மறக்க முடியாத நண்பர்கள் பதிவின் தொடர்ச்சி.....
எனக்கு அறிமுகமான நண்பரின் செய்தியும், என்னுடைய செய்தியும் ஒரே பத்திரிகையின் அட்டைப் படத்திலேயே வெளிவந்தது என்றால் அது ஆச்சர்யம்தானே! அதுவும் நான் எழுதியது அவருக்குத் தெரியாது, அவர் எழுதியது எனக்குத் தெரியாது.
‘கல்கி’யின் முகப்பிலேயே எங்கள் ஊரின் பள்ளிக்கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆகியவை இடம் பெற்றிருந்தது. கூடவே எனுடைய நண்பர் சண்முகத்தின் போட்டோ, அப்போதைய மாவட்ட ஆட்சியர் திருமதி. மாலதி IAS, எல்லாமே அட்டைப் படத்தில்! சந்தோஷத்திற்குச் சொல்லவா வேண்டும். ஆனால் இந்த சந்தோஷத்திலும் வேதனையான விஷயம் இதற்கு காரணமான என் பெயர் எங்குமே இல்லை. இதில் என்ன ஆறுதல் என்றால் வேறு யார் பெயரையும் போடவில்லை என்பதே! நான் ஊரில் இல்லாமல் பெங்களூரில் பணிபுரிந்ததும் காரணமாக இருக்கலாம்.
அப்படி என்னதான் எங்களூரில் பிரச்னை? 1. நகரப்பேருந்து வந்து செல்லும் எங்களூரின் தார் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. 2. ஊரின் பள்ளிக் கட்டிடம் வெகுநாட்களாக கட்டிமுடிக்கப்படாமல் இருந்தது. 3. பாலாற்றிலிருந்து குழாய்மூலம் கொண்டுவரப்படும் குடிநீர் பிரச்னை. 4. நிலத்தடி நீராதாரமான குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளைத்தான் நான் ‘கல்கி’க்கு எழுதி அனுப்பியிருந்தேன். ஆனால் நான் பணிபுரிவதோ பெங்களூரில்....
கல்கியின் நிருபர்கள் என்னைத்தேடி ஊருக்கு வந்ததும் தெரியாது, புகைபடம் எடுத்ததும் தெரியாது. யாரோ ஒருவர் என் சார்பில் ஊரில் விளக்கி இருகிறார்கள், அவ்வளவுதான். பத்திரிகையின் பலம் என்னவென்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது. ‘கல்கி’யில் செய்தி வந்த ஒரு மாதத்திற்குள் எங்களூரின் பிரச்னைகள் பாதிக்குமேல் தீர்க்கப்பட்டுவிட்டன. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து பத்திரிகையிலிருந்து பிரச்னைகள் நிலை குறித்து ரீவிசிட் செய்தும் செய்தியாக வெளியிட்டார்கள்.
இந்த நிகழ்விற்குப் பிறகுதான் பாலசண்முகம் அவர்களோடு கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுமளவுக்கு நெருக்கமானேன். இவரின் கடிதங்கள் எல்லாம் சமூக அரசியல் தொடர்பானவை. பெரும்பாலும் என் உணர்வுகளோடு ஒத்துப்போனவை. அப்போதெல்லாம் இந்தக் கடிதங்களின் முக்கியத்துவத்தை உணராமல் நிறைய கடிதங்களை குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவங்களும் உண்டு. எஞ்சியிருக்கும் கடிதங்களே உங்கள் பார்வைக்கு!
அப்போதைய நண்பர்கள், தோழிகள் எனக்கு எழுதிய கடிதங்களை ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது என்றாலும், சுவையான கடிதங்களை மட்டுமே தேர்வு செய்து சுவாரஸ்யமான பின்னனியையும் சேர்த்து சொல்லப் போவதால் நிச்சயம் பதிவுலக வாசகர்களால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
கடிதங்கள் பற்றிய மிக அருமையான கவிதை ஒன்று....
தொலைந்து போன பொருள் ஒன்றைத்
தேடி கொண்டு இருக்கையில்..
என்றோ நான் எழுதிய கடிதமொன்று
என் கைகளில் சிக்கியது.. !!
கடைசியாக நான் கடிதம் எழுதியது
எப்போது..? என் நினைவில் இல்லை.. !!
மேலும் படிக்க பொன்னியின் செல்வன் என்ற இந்த வலைப்பக்கத்தில் கடிதங்கள் என்ற இடுகையைப் போய்ப் பாருங்கள்.
என்றும் நட்புடன்,