செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

கடிதம் எழுதிக் காதல் செய்வீர்!

காதல் எல்லாக்காலத்திலும் இருப்பதுதான். ஆனால் காதலைத் தெரிவிக்கும் முறைகள்தான் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களை உடனுக்குடன் பிரதிபலிப்பது சினிமா.

இப்போதெல்லாம் சினிமாவில் ‘லவ் லெட்டர்கள் இடம் பெறுவதில்லை. ஆனால் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும், ஏன் என்பதுகள் வரை கூட லவ் லெட்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்கள் மிகவும் சகஜம். இன்றும் மறக்க முடியாத லவ் லெட்டர் பாடல்கள்... ‘நான் எழுதுவது கடிதம் அல்ல’, ‘அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்....


இப்போது சினிமாவில் லவ் காணாமல் போனதற்குக் காரணம், வாழ்க்கையிலும் காணாமல் போய்விட்டதுதான். லவ் லெட்டர் மட்டுமல்ல லெட்டர் எழுதுவதே குறைந்து போய்விட்டது. அரசாங்கத் தபாலிலும், கூரியர் சர்வீஸிலும் பரிமாறப்படும் லட்சக்கணக்கான தபால்களில் மிகப் பெரும்பான்மையானவை அலுவலகங்கள், வியாபாரம் தொடர்பான அதிகாரபூர்வமான கடிதங்கள் மட்டுமே. தனிப்பட்ட கடிதங்களில் கணிசமானவை திருமண அழைப்பு, வாழ்த்து அட்டைகள் போன்றவை. இவை போக, உறவினர்களோ நண்பர்களோ தமக்குள் மனம்விட்டு விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் மிக மிகக் குறைவாகிவிட்டன.

நேரு போன்ற உலகப் புகழ்பெற்ற தல்வர்களின் கடிதங்களும், எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட கடிதங்களும் பொதுவாக அதிகம் கவனம் பெருபவை. ஆனால் தனிப்பட்ட சாதாரன நபர்கள் தமக்குள் எழுதிக்கொண்ட கடிதங்களில்தான் ஒரு சமூகத்தின் வரலாறைப் பார்க்க முடியும்.

எழுபதுகளில் நான் மாணவனாக இருந்தபோது கல்லூரி ஆசிரியையாக அப்போதுதான் வேலைக்குச் சென்ற என் அக்காவும் நானும் சுமார் ஓராண்டு இன்லேண்ட் லெட்டர்களில் உலக, நாட்டு நடப்புகள் பற்றியெல்லாம் எங்கள் அபிப்ராயங்களைப் பறிமாறிக்கொண்டோம். இப்போது படித்துப் பார்த்தால் அவை என்னையே எனக்கு அறிமுகப்படுத்துகின்றன.

எழுத்தாளர் கடிதம் எழுதலாம். கடிதம் மூலம் எழுத்தாளராக முடியுமா? அதை என் அண்ணனின் நண்பர் ஒருவரும் நானும் எழுபதுகளில் சேர்ந்து செய்தோம். ஒரு கதையை இந்த வார இன்லேண்ட் லெட்டரில் அவர் தொடங்குவார். பதில் கடிதத்தில் நான் அடுத்த அத்தியாயத்தை எழுதுவேன். மூன்றாவது அத்தியாயம் அவருடையது. இப்படிச் சுமார் முப்பது அத்தியாயக் கதையை தொடர் கடிதமாக இருவரும் எழுதி, பிரசுரிக்கப்படாமலே எழுத்தாளர்கள் ஆகிவிட்டோம். பாதி நாவல் என் அட்டைப்பெட்டி ஆவனக்காப்பகத்தில் இருக்கிறது. மீதி அவரிடம்! தேடிப்பிடித்துப் பிரசுரிக்காததற்குக் காரணம், அது நல்ல எழுத்துப் பயிற்சியே தவிர, நல்ல கதை அல்ல.

கடிதங்களில் இப்படி எதை எதையோ எழுத முடியும் என்றாலும், காதல் கடிதம்தான் கடித வடிவத்துக்கே ஒரு கூடுதல் கவர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால் இன்று மனிதர்கள் காதலேயோ, கார்கிலையோ தங்களுக்குள் பறிமாறிக்கொள்ளும் கடிதங்களின் காலம் முடிந்து போய்விட்டது என்று தோன்றுகிறது.

இன்றைய இளைஞர்கள் காதலை எப்படித் தெரிவிக்கிறார்கள்? வசதி உள்ளவர்களுக்கு ஈ-மெயில், எஸ்.எம்.எஸ்; ஏயைகளோ கால், அரை, முக்கால் பார்வைகளில் தொடங்கி, நேரடித் தாக்குதலில் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிடுகிறார்கள்.

ஒரு சிறந்த சினிமாக் கலைஞர் எழுதிய ‘காதல் கடிதங்கள் இப்போது பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றன. காதல், தியாகம், சோகம் இவற்றின் காவியப் பிரதிநிதியாக, இந்தி சினிமாவில் தான் இருந்த குறுகிய காலத்திலேயே தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட நடிகர், இயக்குனர் குருதத். தன் காதல் மனைவி கீதாவுக்கு எழுதிய கடிதங்கள் ‘யுவர்ஸ் குருதத் என்கிற தலைப்பில் சினிமா ஆய்வாளர் நஸரீன் முன்னி கபீரால் தொகுத்து வெளியிடப்பட்டு இருக்கின்றன.

1951-ல், குருதத் தன் 26-வது வயதில் கீதாவைச் சந்தித்தது முதல், அடுத்த 13 ஆண்டு காதல் மணவாழ்க்கையில் எழுதிய கடிதங்கள் இவை. காவியக் காதலனாகவும், வேறு பெண்ணுடன் காதல் கொண்டு இருந்ததாகவும் அறியப்பட்டிருந்த குருதத்தின் கடிதங்கள், அவரைப்பற்றிய பிம்பத்துக்குப் கொருந்தாமல் சாதாரணமாக இருக்கின்றன. கடிதம் என்ற வடிவத்தின் சிறப்பே அதுதான். அது ஒருவரின் பிம்பத்தை வேறு மாதிரி காட்டவும் பயன்படும்.

காதல் கடிதங்களில் ஒவ்வொருவரும் தன்னை மற்றவருக்கு அடையாளப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அபாரமானவை. சாதாரண மனிதர்களின் பலரின் காதல் கடிதங்களை யாரேனும் தொகுத்தால், ‘உனக்கு நான், எனக்கு நீ, நம்மால் இந்த உலகம்என்ற ஒரே விஷயத்தை எத்தனை பேர் எத்தனை விதமாகச் சொல்ல முடியும் என்ற பிரமிப்பு நமக்கு நிச்சயம் ஏற்படும்.

விரிவான அந்தரங்கக் கடிதம் எழுதுவது குறைந்து போய்க்கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. ஆதலினால் மானிடரே... காதல் செய்வீர்! அதுவும் கடிதம் எழுதிக் காதல் செய்வீர்!
-        
 -         ஞானி.  ஆ.வி. ஓ... பக்கங்களிலிருந்து. (26.02.1996)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

www.tamil10.com

நன்றி

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி தமிழினி! தமிழ்10 தளத்தில் சேர்ந்துவிட்டேன்.

சாகம்பரி சொன்னது… [Reply]

வலது பக்கம் சிக்னல் போட்டு இடது பக்கம் திரும்பும் இக்காலத்தில் இதெல்லாம் சாட்சியாகிவிடாதா? இந்த கடிதங்கள் எழுதுவது குறைந்ததுதான் மற்ற அன்புக் கடிதங்கள் குறையவும் காரணம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான். எத்தனை கோபம் இருந்தாலும் கடிதங்களை தூதுவனாக அனுப்பி சமாதானமாகியிருக்கிறோம். ஆனால் கைப்பேசியில் கோபப்பட்டால் 'நாவினாற் சுட்ட வடு' போல அது என்றும் மாறாமல் புகைந்து கொண்டே இருக்கிறது.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!