உன்னைப் பற்றிப் பெருமைப்படு!
அன்புள்ள தம்பு!
அமைச்சரவையில் இருந்த ஒரு மனிதரைச்
சந்தித்தேன். நல்ல வெள்ளை ஆடை; வெள்ளைப் பல். கை குலுக்கினார். பிறகு விரல்கள்,
எனது கைவிரல் மோதிரங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டேன்.
காரணம் அவர் மீது 43 குற்றங்கள்
இருக்கின்றன. ஒரு கொலை செய்த குற்றம் உள்பட.
இப்படிப்பட்ட மனிதர்கள் உலா வருகிறார்கள்
பொது வாழ்வில். நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை.
வேலை வாங்கித்தர நேரடியாக பணம் லஞ்சமாகக்
கேட்டவர்; பல்கலைக்கழகம் என்ற பெயரில் படிப்பு சொல்லித்தர பல லட்சங்கள் வாங்குபவர்;
காட்டில் மரங்களை வெட்டி பணம் சம்பாதிப்பவர் – இவர்களெல்லாம் காரில் வருகிறார்கள் கல்யாண வீட்டிற்கு! அவர்களுக்கு மரியாதை;
முதல் வரிசையில் முதலிடம் உட்கார, காலில் விழுகிறார்கள் மணமக்கள்!
இவர் சாராயம் விற்று குடியைக் கெடுத்தவர்;
அதுவும் கள்ளச்சாராயம். இவரைக்கேட்டு அரசில் பெரிய பதவிகள் அளிக்கப்படுகின்றன.
எப்படி இப்படிப்பட்ட ஊழல் மனிதர்களெல்லாம்
பெரிய மனிதர்களாக மேடை ஏறுகிறார்கள்? உலகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது?
நாம் எல்லோரும் ஒரு பொய் விளையாட்டு
விளையாடுகிறோம். அவன் திருடன் என்று தெரிகிறது. இருந்தாலும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு
கை குலுக்குகிறோம்.
பெரிய மனிதர்களை வளைத்துப்போட்டு விபச்சார
வாழ்க்கை நடத்தும் ‘ஊரைக்கெடுத்த உத்தமி’ என்று தெரிகிறது இருந்தாலும்
கழுத்திலுள்ள நகைகளையும் பட்டுப்புடவையையும் பார்த்து புன்னகையுடன் கைகூப்பி
வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம்.
இப்படி போலித்தனமே வாழ்க்கையாகிவிட்டது.
ஊர்மக்கள் போலி நாடகம் ஆடுகிறார்கள். விவஸ்தை கெட்டவர்கள்.
உனக்கும் இப்படி குறுக்கு வழியில்
சம்பாத்தித்தால் என்ன என்று தோன்றுகிறது! ஆசை அடிக்கடி எழுகிறது. மறந்தும் போலி
வாழ்க்கை நடத்தாதே! நீ அசல். ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.
அவர்களுக்கெல்லாம் அவர்கள்
சந்ததிகளுக்கெல்லாம் காலம் என்ன வைத்திருக்கிறது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.
ஏனெனில், இவ்வுலகில் சத்தியம், நேர்மை,
சமத்துவம், சுதந்திரம் என்று சில விஷயங்கள் மாறா உண்மைகள்! அவற்றுடன்
விளையாடுபவர்கள் அதற்கு ஒரு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் இப்
பிரபஞ்சம் ஒரு நெறிமுறையில்தான் இயங்குகிறது. அந்த நெறிமுறைதான் சத்தியம், நேர்மை,
அகிம்சை.
நீ ஒரு அசல்!
அசலாக வாழ்ந்துவிடு;
உன்னைப் பற்றிப் பெருமைப்படு.
நேர் வழியில் நில். நேர் வழியில் செல்.
சபலம் உன்னைத் தொடாமல் பார்த்துக்கொள்.
டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி.