண் பிரான்சிஸ் பிரிட்ஸ் ஜெரால்ட் எழுதியதாகச் சொல்லப்படும் காதல் கடிதங்கள் 2005-ல் புத்தகமாக வெளியிடப்பட்டன. பிரான்சிஸ், அம்பேத்கரின் சிநேகிதி. லண்டனில் இந்தியா ஹவுசிலும், காமன்ஸ் சபையிலும் டைப்பிஸ்ட்டாக இருந்தவர்.

அந்தப் புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று அம்பேத்கரின் பேரனும் அரசியல்வாதியுமான பிரகாஷ் அம்பேத்கர் வழக்கு போட்டார். அம்பேத்கரை ஒரு பெண் காதலித்திருந்தால் அதில் என்ன தவறு? அல்லது அம்பேத்கரும் அந்தப் பெண்ணைக் காதலித்திருந்தால்தான், அது ஒரு குற்றமா?

தலைவர்களின், அரசியல் பிரமுகர்களின் ஆண்-பெண் உறவுகள், காதல், காமம் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்ற போலித்தனம்தான் நமது சமூகத்தில் செக்ஸை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

காந்தியும் பெரியாரும் மட்டுமே இத்ல் விதிவிலக்குகள். இருவரும் செக்ஸ், ஆண்-பெண் உறவு பற்றிய தங்கள் பார்வையை, சொந்த அனுபவங்களைத் தயங்காமல் பகிரங்கமாகத் தெரிவித்தவர்கள். காந்தி தமது ஆசிரமத்தில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒன்றாகக் குளிக்கச் செய்தார். பிரித்து வைத்து 'ஒழுக்கத்தை'க் காப்பாற்றுவதை விட, சேர்த்திருக்கும் சூழலில் மனக் கட்டுப்பாட்டின் மூலம் 'பிரம்மச்சரியத்தை' நிறுவ வேண்டும்மென்று தான் செய்த சோதனைகளை அவரே பதிவு செய்திருக்கிறார்.

'40 வயதுக்கு முன் நான் சீமானாக, காலியாக, மைனராக வாழ்க்கை நடத்தினேன்' என்று தன்னைப் பற்றித் தானே எழுதினார். மதுப் பழக்கமுடைய தன் சிநேகிதர்களுடன், ஆற்றங்கரையில் நிலவொளியில் தாசிகளுடன் இரவெல்லாம் கழித்ததையும், வூட்டுக்குத் தெரியாமல் தங்களுக்கு உணவு சமைத்து எடுத்துவரும் வேலையில் மனைவி நாகம்மாளை ஈடுபடுத்தியதையும் அவரேதான் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

தன் 53-வது வயதில் ஐரோப்பிய பயணத்தின் போது நிர்வாணச் சங்கங்களின் கோட்பாடுகள் என்ன என்பதை அறியும் ஆர்வத்தில் அங்கு சென்றதையும், அவர்கள் விதிக்கு உட்பட்டு தானும் அவ்விதமாக நிர்வாணமாகச் சென்றதையும் இந்தச் சமுதாயம் தெரிந்துகொள்ளட்டும் என்றேதான் அவர் பதிவு செய்திருக்கிறார். அதை எல்லாம் தாண்டிய மாண்புகள் தன்னிடம் இருக்கிறது என்பதால், தனது சொந்த வாழ்க்கையின் சில பக்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் அவர் சங்கடம் எதுவும் படவில்லை.

குஷ்பு சர்ச்சையின்போது, பெரியாரின் தலையும் சேர்த்து உருட்டப்பட்டது. 'ஆண்-பெண் உறவுகொள்ள, சேர்ந்து வாழ்ந்தால் போதும்; திருமணம் தேவையில்லை. பிடிக்காவிட்டால் பிரிந்து போகலாம்' என்று சொன்னவர் பெரியார். பெண்கள், 'திருமணத்துக்கு முன் கன்னித்தன்மையை இழக்கலாம்' என்று பெரியார் எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? என்று கேட்கப்பட்டது. திருமணமே தேவையில்லை என்று சொல்லிவிட்ட பின், தி.மு, தி.பி. எங்கிருந்து வரும்?

'சோற்றைவிட மானம்தான் பெரிது என்று வாழ்பவர்கள் தமிழ்ப்பெண்கள்!' என்ற அலங்காரமான பேச்சு நிஜமானால், வறுமையினால் பாலியல் தொழிலில் ஈடுபட்ட எந்தப் பெண்ணைப் பற்றியும் போலிசில் வழக்கு பதிவாகி இருக்கக் கூடாதே!

அரசியல் தலைவர்கள் நெருப்புக் கோழிகளாக மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.


கட்டுரையாளர் - ஞானி

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அந்தக்கால தலைவர்கள் எல்லாம் தன்னுடைய பலத்தை மட்டும் எழுதி வைக்கவில்லை... பலவீனங்களையும் சொல்லி உள்ளார்கள்... அவர்களின் சிறப்பே அது தானே...

சிந்திக்க வேண்டிய கேள்விகளுக்கு நன்றி...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொழிற்களம் குழு தந்த ஆலோசனைக்கு நன்றி!

மகேந்திரன் சொன்னது… [Reply]

ஞானி அவர்களின் கட்டுரை
சிந்தனையைத் தூண்டுகிறது நண்பரே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகேந்திரன் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!