Saturday, January 14, 2012

ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்.


தமிழ்த் திரைப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று கணக்கே இல்லை. பிடித்துப் போனதற்கு காரணங்களே சொல்லமுடியாது. எம்.ஜி.ஆரைப் பிடிக்கும் அதனால பாரத்தேன் அப்படின்னும் சொல்ல முடியாது. திரையரங்குகள் தவிர்த்து, வீடியோ கேசட், மற்றும் தோலைக்காட்சிகளில் பார்த்தவைகளும் கணக்கிலடங்கா!

சில படங்கள் ஒருமுறைக்கு மேல் பார்க்கவே முடியாது. ஆனால் சில படங்களை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது. அத்தகைய படம்தான் இந்த ஆயிரத்தில் ஒருவன். தமிழ்ப்படங்களில் புராணப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன.

ஆனால் இதுவரையாகட்டும், கடற்கொள்ளையர்களை கதைக் கருவாகக்கொண்டு வெளிவந்த ஒரே படம் 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக்களங்கள் என ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

இப்படத்தின் கதாநாயனான 'மக்கள் திலகம்' எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கைதேர்ந்த தையற்கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவதுபோல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சணடைக்காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம். இன்றைக்கும் கூட ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதுவரை (பானுமதிக்குப்பின்) சரோஜாதேவிதான் எல்லாப்படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக)போட்டிருந்தார்கள். ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

'
பருவம் எனது பாடல்' என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மணடபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.


எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம்போல "வெற்றி... வெற்றி..." என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித்தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும்போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக்கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக்காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக 'கடற்கொள்ளையனாக' சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப்போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்... இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டுமப்டியாக இருக்கும்.

கத்திச்சண்டைக்காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (MGR & ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச்சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப்பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள்சண்டை (நம்பியார்: "இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் த்லைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்"), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர்.(வழக்கம்போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப்போகும் மூன்று கத்திச்சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித்தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

(தொடரும்...)8 comments:

Anonymous said... [Reply]

தாங்கள் சிலாகித்து எழுதி இருப்பது மீண்டும்
ஒரு முறை படத்தைப் பார்த்தது போன்று உள்ளது.

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரவாணி!

மகேந்திரன் said... [Reply]

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said... [Reply]

வெற்றி வெற்றி
என ஆரம்பத்திலிருந்து அற்புதமாய் அமைந்த ஒரு படம்.
பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் வருகைக்கும், பொங்கல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பர் மகேந்திரன் அவர்களே!

கவிப்ரியன் said... [Reply]

உண்மைதான். வெற்றி என்று ஆரம்பிக்கும்போதே அந்தப்படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று நினைக்கிறேன். கருத்திற்கு நன்றி நண்பர் மகேந்திரன்!

Anonymous said... [Reply]

superaa விமர்சனம் panni irukkingal ....goodddddddddd

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி கலை!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!